Sunday, September 2, 2012

நமக்கு வயசாயிடுச்சுப்பா !!?

நீங்கள் எப்போது உங்களின் வயதை உணர்ந்து இருகிறீர்கள் ? நாம் எல்லோருமே இன்றும் நமக்கு 25 வயதுதான் என்ற எண்ணத்திலேயே இருக்கிறோம், இன்றும் ஒரு சறுக்கு மரம் பார்த்தால் கால் பர பரவென்று அதில் ஏற துடிக்கிறது, பஞ்சு மிட்டாய் சாப்பிட மனம் துடிக்கிறது, சாலையில் நீர் தேங்கி இருந்தால் சட்டென்று அதில் குதிக்க தோன்றுகிறது, மழை பொழுதில் மரத்தின் கிளை அசைத்து நீர் சிதறடிக்க தோன்றுகிறது....ஆனால் இதை நீங்கள் செய்யும் போது உங்கள் வயதை நீங்கள் உணர முடியாது, சரியாக சொன்னால் நமக்கு வயது என்பது நமக்கு சக்தி இருக்கும் வரை தெரியாது இல்லையா ? அப்படியானால் எந்த பொழுதில் நீங்கள் நமக்கு வயதாகிறது என்பதை உணர்ந்தீர்கள் !! நாம் பொறுப்பானவர்களாக வயதுக்கு ஏற்றபடி மாற வேண்டும் என்பதை உணர்ந்தீர்கள் ?நான் ஸ்கூல், காலேஜ் எல்லாம் முடித்துவிட்டு வேலைக்கு சென்ற பொழுது வரை எனக்கு வயதாகிறது என்ற எண்ணமே இல்லை. ஒரு விடுமுறையின் போது நான் என் பெற்றோரை அழைத்துக்கொண்டு ஊட்டி சென்றிருந்தேன், அப்போது சுற்றி பார்க்க அங்கே டூர் பஸ் எல்லாம் இருக்கும். அதில் இடம் இல்லாத போது எனது பெற்றோரை முன் சீட்டில் உட்கார வைத்துவிட்டு நான் கடைசி சீட்டில் உட்கார்ந்தபோது எனது அருகினில் இருந்த சிறுமி என்னிடம் "அங்கிள்....இங்கே சூரியன் FM வருமா ?" என்று கேட்டபோது எனக்கு தூக்கி வாரி போட்டது. அவளுக்கு பதில் சொல்லிவிட்டேனே ஒழிய எனக்கு அவள் என்னை எதை வைத்து அங்கிள் என்று கூப்பிட்டால் என்று மனது யோசிக்க ஆரம்பித்து விட்டது. அவள் அப்படி கூப்பிட காரணம் எனது தோற்றமா என்று யோசித்தேனே தவிர எனக்கு வயதாகிவிட்டது என்பதை ஜீரணிக்க முடியவில்லை.

பின்னர் நான் வேலை பார்க்கும் இடங்களில் ஏதாவது சிறிய தவறு நேரும்போதெல்லாம் "என்ன சார்...இவ்வளவு வயசாச்சு இன்னும் நீங்க இதை புரிஞ்சிகலையே ?" என்று கேட்கும் போது எல்லாம் நமக்கு வயதாகிறது என்று தோன்றும். ஒரு முறை என்னுடைய உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று இருந்தேன் அது ஒரு பள்ளியின் அருகில் இருந்த அவரது வீட்டில் நடைபெற்றது. எல்லோரும் சாப்பிட்டு முடித்த பின் நானும் எனது அத்தையும் பேசி கொண்டு இருந்தபோது, அவர் என்னிடம் "சின்ன வயசுல உன்னை நான் தூக்கிகிட்டு விளையாட்டு எல்லாம் காட்டுவேன் யாபகம் இருக்கா, அப்போ ஒரு சறுக்கு மரத்தில் இருந்து விழுந்து அடி பட்டிச்சே?" என கேட்க, நானும் என் அத்தையும் அருகில் இருந்த சறுக்கு மரம் பார்த்தோம், பின்னர் சிறு குழந்தையாக அதில் இருவரும் ஏறி சறுக்கினோம். அது ஒரு ஆசை...அவ்வளவுதான், ஆனால் அருகில் இருந்த என் அப்பா, மாமா எல்லாம் எங்களை திட்டி தீர்த்து விட்டனர். உடம்பில் வலு இருந்தது, பக்குவம் இருந்தது ஆனாலும் வயதை
காரணம் காட்டி  நமது ஆசைகள் எல்லாம் அடக்கி வைக்க வேண்டி இருக்கிறது.நான் ஒவ்வொரு முறை மருத்துவரிடமோ அல்லது படி / மலை ஏறுமிடங்களில் எனக்கு வயதாவதை உணர்ந்திருக்கிறேன். 18 வயதில் எத்தனை மாடி என்றாலும் சலிக்காமல் ஏறிய எனக்கு இன்று முதல் மாடி வரை ஏறும்போது மூச்சு இரைக்கிறது. நமக்கு வயதாகிறது எனும்போது மனதில் பயம் வருவதை தவிர்க்க முடியவில்லை, எதனால் இந்த பயம் என்று யோசித்திருகிரீர்களா ? அப்போது நாம் அதிக காலம் வாழ விரும்புகிறோமா என்ன ?


