Saturday, July 14, 2012

அம்மாவின் கோலங்கள்

 இன்று பிளாட்களில் வசிக்கும் நாம் கோலம் என்ற ஒன்றை மறந்து போய் இருப்போம் !! ஆனால் என்றாவது அதை ஆழமாக, அழகாக நின்று நிதானித்து பார்த்து இருகிறீர்களா ? நீங்கள் சிறு வயதில் வரைந்த கிறுக்கல் ஓவியத்தை ஒரு பத்து பேரிடமாவது காட்டி சந்தோசப்பட்டு, உங்களை பாராட்டிய உங்கள் அம்மா காலையில் எழுந்து சிரத்தையாக போட்ட கோலத்தை என்றாவது நீங்கள் பாராட்டி இருகிறீர்களா ? அது உருவாகும் அழகை ரசித்து இருகிறீர்களா ?அம்மாவிற்கு சமையல் மட்டும்தான் தெரியும் என்று நினைத்த எனக்கு அவர் எவ்வளவு கலை ஞானம் மிக்கவர் என்பது இந்த கோலத்தில் தான்  தெரிந்தது. சிறு சிறு புள்ளிகளாக விறு விறுவென்று வைத்து, சர சரவென்று உருவாகும் கோலம் என்பது ஒரு டா வின்சி ஓவியத்துக்கு இணையானது இல்லையா ? அதில் கணக்கு, தமிழ், ஆங்கிலம், சயின்ஸ் மற்றும் ஹிஸ்டரி பாடம் எல்லாம் கலந்து இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா ? புள்ளி வைத்து கோலம் போடும்போது கணக்கும், அதில் வரும் பூ, இலை, பட்டாம்பூச்சி, மான் என்ற சயின்ஸ் வஸ்துக்களும், அதை அவர் அம்மாவிடமிருந்து கற்ற ஹிஸ்டரியும், கடைசியில் "பொங்கல் வாழ்த்து" என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதும்போது படிக்காத மேதையாக உங்கள் அம்மா தெரிவதில்லையா ?


கோலம் என்பது பூமியை சிறிது அழகாக்கும் செயல் !! நான் திருச்சி உறையூரில் வசித்தபோது நேற்றைய இரவு கல்லும் மண்ணும் குப்பையுமாக பார்த்த அந்த தெரு, அடுத்த நாள் காலையில் ஒரு அழகான ஆர்ட் காலரியாக மாறி இருக்கும் அதிசயத்தை என்னவென்று சொல்வது ? என் அம்மா சாணத்தை தண்ணீரில் கரைத்து தரையை சுத்தபடுத்துவார், பின்னர் அவர் புள்ளி வைக்கும்போது நான் மிகுந்த ஆர்வமாக அது என்னவாக உருவாகபோகிறது என்பதை கவனிக்க ஆரம்பிப்பேன். ஒரு புள்ளியும் கோடும் சேர்ந்து பட்டாம்பூச்சியாக, பூவாக மாறும் அதிசயம் நிகழும், பின்னர் அதற்க்கு கலர் சேர்த்து அவர் நிமிர்ந்தால் அடுத்த நிமிடம் எல்லோரும் வந்து அதை கவனித்து "நல்லா பண்ணியிருக்கீங்க இன்னைக்கு....உங்களுக்கு மட்டும் எப்படித்தான் அது வருதோ ?" என்று செல்வார்கள். பின்னர் அவர் என்னையும் அப்பாவையும் கவனிக்க ஆரம்பித்துவிடுவார்.


நான் ஸ்கூலுக்கு செல்லும் போது எல்லோரும் பாராட்டிய அந்த கோலத்தை அவசரத்தில் மிதித்து செல்வேன், அப்பாவும் செல்லும் அவசரத்தில் அதை இன்னும் சிறிது அழித்துவிட்டு போவார். அம்மா எங்களை அனுப்பிவிட்டு உள்ளே செல்லும்போது அந்த கோலம் அழுது கொண்டிருக்கும், அப்போதெல்லாம் "கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்ற சொல்லுக்கு இலக்கணமாக தெரிவார் என் அம்மா. எல்லோரும் ஒரு பாராட்டை எதிர் பார்க்கின்றனர், ஆனால் இன்று வரை எனது அம்மா போட்ட கோலத்தை நான் பாராட்டியதாக எனக்கு யாபகம் இல்லை. என் தந்தையிடம் சென்று "அம்மா போட்ட கோலத்தை என்றாவது பாராட்டி இருக்கீங்களாப்பா ?" என்று கேட்ட போதுதான் அவருக்கு என் அம்மா கோலம் போடுவதே தெரியும் !! இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கு நிச்சயம் உங்களின் அம்மா கோலம் போடும் யாபகம் வரும்...


மார்கழி மாதம் மட்டும் கோலத்துக்கு மிகவும் ஸ்பெஷல் !! மற்ற எல்லா நாளும் அம்மா கோலம் போட்டாலும் மார்கழி மாதம் வந்து விட்டால் மட்டும் மண்டையை உடைத்து புது டிசைன் கண்டுபிடிப்பது, கோலத்துக்கு கலர் சேர்ப்பது, தெருவின் ஒரு இன்ச் விடாமல் கோலம் போடுவது அந்த மாதம் மட்டும் அந்த தெரு எல்லாம் பளிச்சென்று ஆனது போல இருக்கும் !


இப்போது சொல்லுங்கள்...உங்கள் அம்மா போட்ட கோலத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது ? நீங்கள் யோசிக்க ஆரம்பித்தால் அதுவே இந்த பதிவிற்கு கிடைத்த வெற்றி.
3 comments:

 1. எங்கள் கிராமத்து தெருவையும்
  மார்கழி மாதம் நான்கு மணிக்கே எழுந்து
  மெனக்கெடும் என் தாய் சகோதரிகளை
  ஞாபகப் படுத்திப் போனது பதிவு
  இன்று பெண்ணின் பிளாட்டில்
  மூன்றாவது ஃப்ளோர் வாசலில் ஒட்டப்பட்ட
  கோலப்படத்தைப் பார்த்து சிரித்துக் கொள்கிறேன்
  மனம் கவர்ந்த அருமையான பதிவு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரமணி அவர்களே...உங்கள் தொடர் உற்சாகம் என்னை மேலும் எழுத தூண்டுகிறது. மதுரை வரும் போது உங்களை சந்திக்க ஆர்வமாய் உள்ளேன்.

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete