Tuesday, July 31, 2012

அறுசுவை - திண்டுக்கல் கையேந்தி பவன் போளி

 திண்டுக்கல் பதிவு நிறைய போடறேன் அப்படின்னு என் நண்பர் சொன்னார், என்ன பண்றது என்னோட மனைவி அங்கதானே இருக்காங்க !! நானும் என் மச்சானும் சேர்த்தோம்முன்னா வீட்டுலயே சாப்பிட மாட்டோம், அதுவும் அவன் சந்து பொந்துல்ல எல்லாம் எந்த கடையில எது நல்லா இருக்குதுன்னு பார்த்து பார்த்து கூட்டிகிட்டு போறபோது என்ன செய்ய முடியும் சொல்லுங்க ? 

இந்த வார அறுசுவையில திண்டுகல்லுல கிடைக்கிற கையேந்தி பவன் போளி கடை பத்தி !! கடை இருக்கிறது என்னமோ ரோட்டுல, ஆனா ருசியோ அபாரம் ! கடைக்காரரும்,  இவர் அப்பாவும் திண்டுகல்லுல தனி தனியா கடை போட்டு இருக்காங்க, ரெண்டுலயும் வெறும் ரெண்டு மெனுதான்....தேங்காய் நெய் போளி, வெஜிடபுள் மசாலா போளி. முதல்ல நானும் என்னடா கையேந்தி பவன்ல போய் சாப்பிடன்னுமான்னு யோசிச்சேன், ஆனா இங்க வர கூட்டத்தை பார்த்தீங்கன்னா நீங்க யோசிக்கவே மாட்டீங்க. ஒரு நாளைக்கு குறைஞ்சது 500 போளி வரை போடறாரு அப்படின்னா பாருங்க !!


சும்மா சர சரன்னு மைத்த மாவை கையில எடுத்து லேசா தேய்ச்சி, நடுவுல இனிப்புன்னா தேங்காய், காரம்ன்னா மசாலான்னு வைச்சி அதை உருண்டை ஆக்கி சட்டுன்னு தட்டையா அமுக்கி கல்லுல போடும்போதே உங்களுக்கு நக்கு ஊற ஆரம்பிச்சிடும். சும்மா சுட சுட ஒரு இனிப்பு, ஒரு காரம்ன்னு தட்டில வைச்சி நீட்டுரப்ப உங்க கையை விட நாக்கு முன்னுக்கு போய் நிக்கும். சாப்பிட அரம்பிசீங்கன்னா அப்படியே உள்ள போய்கிட்டே இருக்கும்.


இந்த கடை திண்டுக்கல் பஸ் ஸ்டான்ட் பக்கத்தில் (திருவள்ளுவர் சாலை) இருக்கு, சாயங்காலம் அஞ்சு மணியில இருந்து நைட் சரக்கு தீருகிற வரை இருக்கும். என்னடா கையேந்தி பவனா அப்படின்னு யோசிக்காதீங்க...நிறைய பேரு காருல எல்லாம் வந்து சாப்ட்டு போறாங்க. 

Monday, July 30, 2012

ஆச்சி நாடக சபா - 4D Magix தியேட்டர்

 தமிழர்களாகிய நாம் எல்லோரும் படங்களை விரும்பி பார்பவர்கள், அதிலும் அன்றிலிருந்து இன்று வரை நமது படம் பார்க்கும் அனுபவங்கள் ஏறக்குறைய ஒன்றுதான். நாம் இன்று பார்க்கும் படங்கள் எல்லாம் 2D வகையை சார்ந்தவை. நான் சிறு வயதில் என்னுடைய முதல் 3D பட அனுபவங்களை பெற்றேன் !!"மை டியர் குட்டி சாத்தான்" படம் பார்க்கும் போது மிகுந்த பரவசமாக இருந்தேன், அதே போன்ற அனுபவம்தான் இந்த 4D படத்திற்கும் கிடைத்தது. 2D என்பது சாதாரண படம், 3D என்பது ஒரு முப்பரிமான தோற்றம் அதாவது படத்தின் காட்சிகள் உங்கள் முன் வருவது போல தோன்றும். பல பல காலமாக இதற்கு பின் வேறு டெக்னாலஜி எதுவும் வரவில்லை,இப்போது முப்பரிமான டெக்னாலஜியுடன் பீலிங் என்ற நான்காவது டெக்னாலஜியும் சேர்த்து 4D தியேட்டர் கொண்டு வந்து 
இருகிறர்கள்.. அதாவது படத்தில் ஹீரோ கால்களுக்கு அடியில் நண்டுகள் ஊறுவது போல தெரிந்தால், உங்களின் கால்களுக்கு அடியில் நண்டு போல ஒன்று ஊறுவது போல செட் அப் செய்து விடுவார்கள். ஹீரோ கடலில் கப்பலில் போகிறாரா, உங்கள் முகத்தில் தண்ணீர் தெறிக்கும், நெருப்பில் இருக்கிறாரா உங்கள் முன் புகை தோன்றும், அவர் குதிரையில் செல்கிறாரா உங்கள் சீட்டும் குதிரை ஆடுவதற்கு ஏற்ப ஆடும். அதாவது உங்களையும் அதை பீல் செய்ய செய்வார்கள்.....தொழில்நுட்ப உதவியுடன். இந்த படங்கள் எல்லாம் 10 முதல் 15 நிமிடங்கள் வரை மட்டுமே, ஆனால் வாழ்நாளில் உங்களுக்கு மறக்காது. அது எப்படி செயல்படும் என்பதை இந்த வீடியோ உங்களுக்கு சொல்லும்....நான் இதை முதல் முறை சிங்கப்பூரில் உள்ள செந்தோசா தீவில் கண்டேன், பின்னல் பல பல நாடுகளில் இதை அனுபவித்து விட்டேன். ஆனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் கண்டிப்பாக என்ஜாய் செய்வீர்கள்....

Sunday, July 29, 2012

மறக்க முடியா பயணம் - கோவா

காலேஜ் முடித்து விட்டு முதல் வேலைக்கு சென்று நேரம் காலம் பார்க்காமல் உழைத்து கொண்டே இருந்து விட்டு, ஒரு நாள் திடீரென்று அட நாம இத்தனை வருஷத்தில் நண்பனுடன் எங்க டூர் போயிருக்கிறோம் என்று யோசித்து இருக்கிறீர்களா ? அப்படி நகமும் சதையுமாக இருந்த நண்பனுடன், கல்லூரி முடித்து மூன்று வருடத்திற்கு பிறகு ஒரு சுப நாளில் ஏற்பட்ட அந்த ஞாநோதயம்தான், இந்த கோவா பயணமாக மாறியது. ஒரு இனிய நாளில் அவனிடம் போன் போட்டு இந்த கேள்வியை கேட்டவுடன், "ஆமாம் மச்சி, எங்கயாவது போகனும்டா..."என்றவுடன் சட்டென்று பிளான் போட்டு கிளம்பினோம். எங்களது குறிக்கோள் கால் போன போக்கில் அலைவது....சந்தோசமாக இருப்பது, அவ்வளவுதான்.

