Saturday, August 25, 2012

"மனு" நீதிசோழனின் தொண்டு

சென்ற வாரம் ஜெராக்ஸ் கடையில் ஒரு நகல் எடுக்க போய் இருந்தேன், அங்கே மட்டும்தான் கரண்ட் இல்லாமல் ஜெனரேட்டர் கொண்டு ஜெராக்ஸ் எடுப்பதால் எல்லா மக்களும் அங்கு இருந்தனர். ஒருவரை ஒருவர் முண்டி அடித்துக்கொண்டு இருந்தபோது, அந்த கூடத்தில் ஒருவர் "அம்மா...கொஞ்சம் சீக்கிரம் இந்த மனுவை ஜெராக்ஸ் எடுத்து குடும்மா, கலெக்டர் போயிட போறார்" என்று கெஞ்சி கொண்டு இருந்தார், ஆனால் யாரும் அவரை கண்டு கொள்ளவில்லை. எனக்கு எடுத்து முடித்தவுடன் நான் வெளியில் வந்து டீ சாப்பிட்டு கொண்டு இருந்த போது சட்டை எல்லாம் கசங்கி, வேர்வையுடன் அதே டீ கடைக்கு வந்தார் அந்த நபர். "ச்சே...எவனுக்கும் அக்கறை இல்லை...இந்நேரம் கலெக்டர் போய் இருப்பார், இனிமேல் அடுத்த வாரம்தான்" என்று புலம்பினார். அவரிடம் என்னவென்று விசாரித்தபோது, அங்கு நிலவும் தண்ணீர் பஞ்சமும், அதை போக்குவதற்கு ஒரு மனு கொடுத்தால் அதை சீக்கிரம் செய்து தர முடியும் என்று கலெக்டர் சொன்னதால் வேலை எல்லாம் விட்டு இங்கு நான்கு வாரமாக அலைந்து கொண்டு இருப்பதாக சொன்னார். நானோ அவரிடம் "மனு குடுத்தா வேலை ஆகிடுமா...எல்லாம் வெட்டி வேலை சார்" என்றேன், அவர் சட்டென்று என்னிடம் "தம்பி, எல்லாமே சும்மா வந்திடுமா...நீங்க உங்க வாழ்கையில எதனை முறை இது போல மனு கொடுதிருகீங்க ??!" என்றார்....பொட்டில் அறைந்தது அந்த கேள்வி.




இன்று வரை நாம் எதற்கு எல்லாம் அரசாங்கத்திடம் மனு கொடுத்திருக்கிறோம் ? சுயநலம் என்று வந்தால் லஞ்சம் கொடுத்தாவது எதையும் சாதிக்கின்றோம், ஆனால் பொதுநலன் கருதி இது வரை எத்தனை முறை அரசு அலுவலகங்கள் சென்றிருக்கிறோம் ? நிரம்பி வழியும் சாக்கடையை சுத்தம் செய்ய சொல்லி, நாத்தமடிக்கும் குப்பை தொட்டியை எடுக்க, பள்ளிக்கூடம் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற, காவிரி குடிநீர் குழாயில் வர, ரோடு போட, பார்க் அமைக்க, பஸ் ஸ்டாப் அமைக்க, பொது கழிப்பறை அமைக்க, விதவை பென்ஷன் உதவி, ஊனமுற்றோருக்கு உதவி பணம் என்று என்றாவது நாம் இதுவரை மனு கொடுத்து இருக்கிறோமா அல்லது மனு கொடுபவரை பைத்தியம் என்று நினைக்காமல் இருந்திருக்கிறோமா ?


நாம் எல்லாம் எவராவது நம்மை அணுகி, அரசாங்கத்தை அணுகி இதை செய்ய கேட்க போகிறோம் என்றல் நமது கையெழுத்தை பதிவு செய்து விட்டு வீட்டினுள் சென்று இவனுங்க மனு குடுத்தா எல்லாம் நடந்து விடுமா என்று கமெண்ட் செய்வோம், ஆனால் அது நடந்து விட்டால் "ஆமாங்க, அன்னைக்கு இத பத்தி நம்ம அரசாங்கத்திடம் பேசலாமின்னு நானும் அவரும்தான் சேர்ந்து எல்லாம் செய்தோம்" என்போம் இல்லையா ? இன்று கலெக்டர் ஆபீசில் நிற்கும் ஆயிரம் ஆயிரம் பேரில் எத்தனை எத்தனை பொது நல மனுக்கள் இருக்கும், அவர்கள் எதனால் இதை செய்கிறார்கள், அவர்களுக்கு இதனால் என்ன லாபம் ? வேகும் வெயிலில் கலெக்டர் ஆபீஸ் வாசலில் நின்று, அங்கு அவர்களுக்கு நடக்கும் அவமானங்களை எல்லாம் பொறுத்து கொண்டு, செருப்பு தேய நடக்கும் அந்த முகம் தெரியா மனிதர்களின் உழைப்பினால் உங்கள் வீட்டிற்க்கு  அல்லது வீட்டின் அருகில் வந்த வசதிகள் எத்தனை என்று எண்ணி பார்த்து இருக்கிறீர்களா ??


