Saturday, August 4, 2012

நடமாடும் பொம்மை

 எனது மகனை வெளியே எங்கயாவது கூட்டி செல்வோம் என்று நினைத்து ஒரு தீம் பார்க்கிற்கு அழைத்து சென்றேன்...அங்கு அவனை அணில் பொம்மை,மிக்கி மவுஸ், ட்வீட்டீ பொம்மைகள் வரவேற்றன, எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எல்லோரும் கூடி நின்று கை தட்டி அவர்கள் செய்யும் சேட்டையை ரசித்தோம். அந்த சிரிக்கும் அணில் பொம்மையை சுற்றி சுற்றி போட்டோ எடுத்து கொண்டே இருந்தோம். அந்த சுட்டெரிக்கும் வெயிலில், நிறைய பேர் இருந்ததால், ஒரு பெரிய லைன் ஆகி எல்லோரும் அவர்களுடைய குழந்தைகளை வைத்து போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தனர். சுமார் இரண்டு மணி நேரம் வரை அந்த பொம்மை அங்கிருந்து நகரவே இல்லை. அவ்வளவு ஆனந்தமாக சிரித்து கொண்டே இருந்தது.



மேலே நான் சொன்னதை கற்பனை செய்து பார்த்தீர்களா ? எப்படி மகிழ்ச்சி பொங்கியிருக்கும் அந்த இடத்தில்....அந்த இடத்தில் இருந்த எல்லோருமே சந்தோஷமாக இருந்திருப்பார்கள் இல்லையா ? யாராவது ஒருவர் நாம் அந்த சிரிக்கும் அணில் பொம்மை உள்ளே இருக்கும் மனிதன் எப்படி வேர்த்து வழிந்து கொண்டு இருந்திருப்பான், அவனுக்கு தாகம் எடுத்திருக்குமா என்று யோசித்தோமா ? நானும் யோசிக்கவில்லை....அந்த பொம்மை, எல்லோரும் போட்டோ எடுத்து முடித்த பிறகு அவசர அவசரமாக ஒரு கழிவறை நோக்கி ஓடும் வரை.

வீட்டுக்கு வந்த நான் ஒரு போர்வையை உடம்பு முழுவதும் சுற்றிக்கொண்டு வெயிலில் சிறிது நேரம் நடந்தேன், ஒரு ஐந்து நிமிடம் பொறுத்து போர்வையை விலக்கி பார்த்தால், அப்படியே தொப்பலாக நனைந்து இருந்தேன், தாகம் தாகம் அப்படியோரு தாகம் தண்ணீருக்கு, சிறிது நேரம் தலை சுற்றியது. ஐந்து நிமிடம் இருந்த எனக்கே இப்படி என்றால் சுமார் இரண்டு மணி நேரம் எங்களை மகிழ்வித்த அந்த அணில் மனிதனுக்கு எப்படி இருந்திருக்கும். பிச்சை எடுப்பவன் கூட நிழலாக பார்த்துதான் இப்போதெல்லாம் பிச்சை எடுக்கிறான், ஆனால் இப்படிப்பட்ட முகமுடி மாட்டிய மனிதர்கள் எல்லாம் அவர்களை விட பாவமாகதான் எனக்கு தெரிகிறார்கள்.
இந்த தீம் பார்க் அவஸ்தையாவது பரவாயில்லை, இப்போதெல்லாம் பெரும் துணி கடைகளில் எல்லாம் கூட இவர்கள் குழந்தைகளை கவர்ந்து இழுக்க பயன் படுத்துகிறார்கள். அதுவும் வெயிலில் இப்படி ஆடி பாடுகிறார்கள். உள்ளே கடைகளில் பொருட்களை கூட காட்டி விடலாம், இப்படி இருப்பது என்பது மிகவும் கொடுமையானது. அதுவும் ஒரு முறை திருச்சியில் ஒரு துணி கடை முன் ஒரு பொம்மையாய் ஆடி பாடி கொண்டு இருந்தவன், திடீரென்று அவனுக்கு தீபிடித்தது போல அங்கும் இங்கும் அலை பாய்ந்து சட்டேன்று ஒரு சந்தின் மறைவில் ஓடினான். அது ஒரு காமெடி காட்சி போல தெரிந்தது, ஆனால் அவன் சென்ற இடத்தை நான் கடந்த போது அவன் பேசிய பேச்சும், அவனது கண்ணீர் வடியும் முகமும் மனதை பிசைந்தது. சரிம்மா, மருந்து எடுத்துக்க...இன்னும் ரெண்டு நாளுல பணத்தோட வரேன், உன்னை விட்டா எனக்கு யாரு இருக்கா, என்பது போன்ற வார்த்தைகள் அவன் எதற்காக இப்படி உழைக்கிறான் என்பதை காட்டியது. அப்படி அவன் அழுது பேசிக்கொண்டு இருந்தபோது கூட அந்த பொம்மை முகமுடி சிரித்து கொண்டுதான் இருந்தது.

அப்படி அந்த முகமுடி போட்டு நம்மை மகிழ்விக்கும் மனிதனுக்கு அவனது உழைப்புக்கு ஏற்ற கூலி கிடைக்கும், ஆனால் அவனது முகம் கடைசி வரை வெளியே தெரிவதில்லை. அவனிடம் சென்று உன் பேர் என்ன என்று கேட்டு பாருங்கள்....அவன் மாடசாமியோ அல்லது முருகனோ ஆனால் அவன்  அந்த பாத்திரத்தின் பெயரைத்தான் சொல்லுவான். முகம் தெரியா தன் பெயர் சொல்ல முடியாத அந்த மனிதன்தான் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான். அடுத்த முறை நீங்கள் இப்படிப்பட்ட மனிதர்களை சந்திக்கும் போது என்ன செய்ய போகிறீர்கள்....??

2 comments:

  1. உண்மைதான். இந்தக் கோணத்தில் நினைச்சுப் பார்த்ததே இல்லை.

    எங்க ஊரில் கிறிஸ்மஸ் பரேடு சமயம் மட்டுமே சரியா ரெண்டு மணி நேரத்துக்கு இப்படி பொம்மை மனிதர்கள் ஊர்வலத்தில் வருவார்கள்.

    அப்போது அவ்வளவா வெய்யில் இல்லை என்றாலும் கூட... கஷ்டமாத்தான் இருந்துருக்கும் இல்லை:(

    ஆனா ஒன்னு இப்படி வருபவர்கள் எல்லாம் தன்னார்வலர்களே!

    ReplyDelete
    Replies
    1. //அப்போது அவ்வளவா வெய்யில் இல்லை என்றாலும் கூட... கஷ்டமாத்தான் இருந்துருக்கும் இல்லை:( //
      நீங்கள் இப்படி எண்ணி பார்த்ததே எனது பதிவிற்கு வெற்றி....உங்களது வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.

      உங்களது விக்கி பசங்க என்னை மிகவும் கவர்ந்த தளம்...நன்றி.

      Delete