Monday, June 18, 2012

தந்தையர் தின நினைவுகள்

உனக்கு அம்மா புடிக்குமா அல்லது அப்பா புடிக்குமா என ஆண்கள் யாரை கேட்டாலும் உடனே பதிலாக வருவது "அம்மா" என்றுதான். ஆனால், நேற்று என் தந்தைக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது என்  மனதில் ஒரு கேள்வி ஓடியது "எப்போதில் இருந்து என் தந்தையை நான் நேசிக்க தொடங்கினேன் ?"



சிறு   வயது முதல் அப்பா என்றால் திட்டு அல்லது அடி என்றே தோன்றும். சில பொழுது அவரை நான் பிடிக்கவில்லை என்று முகத்திற்கு நேரே சொல்லி இருக்கிறேன். என்னை பொறுத்த வரை அப்பா என்றால் காசு கொடுக்கும் எந்திரம் அல்லது எனக்கு விரும்பியதை வாங்கி கொடுக்கும் அல்லது என்னை விருப்பப்பட்ட இடத்திற்கு கூட்டி  செல்லும் ஒரு மனிதன். ஆனால், என்று என் தந்தையின் அன்பை உணர்ந்தேன் ? நீங்கள் என்றாவது இதை பற்றி யோசித்து இருகிறீர்களா ? எப்போதுமே பொருள் தேடி ஓடி கொண்டு இருக்கும் நம் தந்தையை பற்றி என்றாவது புரிந்து கொண்டு இருக்கிறோமா ? நம் அன்னைக்கு எது பிடிக்கும் என்று தெரிந்த நமக்கு நம் தந்தைக்கு என்ன பிடிக்கும் என்று தெரியுமா  ? அவருக்கு எந்த நடிகரை பிடிக்கும், எந்த இசை,  எந்த கலர்,  எந்த புத்தகம்,  எந்த உணவு,  எந்த இடம் என்று நமக்கு தெரியுமா ?

முதன் முதலில் என் தந்தையை எனக்கு பிடித்த பொழுது என்பது அவர் என்னை காணவில்லை என்று தேடிய பொழுதுதான். என்னை மட்டும், திருச்சியில் உள்ள முக்கொம்பூர்க்கு கூட்டி சென்று விட்டு, அவர் எனக்கு கடையில் சாக்லேட் வாங்குவதற்குள் நான் ஒரு குரங்கை பார்த்து விட்டு அவர் கண் பார்வையில் இருந்து மறைந்தபோது, அவர் என்னை கண்ணில் நீர் வர தேடி இருகிறார். என்னை பார்த்த பொழுது, அவர் இழுத்து போட்டு அடி பின்னிவிட்டார். ஆனால், அந்த கண்ணீரை பார்த்தபோதுதான் அவருக்கு என்னை பிடிக்கும் என்பதே தெரியும்.

அதன் பிறகு பல பொழுதில் அவர் என்னை திட்டியதும், அடித்ததுமே நினைவில் வரும். ஆதலால், என்றுமே அவர் எனக்கு ஒரு ராட்சதனாகவே தெரிந்தார். எனக்கு பத்தாவது டியூஷன் சேர்த்து விடுவதற்காக என்னோடு டியூஷன் சென்ட்டர் வந்து, டியூஷன் வாத்தியாரை அவர் இண்டர்வியு எடுத்தபோது, ஆகா இந்த மனுஷனுக்கு என்னை கொஞ்சம் பிடிகதான் செய்கிறது என்று நினைத்தேன். அவர் அன்று அந்த வாதியாரிடம் தனியே, "அவன் கொஞ்சம் சுட்டி, அதனால அதிகமா அடிக்காதீங்க" என்று சொன்னது என் காதில் விழுந்தபோது, எனக்கு அவரை அன்று இன்னும் பிடித்தது.