நானும் எனது நண்பன் ஜெகதீசனும்....2005'ல் 
நாங்கள் தங்கியிருந்த "பம்போலிம் பீச் ரிசார்டிற்கு"ஒரு பீச்சே சொந்தம், அதுவும் நாங்கள் தங்கியிருந்தது பீச்சை பார்த்து இருந்த ரூம், ஆகவே அதிகாலையும் மாலையும் ஒரு அற்புதமான பொழுது. முதல் நாளில் சும்மா அப்படியே சுற்றி பார்க்கலாம் என்று கிளம்பி ஒரு படகு பயணம் போனோம், பின்னர் கால் போன போக்கில் நடந்து நடந்து பழைய கதைகளை பேசினோம். எதை பேசினோம் என்பது நினைவில் இல்லை என்றாலும் அந்த பொழுதில் மனம் சந்தோசமாக இருந்தது என்பதை மட்டும் இன்றும் உணர முடிகிறது.

படகு பயணம் - கோவா 
பம்போலிம் பீச் ரிசார்ட் 
எங்கள் ரூமில் இருந்து....தூரத்தில் ஆர்பரிக்கும் கடல்

பின்னர் தூங்கி எழுந்து காலையில் அந்த சோம்பி திரியும் சுகத்தில் ஒரு காபி குடித்துகொண்டே அந்த கடலை பார்த்து கொண்டு பேசி கொண்டிரின்தது ஒரு அருமையான ஆனந்தம். எந்த பேச்சை பேசினாலும் அடுத்து என்ன செய்வது என்பதற்கு மட்டும் எங்களிடம் பதில் இல்லை. சரி, கோவாவின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை சுற்றி பார்போம் என்று கிளம்பினோம். போர்க்கீசியர்கள் கட்டிய சே கதீட்ரல் பார்த்தோம், ஒரு இயற்கை எழில் கொஞ்சும் பச்சை பசேலென்ற இடத்தில ஒரு பழைமையான சர்ச் ஒரு அழகான ஓவியம் போல இருந்தது. இங்கு பதினாறு வகையான பீச்கள் உள்ளன, அதில் சிறிய வகை பீச்களையும் சேர்த்தால் ஒரு நாற்பத்தி அயிந்து தேறும். நாங்கள் ஒவ்வொரு கடற்கரைக்கும் சென்று புகைப்படம் எடுத்து கொள்வது, மண்ணில் ஓடி பிடித்து விளையாடுவது என்று இருந்தோம், ஆனால் இப்படி ஒவ்வொரு கடற்கரைக்கும் இப்படியே செல்வது எங்களுக்கு அலுப்பாக ஆகி விட்டது. கடல் என்பது நின்று நிதானித்து ஆழ்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்று என்பது அன்றுதான் எனக்கு புரிந்தது !

கோவாவை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கு சொடுக்கவும்...About Goa
அங்கு உள்ள கடற்கரையை பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...Beaches_of_Goa

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என நிருபிக்க போராடும் எனது நண்பன் 
அடுத்த நாள், நாங்கள் முடிவெடுத்து விட்டோம்....எங்கும் செல்வதில்லை, இங்கேயே இந்த கடலை பார்த்து கொள்ளலாம் என்று. காலையில் எழுந்து பீச் ஓரம் அப்படியே நடந்தோம். தண்ணீரில் கால் நனைய, சிறு பிள்ளைகளாய் ஓடி பிடித்து, குரங்குதனமாக குதித்து என்று. சுமார் மூன்று மணி நேரம் வரை இப்படி சந்தோசமாக பேசிக்கொண்டும், குதித்து கொண்டும் இருந்தோம். மனது லேசாகி விட்டது போல தெரிந்தது. மனிதனுக்கு வருடம் ஒரு முறையாவது இது போல் சந்தோசமும், கண்ணீரும் தேவை...இல்லையென்றால் மனமும் முகமும் இறுகிவிடும்.

இந்த காணொளியை நீங்கள் பார்த்தால், கோவாவை பற்றி முழுதும் அறிந்து கொள்ளலாம்.இந்த பயணத்தில் நாங்கள் கண்டது எல்லாம் கடல், கடல், கடல் மட்டும்தான். இன்று அவன் அமெரிக்காவில், நான் இந்தியாவில்...அவன் வரும்போது நான் இருப்பதில்லை, நான் அங்கு சென்றால் அவன் இருப்பதில்லை. வெறும் போனில் மட்டும் பேசி கொள்கிறோம். ஒரு நாள் வரும்....மீண்டும் கோவா செல்வோம், அப்போது எங்களுக்கு கைத்தடியும், கண்ணாடியும் தேவையாய் இருக்கலாம் !! இப்படி ஒரு பயணம், அதுவும் உங்கள் நண்பர்களுடன் சென்றால் உங்களின் மனதிற்கும், உடலுக்கும் ஒரு உற்சாகம் வரும் என்பது சத்தியமான உண்மை !


Saturday, July 28, 2012

தஞ்சாவூரின் தாஜ்மஹால் !

பலருக்கு இந்த தலைப்பை பார்த்தவுடன் அதிசயமாக நினைக்கலாம் அல்லது ஆத்திரபடலாம்....ஆனால் உங்களின் கவனத்தை கவர இந்த தலைப்பை வைக்க வேண்டியதாய் இருந்தது ! சிறு வயது முதல் உலகின் ஏழு அதிசயங்கள் பற்றி படிக்கும் போது எல்லாம் ஐரோப்பிய கண்டம் அல்லது அமெரிக்க கண்டம் சொன்னதையே நாமெல்லாம் நம்பினோம், அதனாலேயே நமது தலைமுறை, உலகின் ஏழு அதிசயங்கள் எல்லாம் இந்தியாவிற்கு வெளியிலேயே உள்ளன என்று நம்பிக்கொண்டு இருந்துள்ளோம் !! ஆனால் நமக்கு அருகிலேயே உலகின் மிக பெரிய அதிசயம் இருந்திருப்பது தெரியாமல் போய் விட்டது.


நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருச்சி, ஆனால் இதுவரை 2 முறைதான் நமது தஞ்சை பெரிய கோவிலை பார்த்து இருக்கிறேன். வெளிப்படையாக சொல்வதானால் அந்த கோவிலை பார்த்த போது எனக்கு எந்த உணர்வும் எழவில்லை. இதுவரை நான் கருவறை வரை சென்று கூட பார்த்ததில்லை. ஆனால் கம்போடியா நாட்டின் அங்கோர்வாட் கோவிலையும், சீனாவில் உள்ள புத்த மத கோவிலையும், ஜப்பானில் உள்ள அகபூசா கோவிலையும், மலேசியாவில் உள்ள பத்து கேவ் முருகன் கோவிலையும், அமெரிக்காவின் ஹூஸ்டன் ஹிந்து கோவிலையும், தாய்லாந்து பாங்காக் நகரில் உள்ள வாட் Wat  Phra Kaeo என்னும் எம்ரால்ட் புத்த கோவிலையும், ஐரோப்பா பிரசெல்ஸ் நகரின் சர்ச், ஜெர்மனியின் கொலோன் நகரின் உலக புகழ் பெற்ற கதீட்ரலையும் சுற்றி பார்த்து விட்டு இது போன்ற அதிசய கோவில்கள் ஏன் நம் நாட்டில் இல்லை என்று எண்ணியிருக்கிறேன். இந்த கோவில்களின் முன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நான் பெருமையாக எல்லோரிடமும் காட்டும் நான், நமது தஞ்சை கோவில் முன் எடுத்த படத்தை யாரிடமும் காண்பித்ததில்லை. :-(சமீபத்தில் எனது மேல் வீட்டு நண்பர், அவரிடம் இருந்த "உடையார்" என்னும் பாலகுமாரன் எழுதிய நாவலை கொடுத்தார் (அது முதல் தொகுதி மட்டும்தான் !! இது போல் 6 தொகுதி இருக்கிறது !!). அதை படிக்க ஆரம்பித்ததில் இருந்து நமது தஞ்சை பெரிய கோவில் பற்றி மிகுந்த மரியாதை வந்து விட்டது. நாம் எல்லோரும் எவ்வளவு அறிவிலிகளாக இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது. இந்த நாவல் இந்த தஞ்சை பெரிய கோவில் உருவான கதையையும், மாமன்னர் ராஜ ராஜ சோழ சக்கரவர்த்தி பற்றியும் தெளிவாக கூறுகிறது.அதை படிக்க
அரம்பிக்கபோதுதான்  நான் இதுவரை பார்த்த எல்லா கோவிலும் இதன் முன் மண்டியிட வேண்டும் என்று தோன்றியது. அந்த காலத்திலேயே எந்த தொழில்நுட்ப வசதியும் இல்லாத நேரத்தில், நமது முன்னோர்கள் எவ்வளவு அறிவுடன் இதை நடத்தி காட்டி இருக்கிறார்கள் என்று நீங்கள் அறிந்தால் ஆச்சர்யபடுவீர்கள் ! மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலை கூட உலக அதிசயத்திற்கு வோட்டு போடுங்கள் என்று கூக்குரலிட்ட நமது மக்கள், இதை எப்படி மறந்தார்கள் !! இந்த கோவிலை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் Brihadeeswarar_Temple

Tanjore temple - Side view

Tanjore temple - Top view


இந்த கோவிலை கட்ட எங்கிருந்து பணம் வந்தது, எவ்வளவு சிற்பிகள், கல் மண் சுமபவர்கள், அவர்களுக்கு சமைத்து போடுபவர்கள், தண்ணீர் தருபவர்கள், காய்கறி பயிரிட்டவர்கள், அதை கொண்டு வந்து கொடுத்தவர்கள், கணக்கர்கள், வீடு அமைத்து தந்தவர்கள், சிற்பிகளுக்கு சிலை மாடல் ஆக நின்றவர்கள், இவர்கள் எல்லோரையும் உற்சாக படுத்திய ஆடல் பாடல் கலைஞர்கள், சாரம் கட்டுபவர்கள், குப்பை அகற்றுபவர்கள் என்று எத்தனை பேர் பாடுபட்டனர் !! இப்படிப்பட்ட கோவில் அமைக்க அந்த காலத்தில் எங்கிருந்து எல்லோருக்கும் அரிசி வந்தது, அதை விளைவிக்க என்ன செய்தனர், அதை எப்படி பல ஊர்களில், தேசங்களில் இருந்து கொண்டு வந்தனர், எப்படி அந்த கோபுர கல்லை மேலே ஏற்றினர், எப்படி பாறைகளை எங்கிருந்து கொண்டு வந்தனர், எத்தனை யானைகள், குதிரைகள், எருதுகள் உதவின, அதை யார் பராமரித்தனர், அவைகளுக்கு உணவுகள் எப்படி கிடைத்தன, யார் அதை கொடுத்தனர் / விளைவித்தனர், எப்படி மழை / புயல் / வெள்ளம் தாங்கினார் மக்கள், நினைத்தாலே ஆச்சர்யம்தான். இன்று ஆயிரம் அடி வீடு நாம் கட்ட வேண்டும் என்றாலே முழி பிதுங்கி விடுகிறோம்...மேஸ்திரி, சித்தாள், மர வேலை செய்பவர், மின்சார வேலை செய்பவர், ப்ளம்பர், சாரம் கட்டுபவர் என்று பலரை நாம் பார்க்க வேண்டும். யோசித்து பாருங்கள்...ராஜ  ராஜ சோழன் எப்படி எல்லோரையும் வேலை வாங்கி இருப்பான் என்று. நல்ல வேளை நான் அந்த புத்தகம் படித்தேன், இல்லையென்றால் இந்த அதிசய கோவிலை பற்றி எனக்கு தெரியாமலே போயிருக்கும்.


அடுத்த வருடம் உலக அதிசயம் தாஜ் மஹால் சென்று பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், ஆனால் இங்கேயே ஒரு தாஜ் மஹால் இருக்கிறது, நன்றாக அதை முதலில் பார்க்க வேண்டும். தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள்...முடிந்தால் டெல்லியில் இருக்கும் தாஜ்மஹாலை "ஆக்ராவின் பெரியகோவில்" என்று மாற்ற முடியுமா என்று பாருங்கள். அப்போதுதான் அதற்கு பெருமை.

நமது பெரியகோவில் ஒரு உலக அதிசயமில்லை, அது ஒரு அண்ட அதிசயம்...ஆகவே தயவு செய்து இது உலக அதிசயத்தில் இடம்பெறவில்லையே என்று யாரும் வருந்தவேண்டாம்.

ராஜ ராஜா....  நீ இந்த கோவிலை சலவை கல்லில் கட்டி இருந்திருக்க வேண்டும். இந்த நாட்டில் மனிதர்களில் மட்டுமல்ல, கோவிலிலும் வெள்ளை தோல் இருந்தால்தான் அதற்கு மதிப்பு !

Friday, July 27, 2012

சோலை டாக்கீஸ் - குறையொன்றும் இல்லை (MS சுப்புலக்ஷ்மி)

எனது நண்பர் ஒருவர், எனது பதிவை தினமும் படிப்பவர் இன்று என்னை கூப்பிட்டு "இளையராஜா, ரகுமான் பாடல்கள் எல்லாம் நமக்கு தெரியும்...உன்னோட பதிவில் நான் புது புது விஷயம் பார்க்கிறேன், அது போல இந்த சோலை டாக்கீஸ் பதிவிலும் என் ஏதாவது புதுமையான இசை அல்லது கேட்காத இசையை கொடுக்க கூடாது ?? நீதான் பல நாடுகளுக்கு போற இல்லை..." என்று கேட்டார். அதுவும் எனக்கு நியாயமாக பட்டது, அதனால் இந்த பதிவில் இருந்து நான் கேட்ட புதுமையான இசையையும் உங்களுக்கு சொல்லலாம் என்று இருக்கிறேன். உங்களது கருத்தை சொல்லுங்கள் ! உங்கள் கருத்தை பொறுத்து தொடர்கிறேன் அல்லது இளையராஜா பாடல்கள் மட்டும் பதிவிடுகிறேன்.

