Tuesday, August 14, 2012

அறுசுவை - பெங்களுரு மால்குடி உணவகம்

பெங்களுருவில் மிக சில உணவகங்களில்தான் நீங்கள் நினைத்த சுவை, அமைதி, தரம் எல்லாம் கிடைக்கும். ஆனால், அந்த உணவங்களை நீங்கள் கண்டு பிடிப்பது மிகவும் சிரமம். நான் இங்கு எழுத போகும் உணவகத்திற்கு சுமார் 5 வருடங்களாக போய் வந்து கொண்டு இருக்கிறேன், ஒவ்வொரு முறையும் நான் அடுத்த முறை இங்கு வர வேண்டும் என்று எண்ண வைப்பதுதான் இங்கு ஸ்பெஷல்.பெங்களுருவில், மாரதஹள்ளியில் உள்ள மால்குடி உணவகம்தான் நாம் இப்போது பார்க்க
போவது!
நாம் எந்த உணவகம் சென்றாலும், அதுவும் குடும்பத்துடன் சென்றால் எல்லோருக்கும் பிடித்த உணவு இருப்பது மிகவும் சிரமம். அப்பாவுக்கு அன்று ஆப்பம் வேண்டும், அம்மாவுக்கு ஆந்திரா மீல்ஸ், மனைவிக்கு வறுத்த மீன் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ரு சுவை வேண்டும். ஆதலால், ஒவ்வொரு முறையும் எல்லோருக்கும் பிடித்த உணவு கிடைக்க வேண்டுமே என்று வேண்டி கொண்டே போக வேண்டும். ஆனால், இந்த உணவகத்திற்கு செல்லும்போது மட்டும் நான் அப்படி எண்ண மாட்டேன். இங்கு கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடக உணவு வகைகள் ஒரே இடத்தில் கிடைகின்றன.
நீங்கள் உள்ளே நுழைவதற்கு முன்னரே, அழகிய ஐயனார் சிலை, மண் குதிரை, ஊஞ்சல், கிளி ஜோசியம் என்று அசத்தலாக இருக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் வெத்தலை, பழம் என்று அமர்களமான முடிவு !!
இங்கு தமிழ்நாடு உணவு என்று செட்டிநாடு வகைகள் எல்லாம் கிடைகின்றன. நான் பொதுவாக இட்லியும், கறி தோசையுடன் செட்டிநாடு வறுத்த கறி கொழம்பும் வாங்கி கொண்டு விடுவேன். இன்று வரை எனது மனம் மற்றும் நா கவர்ந்த உணவு இது. கர்நாடக நீர் தோசை, மசாலா 
மோர் என்று ஒரு நாள், கேரளா பரோட்டா, மீன் கொழம்பு என்று ஒரு நாள், ஆந்திரா தாளி மீல்ஸ் என்று ஒவ்வொரு முறையும் மயக்கும் சுவையுடன். கடைசியாக அவர்கள் ஸ்பெஷல் ஆன காரட் அல்வாவில் முந்திரியும், நெய்யும் தூக்கலாக வரும் போது நீங்கள் இன்னும் சாப்பிட வேண்டும் என்ற ஆசையுடன் 
இருப்பீர்கள் என்பதற்கு நான் காரண்டி !!
அவர்களின் உணவு மட்டும் அல்ல, உள்ளே அமைதியாக செட்டிநாடு அமைப்புடன் கூடிய அழகிய இடம், உபசரிப்பு என்று எல்லாமே ஸ்பெஷல்தான். நாங்கள் 5 வருடமாக இங்கே ஏன் சென்று கொண்டு இருக்கிறோம் என்று இப்போது உங்களுக்கு புரியுமே !! குறை என்று சொன்னால்....விலையும், 5 வருடங்களாக ஒரே மெனு என்பதுதான்.  

1 comment: