கடல் என்பது ஒரு ஆச்சர்யம், அதை பார்த்து கொண்டே இருந்தால் போதும்
என்று நினைப்பவன் நான். எனக்கு தொடர் வேலை சுமை இருந்த சமயம், ஒரு வாரம் லீவ் கிடைத்தது. அப்போது எனது மனதை திருப்ப,
திடீரென்று நானும் எனது மனைவியும் எங்கேயாவது செல்ல வேண்டும் என்று முடிவு செய்து, அதுவும் கடல் பார்த்த பீச் ரிசார்ட் போன்று இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். கோவா, பாண்டிச்சேரி என்று எங்கெல்லாமோ செல்ல முயன்று, கடைசியில் சென்னையில் உள்ள எதாவது ஒரு நல்ல பீச் ரிசார்ட் செல்லலாம் என்று முடிவானது. மூன்று நாட்கள் அப்படியே கடல் பார்த்து நமக்கு எது பிடிக்கிறதோ அதை செய்யலாம் என்பது எங்களது எண்ணம். எங்களுக்கு பிடித்த பாடல், புத்தகம், சென்னையில் சந்திக்க விரும்பும் மனிதர்கள், போக விரும்பும் இடங்கள் என்று பட்டியல் தயாராக ஆரம்பித்தது.
நாங்கள் பெங்களுருவில் இருந்து சென்னையின் சென்ட்ரல் ரயில் நிலையம் இறங்கியவுடன் MGM பீச் ரிசார்ட் செல்ல டாக்ஸி புக் செய்ய வேண்டும் என்றால் எங்களது சொத்தையே எழுதி கேட்டனர். அதனால், பஸ் பிடித்து ரிசார்ட் வந்து சேர எங்களுக்கு மதியம் ஆகி விட்டது. வந்தவுடனேயே சென்னையின் வெயில் வேறு எங்களை வறுத்து எடுத்து விட்டது. ஆனால், மதியம் நல்ல சாப்பாடு சாப்பிட்டு விட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டவுடன் அந்த மாலை நேர கடற்கரை காற்று எங்களை தாலாட்ட ஆரம்பித்து விட்டது. அது பிரைவேட் பீச் என்பதால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கடற்கரை ஓரம் செல்லலாம், மணலில் பேசி கொண்டு இருக்கலாம். மாலையில் ஒரு நீண்ட வாக் சென்று விட்டு, மணலில் கோட்டை கட்டி, iPod இல் பாட்டு கேட்டு கொண்டு, அலையோடு விளையாடி, நண்டுகளை துரத்தி என்று நாங்கள் விளையாடிக்கொண்டு இருந்தோம். பின்னர் நன்கு பசிக்கவும் அங்கு இருந்த உணவகத்தில் கடல் உணவுகள் சாப்பிட்டு விட்டு மீண்டும் கடற்கரை மணலில் உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தோம்...ரம்மியமான பொழுதுகள் அது.
அடுத்த நாள் எனக்கு பிடித்த பாரதியார் கவிதைகள், வைரமுத்துவின் தண்ணீர் தேசம், iPod இல் இளையராஜாவின் பாடல்களை எடுத்துக்கொண்டு அதிகாலை 5 மணிக்கே நான் கடல் பக்கம் சென்று விட்டேன்.
நீங்கள் குடிக்க எது கேட்டாலும் அது அங்கு வரும் என்பதால், நான் எனக்கு வேண்டியதை சொல்லி விட்டு காற்று வாங்க
ஆரம்பித்தேன். அதிகாலை
கடற்கரையின் சில்லென்ற காற்றின் ஈரமும், இருட்டு விலகாத அந்த பொழுதும்
இருக்க இளையராஜாவின் பாட்டு கேட்க கேட்க இதுதான் சொர்க்கம் என்று
தோன்றியது. ஒரு சூடான காபியை கொண்டு வந்த சர்வருக்கு ஒரு
புன்னகையை கொடுத்து விட்டு கடல் பார்த்து அந்த காபியை சுவைக்கும்
போதுதான் இந்த அற்புதம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்தது. நான் எடுத்து சென்ற வைரமுத்துவின் தண்ணீர் தேசம் வேறு என்னை வேறு தளத்திற்கு எடுத்து சென்றது.

தங்கள் சந்தோசம் புகைப்படத்தில்
ReplyDeleteமிக அருமையாகத் தெரிகிறது
அந்த ரிசோர்ட்டின் நாள் வாடகை குறித்தான்
விவரங்கள் கொடுத்தால் நாங்க்களும்
கொஞ்சம் முயன்ரு பார்ப்போம்
அசத்தலான படங்க்களுடன் பதிவு அருமை
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார் !! இந்த பதிவிலேயே MGM பீச் ரிசொர்டிற்கு ஒரு லிங்க் கொடுத்து உள்ளேன், மீண்டும் உங்களுக்காக http://mgm-hotels.com/index.php/tariff . தங்கள் தொடர் வருகைக்கும், உற்சாகத்திற்கும் மிக்க நன்றி !! ஒரு முறை உங்களை சந்தில்க்க ஆவல் எழுகிறது !
Delete