எனது நண்பர் ஒருவருக்கும், கடைக்காரருக்கும் பொருள் வாங்கும்போது சண்டை வந்துவிட்டது. நான் அவர்களுக்கு மத்தியஸ்தம் செய்ய முயன்று கொண்டிருந்தேன். சண்டையின்போது எனது நண்பர் கடைகாரரிடம் "முதலில் மனுஷனை மனுஷனாக மதிக்க கற்றுக்கொள், பணம் இருந்தாலும் இல்லையென்றாலும் மரியாதை என்பது முக்கியம்....எல்லோரும் கடைசியில் ஆறடி இடம்தான்" என்றெல்லாம் சொல்லி கொண்டிருந்தார். ஒரு வழியாக சண்டை முடிந்து அவரை வீட்டில் விட்டு விட்டு நான் வீடு சென்றேன். ஒரு வாரம் கழித்து நானும் அவரும் வெளியில் சாப்பிட்டு விட்டு பார்கிங்கில் நின்று சிரித்து பேசி கொண்டிருந்தோம்...அப்போது ஒரு குஷ்டம் வந்த பிச்சைக்காரர் ஒருவர் எனது நண்பனிடம் பிச்சை கேட்டு கொண்டிருந்தார், நானும் அதை கவனித்து கொண்டிருந்தேன். சரி, அந்த ஆள் என்னிடம் கேட்கும்போது பிச்சை போடலாம் என்று நான் காத்து கொண்டிருந்தபோது, அவரின் கால் எங்களது பைக்கின் ஸ்டான்ட் பட்டு அவர் தடுமாறி எனது நண்பனின் தோளை பிடித்து விட்டார். நான் அந்த பிச்சைகாரரை உடனடியாக கையை பிடித்து ஸ்திரபடுத்தி கொண்டிருந்தபோது எனது நண்பர் அவரை திட்ட ஆரம்பித்து விட்டார்....இந்த பதிவில் எழுத முடியாத அளவுக்கு வார்த்தைகள், அதை கேட்கும் ஒருவர் ஒன்று தற்கொலை செய்து கொள்வார் அல்லது திட்டியவரை கொலை செய்வார் !!? ஆனால், ஒன்றும் செய்ய முடியாத அந்த பிச்சைக்காரர் கண்ணில் நீர் வர அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். நான் எனது கையை கழுவிகொண்டிருந்தபோது எனது நண்பரிடம் கிண்டலாக "என்னவோ போன வாரம் அந்த கடைகாரரிடம் சண்டை போட்ட போது மனுஷனுக்கு மனுஷன் மரியாதை குடுக்கணும், எல்லோருக்கும் ஆறடி இடம்தான் அப்படினெல்லாம் சொன்னீங்க....இப்போ அந்த ஆளு மனுஷனா உங்களுக்கு தெரியலையா ??" என்றேன், அதற்க்கு அவர் "அந்த பிச்சைகாரனா....அவனை எல்லாமா மனுஷனா மதிக்கணும்?" என்ற போது எனக்கு யாரை எல்லாம் இந்த உலகம் மனிதன் என்று மதிக்கிறது என்ற கேள்வி எழுந்தது.

மனிதனை மனிதனாக மதிப்பது என்றால் என்ன ? நாம் நமக்கு சமமாக, அவர்களுக்கும் உணர்சிகள் உண்டு என்று உணர்ந்து அவர்களின் உணர்வுகளை மதித்து, அவர்களுக்கு உதவி தேவை எனில் உதவி, வெறுத்து ஒதுக்காமல் அன்பு காட்டுவதுதான் மனிதனாக மதிப்பது இல்லையா ?! அப்படியென்றால் நாம் எல்லோரையும் மனிதனாக மதிக்கிறோமா ?
அடுத்த நாள் முழுவதும் நான் யாரை எல்லாம் எனக்கு சமமாக, அல்லது குறைவாகவாவது மதிக்கிறேன் என்று சோதித்து பார்த்தேன். நான் காரை எடுக்கும்போது பக்கத்து பிளாட் மனிதரிடம் இனிமையாக
பேசினேன், ஆனால் கேட்டில் இருந்த வாட்ச்மேனுக்கு புன்னகை கொஞ்சம்தான், சிக்னலில் இருந்த
பிச்சைகார பெண்ணுக்கு அது கூட இல்லை, அதே சிக்னலில் புத்தகம் விற்ற ஆளுக்கு பதிலாவது சொன்னேன், ஆபிஸ் வந்தவுடன் எல்லோருக்கும் எனது புன்னகையின் அளவு பெரிதானது, மதியம் சாப்பிட வெளியே சென்றபோது டேபிள் தொடைபவர் எனக்கு கண்ணுக்கு தெரியவில்லை, சர்வர் வந்தபோது கொஞ்சம் தெரிந்தார், அந்த ஹோட்டல் முதலாளிதான் முழுமையாக கண்ணுக்கு தெரிந்தார், மறுபடியும் மாலை காரில் வரும்போது முன் சென்ற பைக்காரர் மீது கோபம் வந்தது இப்படியாக ஒரு நாள் முழுவதும் ஒரு சக மனிதரை நான் எப்படி நடத்துகிறேன் என்று என்னையே
நான் சோதிக்க வேண்டி வந்தது.
அந்த நாளின் சோதனையின் முடிவில் நான் மனிதர்களை அவர்களின் உருவம், அந்தஸ்து, அதிகாரம், பணம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே முடிவு செய்கிறேன் என்று தோன்றியது. ஒரு முழுமையான மனிதர்களையே, படித்தவர்களாகிய நாம் இப்படி நடத்தும்போது சில விளிம்பு நிலை மனிதர்களை இந்த சமூகம் எப்படி எல்லாம் நடத்தும் என்று எண்ண தோன்றியது.
