Saturday, September 8, 2012

கனவுகள் மெய்பட வேண்டும்...

நான் கல்லூரியில் படிக்கும் போது எனக்கு செல்வம் என்ற ஒரு நண்பன் ஒருவன் இருந்தான். வைரமுத்து போல கவிதை என்பது அவனுக்கு சுவாசம், அவன் வாயை திறந்தால் கவிதை அருவி போல் கொட்டும். கவிதை போட்டியில் பல பல பரிசுகள் வென்றிருக்கிறான். எதேச்சையாக அவனது போன் நம்பர் கிடைத்தது, மிகுந்த உற்சாகமாக அவனை தொடர்பு கொண்டு இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கிற என்றபோது விற்பனை பொது மேலாளராக இருக்கிறேன் என்றான், ஒரு நிமிடம் அதிர்ந்து அப்போ கவிதை எல்லாம் என்றேன்....அட நீ சொல்றப்பதான் எனக்கு கவிதை எழுத தெரியும் அப்படின்னே யாபகம் வருது என்று அந்த பக்கம் சிரித்தவனை, நான் இந்த பக்கமிருந்து வெறிக்க தொடங்கினேன்.


இன்று நாம் எல்லோரும் ஒரு ஓட்டபந்தயத்தில் ஓடி கொண்டு இருக்கிறோம், இலக்கு என்பது எல்லாம் இல்லை ஆனால் நமது குறிக்கோள் என்பது நமது பக்கத்தில் ஓடி கொண்டு இருக்கும் ஆளை விட நாம் ஒரு படி முன்னே ஓட வேண்டும் என்பது மட்டும்தான். நினைத்து பாருங்கள்....உங்களது கனவு அல்லது லட்சியம் என்பது என்ன ? படிக்கும்போது நான் பில் கேட்ஸ் ஆவேன் என்று இருந்த ஆர்வம் இன்று என்னவானது என்று யோசித்தீர்களா ?  சரி நாம் பாதை மாறி சென்று இருந்தாலும் இன்று நமது இலக்கு என்பது என்ன ? நமது சந்தோசம் என்பது இலக்கை அடைவது இல்லை, இலக்கை அடையும்போதே சந்தோசமாக இருப்பது என்பது  சிலருக்கு புரியவில்லை இல்லையா ?


சிறு வயதில் "நீ என்னவாக போற ?" என்று கேட்டபோது, எங்க அப்பா போல இஞ்சினீரு ஆக போறேன்னு சொல்லுவேன், அப்புறம் கொஞ்சம் வயசு ஆன பின்னாடி இதே கேள்வி வந்தப்ப "நான் ஏரோப்லேன் ஓட்ட போறேன்..!!"அப்படின்னு சொன்னேன். அதே பத்தாம் வகுப்பு படிக்கும் போது  நான் ஏரோநாட்டிகல் இஞ்சினியரு ஆகா போறேன்னு சொன்னேன். எடுத்த மார்க்குக்கு நான் டாக்டர் கூட ஆகலாம்னு என் அப்பா என்னைய பயாலாஜி குரூப் சேர்த்து விட்டப்ப, ஓஹோ நாம டாக்டர் ஆகணுமின்னு நினைச்சேன். அதே பன்னிரெண்டாவது மார்க் வந்தப்ப நான் எடுத்த மார்க்குக்கு கடைசியில கலை அறிவியல் கல்லுரியில்தான் எடம் கிடைச்சது. சரி நாம சயன்டிஸ்ட் ஆயிடலாம்னு நினைச்சேன். இப்படி நான் நினைச்சிகிட்டே இருந்தேன்.....ஆனா ஒரு நாள் நான் நின்னு நிதானிச்சு "நான் வாழ்கையில என்னவாக போறேன் ?" அப்படின்னு என்னையே கேட்டேன், அதற்க்கு விடையே இல்லை.

