Wednesday, September 19, 2012

நம்புங்க சார்......நான்தான் கடவுள் வந்திருக்கேன் !!

சமீபத்தில் திண்டுகல்லில் இருந்து திருச்சி நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தபோது வழியில் இருந்த ஒரு இடத்தில் டீ சாப்பிட நிற்க வேண்டி இருந்தது. அது ஒரு சிறிய கிராமம், ஆனால் இந்த ஹைவே வந்ததால் நிறைய மனிதர்கள் இருந்தார்கள். அப்போது ஒரு மனநிலை தவறியவர், அழுக்கு உடையுடன், தலையெல்லாம் சிக்குடன், பல நாட்கள் குளிக்காத தோற்றத்துடன் அங்கு இருந்த எல்லோரிடமும் "நான்தான் கடவுள், எனக்கு ஒரு டீ வாங்கி குடு" என்று சொல்லி கொண்டிருந்தார். அவருக்கு பணம் அல்லது பிஸ்கட் கொடுத்து உதவியர்களுக்கு கை உயர்த்தி ஆசிர்வதித்தார், அவரை துரத்தியவரை முறைத்து பார்த்தார். என்னிடம் வந்தபோது அவருக்கு நான் பணம் கொடுத்தேன், அவர் என்னிடம் "கடவுளுக்கு உதவி செய்திருக்கே....நல்லா இருப்ப" என்று என்னை தொட முயற்சித்தார், நான் பதறி விலகி போ போ என்று சத்தமிட்டேன். எல்லோரும் அவரை திட்ட, டீ கடைகாரர் தண்ணீரை அவர் மேல் ஊற்றினார், ஒருவர் மரத்திலிருந்து ஒரு குச்சியை உடைத்து அந்த மனிதரின் முதுகில் சுளீரென்று அடித்தார்.......அந்த கடவுள் அழுது கொண்டே அங்கிருந்து நகர்ந்தார் !
நாங்கள் மீண்டும் எங்களின் பயணத்தை தொடர்ந்தபோது, நான் விளையாட்டாக எனது தந்தையிடம் "அப்பா, அந்த ஆள் உண்மையாகவே கடவுளாக இருந்திருந்தால், அதை எப்படி எல்லோரையும் நம்ப வைத்திருக்க முடியும், என்ன செய்திருந்தால் எல்லோரும் அவரை கடவுள் என்று நம்பி இருப்பார்கள் ?" என்று கேட்டேன்....நாங்கள் விளையாட்டாக பேச ஆரம்பித்தோம், ஆனால் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.


ஒரு கடவுள் உங்கள் முன் வந்தால் எப்படி அவர் கடவுள் என நம்புவீர்கள் ? நீங்கள் மட்டும் நம்புவது இல்லை....எல்லோரும் நம்பும்படியாக !! இதை கேள்வி பதில் வடிவில் பாப்போம்...

**********************************************************************************
அவர் நம்மிடம் வந்து "நான்தான் கடவுள்..." என்று சொன்னால் போதும், நான் நம்புவேன் ?!

அப்ப, நான் இப்போ சொல்றேன்...."நான்தான் கடவுள்...", இனிமேல் என்னை மட்டுமே நீ கும்பிட்டால் போதும். உனது பூஜை அறையில் இனிமேல் என் படம் மட்டும் இருந்தால் போதும், மற்றவற்றை எடுத்து விடு.....அப்படின்னு சொல்றேன் செய்வீங்களா ??

***********************************************************************************
அவர் நம் முன்னாடி வந்து கையை அப்படி, இப்படி ஆட்டும்போது அவர் கையிலிருந்து விபூதி வரணும், வாயில் இருந்து லிங்கம் எடுக்கணும், அப்பத்தான் அவர் கடவுள் !

அட இதை எல்லாம் நம்ம மேஜிக் செய்பவர்...ஜாதுகர் ஆனந்த் செய்வார் இல்லையா, அப்போ அவர்தான் கடவுள் இல்லையா ? நம்ம பிரேமானந்தா இதை எல்லாம் செய்தார்....அவர் கடைசியில் ஜெயிலில் அல்லவா இருந்தார்.

***********************************************************************************
அவர் நம் முன் வரும்போது நமக்கு ஒரு பரவச நிலை தோன்றும், அப்போது நாமே உணரலாம் அவர்தான் கடவுள் என்று !