இது போல பல பொழுதுகள், ஊட்டி கூட்டி சென்றது, என்னுடன் வந்து எனக்கு பிடித்த பர்த் டே கேக் ஆர்டர் செய்தபோது, எனக்கு முதல் முதலாய் BSA  - SLR சைக்கிள் வாங்கி தந்த போது, அர்த்த ராத்திரியில் நான் காத்து வலி என்று துடித்தபோது என்னை ஆஸ்பத்திரி கூட்டி சென்றபோது என்று பல வேளைகளில் அவரை எனக்கு பிடித்தது, ஆனால் அவர் என் அப்பா என்ற பாசமும், பெருமையும் அப்போது என் மனதில் இல்லை. அவர் தொடர்ந்து ஒரு ராட்சதனாகவே காட்சி தந்தார்.

நான் பன்னிரெண்டாவது முடித்தேன், இன்ஜினியரிங் கல்லூரி சீட்டுக்கு ஒரு புகழ்பெற்ற கல்லூரியின் தாளாளர் வீட்டுக்கு என் தந்தை சென்று, அவரிடம் இருந்த 25000 பணத்தை கொண்டு என் மகனுக்கு சீட்டு தாருங்கள், நான் எப்படியாவது சிறுக சிறுக மீதி பணத்தை கட்டி விடுகிறேன் என்று கேட்க, தாளாளரோ 1 லட்சம் இருந்தால் சீட்டு அல்லது இல்லை என்றவுடன், அவர் வீட்டுக்கு வந்து என் மகனை ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்க்க முடியவில்லையே என்று கண்ணீர் விட்டு அழுத போது, உண்மையிலேயே என்னுடைய தந்தையை நினைத்து எனக்கு பெருமையாக, பாசமாக இருந்தது. என்னுடைய தந்தை சிரித்து, கோபமாக, பாசமாக இருந்து பார்த்து இருக்கிறேன், முதன் முதலாக அழுது அன்று பார்த்தபோது, இந்த மனிதன் எனக்காகவே வாழ்ந்து இருக்கிறார், என்னுடைய நல்லதை மற்றுமே சிந்தித்து இருக்கிறார் என்று தெரிந்தது. நாம் இன்னும் நன்றாக உழைத்து இன்னும் நல்ல மார்க் எடுத்து இருக்க வேண்டும் என்று தோன்றியது.

அன்று அவர் அழுத அழுகைக்கு என்னுடைய பதிலாக நான் MIT அண்ணா university-யில் சேர்ந்தேன். சீட்டிற்கு பணம் கட்டிவிட்டு, சென்னை எக்மோர் ஸ்டேஷனில் நானும் எனது தந்தையும் எங்களது சீட்டை தேடி சென்று கொண்டு இருந்தபோது, அவரின் கம்பெனி மானேஜிங் டைரக்டரை பர்ஸ்ட் கிளாஸில் பார்த்து விட்டார். அதை கடந்து என்னோடே நடந்து வந்தவர் திடீரென்று பெட்டியை என்னிடம் கொடுத்துவிட்டு, வேக வேகமாய் அவரை நோக்கி சென்று சகஜமாய் பேசிவிட்டு, "ஹலோ சார், என் பையன் MIT - அண்ணா university-யில் சேர்ந்து இருக்கிறான், இப்போதான் பணம் கட்டிவிட்டு வருகிறேன்" என்று பெருமையுடன் சொல்லிவிட்டு, ட்ரெயினில் இருந்து கிழே இறங்கி சிங்க நடை போட்டு பெருமை முகத்தில் இருக்க என்னை நோக்கி நடந்து வந்தபோது, "இது எங்கப்பா" என்று பெருமையாக தோன்றியது.


தனக்கு என்ன இல்லாவிட்டாலும், எனக்கு எல்லாம் இருக்குமாறு பார்த்து கொண்ட, என்னை இந்த அளவு ஆளாக்கிவிட்டு ஒன்றுமே தெரியாததுபோல இருக்கும் இந்த மனிதனுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய போகிறேன் ? இந்த ஒரு நாள் மட்டும் அவரை கட்டி பிடித்து "ஹாப்பி பாதெர்ஸ் டே !!" என்று சொன்னால் போதுமா ? இல்லை, ஒவ்வொரு நாளுமே நான் சொல்ல வேண்டும் "ஐ லவ் யு டாட் !".

No comments:

Post a Comment