Thursday, September 27, 2012

புதிய பகுதி - உலக திருவிழா !!

பண்டிகைகள் அல்லது திருவிழாக்கள் என்றாலே மனம் எல்லாம் குதுக்களிக்கும் ! சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா அன்று பிள்ளையார் வாங்க வெளியில் சென்றபோது ஆச்சர்யமாக இருந்தது, இவ்வளவு மக்களும் எங்கு இருந்தார்கள் இதுவரை ? ஒவ்வொருவரும் மண் பிள்ளையாரை பலகையில் வைத்து கடந்து செல்லும்போதும் அதில் தெரிந்த உற்சாகம், இதுவரை அழுக்கு நைட்டியில் வலம் வந்த பெண்கள் எல்லாம் குளித்து முடித்து, பூ வைத்து இருந்தனர். பக்கத்துக்கு வீட்டில் நான் எப்போதும் முண்டா பனியனோடும், அல்லது ஷார்ட்ஸ் போட்டு பார்த்த நண்பர்கள் எல்லாம் அன்று காலையிலேயே வேஷ்டியில் பார்த்தது இன்னும் ஆச்சரியம் !!






இது போல பண்டிகைகள்தான் நம்மை உற்சாகமாக வைக்கிறது இல்லையா ? இந்தியாவில் நிறைய பண்டிகைகள் இருந்தாலும், எல்லோரும் கொண்டாடுவது என்று தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஹோலி என்று சில இருக்கின்றன. ஆனால், இதுவரை இது போல பண்டிகைகள் அல்லது திருவிழாக்கள் வெளிநாடுகளில் என்ன என்ன என்று யோசித்து இருக்கிறீர்களா ? அமெரிக்காவில் ஹல்லோவீன் என்னும் ஒரு திருவிழா உண்டு, அன்று குடும்பத்தில் எல்லோரும் கூடி புது விதமான, சிரிக்க வைக்கும்படியாக உடை அணிந்து எல்லோரது வீட்டுக்கும் சென்று வருவார்கள், பிரேசிலில் நடக்கும் கார்னிவல், தைவானில் நடக்கும் பின்க்சி விளக்கு திருவிழா, இத்தாலியின்
ஆரஞ்சு திருவிழா,  தாய்லாந்தில் சொங்க்ரன் தண்ணீர் திருவிழா என்று உலகில் அதிசய திருவிழாக்கள் நிறைய இருக்கின்றன.




ஒரு நாள் நானும், என்னுடன் கூட வேலை செய்யும் நண்பருடன் ஜப்பானில் இருந்தோம், அங்கு மே மாதத்தில் எங்களுடன் கூட வேலை செய்த ஜப்பானியர்கள் முகத்தில் ஒரு சந்தோசத்தை காண முடிந்தது, என்னவென்று விசாரித்தபோது அவர்கள் சகுரா வருகிறது என்றனர். நாங்கள் அவர்கள் ஏதோ ஒரு ஆளை பற்றி சொல்கிறார்கள் என்று நினைத்தோம், ஆனால் அவர்கள் எங்களை க்யோடோ அழைத்து சென்றபோதுதான் தெரிந்தது அப்படி ஒரு அருமையான செர்ரி மரங்கள் பூத்து குலுங்கும் நாள் என்று. அதை அவர்கள் சகுரா என்று கொண்டாடுகின்றனர். வார்த்தையில் விவரிக்க முடியாத ஒரு அருமையான திருவிழா அது....இது போல நிறைய பண்டிகைகளை உங்களுடன், அது கொண்டாப்படும் தகவல்களுடன், உற்சாகத்துடன் உங்களுடன் பகிரலாம் என்று இருக்கிறேன், வழக்கம் போல உங்களது கருத்துகளையும், மெருகேற்ற என்ன செய்யலாம் என்றும் தெரிவியுங்களேன் !



முடிவாக எனக்கு பிடித்த "ஜிந்தகி நா மிலேகா துபாரா" என்னும் படத்தில் வரும் இந்த பாடலை பாருங்கள், இது "லா டோமடினா" என்று ஸ்பெயினில் நடைபெறும் ஒரு திருவிழா, அங்கு எடுத்த இந்த பாடலை பாருங்கள்....இந்த பண்டிகையின் உற்சாகம் புரியும்.


2 comments:

  1. Replies
    1. மிக்க நன்றி ஜீவா...நீங்கள் இந்த பகுதியை நிச்சயம் ரசிப்பீர்கள் !

      Delete