Wednesday, November 22, 2017

மறக்க முடியா பயணம் - அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி !!

நீர்வீழ்ச்சி எனும்போது அந்த ஆர்ப்பரிக்கும் ஓசையும், அந்த குளிர்ச்சியும் எப்போதும் மனதில் வரும்.  இந்த முறை ஒரு நீர்வீழ்ச்சி செல்ல வேண்டும் என்று பேசிக்கொண்டு இருந்தபோது, அர்ஜுனா அர்ஜுனா என்று தங்க தலைவி நமிதா டிவியில் ஆடிக்கொண்டு இருந்தார், அப்போது இப்படி ஒரு நீர்வீழ்ச்சிக்குத்தான் செல்லவேண்டும் என்று முடிவெடுத்து தேட ஆரம்பித்தபோது, அவர் இடுப்பை நெளித்து ஆடியது நமது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி என்று தெரிந்தது ! அடுத்து அங்கே செல்லும் பயணம் ஆரம்பமானது.... என்ன சோகம் என்றால், செல்லுவதற்கு ஆயத்தமானது எல்லாம் ஆண் பிள்ளைகள் !!கோயம்பத்தூரில் இருந்து சுமார் 165 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த நீர்வீழ்ச்சி, நான்கு மணி நேர பயணம் ! தமிழ்நாடு எல்லை வரைக்கும் ரோடு போட்டுக்கொண்டே டே டே டே டே டே இருப்பதால் பயணம் சற்று மேடு பள்ளமாக இருக்கிறது. அதன் பின்னர் ரோடு நன்றாக இருப்பதால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. நாங்கள் முதல் நாள் மாலை சுமார் ஆறு மணிக்கு கிளம்பி சாலக்குடி என்னும் ஊருக்கு சென்று விட்டோம், அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு புட்டும் கடலைக்கறியும், கட்டன் சாயாவும் குடித்துவிட்டு புறப்பட்டு விட்டோம். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழி நன்றாகவே இருந்தது, வழியெல்லாம் பல பல ஹோட்டல் இருந்தது, சாலக்குடியில் தங்கியதை விட இங்கே வந்து இருக்கலாமோ என்று தோன்றியது.
சுமார் ஒரு மணி நேர பயணத்தில் ஒரு சிறிய திருப்பத்தில் நிறைய வண்டிகளும், கடைகளும் இருக்கும் இடத்தை அடைந்தபோது, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி வந்து விட்டது என்று அறிந்தோம். சுமார் 15 கடைகள், ஒரு சிறிய போர்டு அழகே வரவேற்றது. இங்கு நிறைய பேருந்துகள் வருகின்றன என்று ஒரு பதாகையை பார்த்தவுடன் தெரிந்தது. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி என்பது ஒரு தொடக்கம்தான் என்றும், அதனை தொடர்ந்து சென்றால் வலைச்சல் நீர்வீழ்ச்சி, சர்ப்ப நீர்வீழ்ச்சி என்று அடுத்தடுத்து வருவதை அறிய முடிந்தது. விஷயம் தெரிந்த பலர், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி கூட்டமாக இருக்கிறது என்று இருக்கும் வாகனங்களை வைத்து கணக்கு போட்டு அடுத்த நீர்வீழ்ச்சிக்கு செல்வதை காண முடிந்தது. டிக்கெட் வாங்கி கொண்டு நீர்வீழ்ச்சி செல்லும் பாதையில் பயணிக்க தொடங்கினோம்.... டேய், நீர்வீழ்ச்சிக்கு சொய் என்று செல்லுமாறு ஒரு சறுக்கு மரம் வைக்க கூடாதா !!
முதலில் நடக்க ஆரம்பிக்கும்போது நல்ல பாதை போன்று தோன்றினாலும், சிறிது தூரத்தில் மலை இறங்க ஆரம்பிக்கும்போது சற்று ஆபத்தானதாக இருக்கிறது !  நம்ம தங்க தலைவி நமீதா ஆடிய இடம் எல்லாம் இறங்கி குளிக்க அனுமதி கிடையாதாம், அங்கு பக்காவாக கயிறு கட்டி, போலீஸ் போட்டு வைத்து இருக்கிறார்கள். அந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் சென்று சிறிது படம் எடுக்க மட்டுமே அனுமதி ! அப்போ அருவி குளியல் ?!
குளிக்க முடியாதா என்று ஏக்கம் வரும்போது, அருகில் இருந்த சிலர், இந்த மலை உச்சிக்கு செல்லுங்கள் அங்கே குளிக்க முடியும் என்றனர். நடந்து வந்த போது, ஒரு நல்ல பாதை முடிந்து மலை இறங்க ஆரம்பித்தபோது இப்படி குளிக்க முடியாது என்ற பதாகை எதுவுமே இல்லையென்பதால், நிறைய பேர் தெரியாமல் கீழே தட்டு தடுமாறி இறங்கி மூச்சு வாங்கி கொண்டு இருந்தனர். கீழே இறங்கியதை விட, மேலே ஏறும்போது நிறைய இடங்களில் சறுக்கி விடுகிறது. ஒரு வழியாக மேலே ஏறி வந்தபோது அந்த நெடிய ஆறு விழும் இடம்தான் குளிப்பதற்கு என்று புரிந்தது, அந்த நீர்தான் நீர்வீழ்ச்சியாக கீழே சென்றது ! 


