Friday, August 31, 2012

காமெடி பீஸ் - தமிழ் சினிமாவின் ஆஸ்கார் அவார்ட் யாருக்கு ?

நான் பதிவிட்ட "வந்துட்டான்யா....சாம் ஆண்டெர்சன்"  பதிவை நிறைய  பேர்  பார்த்து மனம் விட்டு சிரித்ததாகவும்,  அவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்து கோவில்  கட்டபோவதாகவும் தகவல்கள் வந்தன,   இதை பார்த்த நான்,  இது  போல பல பல அகில உலகம் நடுங்கும் ஸ்டார்கள் எல்லாம் இருகிறார்கள்  எல்லாம் ஒரே பதிவாக தங்களுக்கு அளித்து யாருக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற முடிவை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். 

கீழே உள்ள வீடியோவை பார்த்து யாருக்காவது (விழுந்து விழுந்து சிரித்து) அடிபட்டால் அதற்க்கு கம்பெனி பொறுப்பாகாது !!

TR -ன் காட்டுத்தனமான நடனம்...


விஜயகாந்தின் வெறித்தனமான பைட்...

ராமராஜனின் அதிரடிக்கும் சண்டைகள்...

பவர் ஸ்டார் in  பாட்சா !! (டெரர் நடிப்புடா சாமி !!)

நம்ம டாக்டர் விஜயின் ஒலிம்பிக் தாவல்...


நம்ம எல்லா ஹீரோக்களுக்கும் கவுண்டமணி அடிக்கும் அல்டிமேட் கமண்டுக்கள்...


சரி அதை எல்லாம் விடுங்க....நம்ம ஊர் ஹீரோ மட்டும்தான் டெரர் காட்டுவாங்களா....கொஞ்சம் அதர பக்கம் வாங்க !!


சரி சரி விடுங்க...இந்த வருஷ ஆஸ்கார் அவார்ட் யாருக்கு அப்படின்னு நாம பார்போம் வாங்க !!

Thursday, August 30, 2012

உலகமகாசுவை - கொரியன் உணவுகள்

சென்ற "உலகமகாசுவை" பகுதியில் சிங்கப்பூர் உணவுகள் பத்தி பார்த்தோம், இந்த வாரம் நாம் கொரியன் உணவுகளை பத்தி பார்போம். இந்த கொரியன் உணவகத்திற்கு போனீங்கன்னா உங்க முன்னாடி  அடுப்பு இருக்கும் அல்லது அவங்க ஹாட் பிளேட் குடுப்பாங்க. இது ரெண்டுக்கும் நாம என்ன வித்யாசம் அப்படின்னு பார்க்கலாம் வாங்க. 

ஹாட் பிளேட் என்னும் வகைகளில் உங்களது உணவு நன்கு சமைக்கப்பட்டு கல்லால் ஆன ஒரு பிளேட்டில் கொண்டு கொடுக்கப்படும். அந்த கற்கள் சூடை அதிக நேரத்திற்கு வைத்திருக்கும் வகை. ஆனால், இந்த அடுத்த வகை பச்சை மாமிசத்தை உங்கள் முன் உள்ள அடுப்பில் வேக வைத்து நீங்களே சாப்பிட வேண்டும். மேலே உள்ள படத்தில் நீங்கள் பார்பதுதான் அந்த அடுப்பு. கீழே உள்ள படத்தை பார்த்தால் நானும்  அமெரிக்க நண்பரும் சாப்பிடும் காட்சி, இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது எங்களின் முன் இருக்கும் சிறு சிறு கிண்ணங்களில் உள்ள உணவுகளை.
இந்த எல்லா உணவுகளும் நீங்கள் தொட்டு கொள்வதற்கு !! பெரும்பாலும் கீரைகள், வேர்கள், காய்கறிகள் எல்லாம் பச்சையாக அல்லது வினிகர் சேர்த்து வைக்கப்பட்டு இருக்கும். நாங்கள் சிறிது கிமிச்சி ரைஸ் ஆர்டர் செய்து கொண்டோம், இல்லையென்றால் வெறும் மாமிசம்தான் சாப்பிட வேண்டி இருந்திருக்கும். கீழே உள்ள படத்தில் நீங்கள் பார்பதுதான் கிமிச்சி ரைஸ், அதை நன்கு கலக்கினால் நமது ஊர் பிரைடு ரைஸ் போலவே இருக்கும்.
நீங்கள் கேட்ட பச்சை மாமிசம் வந்தவுடன் அந்த அடுப்பை பற்ற வைத்து அதில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட அதை நன்றாக வேகும் அளவுக்கு வாடுவார்கள் அது வெந்தவுடன் நீங்கள் சாபிட்டால்.....ஆகா என்று இருக்கும். இதை நான் சிங்கப்பூர், ஜப்பான், தாய்லாந்த், சீனாவில் உண்டிருக்கிறேன். ஒரு முறை நிஜமாகவே கொரியா சென்று உன்ன வேண்டும் என்று ஆசை !! :-)

மேலே உள்ள படங்களில் நீங்கள் பார்பதுதான் கொரியன் உணவுகள் மெனு. சும்மா ஒரு பார்வை பார்த்துக்கோங்க, இல்லேன்னா அங்க போய் என்ன ஆர்டர் பண்றதுன்னு முழிக்க போறீங்க.
உணவின் சுவையில் மயங்கிய நிலையில் நான் !!

Wednesday, August 29, 2012

வந்துட்டான்யா....சாம் ஆண்டெர்சன்

நம்ம பவர் ஸ்டார்க்கு எல்லாம் முன்னோடி இந்த "நடிப்பு புயல்" "நடன மேதை சாம் ஆண்டெர்சன். இவர் ஆடிய ஆட்டத்தை நானும் என் மனைவியும் தூங்க செல்லும் முன் தெரியாமல் பார்த்து விட்டு பல் வலி வர சிரித்து அன்று தூக்கம் போச்சு. இவர் எழுதி, இயக்கி, தயாரித்து, இன்னும் என்னவெல்லாமோ செய்து எடுத்த படம் "யாருக்கு யாரோ" தியேட்டர் விட்டு பிச்சி கொண்டு ஓடியது, ஆனால் நம்ம "youtube" இல் படு பயங்கர ஹிட்டோ ஹிட்டு !!
இவரின் நடனம், நடிப்பு காணோளியை நீங்களும் இன்று கண்டு அடிபடாமல் விழுந்து விழுந்து சிரியுங்கள்.

