Thursday, June 28, 2012

பொழுதுபோக்கும் - வாழ்வின் கடமைகளும்...

இன்று உங்களின் பொழுதுபோக்குகள் என்னென்ன ? காலையில் இருந்து அலுவலகம், சனி ஞாயிறு கிழமைகளில் உங்கள் குடும்பம் உங்களுக்காக காத்திருக்கும்.  இதற்கு நடுவில் உங்களின் ஆசைகளை நிறைவேற்றி கொள்ள நேரம் இருக்கிறதா ?



சிறிது பின்னிநோக்கி சென்று உங்களின் கல்லூரி நாட்களில் உங்களுக்கு என்னென்ன பொழுதுபோக்குகள், திறமைகள் இருந்தது என்று யோசியுங்கள். நீங்கள் நன்றாக பாடி, நடித்து, ஓவியம், பேச்சு, புத்தகம் வாசிப்பு, விளையாட்டு என்று இருந்து  இருக்கலாம், ஆனால் இன்று நீங்கள் இன்னும் அதை தொடர்கிறீர்களா? ஆம், என்றால் நீங்கள் நிஜமாகவே அதிர்ஷ்டசாலிதான். பலர் அதை மறந்து இருப்பார்கள், என்னை போல்.



என்று அல்லது எதனால் நாம் அந்த பொழுதுபோக்குகள், திறமைகளை இழந்தோம் என்று என்றாவது நீங்கள் எண்ணி பார்த்ததுண்டா ? அதை என்றாவது நாம் மீட்டெடுக்க முயலுகிறோமா ? நீங்கள் நிஜமாகவே அந்த பொழுதுபோக்குகளை மீண்டும் வாழ விரும்புகிறீர்களா ??



எது சுவாரசியமானது ? நமது பொழுதுபோக்கா அல்லது நமது வாழ்வின் கடமைகளா ?

நான் நன்றாக ஓவியம் வரைவேன், என் நண்பர்கள் பலர் இதை ரசித்து பாராட்டி இருகின்றனர். ஆனால், கல்லூரி முடித்து வேலைக்கு சேர்ந்தவுடன் என்னை நிலை நிறுத்திக்கொள்ளும் முயற்சியில் எனது ஓவியம் சில அடி தள்ளி நின்று பார்த்தது. பின்னர், திருமணம் ஆனவுடன் எனது மனைவியை நான் ரசிப்பதை பார்த்து எனது ஓவியம் கேவி அழுது என் கண்ணை விட்டு மறைந்தது. எனது மகன் பிறந்தவுடன் அது மகிழ்ந்தாலும் அது இன்னும் பல தூரம் சென்று விட்டது. இன்று, கடைசி காலத்தில் தன் மகனை பார்க்க துடிக்கும் தாய் போல அது என்னை அழைக்கிறது, ஆனால் வெளிநாட்டில் வசிக்கும் மகன் போல நான் சலனமற்று அதன் அழைப்பை நிராகரிக்கிறேன்.

என்னுடைய கல்லூரி நாளில், ஒரு நல்ல புத்தகத்தை வாசிப்பதர்க்காக நான் நாள் முழுதும் சாப்பிடாமல் இருந்திருக்கிறேன், ஆனால் இன்று ஒரு புத்தகத்தை எடுத்தவுடன் தன் கை பிடித்து பேச மாட்டாரா என்று நினைக்கும் மனைவியும், மருந்து வாங்கி வருவானா என எதிர்ப்பார்க்கும் பெற்றோரும், தன்னுடன் விளையாட வருமாறு அழைக்கும் பிள்ளையும் என செல்லமான, ரசிக்ககூடிய இடறுகள். அவர்களின் ஆசையை நிறைவேற்றியவுடன் வரும் சிரிப்பில், எனது பொழுதுபோக்குகள், திறமைகள் என்னை ஓரமாய் நின்று ரசிப்பதாய்தான் எனக்கு தோன்றுகிறது.



அன்று நான் ஒரு மகனாக மட்டும்தான் இருந்தேன், இன்று மேலாளராய், தந்தையாய், கணவனாய் என்று பல முகங்களை எடுத்து ஆளும்போது சில இழப்புகளும் சுகம்தான்...

Monday, June 25, 2012

ஆச்சி நாடக சபா - சீனாவின் பியன்-லியன் கலை

 சென்ற பதிவில் ஐரீஷ் நடனத்தை பார்த்தோம், இந்த பதிவில் சீனாவின் பியன்-லியன் கலையை பற்றி பார்க்கலாம். சைனீஸ் ஒபரா எனபது ஒரு கலை, இதில் Sichuan மாநிலத்தில் இருக்கும் கலைதான் இந்த பியன்-லியன் கலை. இந்த கலையில், ஒருவர் சைனீஸ் உடையில் இசைக்கு ஏற்ப மெதுவாய் ஆடுவார். அப்படி ஆடும்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் அவரின் முகமுடியை மாற்றுவார். ஒரு இருபது நிமிட ஆட்டத்தில் அவர் கிட்டத்தட்ட பதினைந்து கலை அம்சம் கொண்ட முகமுடிகளை மாற்றுவார்.

இந்த முகமுடி மாற்றும் ரகசியத்தை நீங்கள் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இது ஒரு பாரம்பரிய கலை, பரம்பரையாக இந்த ரகசியத்தை காப்பாற்றுகிறார்கள். நானும் கூகிளில் எவ்வளவோ தேடி பார்த்து விட்டேன், கண்டு பிடிக்கவே முடியவில்லை. இந்த கலையை ஒரு குடும்பம் கட்டி காப்பாற்றி வரும், அந்த குடும்பத்தில் உள்ள ஆணுக்கு மட்டுமே இந்த கலையை கற்று கொடுப்பர், ஏனென்றால் பெண் என்றால் அவள் புகுந்த வீடு செல்லும்போது அந்த கலையின் ரகசியம் போய் விடும் என்பதால்.


இன்னும் இதை பற்றி தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள்...பார்க்கும்போது அவரது முகத்தை கூர்ந்து கவனியுங்கள்.

பெரும்பாலும் இந்த கலையில் முகமுடியை தவிர மற்ற உடையின் கலர் கருப்பாகவே இருக்கும், அப்படி இருந்தால்தான் இந்த முகமூடியின் மீது கவனம் இருக்கும் என்று. இன்று இந்த கலை பெரும்பாலும் பெரிய ரெஸ்டாரன்ட்களில் மாலையில் நடக்கும். ஒரு முறை நாங்கள் ப்ராஜெக்ட் மீட்டிங் முடிந்து, மாலை உணவிற்கு சென்றபோது இந்த அறிய வாய்ப்பு கிடைத்தது. பின்னர் பல முறை இந்த கலையை பார்த்து நானும் அவரை போலவே ஆட ஆரம்பித்துவிட்டேன், ஆனால்  என்ன இந்த முகமூடியை மட்டும் மாற்ற முடியவில்லை !!