அட, அப்ப நம்ம ஹிப்பிகள், சில ஹிப்னாடிச டாக்டர்கள் எல்லாம் இதை செய்ய முடியுமே. ஏன், இந்த நித்தியானந்தா கூட அவரின் சிஷ்யர்களை எல்லாம் உப் என்று ஊதி அவர்களை போதையில் ஆடுவது போல ஆட வைக்கிறார், அப்போது அவர் கடவுளா என்ன ?

***********************************************************************************
கடவுள் நமது முன்னே தோன்றும்போது இந்த பூமியில் ஒரு வசந்தம் வந்தது போல இருக்கும், மனதிற்கு நிம்மதி வரும்...!

இதை நீங்கள் எந்த மலை பிரதேசம் சென்றாலும் உணரலாமே, பச்சை பசேல் என சில்லென்ற காற்று வீசும், மனதிற்கு நிம்மதி தரும், அப்போது ஒருவர் உங்கள் எதிரில் வந்தால் அவர்தான் கடவுளா ?

***********************************************************************************
நான் அவரிடம் எனக்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்பேன், அவர் உடனடியாக கொடுத்தால் அவர்தான் கடவுள் !

அது சரி, அப்போது எந்த பணக்காரரும் உங்களுக்கு கடவுள்தான். ஒரு பணக்காரர், உங்களுக்கு பணம் கொடுத்தால் அவர்தான் உங்களுக்கு கடவுள்....எல்லோருக்குமா ?

***********************************************************************************
அவருக்கு பின்னே ஒரு ஒளி வட்டம் தோன்றும், அந்த இடமே பிரகாசமாக இருக்கும் !

அட, நல்ல நாலு குண்டு பல்பு தலைக்கு பின்னே வைச்சா போச்சு, இல்லேன்னா பின்னால் இருட்டில் ஒளிரும் ஒரு பெயிண்ட் பூசிகிட்டா இரவில் ஒளிரும், அப்போ அவர்தான் கடவுளா என்ன ?

***********************************************************************************
அவர் வானத்தில் பறந்து வருவார், மிதப்பார், தண்ணீரில் நடப்பார்...!

அப்ப பறக்கும் பறவைகள், மிதக்கும் மிருகங்கள் எல்லாமே கடவுள்தானே, கடவுள் மனித ரூபத்தில் மட்டுமேதான் இருப்பாரா என்ன ? அப்போது நாளையிலிருந்து பறக்கும் பறவையை நீங்கள் சாபிடாதீர்கள் என்ன ?

***********************************************************************************
அவர் தேவ மொழி பேசுவார், அது மனிதர்களுக்கு புரியாது...அப்போ அவர் கடவுள் என்று உணர்வேன் !

நமக்கு எல்லாம் சீன, இலத்தீன், ஏன் ஹிந்தி மொழியே புரியாத மொழிதான், அப்போ அதை ஒருவர் பேசினால் அவர்தான் கடவுளா ?

***********************************************************************************
அவர் கட்டுடலுடன், முகம் அழகாக இருப்பார்....அவரை பார்த்தவுடன் எல்லோருக்கும் பிடிக்கும்.


நமது ஊரில் ஆணழகன் என்று உடல் முறுக்கி சிலர் இருப்பார்கள், ஏன் இந்த உலகிலேயே ஆணழகன் என்று போட்டியில் தேர்தெடுக்கப்பட்ட சிலர் இருகின்றனர். உடம்பெல்லாம் இரும்பு போன்று, அப்போது அவர் கடவுளா ? அல்லது உலக அழகியா ?

***********************************************************************************
கடவுளுக்கு நான்கு கைகள் இருக்கும், ஒவ்வொரு கையிலும் ஒரு ஆயுதம் இருக்கும் !


உலகில் சில குழந்தைகள் இப்படி நான்கு கைகளுடன், நான்கு கால்களுடன், ஒட்டி பிறக்கின்றன, அவைகள் யாவும் கடவுள்கள் இல்லையா....நாம் அதை பரிதாபத்துடன் பார்க்கிறோமா இல்லை கடவுளாகவா ?

***********************************************************************************
அவர் கழுத்தில் காதில் தங்கம், வைரம் என்று நகைகள் அணிந்து இருப்பார்......!