Tuesday, August 28, 2012

அறுசுவை - சின்னாளபட்டி சவுடன் பரோட்டா கடை

இந்த பதிவுகளில் நான் எனக்கு பிடித்த உணவுகளை உங்களுக்கு அறிமுகபடுத்துகிறேன். தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை செய்வதால் நிறைய நாடுகளுக்கு சென்று அங்கு உள்ள உணவுகளை சுவைத்திருக்கிறேன், பிறந்து வளர்ந்தது எல்லாம் கிராமமாக இருந்ததால் கையேந்தி பவனிலும் உண்டிருக்கிறேன். ஆகையால், எந்த உணவு சுவையாக இருந்தாலும், அது எங்கு இருந்தாலும் அறிமுகபடுத்துவதுதான் இந்த பதிவின் நோக்கம். நீங்களும் அதை ருசிக்கும்போது என்னின் பதிவு சரிதான் என்று நினைப்பீர்கள் !

இந்த படத்தை உற்று பாருங்கள்...உரிமையாளர் S. சவுடன் என்று இருக்கும்.

நம்ம சவுடன் கடை முகப்பு...

நமது மக்களுக்கு ஒரு கடையில் அந்த உணவின் சுவை பழகிவிட்டால் அதை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள், அதே அந்த உணவின் சுவை நன்றாக இல்லையென்றால் பக்கத்தில் கூட போக மாட்டார்கள். அது போல் சுவையில் இன்றும் கொடி கட்டி பறக்கும் ஒரு கடைதான் இது. பரோட்டவுக்காக சண்டை எல்லாம் நடக்கும். பரோட்டா போடும் கல் பக்கத்திலேயே நின்று கொண்டு, போட்டவுடன் சூடாக சட்டென்று கையில் எடுத்து "பார்சல் பண்ணுப்பா" என்று கஸ்டமரே எடுத்து செய்யும் அளவுக்கு பிரசித்தம். இவர்களின் சால்னாவின் சுவை நன்றாக இருப்பதால், பலரும் விசேசங்களுக்கு அடிக்கடி இந்த ஹோட்டல்காரர்களை கூப்பிடுவதும், அவர்கள் அதனால் கடைக்கு லீவ் விடுவதும் சகஜம். இவ்வளவு ஏன், சின்னாளபட்டியில் உள்ள மற்ற கடைகாரர்கள் அவர்களின் வியாபாரம் நன்றாக நடந்தால், அது இந்த கடை லீவில் இருந்தால்தான் என்பது சத்தியமான உண்மை.
சவுடன் கடை பரோட்டா, சால்னாவுடன்...உங்கள் சுரேஷ்

இங்க இதுதான் சார் கிடைக்கும்...ஆனால் இந்த பாண்டிய நாடே இதற்க்கு அடிமையப்பா...
 சின்னாளபட்டி என்பது திண்டுக்கல் மதுரை இடையில் உள்ளது. இது சேலைகளுக்கு பெயர் பெற்ற ஊர். அங்கு சென்றால் நான் ஒரு நாளாவது கண்டிப்பாக இந்த கடையில் சென்று சாப்பிடாமல் இருக்க மாட்டேன். அவர்கள் போடும் பரோட்டாவும், பிச்சி போட்ட நாட்டு கோழியும், தோசை - கெட்டி சட்னி - சால்னாவும், கொத்து பரோட்டா - கோழி குழம்பும் என்று களை கட்டும். எல்லா கடைகளில் கிடைக்கும் அயிட்டம்தான் என்றாலும், அவர்கள் செய்யும் முறையில் இந்த ஊரே மயங்கி இருக்கிறது என்றால் அது மிகையாகாது !
சவுடன் கடை இரவு நேர தோற்றம்...
அந்த சால்னா சுவை இந்த போட்டோவில் தெரியாதே...ஆனா நம்புங்க "இதுதாண்டா சால்னா"
இந்த கடையின் பேர் என்னவோ "சௌடேஸ்வரி பரோட்டா கடை", ஆனால் எல்லோரும் அதை சுருக்கி கூப்பிட்டு கூப்பிட்டு அது "சவுடன் கடை" ஆகிவிட்டது. மிக சிறிய கடை, ஆனால் சுவையோ அற்புதம். ஒருவர் பொய் சொல்லலாம், ஆனால் ஒரு ஊரே பொய் சொல்லாது....சுவைக்கு நான் காரண்டி. நீங்களும் சென்று வாருங்கள்.


நம்ம பரோட்டா மாஸ்டர்...
தலை கறி, குடல் மசாலா, வறுத்த நாட்டு கோழி
இது ஒரு சிறிய கிராமம்தான், ஆனால் நீங்கள் மதுரை பக்கம் 
செல்லும்போது  இந்த சின்னாளபட்டியில் சிறிது திரும்பி கண்டிப்பாக
சாப்பிட்டு செல்லலாம்....உங்களது பயணம் இன்னும் இனிதாக அமையும் 
என்பது நிச்சயம் !! Monday, August 27, 2012

ஆச்சி நாடக சபா - சாக்லேட் கிருஷ்ணா நாடகம்

உலகின் எந்த மூலையில் ஒரு ஷோ பார்த்தாலும், நம்ம ஊரில் அதுவும் தமிழில் ஒரு நாடகம் பார்த்தால் அது பரம சுகம். ஒரு முறை சென்னையில் என்னுடைய நண்பனின் திருமணதிற்கு சென்று இருந்தபோது நானும் என் மனைவியும் பீச் சென்று விட்டு அப்படியே எங்கேனும் படம் போகலாம் என்று இருந்தோம், ஆனால் அந்த சமயத்தில் எந்த நல்ல படமும் ஓடவில்லை என்பதால் பேப்பரில் வந்து இருந்த கிரேசி மோகனின் "சாக்லேட் கிருஷ்ணா" நாடகம் செல்லலாம் என்று முடிவு செய்தோம். இதுவரை நாங்கள் மேடை நாடகம் எதுவும் அதுவும் அரங்கினுள் சென்று காணவில்லை, ஆதலால் இது ஒரு வித்யாசமான அனுபவமாக இருக்கும் என்று எண்ணினோம்.


நாடகம் பார்க்க நான் முதல் வரிசை டிக்கெட் புக் செய்து ஒரு ஆளுக்கு 500 ரூபாய் கொடுத்திருந்தேன், ஆனால் சென்றவுடன்தான் தெரிந்தது 100 ரூபாய் டிக்கெட் வாங்கி இருக்கலாம் என்று...காரணம் ஸ்டேஜ் ஒன்று அவ்வளவு தூரம் இல்லை !! மாலை ஆறு முப்பதுக்கு தொடங்க வேண்டிய நாடகம் ஏழு முப்பதுக்குதான் தொடங்கியது, திரு. கிரேசி மோகன் அவர்கள் இன்னொரு விழா சென்று விட்டு தாமதமாய் வந்ததால் ! ஆனால், நாடகம் தொடங்கியவுடன் இருந்து சிரிப்பு மழைதான். அதுவும் மாது பாலாஜி அவர்களின் டைமிங் ரொம்பவே நன்றாக இருந்தது.


