Wednesday, October 31, 2012

ஒரு ஆஸ்பத்திரியை கடக்கும்போது....!!?

ஒரு மருத்துவமனையை கடக்கும் போது உங்களது மனதில் என்ன உணர்வு இருக்கிறது ? நீங்கள் ஒரு புதுப்படம் ஓடும் திரை அரங்கை கடக்கும்போது அந்த படம் எப்படி இருக்கும் என்ற எண்ணம் ஓடும், ஒரு ஷாப்பிங் மால் கடக்கும்போது அதனுள் இருக்கும் பொருட்களின் விலை என்ன இருக்கும் என்று தோன்றும், சுடுகாடு கடக்கும்போது பேய் வந்து நினைவில் பயமுறுத்தும், ஒரு உணவகத்தை கடக்கும்போது "இங்கதான பரோட்டாவுக்கு சால்னா நல்லா இருக்கும்ன்னு நம்ம தோஸ்து சொன்னான்" என்று ஓடலாம், அலுவலகத்தை கடக்கும்போது வேலை யாபகம் வரும், பூக்கடையை கடக்கும்போது மனைவி யாபகம் வருவாள், விளையாட்டு சாமான் கடையை கடக்கும்போது குழந்தைகள் யாபகம் வருவார்கள்....இப்படி நீங்கள் கடந்து போகும் ஒவ்வொரு கடைக்கும் உங்களது மனது ஏதாவது ஒன்றை யாபக படுத்தும் இல்லையா ? இப்போது சொல்லுங்கள்.....ஒரு மருத்துவமனையை நீங்கள் கடக்கும்போது உங்களது மனது எதை நினைக்கும் ?இப்போதெல்லாம் தனியார் மருத்துவமனை என்பது ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்று உள்ளது. வெளியில் இருந்து பார்பதற்க்கு அவ்வளவு பகட்டு, உள்ளே அவ்வளவு சுத்தம், பார்கிங் வசதி, உள்ளேயே உணவு என்று இருப்பதால்தானோ என்னவோ மக்களுக்கு இதனுள்ளே வலியினால் துடிக்கும் மனிதர்களை நினைத்து பார்ப்பதில்லை. கதவின் இடுக்கினுள் கை விரல் சிக்கிக்கொண்டாலே கதறும் நமக்கு, இந்த மருத்துவமனைகளில் ஒரு கையே இல்லாமல் கதறி கொண்டு இருக்கும் ஒரு உயிர் நினைவுக்கு வருவதில்லை.
நமது உடம்பு நன்றாக இருக்கும் வரை.... பாதாம் பால், முறுகலான தோசை, கெட்டி சட்னி, வெண்பொங்கல்-வடை, சிக்கன் கபாப், வத்த குழம்பு - சுட்ட அப்பளம், பஜ்ஜி - சொஜ்ஜி, கற்கண்டு பால் என்று அதற்க்கு அவ்வளவு சிறப்பான சேவைகள், அதனால் இந்த உடம்புக்கு வரும்போது அதன் வலி எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை. எனது அம்மா படுத்திருந்த படுக்கைக்கு பக்கத்தில் ஒரு இருபத்தி ஐந்து வயது மதிக்க தக்க ஒரு இளைஞன் தனது இரு சிறுநீரகமும் செயல் இழந்து கிடந்தான், மருந்தின் வீரியம் குறையும்போது எல்லாம் அவன் துடித்ததை பார்க்க முடியவில்லை. இதுபோல நிறைய மனிதர்கள்.....நெருப்பில் சிக்கி தோல் கருகியவர்கள், கண்ணில் ஊசி தெரியாமல் குத்தி கொண்டவர்கள், உடல் சிதைந்தவர்கள், கோமாவில் இருப்பவர்கள், இதயம் - சிறுநீரகம் மாற்றி பொருத்தியவர்கள், டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு, பிள்ளை பேறு வேண்டி, குழந்தைக்கு காய்ச்சல், மூளையில் கட்டி, கை வீக்கம், சர்க்கரை வியாதி என்று இன்னும் இன்னும் பெயர் சொல்ல முடியாத வியாதியுடன் எல்லாம் உள்ளே வழியில் அனர்திகொண்டு மனிதர்கள். அவர்கள் வலியோடு என்றால், இவர்களின் உறவுகள் வெளியில் வைத்தியத்திற்கு பணத்திற்காக துடித்து கொண்டு இருப்பார்கள்.


