Sunday, July 8, 2012

சார்...போஸ்ட் !!

"சார்...போஸ்ட் !! ", இந்த குரலை நீங்கள் கடைசியாக கேட்டது எப்போது ? எப்போது நீங்கள் கடைசியாக போஸ்ட் கார்டிலோ, இன்லான்ட் லெட்டேரிலோ எழுதினீர்கள் ? எப்போது நீங்கள் கடைசியாக அதை கொண்டு போய் போஸ்ட் பாக்ஸ்ல் போட்டீர்கள் ?


இன்று எனது போனில் அப்பா எழுதிய மெயில், SMS இருக்கிறது. ஆனால், அதில் ஏதோ குறைகிறதாக பட்டது. இன்றும் என்னிடம் இருக்கும் அப்பா எழுதிய கடிதம் படித்தால் வரும் அந்த கண்ணீர், இந்த மெயில் படித்தால் வருவதில்லை. கடிதம் என்பது ஒரு தகவல் பரிமாறும் கருவி மட்டுமாக இருந்தது இல்லை. அது அன்பையும் பரிமாறியது என்றால் அது மிகையாகாது. அது உங்களை அந்த காலத்திற்கு, நேரத்திற்கு அழைத்து செல்லும். என் அப்பாவிடம் இன்றும் என்ன கோபமிருந்தாலும் அவரை சென்று அணைத்து கொள்ள வேண்டும் என்று தோன்றும்.

 


நான் நேற்று அம்பாத்துறை ரயில் நிலையத்தில் டிக்கெட் ரிசேர்வ் செய்ய சென்று இருந்த போது, சிறிது இளைப்பாறலாம் என்று உட்கார்ந்தபோது என் தலையை தட்டியது ஒரு போஸ்ட் பாக்ஸ். இதுவரை பல முறை அங்கு சென்று இருக்கிறேன், ஆனால் அதை பார்த்ததாக நினைவில் இல்லை. அது பல பல வருடங்களாக அங்கே இருப்பதாக தெரிவித்தார் ஒருவர். எதனால் அதை நான் மறந்து போனேன் ? எல்லாம் கண்ணில் பட்ட எனக்கு ஏன் அது மட்டும் கண்ணில் படவில்லை ? அது சரி, நமக்கு எது உபயோகம் இல்லையோ அதை மறப்பதுதானே மனிதன்.
 

எனது அப்பா ஒரு சிறிய நோட்டு புத்தகம் வைத்திருப்பார், அதில் எல்லோருடைய விலாசம் இருக்கும். ஒரு இன்லேன்ட் லெட்டரில் பிள்ளையார் சுழியிட்டு ஆரம்பிப்பார். அவர் என்ன சொல்ல வந்தாரோ அது கடைசி வரியாக இருக்கும். பிள்ளையார் சுழியில் இருந்து சொல்ல வந்த விஷயத்திற்கு முன்பு வரை அவர் குடும்பம் பற்றியும், அவர்களின் குசேலத்தையும் மட்டுமே விசாரிப்பார் !! அதில் என்றும் விலாசம் எழுதும் போது பின்கோடு  சரிதானா என்று அவர் ஆராய்ச்சி செய்ய மறந்ததில்லை. இதை விட, அவர் அந்த கடிதத்தை போஸ்ட் செய்யும் போது போஸ்ட் பாக்ஸ் உள்ளே வரை கை விட்டு, தட்டி ஆட்டி பார்த்தும் மனது நிறையாமல்தான் வீடு திரும்புவார். தான் அனுப்பிய கடிதத்திற்கு மறு கடிதம் வரும் வரை அவர் அதை பற்றியே பேசி கொண்டிருப்பார். அதுவும் நான் அனுப்பிய கடிதம் என்றால் ஒரு 20 முறையாவது படித்துவிட்டு, எல்லோரிடமும் தனக்கு பாரத ரத்னா அவார்ட் போஸ்ட்டலில் வந்தது போல பேசுவதாக கேள்விபட்டிருக்கிறேன் !

 

என் நண்பன் ஒருவன் ஒரு போஸ்ட்கார்டில் ஒரு முழு நீள திரைக்கதையை எழுதிவிட்டு "எப்பூடி !? " என்று பார்ப்பான். அதை படித்து விட்டு எவரும் ஒரு கண் டாக்டரை போய் பார்ப்பது நிச்சயம். அது போலவே இப்போது வரும் இன்லேன்ட் லெட்டரை எனது அம்மா கிழிக்க நடத்தும் போராட்டமும் ஒரு குறுநாவல். தந்தி அடிக்க வேண்டும் என்றால் நரசிம்மனை கூப்பிட வேண்டும், மணிரத்னம் கூட ரெண்டு வார்த்தை எக்ஸ்ட்ரா போடுவார், ஆனால் நரசிம்மன் இரத்தின சுருக்கமாக எழுதுவான். இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கு நமது போஸ்டல் சர்வீஸ் பற்றி இன்னும் நன்கு தெரிய வரும்.ஒரு கடிதம் நமக்கு எவ்வளவு சந்தோசம் கொடுக்கிறதோ அதே போல அந்த கடிதம் கொண்டு வருபவரும் நமக்கு சந்தோசத்தை கொண்டு வருவார். இன்று வரை எங்கள் வீட்டுக்கு கடிதம் கொண்டு வந்து சந்தோசம் சேர்த்த அந்த மனிதரை போஸ்ட்மேன் என்றுதான் எங்களுக்கு தெரியும், அவரின் பெயர் தெரிந்து கொள்ள தவறிவிட்டேன் என்பதில் எனக்கு வருத்தம்தான். நசிந்து கொண்டு இருக்கும் இந்த கடித போக்குவரத்தில் ஒரு போஸ்ட்மேனின் உணர்ச்சிகளை இந்த குறும்படம் உங்களுக்கு உணர்த்தும்..

இன்று எங்கு வெளியூர் சென்றாலும் சென்றவுடன் மொபைல் போனில் சொல்லி விடுகிறோம். அப்படி சொல்லும்போது நாம் நமது அன்பையும் வெளிபடுதுகிறோமா ? நான் வந்துவிட்டேன் என தந்தி அடித்த வார்த்தைகள்தான் நமது இருப்பை உணர்த்துகின்றன ஆனால், நமது அன்பை உணர்த்துகின்றதா ?

 

No comments:

Post a Comment