கடவுள் உங்கள் குரலுக்கு செவி சாய்த்து வந்து உங்கள் வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தி வைக்கலாம், ஆனால் அது எவ்வளவு பெரிய சுமை, ஆபத்து என்பது இந்த நாடகத்தில் சொல்லப்படும் கருத்து, ஆனால் சொல்கின்ற விதத்தில் அருமையாய் இருக்கிறது. நொடிக்கு நொடி சிரிப்பு வெடி கொளுத்தி போட்டு உங்களை கட்டி போட்டு விடுகின்றனர். கண்டிப்பாக நீங்கள் ஒரு முறையாவது ஒரு மேடை நாடகத்தை பார்க்க வேண்டும், ஒரு வித்யாசமான அனுபவமாக இருக்கும். இந்த நாடகத்தின் டிரைலர் கீழே இருக்கிறது, பார்த்து மகிழுங்கள்.
Sunday, August 26, 2012

மறக்க முடியா பயணம் - கேரளா ஆலப்புழா

ஒரு பயணம் அது நம் கண்களுக்கும், மனதுக்கும் விருந்தாக அமைந்தால் எப்படி இருக்கும் ?! நானும் எனது பெற்றோரும் சென்ற இந்த கேரளா ஆலப்புழா பயணம் ஏன் எல்லோரும் கேரளாவை "கடவுளின் இடம்" என்று சொல்கிறார்கள் என்பதை உங்களுக்கு சொல்லும்.

ஆலப்புழாவின் அழகு....
அவ்வளவு பசுமையான இடம், ஆலப்புழாவின் பேக் வாட்டர்ஸ், உணவுகள் என்று ஒரு சொர்க்க பூமிதான் இது. நாங்கள் கேரலீயம் என்னும் 
ஆயுர்வேதிக் ரிசார்ட்டில் தங்கி  இருந்தோம். அது தண்ணீருக்கு மிக அருகில், 
எங்கு சென்றாலும் படகில்தான் செல்ல வேண்டும் என்ற ஒரு ரிசார்ட்.
நாங்கள் தங்கி இருந்த காட்டேஜில் இருந்து தண்ணீர் தொட்டு விடும்  தூரம்தான் 
இருந்தது .

அதோ அந்த பறவை போல....
 
நாங்கள் குளித்து முடித்தவுடன் மிகுந்த பசியாக இருந்தது. என்ன சாப்பிட கிடைக்கும் என்று சென்ற எங்களுக்கு ஒரு விருந்தே தயாராக இருந்தது.கேரளா அரிசியில் சாப்பாடு, நேந்தரங்கா சிப்ஸ், அவியல், துவையல், 
சாம்பார், மோர் குழம்பு, பாயசம் என்று எங்களது வயிறாய் நிறைத்தது.
நிறைவாய் சாப்பிட்டு ஒரு குட்டி தூக்கம், பின் எங்களது ஊர் உலாவை 
துவங்கினோம். அங்கு இருந்த கோவில்கள், படகு பயணம் என்று இனிமையான மலை பொழுதுடன் முடிந்தது.

 
நாங்கள் இருந்த படகு வீட்டினுள்ளே... 

மறுநாள் நாங்கள் ஆலப்புழாவின் புகழ்பெற்ற ஹவுஸ் போட் என்னும் படகு வீட்டுக்கு மாறினோம். இந்த படகு வீடு என்பது பல வகைகளில்,
வசதிகளில் கிடைக்கும். நாங்கள் இரண்டு பெட் ரூம்களுடன் கூடிய
 வீடு ஒன்று எடுதுகொண்டோம், அதற்கே 8000 ரூபாய் ஆயிற்று !! இந்த படகு வீட்டை இரு ஆட்கள் கவனித்து கொள்வார்கள். அவர்களே நமக்கு சமையலும் செய்து கொடுப்பார்கள். நாங்கள் படகு வீட்டுக்கு மாறும்போது மதிய சாப்பாடு நேரம், ஆதலால் அவர்கள் எங்களுக்கு மெனு சொன்னவுடன் நாங்கள் கடல் உணவுகள் கிடைக்காத என்றவுடன் ஒரு வீட்டின் முன் படகினை நிறுத்தினார்கள், அங்கு எல்லா விதமான கடல் மீன்களும் கிடைத்தன, அதை வாங்கி அவர்களுக்கு கொடுதவுகன் அவர்கள் எங்களுக்கு சுவையான விருந்து கொடுத்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பின்னர் நாங்கள் வேம்பநாடு லேக் சுற்றும் போது மக்கள் பஸ்க்கு  காத்திருப்பது போல் அங்கு படகுக்கு காத்திருந்தது ஒரு அருமையான காட்சி. மலை சிறு சிறு தூறல்கள் போடும்போது அந்த பறந்து விரிந்த லேகிற்கு நடுவில் நிறுத்தி, உங்களை சுற்றி தண்ணீர் தண்ணீர் என்று இருக்கும் போது ஒரு அருமையான பஜ்ஜியும், மசாலா டீயும் கொடுக்கும்போது என்ன ஒரு சொர்க்கம் என்று தோன்றும்.இப்படி நீங்கள் பயணிக்கும்போது இவர்கள் மாலை ஆறு மணிக்கு படகை ஒரு இடத்தில நிறுத்தி விடுவார்கள், பின்னர் மறுநாள் காலை ஒன்பது மணிக்குத்தான் பயணம் தொடரும். பின்னர் நீங்கள் அங்கு இருக்கும் சிறு கிராமங்களுக்கு சென்று உங்களுக்கு வேண்டிய நினைவு பொருட்களை வாங்கி வரலாம். இருள் அடர்ந்த அந்த பொழுதில் நாங்கள் இரவு உணவை முடித்துக்கொண்டு கதைகளை பேசி கொண்டு இருந்தோம். அதிகாலையில் அந்த சூரியன் உதிக்கும்போது நாங்கள் இருந்த படகும், தண்ணீரும் 
தங்கமாக மாறுவதுபோல ஒரு தோற்றம், அது ஒரு கண்கொள்ளா 
காட்சி. பின்னர் உறங்கி எழுந்து காலையில் ஆப்பமும், கடலை கறியும் சாபிட்டுவிட்டு குளித்தோம். பின் அந்த படகு எங்களை மீண்டும் கேரலீயத்தில் இறக்கி விட்டது. ஒரு மறக்க முடியா பயணம்.....சீக்கிரம் முடிந்துவிட்டதே என்று இருந்தது.

மேலே இருக்கும் அந்த படம், எனது வாழ்வில் நான் ரசிக்கும் ஒன்று. இந்த படத்தை நான் பார்க்கும்போது எல்லாம் மனதில் நான் அன்று அனுபவித்த ஒரு நிம்மதி எழும். சுற்றிலும் தண்ணீர், உங்களுக்கு சூடான வெங்காய பஜ்ஜியும், மசாலா டீயும், பக்கத்தில் உங்களுக்கு பிடித்தவர்கள், சிறு சிறு மலை தூறல்கள் என்று இருந்த தருணம் அது. நீங்கள் நிச்சயம் செல்ல வேண்டிய இடங்களில் ஒன்று இந்த ஆலப்புழா.
இந்த கானொளியில் நீங்கள் ஆலப்புழாவின் அழகினையும், படகு வீடு பற்றியும் காணலாம்...