எனக்கு கர்நாடக சங்கீத ஞானம் எல்லாம் கிடையாது, வெறும் இசையை ரசிப்பவன் நான். ஒரு நாள் திரு. MS சுப்புலக்ஷ்மி அவர்களின் இந்த "குறையொன்றும் இல்லை..." பாடலை கேட்ட போது மனது ஏதோ செய்ததை மறுக்க முடியாது. அது பாடலின் வரிகளா, அவரின் குரலா அல்லது எல்லாமுமா என்பதை சொல்ல முடியாத தெய்வீக இசை அது. நீங்களும் கேட்டு ரசியுங்கள்...


இந்த பாடலின் வரிகளை, சக்தி மசாலா விளம்பரத்தில் முதலில் பார்த்த போது பயங்கர இம்பாக்ட் இருந்தது. இந்த பாடலையும், காணொளியையும் நீங்கள் பார்க்கும் போது அதை உணர்வீர்கள்...


Thursday, July 26, 2012

நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - டிராபிக் ராமசாமி

 ஒரு எழுபது வயது ஆகிவிட்டால் நாம் எல்லாம் என்ன செய்வோம் ? புத்தகம் படிப்போம், பேர குழந்தைகளுடன் விளையாடுவோம், வாக்கிங் செல்வோம்...ஆனால் ஒரு மனிதர் இந்த வயதில் தன்னை பொது வாழ்க்கைக்கு அர்ப்பணித்து மக்களுக்காக அவர்களின் உரிமைக்காக, பொது நலனுக்காக போராடுகிறார், அவர்தான் டிராபிக் ராமசாமி. ஆனால் இந்த மனிதருக்கு எந்த விருதும் கொடுத்ததில்லை எந்த அரசும், அட எந்த முதல்வரும், அமைச்சரும் இதுவரை இவரது முயற்சிக்கு துணை நின்றதில்லை என்றால் பாருங்களேன் !!ஒரு மில் தொழிலாளியாக இருந்து ரிடையர்டு ஆகி, சும்மா பொழுது போகாத போது சென்னை பாரிஸ் கார்னர் டிராபிக் கண்டு ஒரு நாள் ஒழுங்கு செய்ய சென்று, அதன் பின் ஒவ்வொரு நாளும் அதை செய்து வந்துள்ளார். அதை கண்ட போக்குவரத்து காவல்துறை அவருக்கு முறையான அனுமதி அளித்து அதனால் அவர் இன்றைய "டிராபிக்" ராமசாமி ஆனார்.ஒவ்வொரு முறையும் இவர் பெயர் பொது நலன் வழக்குகளுக்காக அடிபடும். இவரது முயற்சியால்தான் சென்னையின் யாருக்கும் அடங்காத மீன்பாடி வண்டிகள் ஒழிக்கப்பட்டன, இதற்கு பரிசாக மீனவர்களால் அவர் தாக்கப்பட்டார் ! இது போல பல பல பொது நலன் வழக்குகளை அவர் எடுத்து நடத்தி கொண்டு இருக்கிறார். இவரது தற்போதைய வெற்றிதான் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் இருந்த பெரிய கட்டடங்களுக்கு பூட்டு போட வைத்தது. இது போன்ற செயல்களால் அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அரசாங்கம் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்திருக்கிறது. இன்றும் அவர் பின் காவலர் இருக்க போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதை காணலாம்.இந்த வயதிலும் அவர் இது போன்ற வழக்குகளை எதிர்கொள்ள தானே லா படித்து பட்டம் பெற்றிருக்கிறார். இவரின் சேவை சென்னை போன்ற நகரத்தில் மட்டும்தான்...இன்னும் இவரை போன்ற பலர் வேண்டும் நமது தமிழகம் முழுவதும். ஒரு முறையாவது அவரை சந்தித்து இந்த மன திடம் எப்படி வந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

Wednesday, July 25, 2012

என் படைப்புகள் - கடவுள் காப்பாற்றுவார் ?!

கோவில் வாசலில் செருப்புக்கு காசு கொடுத்துவிட்டு 
செல்லும் போதெல்லாம் - இந்த கேள்வி மனதில் எழும்
எல்லோரையும் எல்லாவற்றையும் காப்பாற்றும் 
இறைவன்...என் செருப்பையும் காப்பாற்ற மாட்டாரா என்ன ? 

 

Tuesday, July 24, 2012

நான் ரசித்த குறும்படம் - மீல்ஸ் ரெடி

 இந்த குறும்படத்தை பார்த்தவுடன் நெஞ்சில் ஒரு நெகிழ்ச்சியும், முடிவில் ஒரு ஆனந்த கண்ணீரும் வருவதை தவிர்க்க முடியாது. எல்லா குறும்படத்திலும் வசனங்களை கொண்டு நமக்கு காட்சியை விளக்குவார்கள். ஆனால் இந்த குறும்படத்தில் வெறும் காட்சிகள்தான்....ஆனால் அத்தனை அருமையான மனதை தொடும் காட்சிகள். இந்த குறும்படத்தை நீங்கள் கடைசி வரை பார்க்க வேண்டும், எனக்கு அவர்கள் முடித்து இருந்த விதம் மிகவும் பிடித்திருந்தது.

இந்த குறும்படத்தின் இயக்குனர் மிக சரியாக எல்லாவற்றையும் செதுக்கி இருக்கிறார் என்றால் அது மிகையாகது.


ஆச்சி நாடக சபா - Songs of the Sea (Singapore)

சிங்கப்பூரில் பொழுதுபோக்குக்கு மட்டும் பஞ்சமே இல்லை. சாதரணமாக நாம் நினைக்கும் ஒன்றை தொழில்நுட்பம் புகுத்தி ஆச்சர்யமான ஒன்றாக மாற்றிவிடுவார்கள். பொதுவாக கடலும் கடற்கரையும் இருந்தால் நாம் என்ன செய்வோம், பஜ்ஜி சுடுவோம் அல்லது மீன் பிடிப்போம், ஆனால் சிங்கப்பூரில் அதை ஒரு உல்லாச உலகமாக மாற்றி உள்ளனர், அதன் பெயர் "செந்தோசா தீவு ".

இங்கு எல்லா தீவிலும் உள்ளது போல கடற்கரையும், எல்லா பொழுதுபோக்கு இடத்தில உள்ளது போல பூங்காவும், ஜாய் ரைட்சும் உள்ளன. சாதாரண கடல் நீரை பம்ப் மூலம் பௌண்டைன் போல ஆக்கி அதில் லேசெர் லைட்டை ப்ராஜெக்ட் செய்து ஒரு அமேசிங் ஷோவை தருகிறார்கள், அதுதான் "Songs of the Sea". இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்....Songs_of_the_Sea


இந்த சோவின் கதை என்று பார்த்தால் மிக சிறியதுதான்....லீயும் அவனது தோழர்களும் ஒரு நாள் கடற்கரைக்கு செல்கிறார்கள். அங்கு லீ தனது காந்த குரலால் ஒரு பாடல் பாடுகிறான். அவனது பாடல் ஒரு அழகான இளவரசி தூங்குவதை காட்டுகிறது. அதை பார்த்த அவனும் அவன் நண்பர்களும் மெய் மறந்து போகின்றனர். அப்போது அங்கு வரும் ஆஸ்கார் என்னும் மஞ்சள் நிற கிளவுன் மீன் அவனை பாராட்டி அந்த இளவரசியை துயில் எழ உதவுமாறு கேட்கிறது.

