Saturday, July 21, 2012

மாறுவேட போட்டி - நாம் இழக்கும் சந்தோஷங்கள் !!?

இன்று பொருள் தேடி ஓடி ஓடி பிற மாநிலத்திலும், பிற நாட்டிலும் வசிக்கின்ற என்னை போன்ற கோடானு கோடி மக்கள், அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை சம்பாதிகின்றனர். அவர்கள் நினைத்ததை சம்பாதித்தாலும், இழக்கும் அறிய சிறிய சந்தோசம் ஒன்றைப்பற்றிதான் இந்த பதிவு.


பழைய நண்பர்களை எல்லாம் நான் அவர்களின் நாடுகளுக்கு செல்லும்போதுதான் சந்திக்க முடிகிறது. அப்படி ஒரு நண்பனை நான் அமெரிக்காவில் சந்திக்க நேர்ந்தது. அவன் மகன் ஒரு மாறுவேட போட்டியில் பங்கு பெறுகிறான் என்றும், அதற்க்கு வந்து விடுமாறு அழைத்தான்.  நானும் அவனை சந்திக்க செல்லும்போது அவன் மகன் என்ன வேட்டம் போட்டு இருப்பான் என்று யோசித்து கொண்டே சென்றேன் (அப்போது நான் போட்ட வேடங்கள் எல்லாம் என் மனதில் ஓடின !!?) அங்கு அவனை சந்தித்து, அவனது மகனை தேடினால்...கோட்டு சூட்டு போட்டு பிரெஞ்சு தாடி வைத்து இருந்தான், என்ன வேஷம்பா இது என்றால் அது ஆபிரகாம் லிங்கன் என்றான். அவன் நன்றாக நடித்து பரிசு வாங்கினாலும் எனக்கு என்னவோ குறைவதாக பட்டது....தனியாக நாங்கள் இருக்கும் போது எனது நண்பனே ஆரம்பித்தான் "என்ன மாப்ளை, அவன் மேடையில பேசுறப்ப பார்த்தியா என்ன கைதட்டுன்னு ? ஆனா, முதல் தடவை திருவள்ளுவர் வேஷம் போட்டு அவனை மேடையில் 10 குறள் சொன்னப்ப எல்லோரும் அவனை சாமியாருன்னு சொல்லிடாங்கடா !!" என்று சிரித்தான். பொளேரென்று அறைந்தது போல இருந்தது எனக்கு. என்னதான் நமது குழந்தைகள் நடித்தது நன்றாக இருப்பினும், நமது பாரம்பரியம், தலைவர்கள், அடையாளங்கள்  எல்லாவற்றையும் இழந்து ஜெயித்த அந்த பரிசுனுள் ஏதோ ஒன்று குறையத்தான் செய்தது !! கீழே உள்ள அந்த படங்களை பாருங்கள்...ஒன்று அமெரிக்காவில் நடைபெற்ற மாறுவேட போட்டி, இன்னொனொன்று நமது தமிழ்நாட்டில் நடைபெற்ற மாறுவேட போட்டி. இரண்டில் எதை பார்த்தவுடன் உங்களுக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைகிறது ??சிறு வயதில் ஸ்கூலில் வருடாந்திர நாள் (Annual Day) வந்துவிட்டாலே எனக்கு ஜுரம் ஆரம்பித்துவிடும். பாட்டு, கவிதை, நாடகம் என்று பல விதமான இம்சைகளில் எனது அம்மாவும் டீசெரும் சேர்ந்து என்னை ஒரு வழி ஆக்காமல் விட மாட்டார்கள். எனது இங்கிலீஷ் டீச்சர் அவரது ஆங்கில புலமையை காட்ட சிபி சக்ரவர்த்தி புறாவிற்காக சதையை அறுத்த கதையை ஆங்கிலத்தில் எழுதி என்னையும் ஒரு பாத்திரமாகினார், இன்னொரு முறை எனது சயின்ஸ் டீச்சர் என்னை வீரபாண்டிய கட்டபொம்மன் ஆக்கி என்னை "மஞ்சள் அரைத்து" கொடுக்க வைத்தார். இப்படியாக எனது கலை உலக பயணம் தொடங்கியது.எப்போதுமே மாறுவேட போட்டி என்பதுதான் மிகவும் சுலபம் எனக்கு. எனது அம்மா எல்லா அலங்காரத்தையும் பார்த்து கொண்டு விடுவார், ஒன்று அல்லது நான்கு வரி வசனம் இருக்கும், அவ்வளவுதான். இந்த டயலாக் டெலிவரி எல்லாம் பார்த்து பேச தேவை இல்லை என்பது ஒரு மிக பெரிய ஆறுதல். பொதுவாக எல்லோரும் மாறுவேட போட்டிக்கு, பாரதியார் திருவள்ளுவர், விவேகானந்தர், குறத்தி, பெண் என்று மட்டுமே யோசிப்பார். நான் ஒரு முறை பாரதியார் வேடம் போட்டு போட்டிக்கு
வந்தால் ஒரு பத்து பாரதியார் என்னை வரவேற்றார்கள் !!!எப்போதுமே இந்த வகையான மாறுவேட போட்டியில் நமது பண்பாடு தெரியும், பாரதி மீசை முறுக்கி கர்ஜிப்பான், குறத்தி டியாலோ என்று ஆடுவார். ஆனால் இன்று பொருளுக்காக நாம் வெவ்வேறு மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் இடம் பெயர்ந்து விட்டோம். இன்று நான் எனது மகனை பாரதி ஆக்கி சிகாகோ ஸ்கூலில் விட்டால், அவன் என்னதான் ஆக்ரோஷமாக கர்ஜித்தாலும் கீழே உட்கார்ந்து இருக்கும் பலருக்கு அது என்னவென்றே புரியாது என்பதுதான் சோகம்.எனது முதல் மேடை நாடக அனுபவம் நான் மூன்றாவது படிக்கும் போது கிடைத்தது. சிபி சக்ரவர்த்தி நாடகத்தை ஆங்கிலத்தில் எழுதி ஒரு மாதம் வரை பயிற்சி எடுத்து மேடையில் ஒரே ஒரு வசனம் மட்டும் பேசினேன். ஒரு பழுத்த பெரியவராக வேடமிட்டு தாடியும் மீசையும் பஞ்சால் வைத்து எனது அம்மாவும் அப்பாவும் என்னை மேடையில் பார்க்க உட்கார்ந்து இருந்தபோது, டீசெரின் பிடியில் இருந்து திமிறி ஓடி அவர்களை அணைத்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஒரு வீரபாண்டிய கட்டபொம்மனாக வசனம் பேசி, மேடையில் மழலை மொழியில் அந்த வசனத்தின் ஆழம் தெரிந்து கொள்ளாமல் பேசியும் அத்தனை கை தட்டுக்கள் வாங்கினேன், இன்று எனது பிள்ளைக்கு அப்படிப்பட்ட ஒரு வேடம் போட்டு பார்க்க முடியுமா ?? ஊர், சமூகம் விட்டு பொருளுக்காக இடம் மாறிய என்னால் எனது மகன் இழக்க போவது எத்தனை கைதட்டுக்களோ ??