Saturday, August 25, 2012

"மனு" நீதிசோழனின் தொண்டு

சென்ற வாரம் ஜெராக்ஸ் கடையில் ஒரு நகல் எடுக்க போய் இருந்தேன், அங்கே மட்டும்தான் கரண்ட் இல்லாமல் ஜெனரேட்டர் கொண்டு ஜெராக்ஸ் எடுப்பதால் எல்லா மக்களும் அங்கு இருந்தனர். ஒருவரை ஒருவர் முண்டி அடித்துக்கொண்டு இருந்தபோது, அந்த கூடத்தில் ஒருவர் "அம்மா...கொஞ்சம் சீக்கிரம் இந்த மனுவை ஜெராக்ஸ் எடுத்து குடும்மா, கலெக்டர் போயிட போறார்" என்று கெஞ்சி கொண்டு இருந்தார், ஆனால் யாரும் அவரை கண்டு கொள்ளவில்லை. எனக்கு எடுத்து முடித்தவுடன் நான் வெளியில் வந்து டீ சாப்பிட்டு கொண்டு இருந்த போது சட்டை எல்லாம் கசங்கி, வேர்வையுடன் அதே டீ கடைக்கு வந்தார் அந்த நபர். "ச்சே...எவனுக்கும் அக்கறை இல்லை...இந்நேரம் கலெக்டர் போய் இருப்பார், இனிமேல் அடுத்த வாரம்தான்" என்று புலம்பினார். அவரிடம் என்னவென்று விசாரித்தபோது, அங்கு நிலவும் தண்ணீர் பஞ்சமும், அதை போக்குவதற்கு ஒரு மனு கொடுத்தால் அதை சீக்கிரம் செய்து தர முடியும் என்று கலெக்டர் சொன்னதால் வேலை எல்லாம் விட்டு இங்கு நான்கு வாரமாக அலைந்து கொண்டு இருப்பதாக சொன்னார். நானோ அவரிடம் "மனு குடுத்தா வேலை ஆகிடுமா...எல்லாம் வெட்டி வேலை சார்" என்றேன், அவர் சட்டென்று என்னிடம் "தம்பி, எல்லாமே சும்மா வந்திடுமா...நீங்க உங்க வாழ்கையில எதனை முறை இது போல மனு கொடுதிருகீங்க ??!" என்றார்....பொட்டில் அறைந்தது அந்த கேள்வி.
இன்று வரை நாம் எதற்கு எல்லாம் அரசாங்கத்திடம் மனு கொடுத்திருக்கிறோம் ? சுயநலம் என்று வந்தால் லஞ்சம் கொடுத்தாவது எதையும் சாதிக்கின்றோம், ஆனால் பொதுநலன் கருதி இது வரை எத்தனை முறை அரசு அலுவலகங்கள் சென்றிருக்கிறோம் ? நிரம்பி வழியும் சாக்கடையை சுத்தம் செய்ய சொல்லி, நாத்தமடிக்கும் குப்பை தொட்டியை எடுக்க, பள்ளிக்கூடம் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற, காவிரி குடிநீர் குழாயில் வர, ரோடு போட, பார்க் அமைக்க, பஸ் ஸ்டாப் அமைக்க, பொது கழிப்பறை அமைக்க, விதவை பென்ஷன் உதவி, ஊனமுற்றோருக்கு உதவி பணம் என்று என்றாவது நாம் இதுவரை மனு கொடுத்து இருக்கிறோமா அல்லது மனு கொடுபவரை பைத்தியம் என்று நினைக்காமல் இருந்திருக்கிறோமா ?


நாம் எல்லாம் எவராவது நம்மை அணுகி, அரசாங்கத்தை அணுகி இதை செய்ய கேட்க போகிறோம் என்றல் நமது கையெழுத்தை பதிவு செய்து விட்டு வீட்டினுள் சென்று இவனுங்க மனு குடுத்தா எல்லாம் நடந்து விடுமா என்று கமெண்ட் செய்வோம், ஆனால் அது நடந்து விட்டால் "ஆமாங்க, அன்னைக்கு இத பத்தி நம்ம அரசாங்கத்திடம் பேசலாமின்னு நானும் அவரும்தான் சேர்ந்து எல்லாம் செய்தோம்" என்போம் இல்லையா ? இன்று கலெக்டர் ஆபீசில் நிற்கும் ஆயிரம் ஆயிரம் பேரில் எத்தனை எத்தனை பொது நல மனுக்கள் இருக்கும், அவர்கள் எதனால் இதை செய்கிறார்கள், அவர்களுக்கு இதனால் என்ன லாபம் ? வேகும் வெயிலில் கலெக்டர் ஆபீஸ் வாசலில் நின்று, அங்கு அவர்களுக்கு நடக்கும் அவமானங்களை எல்லாம் பொறுத்து கொண்டு, செருப்பு தேய நடக்கும் அந்த முகம் தெரியா மனிதர்களின் உழைப்பினால் உங்கள் வீட்டிற்க்கு  அல்லது வீட்டின் அருகில் வந்த வசதிகள் எத்தனை என்று எண்ணி பார்த்து இருக்கிறீர்களா ??


எங்கள் ஊரில் ஒருவர் இருந்தார் "மனு கொடுகிறவர்" (எப்போதும் மனு கொடுப்பதால் இந்த பெயர்...அவர் பெயர் கூட தெரியாது எனக்கு என்பது இன்று நான் வெட்கப்படும் ஒன்று !), அவர் எப்போதுமே மக்களின் தேவைக்கு ஊராட்சி மன்றம், கலெக்டர் ஆபீஸ், கமிஷனர் ஆபீஸ் என்று எப்போதும் ஒரு வெள்ளை தாளோடு சுற்றி கொண்டு இருப்பார். எப்போதுமே அவரை பார்த்து இருந்தாலும் எங்களுக்கு எல்லாம் அவரையும், அவரது பொது சேவையையும் உணர்ந்தது என்பது அவர் அங்கு அடிமை
தொழிலாளியாய் இருந்த ஏழு வடமாநில ஆட்களை  போலீஸ் உதவியுடன்
காப்பாற்றிய போதுதான். ஒரு நாள் அவரை நான் பயணிக்கும் பேருந்தினுள் என்னுடன் பக்கத்தில் பயணித்தார், அப்போது அவரிடம் "ஏங்க இந்த வயசில அந்த கம்பெனி ஆளுங்களோட தகறாரு...உங்களை எதாவது செய்ஞ்சுட போறாங்க" என்றேன், அவர் என்னை பார்த்து சிரித்துவிட்டு "வாழுற வாழ்க்கைக்கு அர்த்தம் வேண்டாமா" என்று சொல்லிவிட்டு மௌனமானார். அன்று அதற்க்கு அர்த்தம் புரியவில்லை, இன்று என்னை மௌனமாக்கியது அந்த பதில் !!