முடிவில் அந்த ஆற்று படுகையை பார்த்தபோது எங்கும் பாறைகள், எதிலும் பாறைகள் மட்டுமே. நாங்கள் சென்ற சமயத்தில் அங்கங்கு சில இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடி கொண்டு இருந்தது. ஆடைகளை களைந்துவிட்டு ரெடி ஆனோம். ஒரு காலை வேளையில், சில்லென்று வீசும் காற்றின் முன், ஒரு சிறு ஆடையை மட்டும் இடுப்பில் கட்டிக்கொண்டு, ஐஸ் போன்று ஓடிக்கொண்டு இருக்கும் தண்ணீரில் இறங்க எவ்வளவு தைரியம் தேவை தெரியுமா ? இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பது என்பதே ஒரு கலை எனலாம், முதலில் நுனி காலை விட்டு அந்த குளிர்ச்சியில் நடுங்க வேண்டும், அடுத்து முட்டிகால் வரை, மனதில் வேண்டாம் என்று தோன்றினாலும், அடுத்து சிறிது தண்ணீரை எடுத்து உடம்பின் மேலே ஊற்றிவிட்டு, இந்த தண்ணீரில் குளிப்பார்களா யாராவது என்று புலம்ப வேண்டும், அடுத்து எல்லோரும் பகடி செய்தவுடன் ஒரு வீரம் வந்து தொபுக்கடீர் என்று குதிக்க வேண்டும், ஐயோ என்று கத்திவிட்டு வெளியே ஓடி வந்து, மீண்டும் பின்னர் இதுபோல ஒரு மூன்று முறை செய்தபின்பு அந்த ஆற்று நீரில் ஒரு எருமையை போல விழுந்து கிடக்க கிடக்க.... ஒரு ஜென் நிலையை அடைவோம் !!இத்துடன் இந்த பயணம் முடிவதில்லை, ஒரு நீர்வீழ்ச்சி சென்று குளித்து முடித்து வந்தவுடன் வயிறு மிக பயங்கரமாக பசிக்க ஆரம்பிக்கும். அதுவும் இறங்கிய பாதையில் இப்போது பசியுடன் ஏறும்போது இன்னும் அதிகமாக பசிக்கும், அப்போது எதை குடுத்தாலும் ருசி பார்க்காமல் சாப்பிடுவோம். இந்த இடத்தில், அவ்வளவாக கொறிக்க எதுவும் கிடைப்பதில்லை, ஆகவே உங்களுக்கு உண்டானதை நீங்களே கொண்டு செல்லுங்கள் !! என்ன முடிவெடுத்துவிட்டீர்களா.... அடுத்து உங்களது பயணம் இங்குதானா ?!

Labels : Suresh, Kadalpayanangal, Athirapally, Athirapalli, Waterfalls, kerala, near coimbatore, waterfalls near coimbatore, marakka mudiyaa payanam

Monday, November 20, 2017

ஊர் ஸ்பெஷல் - ஊட்டி வர்க்கி !! (பகுதி - 2)

ஊட்டி வர்க்கி (பகுதி - 1) படித்த பலரும் இன்று வரை ஊட்டி வர்க்கி என்பதை பற்றி இவ்வளவு தெரிந்து கொண்டதில்லை, ஆனால் இன்று இதை படித்த பிறகு எவ்வளவு சுவாரசியமான, சுவையான தகவல்கள் என்று பாராட்டினார்கள், நன்றி நண்பர்களே !! சென்ற பகுதியில் ஊட்டியின் பெயர் காரணம், வர்க்கி என்ற சொல் உருவான காரணம், பிஸ்கட், குக்கீஸ், ரஸ்க் என்பதின் வித்யாசம் எல்லாம் பார்த்தோம்... இந்த வாரம் வாருங்களேன் இந்த வர்க்கி என்பதின் சுவையான பயணத்தை தொடர்வோம் ! குன்னூர் சென்று வீட்டிற்கு வர்க்கி வாங்கி செல்ல வேண்டும், எங்கு கிடைக்கும் என்று கேட்டால் எல்லோரும் சொல்வது நியூ இந்தியன் பேக்கரி !! பல முறை ஊட்டி சென்று இருந்தபோதும், அவசர கதியில் கிடைத்த இடத்தில் வாங்கியதால் ஊட்டி வர்க்கி என்பதின் உண்மையான சுவையை தெரிந்து கொள்ள முடியவில்லை.... ஆனால் இந்த முறை ஊட்டி வர்க்கிக்கு புகழ் பெற்ற நியூ இந்தியன் பேக்கரி சென்றோம், உண்மையிலே ஊட்டிக்கு பெருமை சேர்க்கும் இடம்தான் !!
வாசனை.... எந்த ஒரு உணவு செய்யும்போதும் ஒரு வாசனையை வைத்து வாயினுள் ஒரு ஊற்று சுரக்கும். கேசரி செய்யும்போது நெய்யில் முந்திரி வறுக்கும் வாசனை, பேக்கரியில் பன் செய்யும்போது வரும் வாசனை, கடுகும் உளுந்தும் சேர்த்து தாளிக்கும்போது வரும் வாசனை, சோளக்கருத்தை சுடும்போது வரும் வாசனை, மீனை பொரிக்கும்போது வரும் வாசனை, சூடான காபியின் வாசனை, வெங்காய போண்டா பொரிக்கும்போது வரும் வாசனை, காரம் போட்ட மசாலா பொறியின் வாசனை, கடலையை வேக வைக்கும்போது வரும் வாசனை.... என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு அலாதியான வாசனை உண்டு, அது போலவே இந்த வர்க்கி என்பதற்கும் ! வர்க்கி செய்யும் இடத்திற்கு சென்றபோது அந்த இடமே இந்த வாசனையில் நிரம்பி இருந்தது, ஒரு உணவை சாப்பிடாமலே காதல் கொள்ளுவதென்பது இப்படிப்பட்ட வாசனையை வைத்துதான், வர்க்கியின் வாசனை என்பதை நீங்கள் உணர்ந்து பார்த்து இருக்கின்றீர்களா இதுவரை !!


