Tuesday, July 17, 2012

நான் சர்கஸ் பார்க்க போறேன்டோய்...

மேலே உள்ள இந்த தலைப்பை பார்த்த உடன் உங்களுக்கு சிறிய வயது யாபகம் வந்ததா ? அப்போது எல்லாம் ஊரில் கேளிக்கை என்றாலே அது திருவிழாவோ, பொருட்காட்சியோ அல்லது சர்கஸ் தான். அதுவும் சர்கஸ் எல்லாம் இரண்டு வருடத்திற்கு ஒரு முறைதான் வரும். சர்கஸ் என்றல் நினைவுக்கு வருவது கோமாளி, யானை சிங்கம் போன்ற மிருகங்கள், வில்லாய் வளையும் மனிதர்கள்தான். கடைசியாக நீங்கள் எப்போது சர்கஸ் பார்த்தீர்கள் என்று நினைவிருக்கிறதா ?? அதில் என்ன காட்சி பார்த்தீர்கள் ? அன்று உங்களை மகிழ்வித்த கோமாளி மனிதன் இன்று என்ன செய்து கொண்டு இருப்பான் ? அன்று உங்களை மகிழ்வித்த சர்கஸ் பெண்ணுக்கு கல்யாணம் ஆகி இருக்குமா ?


சர்கஸ் நடக்க போவது எங்களுக்கு போஸ்டர் நோட்டீஸ் மூலமாக தெரியவரும், ஊரெல்லாம் ஒரே நாளில் சிறிது பளபளப்பு ஏறி இருப்பது போல தோன்றும். யாரை பார்த்தாலும் "நீ சர்கஸ் பார்த்தியா ?"என்ற கேள்வியில்தான் முடியும். அப்பா மட்டும் நாம் சர்கஸ் பார்க்க போறோம் என்று சொல்லிவிட்டால், அன்றுதான் அவர் சுப்பர்மேன் போல ஹீரோவாக தெரிவார். சர்கஸ் செல்லும் நாள் அன்று வீட்டில் தீபாவளி வந்து விட்டது போல தெரியும், எல்லோரும் பள பள என்று டிரஸ் போட்டு, பலகாரம் தயார் செய்து என்று இருக்கும்.

சர்கஸ் இடத்தை அடைந்தவுடன் டிக்கெட் எடுத்து எனது அப்பா ஒரு விஞ்ஞானியாக பல ஆராய்ச்சி செய்து ஒரு நல்ல மறைக்காத இடத்தில் எங்களை உட்கார வைப்பார். உடனே அம்மா பலகாரத்தை எடுத்து வைத்து எனக்கு ஊட்டி விட ஆரம்பிப்பார். திடீரென்று பிரகாசமாக விளக்குகள் போட்டு, ஒரு இசை வந்தவுடன் என்னின் முழு கவனமும் அங்கே செல்ல ஆரம்பிக்கும்.

  
கோமாளி வந்து சேட்டைகள் செய்வதும், ஒரு சைக்கிளில் பத்து பேர் ஏறி கொண்டு சாகசம் செய்வதும், தீ வளையத்தில் புகுந்து செல்வது, பார் விளையாட்டுக்கள், கத்தியை குறி பார்த்து எறிவது, பஞ்சவர்ண கிளிகளின் சைக்கிள் பயணம், ஒற்றை வீல் சைக்கிள் சாகசம், பத்து பந்துக்களை தூக்கி போட்டு பிடிப்பது, கடைசியாக சிங்கம் புலி யானை என்று காடு விலங்குகள் வந்து கயிற்றில் நடப்பது அல்லது ஒன்றின் மீது ஒன்றாய் நடப்பது என்று சர்கஸ் இருக்கும். இதில் எதுவுமே அப்போது டீவியில் அப்போதெல்லாம் வருவதில்லை ஆதலால் கூட்டம் அதிகம் இருக்கும். அடுத்த நாளில் எனது அம்மா என்னை கண் கொத்தி பாம்பாக கவனித்து கொண்டு இருப்பார், என்னென்றால் நான் ஒரு மினி சர்கஸ் முயன்று கொண்டு இருப்பேன் வீட்டில்.



நான் சென்ற வாரம் கோயம்புத்தூர் சென்று இருந்த போது அங்கு சர்கஸ் நடைபெறுவதாய் இருந்த போஸ்டர் கண்ணில் பட்டது, அப்போதிலிருந்தே எனக்குள் ஒரு பரபரப்பு தொற்றி கொண்டது. ஆனால் நாங்கள் அங்கு சென்றபோது அது கலைக்கப்பட்டு அவர்கள் வேறு ஊருக்கு பயணப்பட ஆயத்தம் செய்து கொண்டு இருந்தனர். அந்த காட்சி ஒரு பெரும் வாழ்ந்து கெட்ட குடும்பம் அவர்களின்  எல்லா சந்தோசங்களையும் விட்டு விட்டு ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு பஞ்சம் பொழைக்க போவது போல பட்டது. அவர்களை பார்த்தால் ஒரு அரச குடும்பம் போலத்தான் தோன்றியது !!. அவர்களின் சர்கஸ் கூடாரமே ஒரு பெரிய அரண்மனை, அங்கு வாயில் காவலர்கள், சேடி பெண்கள், யானை சிங்க படைகள், சில பொழுதில் மகிழ்விக்க கோமாளிகள், அவர்களின் கருத்துகளை பரப்ப முரசு அறிவிப்பவர்கள் என்று அதுவும் ஒரு அரண்மனைதானே ? இப்பிடிப்பட்ட ஒரு அரண்மனையும் அதன் மாட்சிமை பொருந்திய மக்களும் ஒவ்வொரு இரண்டு மாதமும் மட்டுமே அங்கே ஆட்சி புரிந்து நகர்கிறார்கள்.

சர்கஸ் முடிந்தவுடன் நாம் அதன் நினைவுகளை கொண்டு சென்று விடுகிறோம்,, என்றாவது அவர்களின் வாழ்கையை நினைத்து பார்ப்பது உண்டா ? அவர்களின் பிள்ளைகள் எங்கே சென்று படிக்கிறார்கள் ? அவர்களின் பொழுதுபோக்கு என்ன ? அவர்களின் ரேஷன் கார்டு, வோட்டர் கார்ட்களில் என்ன அட்ரஸ் இருக்கும் ? அவர்களுக்கு அடிபட்டால் அப்புறம் அவர்களின் கதி என்ன? இன்றைய சூழ்நிலையில் எல்லாம் TVயில் வரும்போது, அவர்களின் வருமானம் என்னவாகிறது ? அவர்களுக்கு கல்யாணத்திற்கு யார் பெண் கொடுப்பார்கள் ? சிறிது யோசித்தால் மனம் கனத்து போகும்.

அவர்கள் சர்கஸ் கூடாரம் அமைக்க மாநகராட்சியில் இருந்து ஆணை, தண்ணீர், மின்சாரம் என்று எல்லாவற்றிற்கும் லஞ்சம் கொடுத்து, டிக்கெட் காசையும் குறைத்து கொடுத்து கடைசியில் என்ன மிஞ்சும் அவர்களுக்கு ? சர்கஸ் என்பது அவர்களுக்கு வாழ்க்கை, ஆனால் நமக்கு வாழ்கையே ஒரு சர்கஸ். இந்த வீடியோவை பாருங்கள்...நீங்களே புரிந்து கொள்வீர்கள்.



No comments:

Post a Comment