இன்று வரை நாம் நம்மை எதற்கும் அட்ஜஸ்ட் செய்ய பழகிவிட்டோம்...
பத்து நாட்களுக்கு கரண்ட் இல்லையா - இன்வெர்ட்டர்  போடு, சாக்கடை அடைத்து கொண்டு விட்டதா - சுத்தி போ, கொசு தொல்லையா - ரெண்டு குட் நைட் வாங்கி வை, தண்ணி வரலையா - மினரல் வாட்டர் ரெண்டு கேன் சொல்லு, பஸ் ஸ்டாப் தூரமா இருக்கா - பைக் வாங்கு இப்படி நாம் செய்து கொண்டேதான் போகிறோமே தவிர ஒருநாளும் நாம் இது எல்லாம் இல்லாமல் இருக்கும் மக்கள் என்ன செய்வார்கள் என்று யோசிக்க மறந்து விட்டோம். நமக்கு இருக்கிறது நாம் அந்த வசதியை செய்து கொண்டு விட்டோம், இல்லாதவர்கள் இந்த வேதனையை தாங்கதானே வேண்டும் ?! அவர்களுக்க்காகவாவது நாம் ஏதாவது செய்ய வேண்டாமா....நமக்காவது 24 நாட்கள் பெய்டு லீவ் உள்ளது, அவர்களுக்கு உழைதால்தானே காசு. இந்த வாழ்வில் ஒரு வசதியாவது அரசாங்கத்திடம் மனு குடுத்து போராடி மக்களுக்கு வாங்கினால்தான் இந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம்....என்ன நான் சொல்றது ?!


Friday, August 24, 2012

மனதில் நின்றவை - ஸ்டீவ் ஜாப்ஸ் உரை

இந்த மனதில் நின்றவை பகுதியில் நான் இதுவரை அதிகம் எதையும் உங்களுடன்
பகிர்ந்து கொண்டதில்லை. என்னதான் நான் எனக்கு பிடித்த உணவு, இடம் என்று பகிர்ந்து கொண்டாலும், இந்த பகுதியில் எனக்கு ஒரு மன நின்றைவு 
கிடைக்கத்தான் செய்கிறது. இன்று நீங்கள் பார்க்க போகும் இந்த காணொளி,
ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் புகழ் பெற்ற ஒரு பேச்சு. இந்த பேச்சை கேட்கும்போது எல்லாம் எனக்கு ஒரு உத்வேகம் வரும் என்றால் அது மிகையாகது. இது பார்த்தால் கொஞ்சம் நேரம் ஆகும், ஆனால் நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று.
அவர் மூன்று விஷயத்தை பற்றி இதில் பேசி இருப்பார், அது எப்படி அவரது 
வாழ்கையை மாற்றியது என்று.  

Thursday, August 23, 2012

நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சாவித்திரி வைத்தி

முதலில் ஒரு சின்ன குவிஸ்....
1.) பல கொலை செய்து சுவற்றில் மறைத்த பெரும் கொலைகாரன்  யார் ?
2.) மச்சான் என்று கூப்பிடும் நடிகை யார் ?
3.) பசுமை தாயகம் என்னும் அமைப்பின் தலைவர் யார் ?
4.) யானை சின்னத்தை கொண்ட உத்திரப்ராதேஷ் மாநிலத்தின் முதலமைச்சர் யார் ?
5.) விஜயகாந்த் கட்சியின் சின்னம் என்ன ?
6.) கமலின் அடுத்த படம் என்ன ?
மேலே உள்ள ஆறு கேள்விகளில், உங்களுக்கு ஐந்து கேள்விக்கு விடை
தெரிந்தால் நீங்கள் தினமும் பேப்பர் படிப்பவர், பொது அறிவு உள்ளவர்.
இப்போது சொல்லுங்கள்....உங்களுக்கு சாவித்திரி வைத்தியை தெரியுமா ? 
ம்ம்ம்...நமக்கு சம்பந்தம்  இல்லாத, நமக்கும் சமூகத்துக்கும் எந்த ஒரு நல்லதையும்
செய்யாத பல விஷயங்களை தெரிந்த நமக்கு, தனது வாழ்வின் எல்லா
தருணங்களையும், பல பல பொதுசேவை விருதுகளையும் வென்ற இந்த
சாவித்திரி வைத்தி அவர்களை தெரியாது என்பது சோகம்தான்.
ஒரு எண்பது வயது முதியவரால் என்ன செய்ய முடியும், அதுவும் அவருக்கு
சொந்தம், பணம் இல்லையென்றால் ? சாவித்திரி வைத்தி என்ற எண்பது வயது பாட்டி ஒருவர் இன்றும் தளராது பொது சேவை செய்து கொண்டு,
ஒரு முதியோர் காப்பகமும் நடத்தி வருகிறார். இவர் மட்டும் அல்ல, இவரது குடும்பமே பொது சேவை செய்துள்ளது என்றால் அது மிகையாகது. சிறு வயதில் இருந்து பொது சேவை, திருமணம் ஆனா பின்னர் தனது தோழியருடன் "திங்கள்கிழமை பொதுசேவை அமைப்பு", ஊன்றுகோல் என்னும் சேரி பகுதி முதியவர்களுக்கு உணவளிக்கும் அமைப்பு, விஸ்ராந்தி பொதுசேவை அமைப்பு என்று இந்த எண்பது வயதிலும் அயராது உழைத்து வருகிறார்.

1978 ம் ஆண்டு இவர் ஆரம்பித்த முதியோர் இல்லம் இன்றும் பலரை வாழ வைத்து கொண்டு இருக்கிறது. முதியோர் மட்டும் இல்லாமல், ஆதரவில்லாமல் இருக்கும் பெண்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அடைக்கலம் கொடுக்கிறது. சாக போகும் முதியவர்களை சந்தித்து கண்தானம் செய்யும் திட்டமும் நடைமுறையில் இருக்கிறது. ஒரு முறை இவர் ஆரம்பித்த முதியோர் இல்லத்தில் முதல் சாவு நடந்த போது யாருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தபோது இவரே முன்னின்று அடக்கம் செய்து, பெண்கள் இதை செய்ய கூடாது என்பதை மீறி இன்று வரை இப்படி 300 பிணங்களை அடக்கம் செய்ய உதவி இருக்கிறார். பின்னர் சாவை கண்டு முதியவர்கள் நடுங்காமல் இருக்க எல்லா விதமான முயற்சியும் செய்திருக்கிறார் இந்த சாகா புகழ் பெற்ற பெண்மணி.
இவரின் விஸ்ராந்தி பொதுசேவை அமைப்பை பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...Vishranthi Charitable trust
இவரின் அமைப்புக்கு உதவ விரும்புவோர் இந்த முகவரிக்கு உங்களின் உதவியை அனுப்பவும்...Vishranthi Charitable Trust, 4/227, AVM Rajeswari Gardens, MGR Salai, Palavakkam, Chennai - 600 041
இவர் ரிலையன்ஸ்ன் "ரியல் ஹீரோஸ்" விருது, லியோன்ஸ் கிளப்ன் விருது என்று பல பல விருதுக்களை வாங்கி இருக்கிறார். அனால் இவரை பற்றி தெரியாது என்று சொல்கிறீர்கள்....ஒன்று உங்களின் பொது அறிவு குறைவு, அல்லது நல்லவர்களுக்கு இங்கு  வாழ்க்கை இல்லை, புகழும் இல்லை.