எங்கள் வீட்டில் வேலை செய்யும் ஒரு அம்மாவின் மகனுக்கு வயிற்றில் அப்பெண்டிக்ஸ் என்று சேர்த்து விட்டார்கள். தினமும் வேலை செய்தால்தான் வீட்டில் உலை என்ற கஷ்டத்தில் இருக்கும் அவருக்கு, பிள்ளையின் வேதனை பொறுக்க முடியாமல் எல்லாவற்றையும் விற்று விற்று அவனை சரி செய்தார். இப்படி ஒரு மருத்துவமனை என்பது துயரம் மிகுந்ததாக இருக்கிறது. நான் கவனித்திருக்கிறேன், சாலையில் விரையும் மனிதர்கள் யாவரும் ஏதாவது கோவில் பார்த்தால் உடனே கன்னத்தில் போட்டு கொண்டு உலக அமைதிக்கு வேண்டி கொள்வதை.......இனி நீங்கள் ஒரு மருத்துவமனையை கடக்கும்போதும் கடவுளிடம் வேண்டிகொள்ளுங்கள்....."சீக்கிரம் இந்த மருத்துவமனையின் உள்ளே இருக்கும் நோயாளிகளின் நோய்கள் குணமாகட்டும், அவர்களின் வேதனை தீரட்டும்" என்று, நீங்கள் உங்களுக்காக பிராத்தித்தால் இந்த கடவுள் மனம் இரங்கி நிறைவேற்றுவார் என்று நினைத்தால், அவர்களுக்காகவும் ப்ராத்தியுங்களேன் !!


Tuesday, October 30, 2012

உலகமகாசுவை - சிங்கப்பூர் உணவுகள் (பாகம் - 2)

இந்த "உலகமகாசுவை" பகுதியை பாராட்டிய அனைவருக்கும் நன்றி, பலர் என்னிடம் இதை எல்லாமா வெளிநாட்டில் சாப்பிடறாங்க என்கின்றனர்....அவர்களுக்கு என்னுடைய பதில் "இன்னும் நான் சீனா உணவுகள் பற்றிய பதிவை போடலை, அதை போட்ட அப்புறம் நீங்க ரெண்டு நாள் எதையும் சாப்பிட முடியாது" என்பதுதான். சரி, போன சிங்கப்பூர் உணவுகள் பகுதியில் சில்லி கிராப், பேப்பர் கிராப் மற்றும் சிங்கப்பூர் ஸ்லிங் காக்டைல் பற்றி பார்த்தோம். அதற்க்கு முன், சிங்கப்பூரை பற்றி சிறிது தெரிந்து கொள்வோம். இது 710 சதுர கிலோமீட்டர் கொண்ட மிக சிறிய நாடு, 9 ஆகஸ்ட் 1965-இல் மலேசியாவில் இருந்து பிரிந்து ஒரு தனி நாடாக உருவானது. இன்று ஒரு தனி பெரும் நாடாக, ராணுவம், பொருளாதார பலத்துடன் இருக்கும் ஒரு அற்புத தீவு ! இதை என் நண்பர்கள் எல்லாம் எனது இரண்டாம் வீடு என்பார்கள், அத்தனை முறை சென்று வந்து இருக்கிறேன் !!