அவர் அதை நமது கல்யாண் ஜெவேல்லேர்ஸ் கடையில் இருந்து செய்கூலி எல்லாம் கொடுத்து வாங்கி இருப்பார் போலும்...அப்படியென்றால் இந்தியாவில் நிறைய கடவுள்கள் இருகிறார்கள், இப்போது ரௌடிகள் எல்லாம் நிறைய நகை போட்டுதான் அலைகிறார்கள் !!

***********************************************************************************
அவர் நாம் எப்படி படத்தில், கோவிலில் பார்கிறோமோ அதே போல் இருப்பார். அதாவது கிருஷ்ணன் காலெண்டரில் உள்ளது போல்...!
சில நேரங்களில் கடவுள் வேடம் அணிந்து பிச்சை எடுபவர்களை
பார்த்து  இருகிறீர்களா ? ....அவர்கள்தான் கடவுளா, அப்படியென்றால் ஏன் நீங்கள் அவர்களுக்கு பிச்சை போடுவதில்லை ?

***********************************************************************************


மேலே நீங்கள் அந்த கேள்விகளையும், பதில்களையும் முழுமையாக உணர்ந்தீர்கள் என்றால், நாம் கடவுளை இன்றும் ஒரு மாயாவியாக, மேஜிக் நிபுணராக மட்டுமே உணர்ந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. இன்று, இப்பொழுது, இந்த நொடி கடவுள் நமக்கு எதிரில் வந்தாலும் நாம்
அவரை நம்ப மாட்டோம், அவர்தான் நம்மை நம்ப வைக்க சிரமப்பட
வேண்டும் ! இது உங்களுக்கு அதிர்ச்சியாக இல்லை ??! நாம் கோவிலில் சென்று மணிகணக்காக கடவுளை வேண்டுகிறோம்....ஆனால் கடவுள்
நேரில் வந்தால் அதை உணர முடியுமா ?


இந்த காணொளியை பாருங்கள், கடவுள் என்பதின் அர்த்தம் புரியும்....என்னை கவர்ந்த விளக்கம் இது !


என் மனதில் அமைதி தேவை எனும்போது எல்லாம் நான் இந்த பாடலை கேட்பேன், இன்று இந்த பதிவை எழுதி முடித்தவுடன் மனதுக்கு ஒரு நிம்மதி கிடைகிறது, குழப்பம் தெளிவடைந்தது போல.....நீங்களும் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் !

11 comments:

 1. Dear Sir,

  As my birthday today, i really read wonderful article from you about god.

  Thank you.

  ReplyDelete
  Replies
  1. ராஜ், பிறந்தநாள் வாழ்த்துக்கள் !! தமாதத்திற்கு மன்னிக்கவும்....நெடு நாட்களாக பதில் தர இயலவில்லை. உங்களது தொலைபேசி எண்ணோ அல்லது மெயில் முகவரியோ ஷேர் செய்திருந்தால் உங்களை தொடர்ப்பு கொண்டிருப்பேன்.
   தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

   Delete
 2. ஆழமான தீவிரமான தேடல்...

  சிந்திக்கத்தக்க வாதங்கள்...

  அருமை அன்பரே..

  மிகவும் இரசித்தேன்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே ! தங்களது வார்த்தைகள் என்னை உற்சாகமூட்டுகின்றன....வருகைக்கு நன்றி !

   Delete
 3. நல்ல ஆராய்ச்சி...சீக்கிரம் மொட்டையாக வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி இளையதாசன் !! தங்களது கருத்திற்கும், வருகைக்கும் நன்றி !

   Delete
 4. Sir, If a person sincerely attempts meditation or prayers for a long time, with high order of discipline, definitely God will appear before him. But the thing is, we really do not want him as we need things like, money/Power/women etc. 'Kadavul Thantha' Song is melody and I got relieved after hearing that. Tears rolled on my cheeks. Thanks and Thanks.

  ReplyDelete
  Replies
  1. வெல் செட் முருகானந்தம் ! நீங்கள் இந்த பதிவை எந்த அளவு விரும்பி படித்து உள்ளீர்கள் என்று இதன் மூலம் தெரிகிறது !

   Delete
  2. Thanks Suresh. Please continue good articles like this. There is more & more to publish like this, which benefits readers.

   Delete
 5. Nice thought & lively scenarios. But, you shouldn't have missed a lifetime opportunity of shaking hands

  With thanks,
  Ram, s'pore

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராம் !! கை குலுக்குவதற்கு நான் தயார்....ஆனால் அவர்தான் கடவுள் என்பதை எப்படி உணர்வது ? தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ராம் !

   Delete