Wednesday, August 22, 2012

நான் ரசித்த குறும்படம் - முன்டாசுபட்டி

 எப்போதுமே குறும்படம் என்பது ஒரு சவாலான விஷயம். ஒரு பாத்து நிமிடத்தில் நாம் சொல்ல வந்ததை தெளிவாக சொல்வது என்பது எல்லோருக்கும் கை வராத கலை.
இங்கு நீங்கள் பார்க்க போகும் இந்த முன்டாசுபட்டி என்னும் குறும்படம் ஒரு குட்டி காமெடி படம். ஒரு கிராமத்தில் போட்டோ பிடிக்க தடை, அதில் ஒரு போடோக்ராபர் சென்று படம் பிடிக்க வேண்டிய சூழலில் நடக்கும் காமெடி நிகழ்வுகளை இந்த இயக்குனர் சொன்ன விதத்தில் ஜெயித்திருக்கிறார். அதிலும் இதில் நடித்திருக்கும் பலர் அந்த கிராமத்தில் உள்ளவர்களே !! இதை நினைத்து நினைத்து சிரிக்கும் அளவுக்கு ஒரு நல்ல குறும்படம். 

Tuesday, August 21, 2012

அறுசுவை - பெங்களுரு பார்பிக்யூ நேஷன் உணவகம்

நமது நாடு உணவு வகைகள் எல்லாமே ஒன்று வேக வைத்தவை அல்லது 
எண்ணையில் பொறிக்கப்பட்டது.  ஆனால், வெளிநாட்டில் முக்கியமாக அமெரிக்காவில் எல்லோரும் Barbeque வகை உணவுகளை விரும்பி உண்பர். அதாவது, பச்சை மாமிசத்தை எந்த விதமான மசாலாவும் சேர்க்காமல் தீயில் வாட்டி  தின்பதுதன் அது. இப்போது, நமது ஊரில் எல்லாம் பிரபலமாக ஆரம்பித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி பெங்களுருவில், இந்திரா நகரில் உள்ள உணவகம்தான் நாம் இப்போது காண போவது....Barbeque Nation !!
இதற்க்கு முந்தைய பதிப்பில் நீங்கள் என்னுடைய பிரேசிலின் உணவு வகைகள் என்னும் பதிவை படித்திருந்தால் இதை புரிந்து கொள்வது உங்களுக்கு கஷ்டமாக இருக்காது. ஆனால், அந்த வகை உணவு எல்லா விதமான இறைச்சியும் கொண்டு இருக்கும், ஆனால் இங்கே மஷ்ரூம், சிக்கன், மட்டன் மற்றும் மீன் வகைகளே பார்பிக்யூவாக பரிமாறபடுகின்றன. நீங்கள் இங்கு முன்பதிவு செய்து சென்றால் மட்டுமே உங்களுக்கு இடம் கிடைக்கும், இல்லையென்றால் அவ்வளவுதான். ஒரு ஆளுக்கு 650  முதல் 750  வரை ஆகும், ஆனால் நீங்கள் எவ்வளவு வேண்டும் என்றாலும் சாப்பிட்டு கொள்ளலாம் !! பெங்களுரு பார்பிக்யூ நேஷன் உணவகம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...பார்பிக்யூ நேஷன்

முதலில் நீங்கள் உட்கார்ந்தவுடன் உங்களின் முன்னால் உள்ள உணவு மேசையுடன் இருக்கும் சின்ன அடுப்பில் நெருப்பு மூட்டுவார்கள் அல்லது ஒரு கொதிக்கும் கரி அடுப்பு கொண்டு வந்து வைப்பார்கள் (அதை சுற்றி சுற்றி நாங்கள் காட்டுவாசி நடனம் ஆடலாமா என்று கேட்டது தனி கதை !!), பின்னர் அந்த நெருப்பில் ஒரு கம்பியில் குத்திய மஷ்ரூம், சிக்கன், மட்டன் மற்றும் மீன் வகை உணவுகள் வைக்கப்படும். அது அந்த நெருப்பில் மெதுவாக வேக ஆரம்பிக்கும் (வெளிநாட்டில் எல்லாம் அந்த நெருப்பில் பச்சை மாமிசம் வைப்பார்கள் ), பின்னர் நீங்கள் அதை எடுத்து வைத்து உன்ன வேண்டும். ஆனால் நீங்கள் அதற்க்கு முன் பப்பெட் முறையில் இருக்கும் சாலட், ரைஸ் முதலியவகைகளை எடுத்து கொண்டு இந்த மாமிசத்தை உண்ண வேண்டும்.
In Indira nagar Barbeque nation with my friends
பஞ்ச் லைன் :
சுவை               -      அமர்க்களம் என்று சொல்ல முடியாது ஆனால், 
                                    நன்றாக இல்லை என்றும் சொல்ல முடியாது
அமைப்பு         -       நன்றாக இருக்கிறது, தயவுசெய்து ரூப் டாப் மட்டும் சென்று 
                                   விடாதீர்கள்....வேர்த்து கொட்டிவிடும்
பணம்              -       கொஞ்சம் இல்லை, நிறையவே காஸ்ட்லி !!
சர்வீஸ்           -       சூப்பர் என்று சொல்லலாம்