வர்க்கி என்பதின் வடிவத்தை கவனித்து பார்த்து இருக்கின்றீர்களா ? ஒரு சிறிய பொட்டலம் போல, உங்களது உள்ளங்கையின் உள்ளே அடங்கிவிடும், கொஞ்சம் உற்று பார்த்தால் அடுக்கு அடுக்காக பிரிந்து, ஒரு மலரினும் மெல்லிய உடலினை கொண்டு, நீங்கள் கொஞ்சம் அமுக்கி பிடித்தாலே பொல பொலவென உதிரும் இந்த வடிவம் அதிசயம்தான். முதலில் இந்த வர்க்கி எப்படி செய்வது என்று பார்த்து விடுவோம், பின்னர் இந்த பயணத்தில் நடந்தவைகளை பார்ப்போம்... வர்க்கி செய்வதற்கு பெரிய அளவில் பொருட்கள் எல்லாம் தேவை இல்லை, ஆனால் இங்கு முக்கியம் ஈஸ்ட் என்பதுதான். இந்த ஈஸ்ட் என்பதுதான் இதனின் சுவைக்கான முக்கிய காரணம். மைதா, தயிர், சர்க்கரை, தண்ணீர் ஆகியவற்றை நன்கு நீர்க்க கரைத்து, காற்று புகாமல் மூடி வைத்து, 2 நாட்கள்  கழித்து திறந்து பார்த்தால் வருவது ஈஸ்ட்.  இதை ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில்  வைத்திருந்து உபயோகிக்கலாம். இதன் செய்முறையை பாருங்களேன்...

மைதா -   2 கப்
சர்க்கரை -  3 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
டால்டா - கால் கப்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - ஒரு டீஸ்பூன்
ஈஸ்ட் - இரண்டு சிட்டிகை (ஃப்ரெஷ் ஈஸ்ட்) 
தண்ணீர் - தேவையான அளவு.

