Sunday, July 1, 2012

காளி மார்க் கோலி சோடா !!

சுமார் ஒரு வாரம் வரை லீவு எடுத்துக்கொண்டு எனது குடும்பத்துடன் மதுரையில் சுற்றி வருகிறேன்.  வெயில் கடுமையாக இருக்கிறது.  இந்த பயணத்தில் எனக்கு பல பல கேள்விகள் மனதில்....நான் சிறிய வயதில் இருந்தது போல் இல்லை இந்த பயணம். சிறு வயதில் மனதில் எந்த கேள்வியும் இராது !! புதிய இடம், புதிய மனிதர்கள், புதிய சுவையான தின்பண்டங்கள் என்று மட்டுமே இருக்கும், ஆனால் இன்று எதை பார்த்தாலும் கேள்விகள்.

நான் எங்கு சென்றாலும் அங்குள்ள லோக்கல் பிளேவர் சுவையைதான் விரும்புவேன். இந்த தடவை மதுரை சென்று இருந்தபோது வெயிலுக்கு நம்ம கோலி சோடாவை குடிக்கலாம் என்று அலையோ அலை என்று அலைந்ததுதான் மிச்சம், எங்கும் கிடைக்கவே இல்லை. கடைசியில் Yehi hai, right  choice baby  என்று பெப்சிதான் குடித்தேன்.

அந்த காலத்தில் இருந்த காளி மார்க் சோடா, பன்னீர் சோடா, கோலி குண்டு சோடா, Love - ஓ சோடா என்று பல விதமான சோடா இருந்தது. முதன் முதலில் அப்பா ஒரு கோலி சோடாவை வாங்கி கொடுத்தபோது, சோடாவை குடித்து முடிபதற்குள் ஒரு நாற்பது முறையாவது அந்த கோலி எப்படி உள்ளே சென்றது என்று யோசித்திருப்பேன். பன்னீர் சோடா குடித்துவிட்டு என் அம்மாவிடம் சென்று ஊதி ஊதி காண்பித்திருப்பேன். என் இன்றைய இன்ஜினியரிங் மூளைக்கு அன்றே சவால் விட்டது இந்த கோலி சோடா.இன்று எங்கு சென்றாலும் Coke , பெப்சி என்று பான வகைகள் மட்டுமே இருக்கிறது. சாப்பிட ஒரு ஹோட்டலுக்கு சென்று மசால் தோசை கேட்டால் ஒரு கோககோலா தருகிறார்கள், கேட்டால் இதுக்கு இதுதான் காம்பினேசன் என்கிறார்கள், இதுவரை மசால் தோசைக்கு கெட்டி சட்னி காம்பினேசன் நன்றாக இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன், ஆனால் இந்த கோககோலா நல்ல காம்பினேசன் என்று சொன்ன அந்த புண்ணியவான் யாரோ ?

சிறு வயதில் கோல்ட் ஸ்பாட் என்று தகதகக்கும் பொன்னிற ஆரஞ்சு பானம் பற்றி கேள்வி பட்டு இருகிறீர்களா ? இல்லையென்றால் அதன் விளம்பரத்தையாவது பார்த்திருப்பீர்கள், அவ்வளவு நல்ல jingles. இதை குடித்துவிட்டு நாக்கை நீட்டி நீட்டி அந்த ஆரஞ்சு நிறத்தை பார்த்து மகிழ்ந்திருப்பேன். அதை கடைக்காரரிடம் கேட்க தெரியாமல் திரு திரு என விழித்து ஆரஞ்சு வேணும் என்று கேட்ட நாட்கள் எல்லாம் சுகமானவை.இன்று கோக், பெப்சி, லிம்கா, பான்டா, மிரிண்டா, 7-அப், மாஸா, ஸ்லைஸ், மௌன்டைன் டியூ, ஸ்பிரைட்டு என்று பல வித பானங்கள் ரெடியாக இருக்கின்றன. ஆனால் அதை குடித்துவிட்டு மனதில் எந்த கேள்வியும் எழுவதில்லை !! இன்று அந்த காளி மார்க் சோடா, பன்னீர் சோடா, கோலி குண்டு சோடா, Love - ஓ சோடா எல்லாம் என்னவானது ? என்ன செய்தன இந்த வெளிநாட்டு கம்பெனிகள் ? எப்படி நமது மனது இதை நாடி சென்றது ? ஒரு சுனாமி போல வந்து சிறிய கம்பெனிகளை சுருட்டி சென்று விட்டன இந்த வெளிநாட்டு கம்பெனிகள். அங்கு வேலை செய்த ஆட்கள் என்ன ஆனார்கள், அவர்களின் வாழ்க்கை என்ன ஆனது. இன்று அந்த வெளிநாட்டு பானத்தை குடிக்கும்போது அதன் சுவை நாக்கில் இருந்தாலும், மனதில் வேலை இழந்த அந்த ஆட்களின் யாபகமே வருகிறது !?மதுரை ஜிகர்தண்டாவை இன்னும் அவர்கள் பார்க்கவில்லை என்று நினைகிறேன், இல்லையென்றால் அதையும் பாட்டிலில் போட்டு நம்ம நடிகர் நடிகைகள் கொண்டு விற்றிருப்பார்கள். வெளிநாட்டுகாரன் எல்லாம் மூளைக்காரன் என்று நாம் நினைக்கும் வரை, நமது வளத்தை அவன் சுரண்டி நமக்கே விற்று கொண்டுதான் இருப்பான்.


அலைந்துதிரிந்து, நமது ஊர் பானத்தை கண்டுபிடிக்க முடியாமல் போன போது, இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் வரும் அந்த காமெடியான உண்மையை என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

2 comments:

 1. பதிவின் கருத்தும் காணோளியும்
  மிகச் சரியாக ஒத்துப்போய்
  சிந்திக்கத் தூண்டிப்போனது
  நானும் மதுரைக்காரன்தான்
  அந்தக் காளிமார்க் குண்டு சோடா கொண்டுவரும்
  அந்த ஒற்றை மாட்டுவண்டி என்னுள் ஒரு நிமிடம்
  பவனி வந்து போனது
  இப்போது அவர்களின் பவண்டோதான்
  எங்கள் சாய்ஸ்
  மனம் தொட்ட பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நன்றி நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...

  ReplyDelete