அவன் தனது பாடலை பாடி அவளை துயில் எழுப்ப முயலும்போது, அங்கு நெருப்பு, ஒளி மற்றும் நீர் தேவதைகள் அங்கு வருகின்றன, அவைகளின் சக்தியை மீட்டு கொடுக்குமாறு கேட்கின்றன, லீயும் அவைகளுக்கு உதவி புரிகிறான். பின்னர் அவன் ஒரு அருமையான பாடல் பாடி அந்த இலவரசியினை துயில் எழுப்ப, அவள் இவனுக்கு நன்றி சொல்கிறாள்.

கதை என்று பார்த்தால் இது ஒன்றும் இல்லை, ஆனால் அவர்கள் ஒவ்வொரு பாடலின் முடிவில் கடல் நீரை பீய்ச்சி மேலே அடித்து, அதில் லேசெர் ஒளியினை அடித்து உருவத்தை கொண்டு வருவதும், வான வேடிக்கைகள், என்று ஒரு மாயாஜாலம்தான். இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும்.


நானும் எனது மனைவியும் இந்த ஷோவை மெய் மறந்து ரசித்தோம். என்ன ஒரு டெக்னாலஜிடா என்று எங்களை வியக்க வைத்தது...

Monday, July 23, 2012

அறுசுவை - திண்டுக்கல் ரியல் பழமுதிர்சோலை

பொதுவாக இந்த "அறுசுவை" பதிவில் நான் சுவைத்த உணவகங்களை 
பற்றித்தான் எழுதுவேன், ஆனால் இந்த முறை நான் சுவைத்த  பல விதமான பழசாறு பற்றி எழுதுகிறேன். இதை நான் எழுதவில்லை என்றால் என் ஜன்மம் சாபல்யம் அடையாது, அப்படி ஒரு சுவை இந்த பழமுதிர்சோலையில்.

நான் திண்டுக்கல் செல்லும்போது எல்லாம் இந்த பழமுதிர்சோலையில் கண்டிப்பாக எதாவது ஒரு பழச்சாறு குடிக்கும் அளவுக்கு என்னை அடிமை ஆக்கிவிட்டது !! பொதுவாக நாம் ஜூஸ் என்றாலே அது சாத்துக்குடி, ஆரஞ்சு, லஸ்ஸி, மாதுளை, ஆப்பிள் என்று பழகிவிட்டோம். ஆனால் ஜூசில் இத்தனை வகைகளா என்று எண்ணும் படியாக பல விதமான வகைகளை இந்த "திண்டுக்கல் ரியல் பழமுதிர்சோலை" வழங்குகிறது.திண்டுக்கல் பஸ் ஸ்டான்ட் அருகில் ஒரு சிறிய இடத்தில இந்த பழமுதிர்ச்சோலை இருந்தாலும் சுவைக்கு ஒரு மிக பெரிய இடம். கீழே இருக்கும் ஜூஸ் பட்டியலை பாருங்கள்.....இப்படி பட்ட ஜூஸ் எல்லாம் கேள்விபட்டிருகிரீர்களா ??!!! இங்கே உள்ளது மட்டும் இல்லை, நீங்கள் உங்களுக்கு விருப்பமான ஜூசும் கேட்டு பெற்று கொள்ளலாம்.


நீங்கள் அடுத்த முறை திண்டுக்கல்லை கடந்து போனீர்கள் என்றால், கண்டிப்பாக நீங்கள் இங்கு இறங்கி சாப்பிட்டு செல்லுங்கள்.....
இல்லையென்றால் உங்கள் வாழ்வில் நீங்கள் நல்ல ஒன்றை மிஸ் செய்கிறீர்கள்.

Sunday, July 22, 2012

நான் ரசித்த குறும்படம் - வார்டு எண் : 325

 சமீப காலமாக குறும்படங்கள் மிகவும் நன்றாகவும், துள்ளலோடும், சிரிக்கும்படியகவும் எடுக்கபடுகின்றன. இதில் சிலவற்றை "நான் ரசித்த குறும்படம்" என்று உங்களுடன் பகிர்ந்துகொண்டால் என்ன என்று தோன்றியது. அதன் தொடர்ச்சியே இந்த பதிவு.இந்த குறும்படத்தை எடுத்துகொண்டால், முதல் சீனிலிருந்தே நகைசுவை ஆரம்பிகிறது. அதுவும் இவர்கள் அறிமுகபடுத்தும் அந்த "ஞானப்ரகாசம்" செய்யும் அட்டூழியம் அருமை. ஒரு மீனவரை காமெடி பீஸ் ஆக்குவது என்பது இன்னும் சிரித்து கொண்டே இருக்க வைக்கிறது.


மறக்க முடியா பயணம் - அமெரிக்கா (பாகம் - 1)

 நமது ஊரில் ஒரு பழக்கம் உண்டு, நீங்கள் எங்கே வேண்டுமானாலும் சென்று இருக்கலாம், ஆனால் அமெரிக்கா சென்று இருந்தால் மட்டுமே நீங்கள் வெளிநாடு சென்று வந்ததாக கருதுவார்கள். நான் பல பல நாடுகள் சென்று வந்தாலும் என் அப்பா நான் ஒவ்வொரு முறை வீட்டுக்கு செல்லும்போதும் "ஏன்டா...என் பிரண்டு பையன் எல்லாம் அமெரிக்கா போறான், நீ எப்போடா போக போற ?" என்று கேட்டுகொண்டே இருப்பார், நான் இதற்காகவாவது போக வேண்டும் என்று கீழதெரு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்துவதாக வேண்டி கொண்டேன். அவரும் அதை ஒரு பொன்னாளில் நிறைவேற்றியும் வைத்து விட்டார், பின்னர்தான் தெரிந்தது அவர் என் தொல்லை தாங்காமல் பயங்கர கடுப்புடன் அதை நிறைவேற்றி இருக்கிறார் என்று !!!??