மைதாவை ஈஸ்ட் சேர்த்து தண்ணீர் விட்டு இளக்கமான மாவாகப் பிசைந்து ஓர் இரவு முழுதும் ஈரத்துணி போட்டு ஊற விடவும்.மறுநாள் அந்த மாவை நன்கு பிசையவும். டால்டா, எண்ணெய், நெய், உப்பு, சர்க்கரையை அடுப்பில் வைத்து கரையும் வரை சூடு செய்து மாவில் ஊற்றி பிசையவும். மாவு,  எண்ணெய்களை இழுத்து நன்கு நீண்டு வரும். மிருதுவான தன்மை வரும் வரை பிசைய வேண்டும். தேவைப்பட்டால் சிறிது  டால்டா சேர்த்துக் கொள்ளலாம்.ஒரு இன்ச் தடிமனுள்ள சப்பாத்தி போல திரட்டி ஒன்றரை இன்ச் அகலத்தில் மாவை குறுக்கு  வெட்டாக வெட்டவும். அதனை விரல்களால் சுருட்டி இறுதியில் எதிர் திசையில் மடித்தால் வர்க்கியின் மடிப்பு வரும்.அவனை (Oven) அதன்  அதிகபட்ச வெப்பத்தில் 10 நிமிடம் சூடாக்கவும். இருபுறமும் சூடாவது போல செட்டிங் மாற்றி, 180 டிகிரியில் 20 முதல் 30  நிமிடம் வேக விடவும்.வெந்ததும் சிறிது ஆறவிட்டு, காற்று புகாத பாத்திரத்தில் எடுத்து வைக்கலாம்.வர்க்கி எப்படி செய்வது என்பதை பார்த்தாகிவிட்டது, இனி பயணத்தின் அனுபவத்தை பார்ப்போமா ? குன்னூர் சென்று நியூ இந்தியன் பேக்கரி சென்று வர்க்கி வாங்கி கொண்டே, சற்று கண்களை ஓட்டி பார்த்தபோது அங்கு வர்க்கி தயாரிப்பதாக தெரியவில்லை, நான் இப்படி எட்டி எட்டி பார்ப்பதை கவனித்த கடைக்காரர், என்ன வேண்டும் என்று கேட்க, அந்த பிஸியான வியாபார சமயத்திலும் என்னை பற்றி கூறி விட்டு, உங்களது வர்க்கி செய்யும் முறையை பார்க்க வேண்டும் என்றேன். இந்த பிஞ்சு மூஞ்சியை பார்த்துவிட்டு, சிறிதாக நகைத்துவிட்டு, வர்க்கி இங்கிருந்து சற்று தள்ளி இருக்கும் இடத்தில் செய்வதாகவும், அந்த இடத்தின் விலாசத்தினை தந்தார்...... ஆகா, நான் வர்க்கி பார்க்க போறேனே, என்று மனம் குத்தாட்டம் போட்டது.
அந்த சிறிய அறையினுள் நுழைவதற்கு முன்னரே வாசனை என்னை தாக்கியது. எனது கண்களை கட்டி விட்டு இருந்தால் கூட அந்த இடத்திற்கு சரியாக வாசனையை வைத்து சென்று இருப்பேன் ! வர்க்கி செய்யும் இடத்தை பார்த்தால், எங்கெங்கும் மைதா மாவை பிசைந்து இருப்பதையும், அதை வர்க்கியாக மடித்து வைத்து இருந்ததையும், அதை ஓவென் கொண்டு வர்க்கியாக மாற்றி வைத்து இருந்ததையும் மட்டுமே காண முடிந்தது. அவர்களின் வேகம் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஒருவர் கல்லின் மீது இருந்த மாவை அடித்து பிசைவதையும், இன்னொருவர் அப்படி பிசைந்த மாவினை தட்டையாக்கி கத்தியினை கொண்டு வெட்டுவதையும், இன்னொருவர் அதை பொட்டலம் போல மடிப்பதையும் பார்க்கும்போது இவர்களின் அத்தனை வருட அனுபவமும் கண் முன்னே வந்தது.ஒரு சிறிய ட்ரேயில் அந்த பொட்டலம் போன்று மடித்த வர்க்கியை அடுத்து ஒரு பெரிய உலையின் உள்ளே வைத்துவிட்டு, அங்கேயே நின்று கவனித்து பார்க்க, அது பொரிந்து வந்த அந்த தருணம் உண்மையிலேயே உணவு பிரியர்களின் சொர்க்க தருணங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த வெள்ளை நிற மாவு பொன்னிறமாக ஆக ஆரம்பிக்க, இன்னொரு தட்டு ரெடி ஆனவுடன் அதை வெளியே எடுத்து வைக்க, எனது கண்கள் அதையே விழுங்கி கொண்டு இருந்தன. அதை சிரித்துக்கொண்டே பார்த்த அந்த பெரியவர், ஒரு சிறிய தாளில் ஒன்றை வைத்து கொடுக்க.... ஊதி ஊதி அந்த ஊட்டி வர்க்கி சாப்பிட்ட அந்த பொன்னான தருணம், மறக்க முடியாத ஒன்று !


அடுத்த முறை ஊட்டி சென்றால் மறக்காமல் இங்கு ஊட்டி வர்க்கி வாங்கி சுவைத்து பாருங்கள், வாயில் வைத்தவுடன் கரையும் அந்த மன்மத சுவைக்கு நீங்களும் அடிமையாவீர்கள். செய்வது சுலபம் போன்று தோன்றினாலும், இதை வேறு ஊர்களில் செய்யும்போது இது போன்ற சுவை வருவதில்லை என்பது சத்தியமான உண்மை !!


Labels : Suresh, Kadalpayanangal, Ooty, Udagamandalam, Varkey, Varukki, Varki, Indian bakery, famous for, famous ooty varkey

அறுசுவை - விருந்து சமையல் !

