Thursday, August 9, 2012

நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - வந்தனா & வைஷ்ணவி (தி பான்யன்)

முதன் முதலாக நான் பார்த்த காட்சி ஒன்று பிடரியில் அடித்து வாழ்வில் இன்னொரு பகுதியும், மனிதர்களும் உண்டு என உணர்த்திய தருணம். வாழ்க்கை என்பது உண்டு, களித்து, உறங்கி, செத்து போவது இல்லை அதையும் தாண்டி ஒரு அர்த்தம் உள்ளதாக்கி கொள்ள வேண்டும் என்று உணர்த்திய அந்த உன்னதமான பொழுது.


நான் எனது கல்லூரி முடித்து சென்னை அம்பத்தூர் எஸ்டேட்டில் வேலை செய்து கொண்டு இருந்தேன். கை நிறைய சம்பளம், பிடித்த சாப்பாடு, புது பைக் என்று வாழ்க்கை போய் கொண்டு இருந்த தருணம் அது, அதற்க்கு மேல் சிந்திக்க மனதே இல்லை. ஒரு நாள் முகபேர் வழியாக ஒரு வேலையாக செல்ல நேர்ந்தது, அப்போது ஒரு சிகப்பு நிற கட்டிடம் ஒன்றிலிருந்து வந்த அந்த உயிர் பிசையும் அலறல் என்னை உலுக்கி நிறுத்தியது. அந்த வழியாக ஒரு நூறு முறை சென்றிருப்பேன், ஆனால் இன்றுதான் அந்த கட்டிடம் இருப்பதை பார்க்கிறேன் !? அந்த அலறல் எங்கிருந்து, எதற்காக வந்தது என்று தெரிந்து கொள்ள விரும்பினேன். அந்த கட்டிடம் நோக்கி சென்று வாயிலில் இருந்த வாட்ச்மேனிடம் விசாரித்தபோது அது ஒரு மனநல காப்பகம் என்றும், ஒரு மனநோயாளி ஒருவர் வயிறு வலியில் துடிப்பதாக சொன்னார், நான் அவரை தாண்டி என் பார்வையை செலுத்தியபோது எச்சில் ஒழுக ஒரு 40 வயது பெண், என்னை பார்த்த பார்வை......ஐயோ என்னை கொன்றே போட்டது. எப்படி சொல்வது அந்த பார்வையை.....என்னை காப்பாற்றேன் என்றா இல்லை என்னை கொன்று விடு என்றா?


ஒரு மனிதன் கால் இல்லையென்றோ, கை இல்லையென்றோ, கண்ணோ, காதோ இப்படி எதுவாக வேண்டுமென்றாலும் இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஒரு மனநோயாளியாக மட்டும் இருந்துவிடக்கூடாது. தான் என்ன செய்கின்றோம் என தெரியாமல், எப்படி செய்வது என்று தெரியாமல் இருப்பது கொடுமை என்பதை நீங்கள் பார்த்தால் உணர்வீர்கள். தயவு செய்து இந்த வீடியோவை கண்டிப்பாக பாருங்கள்.... 


இதுபோல்தான் வந்தனாவும், வைஷ்ணவியும் எதிராஜ் காலேஜ் படிக்கும் போது, தங்கள் கல்லூரியில் ஒரு மனநிலை தவறிய பெண் அரைகுறை ஆடையுடன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருப்பதை பார்த்து, போராடி அந்த பெண்ணுக்கு ஆடை அனுவித்து ஒரு காப்பகத்தில் சேர்த்து விட்டனர். இரு வாரங்களுக்கு பிறகு அந்த பெண்ணை பார்க்க சென்ற போது, அந்த காப்பகத்தினர் அந்த பெண் ஓடி விட்டாள்  என்ற பதிலை அதிர்ச்சியுடன் எதிர் கொண்டனர். பிச்சைகாரர்கள், கை விடப்பட்ட பெரியவர்கள், குழந்தைகள் போன்றோரை காப்பாற்ற காப்பகங்கள் இருக்கின்றன, ஆனால் இது போன்ற மனநலம் சரியில்லாத பெண்களை காப்பாற்ற ஏன் ஒரு காப்பகமும் இல்லை என்ற கேள்விக்கு விடை காண முயன்றனர். அந்த நொடி அவர்கள் எண்ணத்தில் உதித்ததுதான் "தி பான்யன்" என்ற அமைப்பு. பெண் மனநோயாளிகளை இவர்கள் காப்பாற்றி அவர்களை சரி செய்து மீண்டும் வாழ்க்கை அளிகின்றனர். இவர்களின் அமைப்பை பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...The Banyanஅவர்களுக்கு இதில் பழக்கம் இல்லை, பணம் இல்லை, இவர்களுக்கு உதவ யாரும் இல்லை....ஆனால் அவர்களின் மன உறுதி இன்று அந்த அமைப்பை எல்லோரும் ஏற்றுகொள்ளும் படியாக வளர்த்திருக்கின்றனர். பல சினிமா நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் என்று பலர் மனமுவந்து உதவி புரிகின்றனர்.

இன்றும் அந்த இடத்தை நினைத்து பார்த்தால், அந்த அலறல் சத்தம் காதில் கேட்கும், அப்போதெல்லாம் இவர்களின் யாபகம் வரும். ஒரு நாள் இவர்களை நேரில் பார்த்து எனது சேவையையும், என்னால் ஆன உதவியையும் செய்ய வேண்டும்.

2 comments:

 1. அந்த உயர்ந்த உள்ளங்கள் நீடூழி வாழ
  ஆண்டவனைவேண்டிக் கொள்கிறேன்
  மனித நேயமிக்க பதிவு
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி சார்...வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை உண்டாக்கி கொண்டுள்ளனர் அவர்கள், கண்டிப்பாக அவர்கள் நீடூழி வாழ வேண்டும்

   Delete