எனது மேனேஜர் ஒரு நல்ல நாளில் என்னை கூப்பிட்டு "நீ அமெரிக்காவுக்கு போயிருக்கியா ? சரி, சீக்கிரம் விசா அப்ளை செய்ஞ்சு கிளம்பனும் சரியா ?" என்றவுடன், எனக்கு அக்குளுக்கு கீழே சிறகு முளைத்தது மாதிரி இருந்தது. வெளியே வந்தவுடன் அப்பாக்கு போனை போட்டு "நான் அமெரிக்கா போறேன், நான் அமெரிக்கா போறேன், நான் அமெரிக்கா போறேன்" அப்படின்னு சொல்லிட்டேன். அப்புறம் அவர் வந்து பிளைட்டு ஏத்தி விட்டுட்டு போனது எல்லாம் ஒரு தனி கதை. இப்படியாக நானும் அமெரிக்கா வந்துடும் வந்துடும் வந்துடும்னு சும்மா 20 மணி நேரமா ப்ளைட்டு உள்ளே உட்கார்ந்து என்னென்னமோ பண்றேன், ஆனா பைலட்டு "நீ ரொம்ப நல்லவன்" அப்படின்னு சொல்லி ப்ளைட்டை சுத்து வழியில ஓட்டறார் !!! கடைசியில சிகாகோவில இறக்கி விட்டப்ப இடுப்பு எலும்பும், பட்டக்சும் ஒரு ரெண்டு இன்ச் தேய்ந்சிடுச்சு !!?
ஐஸ் ஹாக்கி விளையாட்டும் மைதானமும்
ஒரு வழியா ஹோட்டல் வந்து சேர்ந்து சாப்பிட போகலாம்னு வெளியில வந்தா எதுவுமே நடந்து போற தூரத்தில் இல்லை, இதுக்கு கார் வேற வாடகைக்கு எடுக்கணுமாம். நம்ம ஊரில் எல்லாம் வீட்டை விட்டு இறங்கினா சாயா கடையில் இருந்து சரக்கு கடை வரைக்கும் இருக்கும்....அட போங்கடான்னு ஆயிடுச்சு. இப்படியே ஒரு நாலு நாள் சாப்பிட்டு அலுத்து, கடைசியில் "ரெடி டு ஈட்" தோசை, வடை செய்ஞ்சு நாக்குல படாம சாப்பிட்டோம். மிஞ்சி போன வடையை நாங்க வெளியில கொட்டிட்டு, மறு நாள் காலையில் பார்த்தா...ஒரு எலி கெட்ட வார்த்தை சொல்லி திட்டிகிட்டே போன மாதிரி இருந்தது. சை...எல்லாம் பிரம்மைடா சீனாதானா !!
என் ருசி தீர்த்த "ரெடி டு ஈட்" உணவு வகைகள்  
அமெரிக்கா என்றால் நமக்கு வான் உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் அழகு பெண்கள் தான் நினைவுக்கு வருவார்கள். கட்டிடம் பார்த்து பார்த்து அலுத்த ஒரு நாளில் "ஹூட்டர்ஸ்" உணவகம் சென்று நாங்கள் அவர்கள் கடையை சாத்தும் வரை "திணற திணற" சாபிட்டோம். வேற ஒன்னும் இல்லை அங்கே பிரெஞ்சு பிரைக்கு தொட்டுக்க வைச்ச சால்னா ரொம்ப நல்லா இருந்துச்சு....அட நம்புங்க சார்.
"Hooters" உணவகத்தில் என் ந(த)ங்கைகளுடன்
இப்படியாக என் அமெரிக்க பயணம் குண்டக்க மண்டக்க போய்ட்டு இருந்தப்ப ஒரு நாள் காலையில் வெளியில பார்த்தா ஒரே வெள்ளையா பனி மழை. இது ஒண்ணுதான் நான் விரும்பி பார்த்தது. ஆவூர் கிராமம் பக்கம் முள்ளுகாடு வெயில் மட்டும் பார்த்த என்னை இந்த பனி ஒரு பரவசத்தில் ஆழ்த்தியது என்றால் அது மிகையாகாது. ஆனால், மூன்றாம் நாளில் இருந்து கடுப்பாயிட்டேன்....வெயில் பட்டையை கிளப்பினப்ப எல்லாம் சட்டையை கழட்டி விட்டு காத்து வாங்குவேன், ஆனால் இங்க போட்ட சட்டையை குளிக்கிரப்ப கூட கழட்ட முடியலைடா சாமி. ஒரு காரட்டை பல்லுக்கு இடையில் வைச்சா, வாய் தந்தி அடிக்கிற வேகத்துக்கு நல்லா சலிசா நரிக்கிடுது !!!
முதன் முதலில் என் வாழ்வில் பனி பார்த்த நாள்...
அந்த நாளும் வந்தது....ஊருக்கு போறோம்ன்னுட்டு கிளம்பினேன். எங்க அப்பாவுக்கு போனை போட்டு நான் கிளம்பறேன்பா அப்படின்னு சொன்னா "என்னடா இவ்வளவு சீக்கிரம் கிளம்பற, இன்னும் கொஞ்ச நாள் இருக்கலாம்ல" அப்படின்னு என்னை கேட்கறார் ??? :-( . அப்பாடா அப்படின்னு பிளைட்டு ஏறி சிகாகோ வந்து ஊருக்கு போற பிளைட்டுக்கு ஏறலாம்னு இருந்தப்பதான் இந்த விமான பணிப்பெண் ஒரு வார்த்தை சொன்னா, எனக்கு தலைல இடி விழுந்த மாதிரி ஆகிடுச்சு....அப்படி என்ன வார்த்தை சொன்னான்னு கேட்கறீங்களா "தாங்யூ சார், கம் அகைன் சூன்" அப்படின்னு சொல்லிட்டா சார், கம் அகைன் சூன் அப்படின்னு சொல்லிட்டா. இதுக்கு என்னை நாலு சாத்து சாத்தி, கெட்ட வார்த்தையில் திட்டி இருக்கலாம்.

இந்த பயணம் முடிஞ்சு நம்ம நாட்டுல கால் எடுத்து வைச்சப்பதான் இந்த பாட்டுக்கு உண்மையான அர்த்தம் என்னன்னு புரிஞ்சது...Saturday, July 21, 2012

மாறுவேட போட்டி - நாம் இழக்கும் சந்தோஷங்கள் !!?

இன்று பொருள் தேடி ஓடி ஓடி பிற மாநிலத்திலும், பிற நாட்டிலும் வசிக்கின்ற என்னை போன்ற கோடானு கோடி மக்கள், அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை சம்பாதிகின்றனர். அவர்கள் நினைத்ததை சம்பாதித்தாலும், இழக்கும் அறிய சிறிய சந்தோசம் ஒன்றைப்பற்றிதான் இந்த பதிவு.