ஆவி பறக்க இட்லி - சட்னி, மிளகு ஜாஸ்தி போட்ட பொங்கல், முறுகலாக ரவா தோசை, நெய் வழிய இருக்கும் புரூட் கேசரி, சின்ன வெங்காயம் நன்கு வெந்த ஊத்தப்பம், இளம் ஆட்டு கறியில் செய்த மட்டன் சுக்கா, செட்டிநாடு நாட்டு கோழியில் செய்த கறி பிரட்டல், பச்சை மிளகாய் அதிகம் போட்ட பணியாரமும் காரச்சட்னியும், பொன்னிறமாக வறுத்த வாழைக்காய் பஜ்ஜி, பழைய சோறும் கருவாடும், பொன்னி அரிசி சோறும் பூசணிக்காய் குழம்பும், இளம் கத்திரிக்காயில் நெய் விட்டு செய்த எண்ணெய் கத்திரிக்காய், நல்லெண்ணெயில் செய்த முட்டை பொரியல், தேங்காய் பாலில் ஊற வைத்த இடியாப்பம், பசு மாட்டு பாலில் இருந்து எடுத்து முருங்கை கீரை போட்ட நெய்யில் ஊற்றிய தோசை, பொன்னிறமாக எடுக்கப்பட்ட வடை, காரம் அதிகமாக பொறிக்கப்பட்ட நெய் மீன், கரகரவென காராபூந்தி போட்ட பிஸிபேளாபாத், மிளகு தூக்கலான ரசவடை, வறுத்த முந்திரி மிதக்கும் பாயசம்.... இப்படி நிறைய உணவு வகைகளை சொல்லிக்கொண்டே போகலாம், அதை எல்லாம் விட வீட்டில் விசேஷம் என்று செய்யும் கெடா விருந்தில், நாமே எடுத்துக்கட்டிக்கொண்டு செய்யும் அந்த சுவை இருக்கிறதே..... ஆஆஹாஆ !!


என்னதான் ஹோட்டல் சென்று மூக்கு பிடிக்க சாப்பிட்டாலும், சொந்த பந்தங்கள் உடன் ஒரு விருந்து சமையலில் பங்கு கொண்டு, இதை டேஸ்ட் பாருங்கள் என்று சொல்லும்போது, இது ஜாஸ்தி அது கம்மி என்று நாட்டாமை பண்ணிக்கொண்டு, மாமாவுக்கு மட்டன் கொஞ்சம் ஜாஸ்தியா வை, பாயசம் கொடு இங்க என்று உதார் விட்டு, பீடா எங்கடா என்று சலம்பி சாப்பிடும் விருந்து என்பது எப்போதுமே ஒரு சந்தோசம்தான் ! பல நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டாலும், சென்று சாப்பிட்டு வந்து விடுகிறோம், ஆனால் முதலில் இருந்து முடிவு வரை ஒரு விருந்து செய்து சுவைப்பது இருக்கிறதே அது ஒரு தனி சுவை. வருடத்திற்கு ஒரு முறையாவது இப்படி பட்ட விசேஷங்களில் சுவைத்தால் நாக்கிற்கு மட்டும் இல்லை, மனதிற்கும் சுவை தெரியும். நகரங்களில் நடக்கும் விருந்துகளில் எல்லாமே ஆர்டர் செய்து விடுவோம், வரும் சொந்தங்களுக்கு பரிமாறுவார்கள் ஆட்கள்.... என்னதான் சுவையோடு உணவு இருந்தாலும், ஒரு மனநிறைவு கிடைக்காதில்லையா !!


வீட்டில் ஒரு விசேஷம், மதிய சாப்பாட்டுக்கு பிரியாணி, கதம்பம், மட்டன் சுக்கா என்று ஒரு பக்கா மெனு. முதல் நாள் மாலையிலேயே சமையல் செய்ய பாத்திரங்கள் வந்து இறங்கிவிட்டது, பந்தல் போட்டு கொண்டு இருந்தனர். யார் யாருக்கு என்ன என்ன வேலை என்று ஒதுக்கி கொண்டு இருந்தார்கள். அடுத்த நாள் அதிகாலை  நான்கு மணிக்கே ஒருவர் எழுந்துக்கொண்டு இருந்ததை பார்த்தேன், என்ன விஷயம் என்றபோது ஆடு உரிக்கணும் என்றார். ஆகா, என்று அப்போதே தூக்கம் கலைந்து விட்டது ! ஆட்டத்துக்கு நானும் வரலாமா என்று கேட்க, வாங்களேன் என்றார். அதிகாலையில் கைலியுடன் ஒரு துண்டை போர்த்திக்கொண்டு அந்த காலத்து ராம்கி படத்தில் ஊர் காவலுக்கு செல்வது போல ஒரு லாந்தருக்கு பதில் டார்ச் லைட் எடுத்துக்கொண்டு புறப்பட்டோம் !!


