Sunday, July 29, 2012

மறக்க முடியா பயணம் - கோவா

காலேஜ் முடித்து விட்டு முதல் வேலைக்கு சென்று நேரம் காலம் பார்க்காமல் உழைத்து கொண்டே இருந்து விட்டு, ஒரு நாள் திடீரென்று அட நாம இத்தனை வருஷத்தில் நண்பனுடன் எங்க டூர் போயிருக்கிறோம் என்று யோசித்து இருக்கிறீர்களா ? அப்படி நகமும் சதையுமாக இருந்த நண்பனுடன், கல்லூரி முடித்து மூன்று வருடத்திற்கு பிறகு ஒரு சுப நாளில் ஏற்பட்ட அந்த ஞாநோதயம்தான், இந்த கோவா பயணமாக மாறியது. ஒரு இனிய நாளில் அவனிடம் போன் போட்டு இந்த கேள்வியை கேட்டவுடன், "ஆமாம் மச்சி, எங்கயாவது போகனும்டா..."என்றவுடன் சட்டென்று பிளான் போட்டு கிளம்பினோம். எங்களது குறிக்கோள் கால் போன போக்கில் அலைவது....சந்தோசமாக இருப்பது, அவ்வளவுதான்.

நானும் எனது நண்பன் ஜெகதீசனும்....2005'ல் 
நாங்கள் தங்கியிருந்த "பம்போலிம் பீச் ரிசார்டிற்கு"ஒரு பீச்சே சொந்தம், அதுவும் நாங்கள் தங்கியிருந்தது பீச்சை பார்த்து இருந்த ரூம், ஆகவே அதிகாலையும் மாலையும் ஒரு அற்புதமான பொழுது. முதல் நாளில் சும்மா அப்படியே சுற்றி பார்க்கலாம் என்று கிளம்பி ஒரு படகு பயணம் போனோம், பின்னர் கால் போன போக்கில் நடந்து நடந்து பழைய கதைகளை பேசினோம். எதை பேசினோம் என்பது நினைவில் இல்லை என்றாலும் அந்த பொழுதில் மனம் சந்தோசமாக இருந்தது என்பதை மட்டும் இன்றும் உணர முடிகிறது.

படகு பயணம் - கோவா 
பம்போலிம் பீச் ரிசார்ட் 
எங்கள் ரூமில் இருந்து....தூரத்தில் ஆர்பரிக்கும் கடல்

பின்னர் தூங்கி எழுந்து காலையில் அந்த சோம்பி திரியும் சுகத்தில் ஒரு காபி குடித்துகொண்டே அந்த கடலை பார்த்து கொண்டு பேசி கொண்டிரின்தது ஒரு அருமையான ஆனந்தம். எந்த பேச்சை பேசினாலும் அடுத்து என்ன செய்வது என்பதற்கு மட்டும் எங்களிடம் பதில் இல்லை. சரி, கோவாவின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை சுற்றி பார்போம் என்று கிளம்பினோம். போர்க்கீசியர்கள் கட்டிய சே கதீட்ரல் பார்த்தோம், ஒரு இயற்கை எழில் கொஞ்சும் பச்சை பசேலென்ற இடத்தில ஒரு பழைமையான சர்ச் ஒரு அழகான ஓவியம் போல இருந்தது. இங்கு பதினாறு வகையான பீச்கள் உள்ளன, அதில் சிறிய வகை பீச்களையும் சேர்த்தால் ஒரு நாற்பத்தி அயிந்து தேறும். நாங்கள் ஒவ்வொரு கடற்கரைக்கும் சென்று புகைப்படம் எடுத்து கொள்வது, மண்ணில் ஓடி பிடித்து விளையாடுவது என்று இருந்தோம், ஆனால் இப்படி ஒவ்வொரு கடற்கரைக்கும் இப்படியே செல்வது எங்களுக்கு அலுப்பாக ஆகி விட்டது. கடல் என்பது நின்று நிதானித்து ஆழ்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்று என்பது அன்றுதான் எனக்கு புரிந்தது !

கோவாவை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கு சொடுக்கவும்...About Goa
அங்கு உள்ள கடற்கரையை பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...Beaches_of_Goa

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என நிருபிக்க போராடும் எனது நண்பன் 
அடுத்த நாள், நாங்கள் முடிவெடுத்து விட்டோம்....எங்கும் செல்வதில்லை, இங்கேயே இந்த கடலை பார்த்து கொள்ளலாம் என்று. காலையில் எழுந்து பீச் ஓரம் அப்படியே நடந்தோம். தண்ணீரில் கால் நனைய, சிறு பிள்ளைகளாய் ஓடி பிடித்து, குரங்குதனமாக குதித்து என்று. சுமார் மூன்று மணி நேரம் வரை இப்படி சந்தோசமாக பேசிக்கொண்டும், குதித்து கொண்டும் இருந்தோம். மனது லேசாகி விட்டது போல தெரிந்தது. மனிதனுக்கு வருடம் ஒரு முறையாவது இது போல் சந்தோசமும், கண்ணீரும் தேவை...இல்லையென்றால் மனமும் முகமும் இறுகிவிடும்.

இந்த காணொளியை நீங்கள் பார்த்தால், கோவாவை பற்றி முழுதும் அறிந்து கொள்ளலாம்.



இந்த பயணத்தில் நாங்கள் கண்டது எல்லாம் கடல், கடல், கடல் மட்டும்தான். இன்று அவன் அமெரிக்காவில், நான் இந்தியாவில்...அவன் வரும்போது நான் இருப்பதில்லை, நான் அங்கு சென்றால் அவன் இருப்பதில்லை. வெறும் போனில் மட்டும் பேசி கொள்கிறோம். ஒரு நாள் வரும்....மீண்டும் கோவா செல்வோம், அப்போது எங்களுக்கு கைத்தடியும், கண்ணாடியும் தேவையாய் இருக்கலாம் !! இப்படி ஒரு பயணம், அதுவும் உங்கள் நண்பர்களுடன் சென்றால் உங்களின் மனதிற்கும், உடலுக்கும் ஒரு உற்சாகம் வரும் என்பது சத்தியமான உண்மை !


No comments:

Post a Comment