பழைய நண்பர்களை எல்லாம் நான் அவர்களின் நாடுகளுக்கு செல்லும்போதுதான் சந்திக்க முடிகிறது. அப்படி ஒரு நண்பனை நான் அமெரிக்காவில் சந்திக்க நேர்ந்தது. அவன் மகன் ஒரு மாறுவேட போட்டியில் பங்கு பெறுகிறான் என்றும், அதற்க்கு வந்து விடுமாறு அழைத்தான்.  நானும் அவனை சந்திக்க செல்லும்போது அவன் மகன் என்ன வேட்டம் போட்டு இருப்பான் என்று யோசித்து கொண்டே சென்றேன் (அப்போது நான் போட்ட வேடங்கள் எல்லாம் என் மனதில் ஓடின !!?) அங்கு அவனை சந்தித்து, அவனது மகனை தேடினால்...கோட்டு சூட்டு போட்டு பிரெஞ்சு தாடி வைத்து இருந்தான், என்ன வேஷம்பா இது என்றால் அது ஆபிரகாம் லிங்கன் என்றான். அவன் நன்றாக நடித்து பரிசு வாங்கினாலும் எனக்கு என்னவோ குறைவதாக பட்டது....தனியாக நாங்கள் இருக்கும் போது எனது நண்பனே ஆரம்பித்தான் "என்ன மாப்ளை, அவன் மேடையில பேசுறப்ப பார்த்தியா என்ன கைதட்டுன்னு ? ஆனா, முதல் தடவை திருவள்ளுவர் வேஷம் போட்டு அவனை மேடையில் 10 குறள் சொன்னப்ப எல்லோரும் அவனை சாமியாருன்னு சொல்லிடாங்கடா !!" என்று சிரித்தான். பொளேரென்று அறைந்தது போல இருந்தது எனக்கு. என்னதான் நமது குழந்தைகள் நடித்தது நன்றாக இருப்பினும், நமது பாரம்பரியம், தலைவர்கள், அடையாளங்கள்  எல்லாவற்றையும் இழந்து ஜெயித்த அந்த பரிசுனுள் ஏதோ ஒன்று குறையத்தான் செய்தது !! கீழே உள்ள அந்த படங்களை பாருங்கள்...ஒன்று அமெரிக்காவில் நடைபெற்ற மாறுவேட போட்டி, இன்னொனொன்று நமது தமிழ்நாட்டில் நடைபெற்ற மாறுவேட போட்டி. இரண்டில் எதை பார்த்தவுடன் உங்களுக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைகிறது ??சிறு வயதில் ஸ்கூலில் வருடாந்திர நாள் (Annual Day) வந்துவிட்டாலே எனக்கு ஜுரம் ஆரம்பித்துவிடும். பாட்டு, கவிதை, நாடகம் என்று பல விதமான இம்சைகளில் எனது அம்மாவும் டீசெரும் சேர்ந்து என்னை ஒரு வழி ஆக்காமல் விட மாட்டார்கள். எனது இங்கிலீஷ் டீச்சர் அவரது ஆங்கில புலமையை காட்ட சிபி சக்ரவர்த்தி புறாவிற்காக சதையை அறுத்த கதையை ஆங்கிலத்தில் எழுதி என்னையும் ஒரு பாத்திரமாகினார், இன்னொரு முறை எனது சயின்ஸ் டீச்சர் என்னை வீரபாண்டிய கட்டபொம்மன் ஆக்கி என்னை "மஞ்சள் அரைத்து" கொடுக்க வைத்தார். இப்படியாக எனது கலை உலக பயணம் தொடங்கியது.எப்போதுமே மாறுவேட போட்டி என்பதுதான் மிகவும் சுலபம் எனக்கு. எனது அம்மா எல்லா அலங்காரத்தையும் பார்த்து கொண்டு விடுவார், ஒன்று அல்லது நான்கு வரி வசனம் இருக்கும், அவ்வளவுதான். இந்த டயலாக் டெலிவரி எல்லாம் பார்த்து பேச தேவை இல்லை என்பது ஒரு மிக பெரிய ஆறுதல். பொதுவாக எல்லோரும் மாறுவேட போட்டிக்கு, பாரதியார் திருவள்ளுவர், விவேகானந்தர், குறத்தி, பெண் என்று மட்டுமே யோசிப்பார். நான் ஒரு முறை பாரதியார் வேடம் போட்டு போட்டிக்கு
வந்தால் ஒரு பத்து பாரதியார் என்னை வரவேற்றார்கள் !!!எப்போதுமே இந்த வகையான மாறுவேட போட்டியில் நமது பண்பாடு தெரியும், பாரதி மீசை முறுக்கி கர்ஜிப்பான், குறத்தி டியாலோ என்று ஆடுவார். ஆனால் இன்று பொருளுக்காக நாம் வெவ்வேறு மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் இடம் பெயர்ந்து விட்டோம். இன்று நான் எனது மகனை பாரதி ஆக்கி சிகாகோ ஸ்கூலில் விட்டால், அவன் என்னதான் ஆக்ரோஷமாக கர்ஜித்தாலும் கீழே உட்கார்ந்து இருக்கும் பலருக்கு அது என்னவென்றே புரியாது என்பதுதான் சோகம்.எனது முதல் மேடை நாடக அனுபவம் நான் மூன்றாவது படிக்கும் போது கிடைத்தது. சிபி சக்ரவர்த்தி நாடகத்தை ஆங்கிலத்தில் எழுதி ஒரு மாதம் வரை பயிற்சி எடுத்து மேடையில் ஒரே ஒரு வசனம் மட்டும் பேசினேன். ஒரு பழுத்த பெரியவராக வேடமிட்டு தாடியும் மீசையும் பஞ்சால் வைத்து எனது அம்மாவும் அப்பாவும் என்னை மேடையில் பார்க்க உட்கார்ந்து இருந்தபோது, டீசெரின் பிடியில் இருந்து திமிறி ஓடி அவர்களை அணைத்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஒரு வீரபாண்டிய கட்டபொம்மனாக வசனம் பேசி, மேடையில் மழலை மொழியில் அந்த வசனத்தின் ஆழம் தெரிந்து கொள்ளாமல் பேசியும் அத்தனை கை தட்டுக்கள் வாங்கினேன், இன்று எனது பிள்ளைக்கு அப்படிப்பட்ட ஒரு வேடம் போட்டு பார்க்க முடியுமா ?? ஊர், சமூகம் விட்டு பொருளுக்காக இடம் மாறிய என்னால் எனது மகன் இழக்க போவது எத்தனை கைதட்டுக்களோ ??

அவன் அங்கு சூப்பர் மேனாக வேடமிட்டு வாங்கும் கைத்தட்டுகள் ஒரு வள்ளுவனை போல வேடமிட்டு கிடைக்கும்போது வாங்கும் கைதட்டுக்கு ஈடாகுமா ?? எனது மகன் அந்த ஒரு நாள் மட்டும்தான் மாறுவேடம் இடுவான், ஆனால் நான் தினமும் அந்த நாட்டில் மாறுவேடம் போட்டு கொண்டுதான் உழைத்து சம்பளம் வாங்க வேண்டி இருக்கிறது. ச்சே....என்ன வாழ்கைடா இது....
Friday, July 20, 2012

சோலை டாக்கீஸ் - ஒரு துளி விழுதே...(என் சுவாச காற்றே)

என்றுமே மழை என்பது ஆச்சர்யம் தரும் ஒரு இன்பம். சிறு வயதில் எல்லாம் மழையில் ஆடும்பொழுது அவ்வளவு உற்சாகம் இருக்கும், இப்போதெல்லாம் சளி பிடித்து விடுமோ என்ற பயம் மட்டுமே இருக்கிறது !! அப்படிப்பட்ட மழையை சிலாகித்து வந்த பாடல்தான் இது. ஒவ்வொரு முறை மழை வரும்போதும், ஒரு கோப்பை தேநீர் கையில் ஏந்தி இந்த பாடலை முனகும்போது அந்த மழையில் நனையாமலே உங்களுக்கு அந்த உணர்ச்சி வரும்.

AR  ரகுமான் இசை அமைத்து, வைரமுத்து எழுதிய இந்த பாடல் மழையை போற்றும் ஒரு உன்னதமான இசை. இந்த பாடலை மணிரத்தினம், PC ஸ்ரீராம் எடுத்து இருந்தால் அது காலத்தால் அழியாத காவியம் ஆகி இருக்கும்...கேட்டு மகிழுங்கள் நண்பர்களே !


