Thursday, July 12, 2012

நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - உதவும் கரங்கள் வித்யாகர்

 இந்த உலகில் நாம் நமக்காக வாழலாம் அல்லது பிறருக்காக வாழலாம். இதில் பலரும் முதல் வகையை சார்ந்தவர்களாகதான் இருப்போம். ஒரு முறை சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி போய் கொண்டு இருந்தபோது தாகத்திற்காக ஒரு ஐஸ்கிரீம் பார்லர் ஒன்றில் நிறுத்த சொன்னேன். அங்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டு இருந்தபோது குழந்தைகள் பலர் இங்கும் அங்குமாக அந்த பார்லரின் வேலிக்கு பின்னால் ஓடி கொண்டு இருந்தார்கள்.

ஒரு ஆர்வத்தில் என்ன என்று விசாரித்தபோதுதான் அது "உதவும் கரங்கள்" என்று தெரிந்தது. அது என்ன என்று தெரிந்து கொள்வதற்காக உள்ளே சென்றேன்....எனக்கு, இப்படியும் ஒரு உலகம் தினமும் இயங்குகிறது என்பதை காட்டியது.





அவர்கள் என்னை அங்கே இருக்கும் ஒரு பள்ளிக்கு அழைத்து சென்று காட்டினார்கள், ஆனால் அது பள்ளி மட்டும் இல்லை அது ஒரு தங்கும் இடமும் கூட. பகலில் அது ஒரு பள்ளி, இரவில் அது குழந்தைகள் தூங்கும் இடம். இப்போதெல்லாம் பள்ளியில் AC எல்லாம் வந்து விட்டது, ஆனால் இவர்களுக்கு...என் கண்ணில் முதன் முதலாக கண்ணீர் அணை கட்ட ஆரம்பித்தது. பின்னர் என்னை அங்கு இருக்கும் முதியோர் இல்லத்திற்கு அழைத்து சென்றனர். நான் அங்கு சென்றவுடன் பலரும் பாசமாக வந்து பழகினர். ஒருவர் என்னை அவரின் ரூமிற்கு அழைத்து சென்று கொண்டு இருந்தபோது, ஒரு ஜன்னலுக்கு உள்ளே பல குழந்தைகள் ஒரு படுத்த படுக்கையாக இருந்த  பெரியவரை சுற்றி நின்று கொண்டு கடவுள் பாசுரம் ஒன்று பாடி கொண்டு இருந்தனர். என்னை கூட்டி சென்றவர், "இவர் இன்றோ நாளையோ இறந்து விடுவார்....கடைசி ஆசையாக தனது பேர குழந்தைகளை பார்க்க வேண்டும் என்கிறார், ஆனால் இவரது பிள்ளைகள் வரமாட்டேன் என்கிறார்கள்" என்ற போது கண்ணீர் பொத்து கொண்டது.



இவர்கள் எல்லோரையும் பராமரிப்பது வித்யாகர் என்னும் ஒரு மாமனிதர். கொல்லேகள் என்னும் ஊரில் பிறந்த இவர், இவரை ஆளாக்கிய திரு.ராமகிருஷ்ணன் என்பவரது வார்த்தைக்கு இணங்கி இன்று இந்த உதவும் கரங்கள் என்னும் ஒரு ஆலமரத்தை உருவாக்கி, கட்டி, காத்து வருகிறார். பலருக்கு படிப்பு, உணவு, உறைவிடம் என்று தந்து காக்கிறார். இவர்கள் எல்லோரையும் பராமரிக்க போதுமான நிதி இல்லாததுதான் ஒரு குறை.



அன்னை தெரசா பற்றி தெரிந்த பலருக்கு இவரை பற்றி தெரியாது. இவரும் அவரை போல ஒரு சமூக போராளிதான். இவரை ஒரு நாள் நேரில் சந்தித்து அவரின் தொண்டுக்கு என்னால் ஆன சிறு உதவியை செய்ய வேண்டும் என்று ஆசை.

இவரின் உதவும் கரங்கள் டிரஸ்ட்டை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்....Udavum Karangal

No comments:

Post a Comment