Saturday, September 22, 2012

உலகமகாசுவை - மெக்ஸிகன் உணவுகள் (பாகம் - 1)

அமெரிக்காவிற்கு கீழே வால் போல நீண்டு இருக்கும் உலக வரைபடத்தில் இருக்கும் நாடுதான் மெக்ஸிகோ !! நம்ம "கந்தசாமி" படத்தில் விக்ரம் ஆடும் மாம்போ மாம்யா என்னும் பாடல் மெக்ஸிகோ நடனத்தை காட்டும். அந்த நாட்டின் உணவு வகைகளைத்தான் நாம் இப்போது பார்க்க போகிறோம் !






நம்ம ஊரில் எல்லாம் நீங்கள் சாப்பிட உட்கார்ந்தவுடன் ஸ்டார்ட்டர் என்று வடை, பக்கோடா என்று தருவார்கள் இல்லையா....அது போல இங்கே டோர்டில்லா (Tortilla) சிப்ஸ் உடன் சல்சா (நாக்கில் இப்போதே எனக்கு நீர் ஊருகிறது), இதில் சல்சா என்பது நமது ஊர் தக்காளி சட்னி போல......ஆனால் இதன் டேஸ்டே தனி. வீட்டில் நீங்கள் இருக்கும்போது நமது உருளைக்கிழங்கு சிப்சுக்கு ஒரு நல்ல சாய்ஸ் இந்த சல்சா. கீழே இருக்கும் படத்தில் சிகப்பாக இருகிறதே அதுதான் சல்சா !!

                            
இந்த சல்சாவை எப்படி செய்வது என்று நீங்கள் இந்த வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்...

                                     

இதை நீங்கள் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது நாக்கிற்கு ஏதாவது குடிக்க வேண்டுமே, அதற்க்கு மெக்ஸிகோவின் புகழ் பெற்ற ஒரு காக்டெயில் ட்ரின்க்தான் "மார்கரிட்டா (Margarita)". இது டகீலா என்னும் உயர் ரக மது மற்றும் லெமன் ஜூஸ் கொண்டு தயாரிக்கப்படும். எனக்கு மிகவும் பிடித்த பானம் இது !! இதை நீங்கள் சிறுக சிறுக பருகி கொண்டே அந்த டோர்ட்டில்லா சிப்ஸ் சாப்பிட்டால் அது ஒரு சொர்க்கம் ! இதுவரை நான் சொன்ன உணவு வகையின் பெயர் எதுவும் புரியவில்லை என்றாலும் சரி....ஆனால் இதற்க்கு பின்னே நான் சொல்ல போகும் எல்லாம் கெட்ட வார்த்தைகள் இல்லை, அதுவும் உணவுகளின் பெயர்கள்தான் என்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

                                      

 எங்கே நான் சொல்வதை எல்லாம் திருப்பி சொல்லுங்கள் பார்போம்.....பாஜிட்டா, சிமிச்சங்கா, பரிட்டோ, பிளாடோ.....என்ன வாய் சுளுக்கி கொண்டு விட்டதா ??!!! அப்போ இதை எல்லாம் சாப்பிடும்போது ??!! பயபடாதீர்கள், பெயர்தான் இப்படியே தவிர சுவை எல்லாம் அபாரம் ! நானும் எனது நண்பர் ராமும் சிங்கப்பூரில் பல முறை இந்த மெக்ஸிகன் உணவுகளை உண்டிருக்கிறோம், ஒவ்வொருமுறையும் எங்களை கவர்ந்தது இது.


                                

முதலில் நாம் இந்த பாஜிட்டா என்னும் உணவை பற்றி பார்ப்போம். இந்த உணவை பற்றி நாம் சுருக்க சொல்வதென்றால் நம்ம ஊர் சப்பாத்தியில் சில்லி சிக்கன் வைத்து சுருட்டி நீட்டினால் எப்படி இருக்குமோ அது போலவே இருக்கும்....என்ன நீங்கள்தான் இங்கு சுருட்ட வேண்டும் ! உங்களுக்கு முதலில் டோர்டில்லாவில் செய்யப்பட்ட சப்பாத்தி போன்ற ஒன்று ஒரு தட்டில் வைக்கபட்டிருக்கும், இன்னொரு தட்டில் உங்களுக்கு பிடித்த மாமிசம், வேக வைக்கப்பட்டு, தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் (மெக்ஸிகோ பச்சைமிளகாய் சார் !!) உடன் சல்சா, புதினா சட்னி போன்று ஒன்றுடன் இருக்கும். நீங்கள் இதை பார்த்தவுடன்
 ஒரு சப்பாத்தியை உங்கள் கைகளில் எடுத்து கொண்டு மேலே சொன்ன 
ஒவ்வொன்றையும்   எடுத்து அதில் வைக்க வேண்டும், பின்னர் ஒரு சுருட்டு சுருட்டி வாயில் வைத்து விழுங்க வேண்டும். நான் சொன்ன விதத்தில் வேண்டுமானால் தவறு இருக்கலாம்.....ஆனால் சுவையில் எந்த குறையும் இருக்காது என்பதற்கு நான் காரண்டி !



இந்த பாஜிட்டா என்பது சிக்கன், பீப், போர்க் மற்றும் ஷ்ரிம்ப் கறிகளில் கிடைக்கும் அதை எப்படி செய்வது என்பதை கீழே பார்ப்போம்.


இந்த வாரம் இதை பார்த்தே உங்களுக்கு வயிறு நிரம்பியிருக்கும், அடுத்த பாகத்தில் நாம் சிமிச்சங்கா, பரிட்டோ, பிளாடோ மற்றும் அவர்களின் டிசர்ட் வகைகளை பார்போம்.

No comments:

Post a Comment