சிங்கப்பூரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...சிங்கப்பூர்
சிங்கப்பூர் என்பது ஒரு நாடாக இருந்தாலும், அந்த நாட்டு குடிமகன்கள் எல்லோரும் அங்கு உருவானவர்கள் இல்லை, இவர்கள் எல்லோரும் வேறு நாட்டில் இருந்து வந்து குடியேறியவர்கள்தான். இதனால்தான், சிங்கப்பூர் உணவுகள் என்று சொல்லும்போது ஒரு வகையான உணவை மட்டும் சொல்ல முடிவதில்லை. இந்த நாட்டில் பெரும்பாலும் சீனர்களும், மலாய் மக்களும், இந்திய மக்களும்தான் பெரும்பான்மையாக இருகின்றனர்....மற்றவர்கள் எல்லாம் குறைந்த எண்ணிகையில். இதனால், சிங்கப்பூரின் உணவுகள் ஒவ்வொரு மக்களுக்கும் ஒவ்வொரு உணவு வகைகள் புகழுடன் இருக்கின்றன.உதாரணமாக, இந்திய மக்களிடம் பரோட்டா,  மீன் தலை கறி என்பது அங்கு மிகவும் பிரபலம். சீனர்களிடம் சில்லி கிராப், பேப்பர் கிராப் என்பது அவர்களிடம் பிரபலம். மலேசியா மக்களிடம் லக்ஸா, நாசி லெமாக் பிரபலம். சடாய் என்பது இந்தோனேசியா மக்களிடம் பிரபலம். இப்படி ஒவ்வொரு மக்களும் ஒவ்வொரு உணவு வகைகள் பிரபலமாக இருப்பதால் இந்த பகுதியை பிரித்து நிறைய எழுத வேண்டி உள்ளது.


இன்று நாம் காணபோவது, இந்திய வம்சாவளியினர் பெரிதும் விரும்பும் 
"பிஷ் ஹெட் கறி (மீன் தலை கறி)". இதில் முத்து'ஸ் கறி என்னும் ஹோடெல்லில் கிடைக்கும் கறிதான் மிகவும் ருசியானது என்று பேச்சு. அதனால் இந்த பதிவை எழுத, அதை சுவைக்க வேண்டும் என்று சென்றேன். நமது வீட்டில் எல்லாம், மீனின் தலையை யாரும் விரும்ப மாட்டார்கள் என்று அதை அறுத்து குலம்பிலோ, அல்லது தூக்கியோ போட்டு விடுவார்கள், ஆனால் இங்கு அதை குழம்பின் மேல் வைத்து கொடுகிறார்கள். அட....நம்ம ஊரு மீன் குழம்புதான், ஆனால் எல்லோருக்கும் ஏற்றது போல இதை செய்கிறார்கள். அதை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள் !

பரோட்டா இங்கு மிகவும் புகழ் பெற்ற ஒன்று, ஆனால் அதை பற்றி இங்கு எழுத வேண்டாம் என்று நினைக்கிறேன், அதை பற்றி தெரிந்து கொள்ள நமக்கு அதிகம் ஆர்வமும் இருக்காது....ஏனென்றால் அதை குழம்பில் போட்டு சர்ரென்று உரிவது நம்ம ஸ்டைல், இதை ஏன் விளக்க வேண்டும்.

அடுத்த வாரம்....மலேசியா மக்களின் சிங்கப்பூர் உணவுகள், கண்டிப்பாக படியுங்கள் !!

Monday, October 29, 2012

அறுசுவை - சென்னை "மண் வீடு" உணவகம்

சமீபத்தில் சென்னை சென்று இருந்தபோது எனது நண்பர்களுடன் நேரம்
செலவிட முடிந்தது, நிறைய பேசினோம். பேசினால் மட்டும் போதுமா, வயிறும் நிறைய வேண்டுமே. வெகு காலத்திற்கு பிறகு சந்திப்பதாலும், நன்கு சாப்பிட வேண்டும் என்பதாலும், தேடி பார்த்தபோது இந்த பெயரே 
எங்களை ஈர்த்தது. ஆனால், பெயருக்கு ஏற்றார்போல சாப்பாடும் 
வித்தியாசமாக,  சுவையாக, சுத்தமாக இருந்தது ! விலைதான் ஜாஸ்தி !

