Wednesday, June 20, 2012

என்னை செதுக்கிய புத்தக வாசிப்பு

சமீப காலமாக, எனது அபார்ட்மெண்டில் உள்ள எனது நண்பர் ஒருவருடன் பேசி கொண்டு இருந்தபோது தான் படித்த புத்தகம் ஒன்றை பற்றி குறிப்பிட்டு, அதை நான் படித்தே ஆக வேண்டும் என்று எனது ஆர்வத்தை தூண்டினார். அவரே அதை கொண்டு வந்து தருவதாய் கூறிவிட்டு, நேற்று இரவு அதை தந்தும் விட்டார்.

புத்தகத்தை கையில் எடுத்தவுடன், எப்படி என் வாசிப்பு தொடங்கியது என்பதை யோசித்தேன். எனது அம்மா எனக்கு முதன் முதலில் வாங்கி கொடுத்த பஞ்சதந்திர கதைகள் புத்தகம்தான் எனது முதல் புத்தக வாசிப்பு. அதை நான் படிக்கச் அம்மா எனக்கு பல்வேறு வகைகளில் எனக்கு உற்சாகம் கொடுத்தார்கள். முறுக்கு, சாக்லேட் என்று இருந்தது அந்த உற்சாகம்.



அதை படித்து முடித்தவுடன், இன்னும் இன்னும் என்று புத்தகம் கேட்டேன். அவர்கள் பயந்து போய், தினமலர் - சிறுவர்மலர் வெள்ளிகிழமைகளில் கிடைக்குமாறு செய்தார்கள். ஆறு மணிக்கு எல்லாம் எழுந்து, பேப்பர் பிரிக்கும்போதே சென்று வாங்கி வந்து படிப்பேன்.



பின்னர்தான் என் அம்மா வருத்தப்படும் படியாக நான் காமிக்ஸ் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். அம்மாவுக்கு நான் படிப்பதில் சந்தோசம்தான், ஆனால் வாரத்திற்கு 2 காமிக்ஸ் புத்தகங்களை வாங்கி வந்து படிபதில்தான் நொந்து விட்டார்கள். லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ் என்று எனது உலகம் விரிவடைய ஆரம்பித்தது. அதை வாங்குவதற்காக நான் என் அம்மாவின் சேமிப்பில் கை வைப்பது அதிகமானது.


பின்னர் ராஜேஷ் குமார், பட்டுகோட்டை பிரபாகர், பாலகுமாரன், சுபா, பாக்கியம் ராமசாமி, ஜெயகாந்தன் என்று பலரின் நாவல்களை படிக்கச் ஆரம்பித்தேன். பைத்தியம் போல நிறைய புத்தகம் வாங்கி வாங்கி படிக்கச் ஆரம்பித்தேன். ஒவ்வொரு எழுத்தாளர்களும் ஒவ்வொரு ஸ்டைலில் இருந்தது. ராஜேஷ் குமாரின் விவேக் கேரக்டர் துப்பறியும் ஸ்டைலும் அவர் ஒவ்வொரு கதையையும் கொண்டு செல்லும் பாணியும் என்னை மயக்கும்.


க்ரைம் கதைகள் மட்டுமே எழுத்து உலகம் என்று இருந்த போது, மீண்டும் என் அம்மா என்னை இந்த நாவல்களில் இருந்து என்னை ராமகிருஷ்ணன், ஜெப்ப்ரீ ஆர்ச்சர், தேவன், சுஜாதா, கண்ணதாசன், வைரமுத்து, பா.விஜய் என்று ஒரு புதிய உலகத்தை அறிமுகபடுத்தினார். முதன் முதலில் அவர் எனக்கு "துப்பறியும் சாம்பு" கதையை கொடுத்து படிக்க சொன்னபோது, அதை படிக்க ஆரம்பித்து கிழே வைக்க மனம் வரவில்லை. வைரமுத்து கவிதை தொகுப்புகள் பல நாள் எனக்கு இரவு உணவாக இருந்தது. ராமகிருஷ்ணன் கதைகளை படிக்கும் படிக்கும் பல சமயம் மனம் பின்னோக்கி பயணித்து கேள்வி கேட்கும். சுஜாதாவின் சயின்ஸ் பிக்ஷன் கதைகள் பல ஆச்சர்யமான கேள்விகளை மனதில் எழுப்பியது.



எனது கண் முன்னே ஒரு ஆச்சர்யமான, அறிவான ஒரு உலகம் இருந்தது புலப்பட்டது. சென்னையில் இருந்த ஹிக்கின் போதம்ஸ் எனது போதி மரமானது. இன்று எனது லைப்ரரியில் சுமார் 500 புத்தகங்களுக்கு மேல் உள்ளது. எனது ஒவ்வொரு பயணத்தின் போதும், புத்தகம் எனது தோழனாய் இருக்கிறது. வாசிப்பு பழக பழக அது போதை போல ஆகிவிட்டது. இன்று எவ்வளவுதான் e-books வந்து, என்னிடம் iPad இருந்தபோதும், எச்சில் தொட்டு பக்கத்தை திருப்பி, பல விதமான போஸ்களில் புத்தகம் படிக்கும் சுகமே தனி. இன்றும் எனது வோட்டு பேப்பர் புத்தகங்களுக்கே.



ஒவ்வொரு வருடமும் புத்தக கண்காட்சிக்கு விரும்பி எதிர்பார்த்து செல்வேன். இந்த வருடமும் அதை எதிர்பார்கிறேன்.

ஒவ்வொரு புத்தகமும் வாழ்வின் ஒவ்வொரு ஜன்னல்களை திறக்கிறது. பல பேருக்கு ஜன்னல் எங்கே இருக்கிறது என்பதே தெரியவில்லை. அடுத்த தலைமுறைக்கு புத்தகம் என்பது டிஜிட்டலில் மட்டும்தான் என்கிறபோது ஏனோ நான் எனது அருகிலிருக்கும் புத்தகத்தை எடுத்து முகர்ந்து பார்கிறேன்.

No comments:

Post a Comment