Monday, August 20, 2012

ஆச்சி நாடக சபா - தி லைன் கிங் ஷோ

 "தி லைன் கிங்" என்று ஒரு கார்ட்டூன் படம் வந்ததே உங்களுக்கு யாபகம் இருக்கிறதா ? அந்த படத்தை பார்த்து விட்டு நீங்கள் மூக்கின் மேல் விரல் வைத்திருந்தீர்கள் என்றால்...நீங்கள் இந்த ஷோ பார்த்து விட்டும் அதை செய்வீர்கள். அந்த படத்தின் கதையை அப்படியே ஒரு ஷோவாக உங்களின் கண் முன்னால் நிகழ்த்தி காட்டுவார்கள். பொதுவாக டிஸ்னி ஒரு படத்திற்கு மிகவும் மெனகடுவார்கள், அந்த படம் ஹிட் ஆனவுடன் அப்படியே மார்க்கெட்டிங்கில் இறங்கி விடுவார்கள். அந்த படத்தை அப்படியே தங்களின் டிஸ்னி லாண்டில் ஒரு ஷோவாக கொண்டு வந்து மேருகேற்றுவார்கள், அதை வைத்து T-ஷர்ட், பேனா, பொம்மை என்று பணத்தை அள்ளுவார்கள்.  பின்னர் வேறு ஒரு படம் வந்தவுடன், அந்த ஷோவை அப்படியே உலகம் முழுவதும் சுற்றி வந்து காசை அள்ளுவார்கள்.
அப்படி வந்த  "தி லைன் கிங்" என்ற படம் இன்று ஒரு புகழ் பெற்ற ஷோவாக உலகம் முழுவதும் சுற்றி வருகிறது. நான் இதை பார்த்தவுடன் ஆர்வம் எழுந்தாலும் டிக்கெட் விலையை கேட்டவுடன் தலை சுற்றி விழ தோன்றியது. ஆனால், அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்தது...என் நண்பனது அலுவலகத்தில் promotional offer ஆக குறைந்த விலையில் இந்த டிக்கெட் கிடைத்தவுடன் எங்கள் இருவருக்கும் சந்தோசம் தாங்க முடியவில்லை. ஷோ ஆரம்பித்தவுடன் வரும் அந்த தீம் (செட்டப்ப மாத்தி பாட்டில் ஆரம்பம் இந்த தீம்....இசைஅமைப்பாளர் சிற்பி ஹாலிவுட் ரேஞ்சு ) 
வரும்போது அப்படியே சிலிர்த்து விட்டது.
இந்த ஷோவில் அப்படியே அந்த அந்த மிருகங்களின் முகமுடியை மாட்டி, தத்ரூபமாக அந்த உடல் அசைவை வெளிப்படுத்தி இருக்கும் அந்த இடம்தான் டிஸ்னி ஏன் இவ்வளவு பிரபலமாக இருக்கிறது என்று தெரியும். அந்த சிறிய சிங்கம் பிறந்தவுடன் எல்லா மிருகங்களும் அதற்க்கு மரியாதையை செய்யும் இடத்தில், கடைசி ஓரத்தில் இருக்கும் மான் கூட துல்லியமான அசைவை மேற்கொள்ளும்போது நீங்கள் அங்கு மனிதர்களை பார்க்க மாட்டீர்கள் என்பது நிச்சயம். ஒரு கட்டத்தில் அங்கு காடும், மிருகங்களுமே தெரியுமே தவிர மனிதர்கள் அல்ல.
இந்த படத்தை உற்று பாருங்கள்....மனிதர்கள்தான் மிருகங்கள் ஆக வேடமிட்டு இருகின்றனர்.

சுருக்கமாக இந்த கதையை சொல்ல வேண்டும் என்றால்...ஆப்ரிக்கா காட்டின் ராஜா முபாசா, அவருக்கு ஒரு மகன் பிறக்கிறான் அவனது பெயர் சிம்பா. அவனது அப்பா அவனுக்கு அந்த காடு, விலங்குகள், ஒரு ராஜாவின் கடமைகள் என்று சொல்லி கொடுக்கிறார். அப்போது தூரத்தில் தெரியும் ஒரு இடத்தை காட்டி அங்கு மட்டும் சென்று விட கூடாது என கூறுகிறார். சிம்பாவின் மாமா ஸ்கார் அந்த ராஜா பதவிக்கு ஆசைப்பட்டு முபாசவை கொன்று சிம்பாவை அந்த இடத்தை விட்டு துரத்துகிறார். சிம்பா திரும்பவும் அங்கு வந்து தன் மாமாவை வீழ்த்தி அந்த ராஜா பதவிக்கு வருவதே கதை. ஆனால் அதை சொன்ன விதத்தில் ஜெயித்திருகிரார்கள்.
நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று musical ஷோ !!

Sunday, August 19, 2012

மறக்க முடியா பயணம் - சென்னை தக்ஷின சித்ரா

சென்னையில் வாழும் பலருக்கு இந்த இடம் தெரியுமா என்பதே எனக்கு சந்தேகம் !! ஆனால், நாம் கண்டிப்பாக போக வேண்டிய இடம். சென்னை ECR ரோட்டில் பைக் பயணம் செய்ய விரும்புபவன் நான்...அதுவும் நான் என்னுடைய புது பைக் வாங்கிய சமயம் எல்லாம் எப்போதும் ECR ரோட்டில் சனிக்கிழமைகளில் தனியாக காற்று வாங்க போவேன், அப்படி செல்லும் போது என்னை ஈர்த்த இடம்தான் இது. வெளியிலிருந்து பார்க்கும் போது இது என்ன இடம் என்பதே தெரியாமல் இருக்கும், ஆனால் உள்ளே நுழைந்தால் ஒரு அரமையான, மனம் ஈர்க்கும் நமது பாரம்பரியம் நிறைந்த இடம். தக்ஷின் என்றால் தெற்கு என்று அர்த்தம், சித்ரா என்றால் கூடம் என்று அர்த்தம், இங்கே நீங்கள் நமது பாரம்பரிய வீடுகள், கலைகள், பொருட்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். இதை நமது அரசு முயுசியம் போல அலுத்து வடியும் இடம் என்று மட்டும் எண்ணி விட வேண்டாம், உற்சாகம் கொப்பளிக்கும் இடமாகும்.

Chettinadu house displays
டிக்கெட் வாங்கி உள்ளே நுழைந்தவுடன் உங்களை ஈர்ப்பது ஒரு 
பசுஞ்சோலை மரங்களும், சில்லென்ற கடல் காற்றும். ஒரு சின்ன 
டாகுமெண்டரி போட்டு காண்பிப்பார்கள், அதில் நமது கலாச்சாரம் பற்றிய 
சிறு தொகுப்பு. அது முடிந்தவுடன், நீங்கள் சிறு சிறு வீடுகள் போல இருக்கும் இடங்களுக்கு சென்றால் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு கலாச்சாரத்தை பிரதிபளிக்கும். நமது செட்டிநாடு வீடுகளுக்கு சென்றால் சிறிய முற்றம், வீட்டின் வெளியில் 
கோலம், உள்ளே ஒவ்வொரு அறைகளும் விசாலமாக என்று பார்பதற்க்கே 
அருமையாகஇருக்கும். இப்படியாக குயவர் வீடு, விவசாயி
வீடு, அக்ரஹாரா வீடுகள் என்று தமிழ்நாட்டு கலாச்சாரம் பிரதிபலிக்கும்.
கர்நாடக, கேரளா மற்றும் ஆந்திரா வீடுகள் பலவும் கூட இங்கு 
இருக்கின்றன. 