இந்த உணவகத்தை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள இங்கே சொடுக்கவும்..."மண் வீடு" உணவகம்உள்ளே நுழைவதற்கு முன்னரே உங்களது புருவங்களை உயர்த்த வைக்கும் வகையில் எல்லாம் மண்ணால் செய்யப்பட்ட அலங்காரங்கள்...
கோலங்கள், மாட்டு வண்டி என்று புதுமையாக இருந்தது. பார்கிங் செய்வதற்கு அவ்வளவு இடம் இல்லை இங்கு, ஆனால் ஒரு காவலர் இருப்பதால், அவர் இடம் ஏற்படுத்தி தந்து விடுகிறார். உள்ளே நுழைந்தவுடன் உங்களை ஒரு இடம் பார்த்து அமர்த்தி விட்டு கையில் மெனு கார்டை கொடுத்தவுடன்தான் நாம் சாப்பிடலாமா, அல்லது எழுந்து சென்று விடலாமா என்று தோன்றியது...அவ்வளவு காஸ்ட்லி !! நாங்கள் பசியோடு இருந்ததாலும், வேறு இடம் தேட மனம் இல்லாததாலும், சரி என்று மெனு கார்டை மேய ஆரம்பித்தோம்.

நான் எனது பார்வையை மெனு கார்டிலிருந்து திருப்பி நோட்டம் விட ஆரம்பித்தேன், இடம் விசாலமாக இருந்தது, நல்ல உள் அமைப்பு, உங்களது டேபிள் விரிப்பில் கூட ஒரு கலை வண்ணம் என்று அருமையாக இருந்தது, ஆனால் உள்ளே வெளிச்சம் ரொம்ப கம்மி, நாங்கள் சாப்பிட்டு முடித்து வெளியே வரும்போது வெளிவெளிச்சம் ஒத்துக்கொள்ளவில்லை!
நான் மேடு கார்டை பார்த்து கொண்டிருந்தபோது சட்டென்று ஒரு வார்த்தை என்னை நிறுத்தியது....ஜமீன் விருந்து. நமது படத்தில் எல்லாம் ஜமீன் என்றால் பிரமாதமாக காண்பிப்பதால், ஒரு ஆர்வத்தில் நானும் எனது நண்பனும் வெஜ் ஒன்றும், நான்-வெஜ் ஒன்றும் என்று ஆர்டர் செய்தோம். மற்ற இருவரும் பிரியாணி, வைட் ரைஸ், நாகப்பட்டினம் கருவாட்டு குழம்பு, சிக்கன் இடிச்சது என்று ஆர்டர் செய்ய நாங்கள் அவர்களை நக்கலாக பார்த்தோம் !! என்ன இருந்தாலும் ஜமீன் விருந்து என்றால் சும்மாவா !!

ஜமீன் விருந்தில் முதலில் உங்களுக்கு சூப், ஸ்டார்ட்டர் வகையில் சிறிது பிங்கர் சிப்ஸ், இரண்டு பீஸ் வறுத்த இறைச்சியோ / பேபி கார்ன் வகையோ முதலில் வரும். நாங்கள் இதுதானே ஆரம்பம் என்று திமிராகவும், நக்கலாகவும் எங்களது நண்பர்களை பார்த்துக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தோம். அவர்கள் நண்டு சூப்பும், கோழி இடிச்சதும் வந்தவுடன் சாப்பிட ஆரம்பித்தனர்.

எல்லாம் முடித்தவுடன், ஒரு தட்டில் கீழே காண்பித்து போல ஒரு இடியாப்பம், பீஸ் புலாவ், வறுத்த கறி, மற்றும் நான்கு வகை மசாலாக்கள் வந்தன, பின்னாலேயே நான், குல்ச்சா, ரோட்டி என்று ஒரு சின்ன கூடையில் !! நாங்கள் ஒவ்வொன்றாக, ஆனால் ஜாக்கிரதையாக குறைவாக சாப்பிட்டோம், ஏனென்றால் ஜமீன் விருந்தல்லவா...இன்னும் நிறைய வரும்போது வயிற்றில் இடம் வேண்டும் அல்லவா. ஒரு ஜமீன் சமஸ்தானத்தில் விருந்து என்பது எவ்வளவு முக்கியம், போதும் போதும் என்ற அளவுக்கு அவர்களை உணவினுள் ஆச்சர்யபடுதினால்தானே ஜமீனுக்கு பெருமை !