பல மாதங்களுக்கு முன்பு நான் ஈஸா யோகா மையம் பெங்களுருவில் நடத்திய பயிற்சி வகுப்புக்கு போய் இருந்தேன். அங்கு தினமும் யோகாவுடன் அவர்கள் மனதிற்கு இதமான தத்துவங்களும், நம்மிடம் கேள்வியை தோற்றுவிக்கும் வண்ணம் கதைகளும் இருக்கும்.
நீங்கள் சந்தோசமாக இருகிறீர்களா ? இல்லையா ?? அழகிய குடும்பம், நல்ல வீடு, பணம், பதவி, நீங்கள் நினைத்தவுடன் எங்கும் செல்லலாம், நல்ல அருமையான நண்பர்கள், ரம்மியமான இடங்களை கொண்ட பூமி, மது, மாது, சிரிப்பு, கும்மாளம் என்று ஒரு குதுகலமான வாழ்க்கை இல்லையா ?.
அப்போ,  எல்லாம் இருக்கு, சந்தோசமும் இருக்கா ? இந்த  வாழ்க்கையை நாம் நன்றாக வாழ ஒரு 200 வருடம் உங்களுக்கு கொடுக்கட்டுமா ? என்ன போதாதா....ஓஹோ வேண்டாமா. ஏன், நீங்கதான் இந்த வாழ்கையில சந்தோசமா இருக்கீங்களே. சரி ஒரு 100 வருஷம் ? என்ன,  வேண்டாமா ? சரி, 80....70....60 ?? என்ன சலிச்சிகிறீங்க ? 60 வயசு வரை வாழ கூட உங்களுக்கு சுமையா இருக்கா ?  கண்ணை மூடி நான் கேட்ட கேள்வியை திரும்பவும் கேட்டுகிட்டு, திரும்பவும் உங்களுக்கு 60 வயசு வரைதான் வரைதான் வாழ முடியும்னு நீங்க முடிவு செய்தா சொல்லுங்க. இந்த கேள்வியை பக்கத்தில் இருக்கும் உங்களின் மனைவி, நண்பன், அப்பா அல்லது அம்மாவிடம் கேளுங்கள்...அதன் ஆழம் தெரியும்.


ஏங்க...இந்த வாழ்க்கை சந்தோசமா  இருக்குதுன்னு இப்போதான் சொன்னீங்க, அப்புறமும் ஏன் இந்த சலிப்பு.  முதுமையை நினைச்சு கவலையா, இல்லை வேற ஏதாவதா ?? எதை பார்த்து இந்த பயம் ? இந்த கேள்வியை அவங்க கேட்டப்ப எனக்கும் அதிர்ச்சியாத்தான் இருந்தது, இந்த வாழ்கையை இன்று விரும்பி வாழும் நாம், ஏன் இந்த வாழ்கையை அதிக வருஷம் இருந்து வாழ நினைக்க மட்டேன்றோம் ? யோசித்து பாருங்கள்...உங்களுக்கே விடை தெரியும்.


எது சிறந்தது, நாம் நமக்கு வயதாவதை மனதில் இருத்தாமல், மனதளவில் இளமையாக இருக்கிறோம் என்ற உணர்வா அல்லது நமக்கு வயதாகிறது என்று மனதில் இருத்தி பொறுப்புடன் நடந்து கொள்வதா ?


8 comments:

 1. நல்ல பதிவு...எனக்கும் சில சமயம் தோன்றுகிறது நமக்கும் வயதாகிறதோ ....என்று

  ReplyDelete
  Replies
  1. நன்றி கோவை நேரம்...தங்களுக்கு வயதானாலும் தங்கள் பதிவுகளுக்கு என்றுமே இறப்பில்லை !!

   Delete
 2. வயதுக்கேற்ற பொறுப்புடன் மனத்தை இளமையாக வைத்துக்கொள்வது சிறந்தது

  ReplyDelete
  Replies
  1. மிக சரியாக சொன்னீர்கள் குட்டன் !! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !!

   Delete
 3. ஆழமான சிந்தனை
  சிந்தனையின் போக்கிலேயே நானு தொடர்ந்தது
  ஆற்றில் நீந்துவது போன்று சுகமாய் இருந்தது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரமணி சார் !! உங்களது புகைப்படத்தை வீடு திரும்பலில் பார்த்தேன், மகிழ்ந்தேன் !!

   Delete
 4. //நமக்கு வயதாகிறது என்று மனதில் இருத்தி பொறுப்புடன் நடந்து கொள்வதா ?//

  இதுதான் நல்லது

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார் !! தாங்கள் சொன்னது மிக சரி !! உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

   Delete