Monday, September 17, 2012

மறக்க முடியா பயணம் - லேக் மௌன்டைன் (ஆஸ்திரேலியா)

இந்த முறை நான் மெல்பெர்ன் நகரம் சென்று இருந்த போது நல்ல குளிர், அவர்களுக்கு அது ஒன்றுமே இல்லை.....ஆனால் நமக்கு நாடி ஒடுங்குகிறது ! நாங்கள் தங்கியிருந்த சவுத் கேட் பகுதியில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் இருந்த லேக் மௌன்டைன் ரிசார்ட் செல்லலாம் என்று யோசித்து வைத்தோம் ! அங்கு மட்டும் பனி பொழிவு இருக்கிறது என்பதால் நாம் ஸ்கியிங் செல்லலாம் என்று ஆசை !


ஒரு ஞாயிறு அன்று காலையில் கிளம்பினோம், வழியெல்லாம் ஆஸ்திரேலியா பசுமை, பசுமை, பசுமை மட்டுமே. நாங்கள் யாரா வெளி வைன் தோட்டங்கள் நிறைந்த வழியாக சென்றதால் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. வழியெல்லாம் பசுமை, பிறகு மலையில் ஏற ஆரம்பித்தவுடன் இரு பக்கங்களும் மரங்கள் எங்களை வழி நடத்தின. வழியில் ஒரு இடத்தில் நிறுத்தி நாங்கள் எங்களுக்கு தேவையான ஸ்நொவ் உபகரணங்கள் வாடகைக்கு வாங்கினோம். சுமார் 100 டாலர் ஆனது !

                       

பின்னர் நாங்கள் தொடர்ந்த பயணத்தில் ஒரு இடத்திற்கு மேல் வழியில் பனி தெரிய ஆரம்பித்தது ! சாலையில் இரு இடங்களிலும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனி படர்ந்து இருந்தது ஒரு கண் கொள்ளா காட்சி ! சில்லென்று காற்று முகத்தில் மோத நான் எனது ipod-இல் இருந்த பாரதியின் "வெள்ளி பனி மலை மீதுலவுவோம்...", ரோஜாவின் "காதல் ரோஜாவே..." என்று பாடல்கள் கேட்டபோது புலன்கள் எல்லாம் மலர்ந்தது !

பயணத்தின் முடிவில் நாங்கள் "லேக் மௌன்டைன் அல்பைன் ரிசார்ட்" வந்து அடைந்தோம். பனியை பார்த்தவுடன் குழந்தைகளாக மாறி ஒருவர் மேல் ஒருவர் பனியால் அடித்து கொண்டு விளையாடினோம் ! கண் முன் ஒரு பனிமலை....எங்கும் வெள்ளை வெளேரென்று ! நமது சினிமாக்களில் எல்லாம் எப்படித்தான் ஹீரோயின் எல்லாம் குறைந்த உடைகளில் ஆடுகின்றனரோ.....நாங்கள் க்லோவேசில் இருந்து கையை எடுத்தாலே கை விறைத்து விடுகிறது !!
ஸ்கியிங் செல்லலாம் என்றால் அதற்க்கு நீங்கள் சில பயிற்சிகள் செய்ய வேண்டும், அது மட்டும் இல்லாமல் நீங்கள் கீழே விழுந்தால் இடுப்பு எலும்பு அடிபடும் என்றெல்லாம் எங்களுக்கு சொல்லப்பட்டதால் நாங்கள் டபோகன் எனப்படும் சறுக்கி விளையாடும் பலகையை மட்டும் எடுத்து கொண்டோம் ! பனியின் மீது அந்த பலகையை போட்டு நீங்கள் அதில் உட்கார்ந்த வண்ணம் சறுக்கி விளையாடலாம் ! அதை விளையாடுவது சுலபம்....ஆனால் நீங்கள் சருக்குவதர்க்கு ஒவ்வொரு முறையும் அதை தூக்கி கொண்டு மேலே செல்ல வேண்டும், இரு முறை செய்தால் போதும், பனியில் மேடேருவதில் வாயில் நுரை தள்ளும்.
மேலே பாருங்கள், ஏதோ சந்திர மண்டலத்தில் காலெடுத்து வைத்ததுபோல 
நானும் எனது நண்பர் கார்த்தியும் போஸ் கொடுப்பதை .....நீங்கள் ஒரு மாற்றம் விரும்பினால் இங்கு செல்லலாம். வழியெங்கும் பசுமை, முடிவில் பனி என்று ஒரு வித்யாசமான அனுபவமாக இருக்கும்.

டிப்ஸ் :

பயணம் - அருமையான ரோடு, பசுமை இருபுறம், முடிவில் பனி என்று உங்கள் பயணம் இனிமையாக இருக்கும்.

பணம்     - போவதற்கு பெட்ரோல், டோல் கட்டணங்கள், ஸ்நொவ் உபகரணங்கள் வாடகைக்கு, சாப்பிட என்று ஒரு ஆளுக்கு சுமார் 150 டாலர் வரை ஆகும், இதில் நீங்கள் டூர் பஸ் மூலம் சென்றால் சுமார் 300 டாலர் வரை ஆகும் !

சாப்பாடு - வழியெங்கும் உணவகங்கள் இருக்கின்றன, அங்கு சென்று ஏதாவது வாங்கி கொள்ளலாம் என்று மட்டும் நினைக்க வேண்டாம், கூட்டம் அதிகமாக இருக்கிறது.

காலம் - ஸ்நொவ் சீசன் செப்டம்பர், அக்டோபரில். அவர்களது வெப்சைட் பார்த்து விட்டு செல்லுங்கள், இல்லையென்றால் ஏமாற்றமே மிஞ்சும்.

பஞ்ச் - வழியில் திராட்சை தோட்டத்தில் வைன் எடுக்கும் இடங்கள் நிறைய இருக்கின்றன, காலையில் சீக்கிரம் கிளம்பினால் நீங்கள் இங்கே சிறிது நேரம் செலவிடலாம்.

2 comments:

 1. மெல்போர்ன்...நமக்கு காத தூரம்...ஆமா டாலர் டாலர் அப்படின்னு சொல்றீங்க அது என்ன?
  பயணம் அருமை...வெளிநாட்டுக்கு எல்லாம் போக முடியல..ஏதோ உங்க பதிவ படிச்சு ஆறுதல் அடைந்து கொள்கிறேன்....

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜீவா !! டாலர் என்பது அந்த நாட்டின் பணத்தின் பெயர், ஆஸ்திரேலியாவில் டாலர் என்கிறார்கள். கண்டிப்பாக நீங்களும் செல்லத்தான் போகிறீர்கள் பாருங்கள் !!

   Delete