                          


வெஜ் ஜமீன் விருந்து

நான் - வெஜ் ஜமீன் விருந்து
 எங்களுக்கு கொடுத்த சைடு டிஷ் என்னவென்று கண்டுபிடிக்கவே நாங்கள் திணற வேண்டி இருந்தது, சரி சர்வரையே கேட்போம் என்றால் அவர் தலையை சொறிந்தது கண்டு கலங்கி விட்டோம். மெனு கார்டில் தேடலாம் என்றால் அதில் மொட்டையாக ஜமீன் விருந்து என்று மட்டும் இருந்ததால், யாரிடம் கேட்பது என புரியவில்லை. அட பரவாயில்லை என்று இடியாப்பத்தையும், நான், குல்ச்சாவையும் சாப்பிட்டு முடித்து விட்டு அடுத்து என்னவென்று கேட்டால் ஆடு போல எல்லோரும் விழிக்கின்றனர்!! முடிவில் அவ்வளவுதான் என்றபோது, எங்களுக்கு பக்கத்தில் நாகப்பட்டினம் கருவாட்டு குழம்பு வாசனையோடு கையை நக்கி கொண்டே எனது நண்பன் "என்ன மச்சி...ஜமீன் விருந்து அட்டகாசம் போல" என்று வெறுப்பேற்றுகிறான். என்ன சாபிடுவது அடுத்து என்று தெரியாமல், டிசர்ட் கொண்டு வர செய்து சாப்பிட்டோம். அட....இந்த சாப்பாடு கூட பரவாயில்லை, வரும் வழியெங்கும் என்னை ஒட்டி எடுத்து விட்டனர். இதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்....இந்த ஜமீன் விருந்து நொடிந்து போய் விட்டது !

ஜமீன் விருந்துதான் அப்படி,ஆனால் எனது நண்பர்கள் மற்ற எல்லாவற்றையும் 
குறையின்றி சாப்பிட்டனர், அதிலும் அந்த கருவாட்டு குழம்பும், இடிச்ச 
கோழியும் மிகவும் அருமை. முடிவில் எங்கள் நான்கு பேருக்கு 2200 ரூபாய் வரை மொய் வைக்க வேண்டி இருந்தது. வீடுதான் மண்ணே தவிர, மற்ற எல்லாம் காஸ்ட்லி இங்கு. ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு 
இங்கு செல்லலாமே தவிர, சுவைக்காக அல்ல, இதை விட சுவையான
உணவு நம்ம சென்னை கையேந்தி பவனிலேயே கிடைகிறது !!பஞ்ச் லைன் :

சுவை               -      நன்றாக இருக்கிறது, கண்டிப்பாக ஜமீன் விருந்து ஆர்டர் செய்து விடாதீர்கள் !.

அமைப்பு         -       பெரிய இடம், பார்கிங் வசதி சற்று குறைவு ஆனால் ஒரு காவலர் இருக்கிறார், அவர் எப்படியாவது ஒரு இடத்தை உங்களுக்கு காண்பிக்கிறார். உள் அமைப்பு உங்களை நிச்சயம் கவரும்...ஆனால் வெளிச்சம் சற்று கம்மி !!
பணம்              -      அதிக விலை, இதை விட நிறைய இடங்கள் சுவையிலும், பணத்திலும் நன்றாக இருக்கிறது என்பது என் கருத்து.

சர்வீஸ்           -       நன்றாக இருக்கிறது !

முகவரி  -

No.34/72A,4th Main Road,Gandhi Nagar, Adyar,Chennai-20.