இந்த பாடலை கேட்கும் போது, சிறு வயதில் கமல் பாடி ஆடிய இந்த பாடல் பற்றியும் குறிப்பிட்டு ஆக வேண்டும். "மேகம் கொட்டட்டும்..." என்ற அந்த பாடல், அதை கேட்பவரை ஆட வைக்கும். 1984ம்  வருடம் இசைஞானி இளையராஜாவின் இசையில், SPB  பாடிய இந்த பாடலையும் நீங்கள் விரும்புவீர்கள். கண்டிப்பாக இந்த ரெண்டு பாடலையும் கேட்ட பிறகு உங்களுக்கு ஜலதோஷம் பிடிக்கும் !!


உங்கள் கவனத்திற்கு :

அடுத்த "சோலை டாக்கீஸ்" பதிவிலிருந்து ஒரு மாற்றத்தை, புதுமையை புகுத்தலாம் என்றிருக்கிறேன். மாற்றத்தை கண்டுவிட்டு எனக்கு உங்கள் கருத்தை அளியுங்கள் நண்பர்களே...

Thursday, July 19, 2012

நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - யோகநாதன் (இயற்கை ஆர்வலர்)

இந்த "நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள்" தொடர் பலரின் இதயத்தை தொட்டு, பலருக்கு இது போல் எல்லாம் ஆட்கள் இருகிறார்களா என கேள்வி கேட்க வைத்திருப்பது என்னை சந்திப்பவர்கள் கேட்கும் கேள்விகளில் தெரிகிறது. உங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பர்களே !! இதை படிக்கும் நீங்கள் உங்களின் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்து நம்மால் இயன்றதை செய்வோம்.இந்த வாரம் நாம் சந்திக்க போவது திரு. யோகநாதன். இவர் ஒரு இயற்கை ஆர்வலர். இவர் கோயம்பத்தூரில் S -26 பஸ் ரூட்டிற்கு (மருதமலை - காந்திபுரம்) கண்டக்டராக வேலை செய்து கொண்டே கடந்த 25 வருடங்களில் ஒரு லட்சம் மர கன்றுகளை நட்டு உள்ளார். சிறு வயதில் இவர் தன் அக்கா வீட்டிற்கு கோத்தகிரி செல்லும்போது மரத்தின் நிழலில் கவிதைகள் எழுதுவார், இதுவே அவருக்கு மரங்களின் மேல் காதல் கொள்ள வைத்தது. பின்னர் மர கடத்தல் மாபியாக்களுடன் போராட ஆரம்பித்து பல முறை இவருக்கு அடி விழுந்து இருக்கிறது.


ஒரு புறம் மரம் வெட்டுவதை தடுத்து கொண்டே, மறுபுறம் மரம் வளர்க்க பாடுபடுகிறார். இவரது 40 சதவிகித சம்பளம் மர கன்றுகளை வாங்கி நடுவதற்கே சரியாகி விடுகின்றன !!? இவர் "தாகம்" என்னும் குறும்படம் ஒன்றையும் இயக்கி உள்ளார், அதனால்தானோ என்னவோ இவரது அமைப்பிற்கு பெயரே "தாகம்". இவரது அமைப்பை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...THAAGAMஇவர் பல விருதுகளை வாங்கி உள்ளார், அதை பார்க்க இங்கே சொடுக்கவும்...Awards

இவருக்கு நீங்கள் உதவ நினைத்தால் இங்கே சொடுக்கவும்...Yoganathan

Wednesday, July 18, 2012

இது உண்மையான்னு பாருங்க...

நாம ஒரு நாட்டை பத்தி நினைச்சோம் அப்படின்னா, அதோட சிறப்புகள் நம்ம நினைவுக்கு வரும். உதாரணமா சீனா அப்படின்னா பெருஞ்சுவர், Made in China பொருட்கள். இது போல உலகத்தில் உள்ள நாடுகளும் அதை பற்றி நாம என்ன நினைகிரோம்ன்றது இந்த படத்தில் இருக்கு....இது உண்மையான்னு பாருங்க !!

என் படைப்புகள் - e கொள்ளி


இ - மெயிலில் தந்தை 
இறந்த செய்தி வந்தது 

"கொள்ளி போட நீ வேண்டும் "
என்ற தந்தை சொல் 
நினைவில் வந்தது...

ஆனால் உனக்கு....
கொள்ளி போட ஒரு வெப்சைட் 
இல்லையே என்ற ஆதங்கம்தான் வந்தது 
இல்லையா ?
Tuesday, July 17, 2012

நான் சர்கஸ் பார்க்க போறேன்டோய்...

மேலே உள்ள இந்த தலைப்பை பார்த்த உடன் உங்களுக்கு சிறிய வயது யாபகம் வந்ததா ? அப்போது எல்லாம் ஊரில் கேளிக்கை என்றாலே அது திருவிழாவோ, பொருட்காட்சியோ அல்லது சர்கஸ் தான். அதுவும் சர்கஸ் எல்லாம் இரண்டு வருடத்திற்கு ஒரு முறைதான் வரும். சர்கஸ் என்றல் நினைவுக்கு வருவது கோமாளி, யானை சிங்கம் போன்ற மிருகங்கள், வில்லாய் வளையும் மனிதர்கள்தான். கடைசியாக நீங்கள் எப்போது சர்கஸ் பார்த்தீர்கள் என்று நினைவிருக்கிறதா ?? அதில் என்ன காட்சி பார்த்தீர்கள் ? அன்று உங்களை மகிழ்வித்த கோமாளி மனிதன் இன்று என்ன செய்து கொண்டு இருப்பான் ? அன்று உங்களை மகிழ்வித்த சர்கஸ் பெண்ணுக்கு கல்யாணம் ஆகி இருக்குமா ?


சர்கஸ் நடக்க போவது எங்களுக்கு போஸ்டர் நோட்டீஸ் மூலமாக தெரியவரும், ஊரெல்லாம் ஒரே நாளில் சிறிது பளபளப்பு ஏறி இருப்பது போல தோன்றும். யாரை பார்த்தாலும் "நீ சர்கஸ் பார்த்தியா ?"என்ற கேள்வியில்தான் முடியும். அப்பா மட்டும் நாம் சர்கஸ் பார்க்க போறோம் என்று சொல்லிவிட்டால், அன்றுதான் அவர் சுப்பர்மேன் போல ஹீரோவாக தெரிவார். சர்கஸ் செல்லும் நாள் அன்று வீட்டில் தீபாவளி வந்து விட்டது போல தெரியும், எல்லோரும் பள பள என்று டிரஸ் போட்டு, பலகாரம் தயார் செய்து என்று இருக்கும்.

சர்கஸ் இடத்தை அடைந்தவுடன் டிக்கெட் எடுத்து எனது அப்பா ஒரு விஞ்ஞானியாக பல ஆராய்ச்சி செய்து ஒரு நல்ல மறைக்காத இடத்தில் எங்களை உட்கார வைப்பார். உடனே அம்மா பலகாரத்தை எடுத்து வைத்து எனக்கு ஊட்டி விட ஆரம்பிப்பார். திடீரென்று பிரகாசமாக விளக்குகள் போட்டு, ஒரு இசை வந்தவுடன் என்னின் முழு கவனமும் அங்கே செல்ல ஆரம்பிக்கும்.