அவன் அங்கு சூப்பர் மேனாக வேடமிட்டு வாங்கும் கைத்தட்டுகள் ஒரு வள்ளுவனை போல வேடமிட்டு கிடைக்கும்போது வாங்கும் கைதட்டுக்கு ஈடாகுமா ?? எனது மகன் அந்த ஒரு நாள் மட்டும்தான் மாறுவேடம் இடுவான், ஆனால் நான் தினமும் அந்த நாட்டில் மாறுவேடம் போட்டு கொண்டுதான் உழைத்து சம்பளம் வாங்க வேண்டி இருக்கிறது. ச்சே....என்ன வாழ்கைடா இது....
2 comments:

 1. //நான் தினமும் அந்த நாட்டில் மாறுவேடம் போட்டு கொண்டுதான் உழைத்து சம்பளம்...//
  உங்கள் மாறுவேடம் என்ன? ஜார்ஜ் வாஷிங்டனா, பில்கேட்ஸா

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா....எல்லோரும் பில் கேட்ஸ் ஆகத்தான் முகமூடி போட்டு இருக்கிறோம் இல்லையா ?? ஆனால் நான் சொல்ல வந்தது...நமது உணவு, கலாச்சார, கலை பழக்க வழக்கங்கள் போன்ற நமது முகமுடியை மாற்றி கொண்டு அழைக்கிறோம் என்று. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே !

   Delete