Ph No:044-42607475,7299909494.

email:admin@munveedu.com

Website:www.munveedu.com


Sunday, October 28, 2012

நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சார்லி டோட்

 சார்லி டோட் - இவரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளும் முன்பு, இப்போது பிரபலமாக இருக்கும் பிரான்க் (Prank) என்றால் என்ன என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் இவர் இந்த வகை பிரான்க் கிரியேட்டர் என்றுதான் சொல்ல வேண்டும். Prank  என்றால் குறும்பு விளையாட்டு , சிறு குறும்பு , நையாண்டிக்குறும்பு என்று அர்த்தம். அதாவது  மற்றவர்களை காயப்படுத்தாமல்,
 நகைச்சுவையாக செய்து மக்களை சிரிக்க வைப்பது. இன்னமும் புரியவில்லையா....
அதாவது ஒருவர் குடித்துவிட்டு நடு ரோட்டில் கன்னா பின்னாவென்று பேசிகொண்டிருந்தார் என்று வையுங்கள்...நீங்கள் அவரை சும்மா சீன் போடாதே என்று சொல்வீர்கள் இல்லையா, அதையே இவர் நகைச்சுவையாக சீன் போடுவார் என்று சொல்லலாம்.இவர் ஆரம்பித்த Improv Everywhere என்னும் ஒரு அமைப்பு இன்று மிக மிக பிரபலம், இதில் ஏகப்பட்ட பேர் உறுப்பினர்கள் !! 2001ம் ஆண்டு இதை நியூயார்க் நகரில் இதை தொடங்கினார் சார்லி டோட். மன்ஹட்டன் நகரின் பாரில் தொடங்கிய இந்த பயணம், காமெடி சென்ட்ரல் சேனல் மூலம் மெருகேறி, இன்று ஒரு உலக புகழ்பெற்ற ஒரு குழுவாக, அமைப்பாக உள்ளது.இவர்களின் குறிக்கோள் என்பது ஒரு குழப்பமான காமெடி செய்து அதுவும் மக்கள் முன்பு, அவர்களின் முக குழப்பங்களை கேமரா மூலம் பதிவு செய்து அதை வெளியிடுவது, உதாரணமாக பீச்சில் எல்லோரும் அரைகுறை ஆடையுடன் இருக்க இவர்கள் கோட் சூட் போட்டு கொண்டு நடமாடுவது, ஒரு கடையின் ஊழியர் உடையின் நிறம் போன்றே அணிந்து அங்கு நடமாடுவது, ட்ரெயின் உள்ளே நன்றாக கோட் சூட் போட்டு கொண்டு பான்ட் மட்டும் போடாமல் போவது, ஒரே மாதிரி பிறந்த இரட்டையர்களை ட்ரெயினில் எதிரெதிரே உட்கார செய்து கண்ணாடி போல தோற்றம் கொண்டுவருவது, ஆயிரகனக்கானவர்களை கொண்டு மிகவும் கூட்டம் நிறைந்த ட்ரெயின்
ஸ்டேஷன் இடத்தில் மக்கள் உறைந்து போய் நிற்பது  என்று பல பல பல செய்கைகள்....ஆனால் இதை எல்லாம் நூற்றுகணக்கான மனிதர்கள் கொண்டு செய்வதுதான் காமெடி !!

இது போல் நிறைய பார்த்து, சிரித்து மகிழ இங்கே சொடுக்கவும்...Improv Everywhere காமெடிகள்
இன்று இவரது வீடியோ எல்லாம் யூடுபில் மிகவும் பிரபலம். இவர்களது கலாட்டாக்கள் நிறைய முறை போலீஸ் மூலம் கடுப்புடன் பார்க்கப்பட்டது, உதாரணமாக இவர் ஆரம்பித்த "பான்ட் போடாமல் செல்லும் நாள்" அன்று நியூயார்க்கில் ஆயிரக்கனக்கான மனிதர்கள் கீழே ஜட்டி மட்டும் போட்டு கொண்டு நடமாட, அதிகாலை நேரத்தில் இதை அறியாத போலீஸ் ஆறு பேரை கைது செய்தது, பின்னர் இது போல் பலர் வர அவர்களின் பாடு காமெடி ஆனது...இன்றும் போலீஸ் வருகிறது, ஆனால் பாதுகாப்பு கொடுக்க !! ஒரு நாள் இவரை சந்தித்து நானும் ஒன்றில் பங்கேற்க வேண்டும்.....ஆனால் இந்த பான்ட் போடாமல் போவது போல் இல்லாமல் !!