எல்லோருக்கும் நிறைய பணம், வீடு, கார், நிலம், அன்பான மனைவி, அழகான குழந்தைகள், அமைதியான வாழ்க்கை, வெளிநாட்டு பயணம் என்று ஓடிகொண்டிருக்கிறோம். இதில் ஒன்று இருந்து இன்னொன்று இல்லையென்றால் நமக்கு நிம்மதி இருக்காது....அல்லது அடுத்தவருக்கு அது அதிகம் இருந்தால் நமக்கு இங்கே உறக்கம் இருக்காது. இதை மீறி நாம் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் தேவை என்று என்றும் உணர்வதில்லை, நாம் என்னவாக ஆசைபடுகிறோம் என்று உணர்ந்தது இல்லை. சரி, நாம் வாழ்கையில் பெரிய அளவில் கனவுகள் எல்லாம் வைத்திருக்க வேண்டாம்....சிறிய அளவில் நாம் மரணிக்கும் முன் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு ஆசை ?? அது விமான பயணமாக இருக்கலாம், அண்டார்டிகா செல்லும் ஆசையாக இருக்கலாம் அல்லது ரஜினியை சந்திப்பதாக கூட இருக்கலாம், அப்படி எதாவது ஒன்று உங்களுக்கு உண்டா ? இந்த உலக புகழ் பெற்ற பேச்சை பாருங்கள், இவரது பெயர் ராண்டி பஸ்ச், இவர் இன்று நம்மிடம் இல்லை ஆனால் "சிறுவயது கனவுகள்" என்ற தலைபிலாற்றிய இவரது பேச்சு இன்றளவிலும் யூடுபில் புகழ் பெற்றது.


இதை எழுதி முடித்தவுடன் என் தந்தையிடம் சென்று "அப்பா...உங்க வாழ்கையில நீங்க ரொம்ப ஆசையா ஏதாவது வேணும்னு அல்லது போகணுமின்னு அல்லது செய்யனுமின்னு நினைச்சது ஏதாவது இருக்கா ? அதை நான் நிறைவேற்றி வைக்கிறேன்..." அப்படின்னு சொன்னேன், அவர் அதற்க்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லைடா என்று சட்டென்று முற்றுபுள்ளி வைத்து விட்டார். பாரதி சொன்னது போல "கஞ்சி குடிபதர்க் கிலார் - அதன் காரணங்கள் இவையென்று அறிவுமிலார்" என்பது போல் நாம் எல்லோரும் கனவு என்று ஒன்றும் இல்லை, அது போல் ஒன்று வேண்டும் என்று அறியவுமில்லை.


நானும் எனது மனைவியும் மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு மாலை பொழுதில் மேலே சொன்ன அத்தனையும் விவாதித்து தனி தனியே ஒரு பட்டியல் தயாரித்தோம், அதில் நமது ஆசைகள் என்ன என்று ஒவ்வொன்றாக எழுதினோம். கேலி பேசாமல் அத்தனையையும் எழுதினோம்...உதாரணமாக "மாட்டுவண்டியில் பயணம் செய்ய வேண்டும்", இது போல கிட்டத்தட்ட ஆளுக்கு அம்பது ஆசைகள் !! எப்போதெல்லாம் எங்களுக்கு மனம் சோர்வடைகிறதோ, நேரம் அமைகிறதோ அப்போது யோசிக்காமல் சட்டென்று அதை நிறைவேற்ற முனைவோம். ஒரு கனவு நிறைவேறும்போது கிடைக்கும் சந்தோசம் போல் வேறு இல்லை இல்லையா ?!

4 comments:

 1. ரொம்ப அனுபவிச்சுப் படிச்சேன்....நல்லா எழுதுறீங்க... பாஸ்...!!!!!

  கீப் இட் அப்...!

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி தேவா !! இந்த வார்த்தைகளுக்காகவே நிறைய எழுதனுமின்னு தோணுது !

   Delete
 2. Great da..
  Good to see u that atleast you are still continuing what you did in college.
  Continue writing..., and do you still draw cartoons?

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் மாப்ள !! கார்ட்டூன் எல்லாம் இப்போது வரைவது இல்லைடா.....எங்க டைம் இருக்குது சொல்லு ! உன்னோட கருதிட்க்கு ரொம்ப நன்றி !!

   Delete