இந்த பூமியில் இருக்கும் எல்லா மனிதர்களுக்கும் உணர்ச்சிகள் ஒன்றுதானே ? ஏழையோ - பணக்காரனோ, இந்தியனோ - அமெரிக்காகாரனோ எல்லோருக்கும் பசி, கோவம், மோகம், தாகம், அழுகை, இரக்கம், பயம் என்று உணர்சிகள் எல்லாம் ஒன்றுதான், ஆனால் நாம் மனிதர்களை மனிதர்களாக பார்கவில்லை, அவர்களிடம் தெரியும் அல்லது நாம் உணர்வதை வைத்தே எடை போட்டு பேசுகிறோம். நம்மை பொறுத்தவரை மனிதன் என்பவன் செதுக்கிய சிற்பம் போல இல்லையா...எந்த குறையும் இருக்க கூடாது. யோசித்து பாருங்கள்...
கை இல்லாதவர், ஊமை, செவிடு, கால் இல்லாதவர், திருநங்கை, முகம் சிதைந்தவர்கள், வெள்ளை தேமல் உள்ளவர்கள், ஜெயிலுக்கு போய் திரும்பி வந்தவர், எய்ட்ஸ் நோயாளி, விபச்சாரி, மனநிலை தவறியவர், உடம்பில் கொப்புளங்கள் உள்ளவர்கள், முசுடு, அதிகம் உணர்ச்சிவசப்படும் மனிதர், படிக்காதவர்கள், கண் தெரியாதவர்கள், நடக்க முடியாமல் வீல் சேரில் வருபவர்கள், மறதி உடையவர்கள், நோயாளிகள் - கான்சர், டி.பி., ஆங்கிலம் அறியாதவர்கள், நகரத்தின் விதிகள் அறியாத கிராமத்து மக்கள், பணம் எண்ண தெரியாதவர்கள், பசி மயக்கத்தில் உள்ளவன் இவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா....இவர்களை எல்லாம் நாம் பழகும் மனிதர்களை விட கீழே நினைக்கிறோம், என்பதுதானே உண்மை. ஒரு திருந்திய சிறை கைதியை நாம் ஒரு சகமனிதனாக நினைத்து மனதில் எந்த குறுகுறுப்பும் இல்லாமல் நம்மால் பேச முடியுமா ?
அன்னை தெரசா அவர்களுக்கு எல்லோரும் மனிதர்களாக தெரிந்தார்கள், நான் எழுதும் தொடரான "நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள்" பதிவில் வரும் எல்லோரும் ஒரு சக மனிதனிடம் அன்பு பாராட்டுபவர்கள். ஒரு மனிதனை ஜாதி, மதம், அந்தஸ்து, பிறப்பு என்று எதையும் பாராமல், அவர்களின் உணர்சிகள் மட்டுமே பார்க்கும் அவர்கள் மனிதர்கள்.....ஆனால் நாம் ??


எனது வீட்டின் அருகே உள்ள ஒரு இடத்தில் நேற்று வண்டியை நிறுத்திவிட்டு கடையின் உள்ளே ஒரு பொருள் வாங்க சென்று இருந்தேன், அப்போது எனது வண்டியில் பையை மறந்து விட்டேன் என எடுக்க சென்ற போது ஒரு மனநிலை தவறிய நபர், மிகுந்த அழுக்காக, தலை பரட்டையுடன் என் வண்டியை தடவி கொண்டிருந்தார், எனக்கு வந்த கோவத்திற்கு கண்டபடி திட்டி விரட்டினேன். பையை உள்ளே கொண்டு போய் சாமானெல்லாம் வாங்கி வண்டிக்கு திரும்பியபோது எனது வண்டியை நோ பார்கிங்கில் நிறுத்தியதாக கூறி ஒரு போலீஸ்காரர் நின்று கொண்டு கத்தி கொண்டு இருந்தார், அந்த இடத்தில் ஒரு போர்டும் இல்லாமல் அவர் கத்தியபோது என்னால் அதை சொல்ல முடியவில்லை, எவ்வளவு கெஞ்சியும் எனது சாவியை எடுத்துக்கொண்டதால் 100 ரூபாய் கொடுத்து கடைசியில் எனது சாவியை வாங்க வேண்டி இருந்தது. வண்டியில் ஏறி அதை ஸ்டார்ட் செய்யும்போது என்னின் அருகில் வந்த அழுக்காக, வயிறு ஒட்டிய, கிழிந்த சட்டை போட்ட சிறுவன் ஒருவன் என்னின் கையை தட்டி "சார்...ரொம்ப பசிக்குது, ஏதாவது குடுங்க" என்று குரலில் அழுகையுடன் சொல்ல, என்னால் கோவத்தை அடக்க முடியாமல், தள்ளி போறியா இல்லையா, வந்துட்டானுங்க என்று சொல்லிவிட்டு எனது வண்டியை ஸ்டார்ட் செய்தேன், அது அவனை பாதித்திருக்கும் போல, உடனே அவன் "நானும் ஒரு மனுசந்தான் சார்...உங்களுக்கு இருக்கிற எல்லா உணர்ச்சியும் எனக்கும் இருக்கு, பசி உட்பட" என்று நகர....எதோ என்னின் மனதை பிசைய ஆரம்பித்தது, அவனும் மனிதன்தானே....