Saturday, October 27, 2012

சோலை டாக்கீஸ் - குன்னக்குடி வைத்தியநாதன் வயலின்

1990-களில் ஒரு நாள் என் அப்பா டிவி பார்த்து கொண்டு இருந்தபோது திடீரென்று என்னையும், எனது அம்மாவையும் கத்தி கூப்பிட்டார். அப்போது டிவியில் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் வயலினில் பேசி கொண்டு இருந்தார், அதுவரை வயலின் என்பது ஒரு பாட்டுக்கு பின்னணியில் இருக்கும், ஆனால் ஒரு பாடகர் பாடுவது போல வயலினில் அவர் பாடினார்.....அதுதான் அப்போது ஊரெல்லாம் பேச்சு !! இன்று அதை கேட்கும்போது எப்படிப்பட்ட மேதை அவர் என்று எண்ணம் எழுகிறது !!

சின்ன ராசாவே கட்டெறும்பு என்னை கடிக்குது - வால்ட்டர் வெற்றிவேல்


ஒட்டகத்தை கட்டிக்கோ - ஜென்டில்மேன் படம் பாடல்


இஞ்சி இடுப்பழகா பாடல் - தேவர் மகன்

Friday, October 26, 2012

எல்லாத்துக்கும் அவசரம் ?!

இன்று நான் ஆபீசுக்கு புறப்பட்டு கொண்டு இருந்தபோது எனது மகன் தனது பிஞ்சு கைகளால் ஒரு பூவை கொண்டு வந்து கொடுத்து, தனது மழலையால் தேங்க் யூ என்று தலையை ஆட்டி சொன்ன போது நான் அவசர கதியில் அதை வாங்கி பக்கத்தில் வைத்துவிட்டு டிபன் ரெடியா என்று குரல் கொடுத்ததை பார்த்த அவன், நொடியில் முகம் வாடி தள்ளி சென்றான்....மனதில் அது தைத்தாலும், அவசரம் என்பதால் ஒன்றும் சொல்லவில்லை. அன்று எப்பொழுதும் அவன் எனக்கு எடுத்து கொடுக்கும் சூ, எனது பேக், அவனை அன்றாடம் கூட்டி செல்லும் ரவுண்டு, முத்தம் என்று எதையும் ஏற்க எனக்கு பொறுமை இல்லை. அவசரம் அவசரம் அவசரம் மட்டும்தான்.....இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி இருந்தால் இதை எல்லாம் நான் செய்திருக்க முடியும், இப்படி இந்த அவசரத்தினால் எத்தனை பேர் காயப்பட்டு இருந்திருகிறார்களோ ? எவ்வளவு சந்தோசத்தினை நாம் இழந்து இருக்கிறோம் என்று யோசித்தது உண்டா ?எதனால் இந்த அவசரம் என்று என்றாவது நீங்கள் நின்று நிதானித்து யோசித்து பார்த்து இருக்கிறீர்களா ? காலையில் நீங்கள் ஆபீஸ் கிளும்புவது, முன்னால் போகும் வண்டியை ஓவர்டேக் செய்வது, சிக்னலில் பச்சை விழும் முன் போவது, இருக்கும் இடைவெளிகளில் எல்லாம் புகுந்து புறப்படுவது, சிலசமயம் பிளாட்போம் ஏறி கூட, ஆபீஸ் சென்ற பின் பார்க்கும் வேலைகளில், மதியம் உணவு உண்ணும்போது தண்ணீர் கூட குடிக்காமல் அவசரமாக, ட்ரெயின் ஸ்டேஷனில் வரிசை பாராமல் டிக்கெட் எடுப்பது, சாமி கும்பிட போகும் இடங்களில் நெட்டி தள்ளி தரிசனம், டிவி பார்க்கும்போது கூட சில நொடி விளம்பரங்களுக்கு சேனல் மாற்றுவது என்று எல்லாவற்றிலும்....யோசித்து பாருங்கள், நீங்கள் காணும் கனவுகளில் கூட நீங்கள் ஓடிக்கொண்டுதான் இருப்பீர்கள் !