எங்களது ஆடு, நாங்கள் வருவதை பார்த்தவுடனே முடிவு செய்துவிட்டது, இன்னைக்கு நம்ம ஒரு இடத்தையும் இவன் விடாமல் சாப்பிடுவானே..... ஆண்டவா, எனக்கு மன்னிப்பே கிடையாதா என்று. அன்றுதான் ஒரு ஆடு வெட்டப்படுவதில் இருந்து அது பாத்திரத்தில் சிறிய துண்டுகளாகவும், மற்ற பகுதிகள் அனைத்தும் கழுவி கொடுக்கப்பட்டதையும் பார்த்தேன். ரத்தம் பிடிப்பதில் தொடங்கி, கால்கள் வெட்டப்படுவது, தலையை சுத்தப்படுத்துவது என்று விறுவிறுவென்று நடந்தது. சுமார் இரண்டு மணி நேரத்தில் ஒரு ஆட்டை அண்டாவில் எடுத்து வந்து கொண்டு இருந்தோம் !


வீட்டின் அருகினிலேயே ஒரு காலி இடத்தில் சின்ன சாமியானா பந்தல் போட்டு, கற்கள் ரெடி செய்து, மூட்டை மூட்டையாய் வெங்காயம் உரிக்க ஆரம்பித்தனர். இன்னொரு பக்கம் புதினா, இஞ்சி என்று ரெடி ஆகி கொண்டு இருந்தது. நெருப்பை எடுத்து பற்ற வைத்து அதில் அண்டாவை ஏற்றியவுடன் எல்லோரது பார்வையிலும் ஒரு குதூகலம் ! சமையல் செய்பவர்கள், சமைக்க உதவி செய்பவர்கள் என்று ஒரு குரூப் உண்டு, ஆனால் இந்த மாதிரி விசேஷ வீடுகளில் சமையல் மேற்பார்வையாளர்கள் என்று ஒரு பெரிய குரூப்பே இருக்கும், அந்த நாள் வரை சமையல் அறை பக்கமே சென்று இருக்க மாட்டார்கள், ஆனால் அதில் உப்பு கம்மி, காரம் ஜாஸ்தி என்று சலம்பி கொண்டு திரிவோம். அவ்வப்போது அவர்களது பொண்டாட்டி கிராஸ் செய்யும்போது, என் பொண்டாட்டி இதை செஞ்சா எட்டு ஊருக்கு மணக்கும் தெரியுமா என்று சமையல்காரரை வெறியேற்றுவார்கள். பொதுவாக அவர்கள் உபயோகிக்கும் வார்த்தை என்பது.... "நல்லா கிண்டி விடுப்பா..." !!


இந்த மாதிரி விருந்து சமையலில் இருக்கும் காதலான நொடி என்பது, சமையல் கொஞ்சம் கொஞ்சமாக ரெடி ஆகும்போது வரும் அந்த வாசனைதான். அப்போது கவனித்து பார்த்தால், வீட்டில் இருக்கும் பெண்கள் எல்லாமுமே வாசனை வரலையே என்பது போலவே இருப்பார்கள், நாம் அவர்களோடு இருக்கும்போது அந்த வாசனை உலக அழகி போன்று வந்து மூக்கை சொறிந்து விடும்.... இங்கதான் நாம உஷாரா இருக்கணும், வாசனை வருதே என்று சொன்னால், நல்லா நெய் வடிய வீட்டில் கேசரி செய்தபோது எல்லாம் இந்த மூக்குக்கு வாசனை தெரியலை, இப்ப தெரியுதாக்கும் என்பார்கள், வாசனையே வரலையே என்று சொல்லும்போது ஒரு பொடி பயல் வந்து கறி வாசனை வருது மாமா என்பான், இல்லையே என்று சொல்லும்போது, அந்த மனுஷனுக்கு நாக்குதான் நீளம், மூக்கு கம்மிதான் என்று வீட்டில் பொங்க வைப்பார்கள்.... கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான், அப்போதான் சட்டுன்னு "ஹலோ, நான் மார்க் அண்டோனிதான் பேசறேன், யாரு ஒபாமாவா...." என்று கேட்டுக்கொண்டே வெளியே வந்துவிட்டு மூச்சை நன்கு இழுத்து விடும்போது ஒரு சந்தோசம் வருமே.... அட அட அட !!