ஒவ்வொரு வார சனி, ஞாயிறு கிழமைகளில் நமது பாரம்பரிய கலைகள் நடைபெறும். நான் சென்று இருந்த போது கர்நாடக கலைகள் நடைபெற்றன. நீங்கள் கிளி ஜோசியம், கிராமத்து சினிமா, பறவை 
கூத்து, கோலம் போடுதல், பஞ்சு மிட்டாய், பம்பரம் விடுதல் என்று பல விதமான
விஷயங்கள் இருக்கின்றன நீங்கள் செய்து பார்பதற்கு. நாங்கள் ஒரு 
குழந்தையை போல ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று அந்த வீட்டிலிருக்கும் 
மனிதர்கள் போல பேசி பழக என்று செய்தது ஒரு நிறைவான அனுபவம். 

ஜக்கம்மா ஒரு சீட்டு எடு...

Harry POTTER in the making...

சினிமா DTS சவுண்ட்

பம்பரம்......நம்ம பம்பரம்  


எப்போதும் ஹோட்டல், பீச் என்று செல்பவர்களுக்கு இது ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும். தக்ஷின் சித்ராவை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...Dakshina Chitra

Saturday, August 18, 2012

என்னை தூங்க விடாத கேள்வி

கேள்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. சில கேள்விகள் உங்களை சிரிக்க, 
கோவப்பட, அழ, வெறுக்க, ஆசைப்பட, மோகபட, பைதியமக்க வைக்கும். 
ஆனால், வெகு சில கேள்விகளே உங்களை சிந்திக்க வைக்கும். சில கேள்விகள் உங்களை சிந்திக்க வைப்பதாய் இருந்தாலும்  குழப்பி விடும், உதாரணமாக "பணம் மட்டுமே வாழ்க்கையாக முடியுமா ?" இதற்க்கு ஆம், இல்லை என்ற பதில் இருந்தாலும் உங்களால் அந்த கேள்வியை முழுமையை உணர்ந்தால் மட்டுமே சிந்திக்க முடியும், அதுவும் குழப்பம் இல்லாமல் ! ஆனால், நேற்று ஒரு கானொளியில் நான் கேட்ட, பார்த்த அந்த கேள்வி என்னை உலுக்கியது என்றால் அது மிகை ஆகாது.
ஒரு சிறுமி, அவளுக்கு பேச முடியாது. ஒரு நாள் அவள் ஒரு ஊமை பிச்சைகாரனின் வயலின் இசை கேட்கிறாள். அவள் அவனிடம் சென்று தனக்கு அதை கற்று தருமாறு கேட்கிறாள். அவள் அதை கற்க ஆரம்பிக்கிறாள், அவள் வயலினை எடுத்து கொண்டு பள்ளியில் மாலை வேளையில் பயிற்சி செய்யும்போது ஒரு பணக்கார சிறுமியின் கோவத்திற்கு ஆளாகிறாள். அந்த பணக்கார சிறுமி பியானோ நன்றாக வாசிப்பாள், ஆனால் இவளின் வயோலின் இசை அவளை பொறமை கொள்ள வைக்கிறது. ஒரு நாள் அந்த பள்ளியில் இசை போட்டி வருகிறது. இந்த பணக்கார சிறுமி அந்த ஊமை சிறுமி வாசித்தால் தனக்கு பரிசு கிடைக்காமல் பொய் விடும் என்று ஒரு ரவுடி கும்பலை கொண்டு அவளின் வயொலினை உடைத்து போடுகிறாள். அப்போது அந்த ஊமை சிறுமி அந்த பிச்சைகாரனிடம் சென்று "நான் மட்டும் ஏன் எல்லோரையும் போல் இல்லாமல் இப்படி இருக்கிறேன் ?" என்று கேட்க அந்த பிச்சைகாரன் "நீ ஏன் அவர்களை போல் இருக்க வேண்டும் ?" என்று கேட்கிறார். பின்னர் அந்த பெண் உடைந்த வயொலினை ஒட்டு போட்டு கொண்டு சென்று போட்டியில் ஜெயிக்கிறாள். இந்த கதையில் கேட்கப்பட்ட "நீ ஏன் அவர்களை போல் இருக்க வேண்டும் ?" என்ற கேள்வி உங்களை உலுக்கவில்லை ??!

நினைத்து பாருங்கள், நாம் ஒவ்வொருவரும் அடுத்தவரை பார்த்து அவர்களை போலத்தான் இருக்க ஆசை படுகிறோம். சிறு வயதில்
என் நண்பனாக கோபி என்று ஒருவன் இருந்தான், அவன் பல நாடுகளின் ஸ்டாம்ப் வைத்து இருப்பான். அவனது தந்தை எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்வதால் அவனுக்கு நிறைய ஸ்டாம்ப் கிடைக்கும். அவனை பார்த்து என் தந்தையிடமிருந்து நானும் ஸ்டாம்ப் சேர்க்க வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கி சேர்த்தேன். ஆனால், சில மாதம்தான் 
அதை செய்ய முடிந்தது, பின்னர் எனது நண்பன் அசோக் விளையாடும்
பம்பரம் என்னை ஈர்க்க ஆரம்பித்தது இப்படியாக நான் சிறு வயதில் 
எனக்கு பிடித்த ஓவியம் வரைதல், ஊர் சுற்றுவது என்று செய்யாமல்...
ஒவ்வொரு பொழுதும் நான் மற்றவர்களை போல வாழத்தான் முயற்சி 
செய்திருக்கிறேன்.


ஒவ்வொரு முறையும் நாம் இந்த சமூகம் நம்மை கேலி செய்ய கூடாதே என்று நம்மை சுருக்கி கொள்கிறோம். எனக்கு மழையில் நனைந்து கொண்டு போவது பிடிக்கும், ஆனால் ஒரு முறை நான் நனையும்போது மழைக்கு ஒதுங்கியவர்கள் என்னை பார்த்த பார்வை எதோ நான் தவறு செய்வது போல பட்டது. நான் பிளைட்டில் செல்லும் போதெல்லாம் செருப்பு போட்டு கொண்டு போக வேண்டும் என்று விரும்புவேன், ஆனால்
என் கூட வரும் நண்பர்கள் என்னை ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். செருப்பு எனக்கு சௌகரியம் என்றாலும் இந்த ஊர் பிளைட்டில் செல்லும் நபருக்கு என்று ஒரு விதமான உருவகம் கொடுத்து இருக்கிறது. உடனே நீங்கள் என்னதான் எனக்கு புத்திமதி சொன்னாலும், சற்று உங்களை, உங்கள் செயல்களை நினைத்து பாருங்கள். நாம் எல்லோரும் ஒரு வகையில் இந்த சமூகம் வகுத்து உள்ள எழுதபடாத விதிகளுக்கு கட்டுப்பட்டுதான் இருக்கிறோம். இப்போது இந்த கேள்வியை யோசித்து பாருங்கள் "நாம் என் எல்லோரையும் போல் இருக்க வேண்டும் ?"....வாருங்கள் நமக்கு கிடைத்த
இந்த வாழ்கையை நமது எண்ணம் போல், ஆனால் ஒழுக்கமாக,
சந்தோசமாக வாழ்வோம்.