பல ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் எல்லாவற்றிலும் ஒரு நிதானம் இருந்தது, நாம் வாங்கும் பொருட்கள், டாக்டரிடம் பேசும்போது, பஸ்சில் ஏறும்போது, கடிதங்கள் அனுப்புவது, வெளியூர் பயணங்கள் திட்டமிடும்போது, வண்டியில் செல்லும்போது, குழந்தைகளை விளையாட அனுமதிக்கும்போது என்று எதிலும் ஒரு நிதானம். ஆனால் இன்று எல்லாமே துரித கதியில் நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம் இல்லையா ? ஒரு சில நிமிடங்கள் நீங்கள் தாமதமாக சென்றால் ஒன்றும் நிகழாது என்று தெரிந்தும் சிலவற்றில் அவசரம் தெறிப்பது ஏன் ?


ஸ்பீட் போஸ்ட், மிக வேக விமானம், LMS பஸ், அரை மணி நேரத்தில் சுடிதார் தைக்கப்படும், 8Mbps இன்டர்நெட், தட்கல் டிக்கெட், பாஸ்ட் புட், 200சிசி பைக், ஆப்பிள் kidz ப்ளே ஸ்கூல், எக்சிகூட்டிவ் MBA, ரெடிமேட் சாம்பார் பொடி, அரைத்த மாவு, பாட்டில் பானங்கள், ஐந்து நிமிடத்தில் ஐ செக்கப், பத்து நிமிடத்தில் சிறுநீரக கட்டி கரைக்கப்படும், ஆறு வருடத்தில் உங்கள் பணம் இரட்டிப்பாகும், ஒரே வருடத்தில் கோடீஸ்வரன் புத்தகம், இன்ஸ்டன்ட் காபி, கிரைண்டர், மிக்ஸி, வாஷிங் மெஷின், அபாகஸ் என்று இவைகள் எல்லாம் அவசர உலகில் உங்களிடம் இருந்து பணம் பறிக்க ஏற்படுத்தப்பட்ட ஒன்று. மற்றவரிடமிருந்து நீங்கள் ஒரு அடி முன்னே செல்ல வேண்டும் என்ற வேட்கையால், நீங்கள் ஆரம்பித்த இது இன்று எல்லோருக்கும் தொற்றி கொண்டது என்பதை நீங்கள் நினைத்து பார்த்தீர்களா. நமக்கு மட்டும் இதனால் பாதிப்பு இல்லை...நிறைய ஏழை மக்களும் இதனால் பாதிக்கபடுகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா ?


நான் எல்லாம் LKG இல் இருந்துதான் கற்றுக்கொள்ளவே
ஆரம்பித்தேன்,  ஆனால் இன்று ப்ளே ஸ்கூல் என்று இரண்டரை வயதில் இருந்து கட்டாயம்.....அது எல்லாம் இல்லாமல் இருந்த நாமெல்லாம் முன்னேறவில்லையா, அல்லது சந்தோசமாகத்தான் இல்லையா ?


இந்த அவசரத்தினால் நாம் சிறு சிறு சந்தோசங்களை எல்லாம் இழக்கிறோமே அது உங்களது கண்களுக்கு தெரியவில்லையா ? காலையில் புறப்படும் அவசரத்தில் வீட்டில் இருக்கும் எல்லோரது சந்தோசத்தையும் பறிக்கிறோம், சாலையில் நாம் காட்டும் அவசரத்தில் எவருக்காவது விபத்தை பரிசளிக்கிறோம், சாமி கும்பிட போய் மன நிம்மதி இல்லாமல் திரும்புகிறோம், பிள்ளைகளை படிப்பு தவிர கீ போர்டு, கராத்தே, ஸ்கேடிங், டிராயிங் என்று படுத்துகிறோம், இப்படி நம் அவசரத்திற்கு கொடுக்கும் விலை தெரிவதில்லை....ஒரு நாள் அவசரபடாமல் பொறுமையாக சாப்பிட்டு, வண்டி ஒட்டி, ஆபீசில் வேலை செய்துதான் பாருங்களேன்.......மனமும் மனிதமும் உங்களினுள் மலர்வதை !!