அடுத்து வருவது டேஸ்ட் செய்யும் படலம். கறி பாதி வெந்து கொண்டு இருக்கும்போதே இதை இப்படி கிண்டனும் என்று செய்முறை செய்து காட்டிவிட்டு, ஒரு சின்ன வாழை இலையை எடுத்து, அதில் கொஞ்சமே கொஞ்சம் வைத்து அங்காளி பங்காளி எல்லாம் கூப்பிட்டு நாக்கில் மை போல தடவுவது என்பது ஒரு சம்பிரதாயம். அதில் விசேஷம் என்னவென்றால், ஒருத்தனும் அது நல்லா இருக்கு என்று சொல்ல மாட்டான், ஏதாவது ஒரு குறை இருக்கும். சுட சுட அப்படியே சட்டியில் இருந்து எடுத்து, வாயில் வாட்டர் பால்ஸ் வருமாறு எடுத்து போட்டு மெல்லுவது சிறப்பு, இதில் மிக சிறப்பு என்பது நம்ம பங்காளிக்கு வெறும் எலும்பை மட்டும் வாயில் வைப்பது.... கறியை எல்லாம் தின்றுவிட்டு, பங்காளி இப்போ எலும்பை கடிப்பாரு எல்லோரும் கை தட்டுங்க என்று கோர்த்து விடுவது !!


முடிவில் எல்லோரும் அதை இறக்கி வைக்கும் முன்னரே நல்லா கட்டிவிட்டு, பந்தியில் இலை போடும்போது மாப்பிள்ளை வந்து உட்காருங்க எனும்போது வடிவேல் போல ஒரு எஸ்ப்ரஸின் கொடுப்போம் பாருங்கள்.... நம்ம முகத்தை பார்க்கும்போதே பொண்டாட்டிக்கு தெரிந்துவிடும், இந்த மனுஷன் சாப்பிட்ட மிச்சத்தைதான் எல்லோரும் சாப்பிட போறோம் அப்படின்னு, சட்டுன்னு குழந்தையை கையில் கொடுத்து, இதுக்கு ஆய் வருதாம் கூட்டிக்கிட்டு போங்க என்று நம்மை காப்பாற்றி விடுவார். அப்புறம் சொந்தங்களுக்கு இலை போட்டு, சூடான பிரியாணி, மட்டன் சுக்கா, கதம்பம், முட்டை மசால், வாழைப்பழம், பீடா என்று வைத்துவிட்டு, ஓடி ஓடி எல்லோருக்கும் பரிமாறிவிட்டு, எல்லோரும் ஒரு ஏப்பத்துடன் எந்தரித்து கை கழுவும்போது..... ஒரு நிம்மதி வருமே.... அதுதான் விருந்தின் சிறப்பம்சம்.


அடுத்த முறை சொந்த பந்தங்களை அள்ளி கொண்டு, ஒரு விருந்து சமையல் செய்து பாருங்கள், அப்போது தெரியும் அந்த ஆனந்தம். ஆடல், பாடல், சுவையான சாப்பாடு, கிசு கிசு என்று களை கட்டட்டும் !!

Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Virunthu, Virundhu, party, enjoy, biriyani, with relatives