எங்கள் ஊரில் ஒருவர் இருந்தார் "மனு கொடுகிறவர்" (எப்போதும் மனு கொடுப்பதால் இந்த பெயர்...அவர் பெயர் கூட தெரியாது எனக்கு என்பது இன்று நான் வெட்கப்படும் ஒன்று !), அவர் எப்போதுமே மக்களின் தேவைக்கு ஊராட்சி மன்றம், கலெக்டர் ஆபீஸ், கமிஷனர் ஆபீஸ் என்று எப்போதும் ஒரு வெள்ளை தாளோடு சுற்றி கொண்டு இருப்பார். எப்போதுமே அவரை பார்த்து இருந்தாலும் எங்களுக்கு எல்லாம் அவரையும், அவரது பொது சேவையையும் உணர்ந்தது என்பது அவர் அங்கு அடிமை
தொழிலாளியாய் இருந்த ஏழு வடமாநில ஆட்களை  போலீஸ் உதவியுடன்
காப்பாற்றிய போதுதான். ஒரு நாள் அவரை நான் பயணிக்கும் பேருந்தினுள் என்னுடன் பக்கத்தில் பயணித்தார், அப்போது அவரிடம் "ஏங்க இந்த வயசில அந்த கம்பெனி ஆளுங்களோட தகறாரு...உங்களை எதாவது செய்ஞ்சுட போறாங்க" என்றேன், அவர் என்னை பார்த்து சிரித்துவிட்டு "வாழுற வாழ்க்கைக்கு அர்த்தம் வேண்டாமா" என்று சொல்லிவிட்டு மௌனமானார். அன்று அதற்க்கு அர்த்தம் புரியவில்லை, இன்று என்னை மௌனமாக்கியது அந்த பதில் !!

இன்று வரை நாம் நம்மை எதற்கும் அட்ஜஸ்ட் செய்ய பழகிவிட்டோம்...
பத்து நாட்களுக்கு கரண்ட் இல்லையா - இன்வெர்ட்டர்  போடு, சாக்கடை அடைத்து கொண்டு விட்டதா - சுத்தி போ, கொசு தொல்லையா - ரெண்டு குட் நைட் வாங்கி வை, தண்ணி வரலையா - மினரல் வாட்டர் ரெண்டு கேன் சொல்லு, பஸ் ஸ்டாப் தூரமா இருக்கா - பைக் வாங்கு இப்படி நாம் செய்து கொண்டேதான் போகிறோமே தவிர ஒருநாளும் நாம் இது எல்லாம் இல்லாமல் இருக்கும் மக்கள் என்ன செய்வார்கள் என்று யோசிக்க மறந்து விட்டோம். நமக்கு இருக்கிறது நாம் அந்த வசதியை செய்து கொண்டு விட்டோம், இல்லாதவர்கள் இந்த வேதனையை தாங்கதானே வேண்டும் ?! அவர்களுக்க்காகவாவது நாம் ஏதாவது செய்ய வேண்டாமா....நமக்காவது 24 நாட்கள் பெய்டு லீவ் உள்ளது, அவர்களுக்கு உழைதால்தானே காசு. இந்த வாழ்வில் ஒரு வசதியாவது அரசாங்கத்திடம் மனு குடுத்து போராடி மக்களுக்கு வாங்கினால்தான் இந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம்....என்ன நான் சொல்றது ?!


2 comments:

  1. எனக்கு அரசு அலுவலகம் என்றாலே ஒரு அலர்ஜி இருக்கிறது ...

    இந்த பதிவு என் கன்னத்தில் அறைந்தது போல உள்ளது

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே !

      Delete