Thursday, October 4, 2012

மறக்க முடியா பயணம் - டார்ஜிலிங் (பாகம்-1)

டார்ஜிலிங், இந்த பேரை கேட்கும்போதே  நமக்கு உடம்பில் ஒரு குளிர் பரவுவது போல இருக்கும் !!  நமக்கு டார்ஜிலிங் என்றாலே நினைவுக்கு வருவது அந்த டீயின் சுவை, ஆனால் எனது இந்த பயணத்தில் அதையும் தாண்டி நிறைய என்னை ஈர்த்தது. டார்ஜிலிங் என்பது மேற்கு வங்கத்தில் உள்ள நேபாளை ஒட்டி உள்ள ஒரு நகரம். இது 6710 அடியில் மலையின் மேல் உள்ளது. எங்கு திரும்பினாலும் ஒரே பச்சை பசேல் என்று மலைகளில் தெரியும் தேயிலையை ரசிக்க உங்களுக்கு அலுக்கவே அலுக்காது ! உங்களில் யாருக்காவது மலையின் மீது செல்லும்போது தலைசுத்தல், வாந்தி வரும் உடம்பிருந்தால், நீங்கள் இங்கு செல்லாமல் இருப்பது நலம் !!
இங்கு செல்வதற்கு நீங்கள் நெடும் புகைவண்டி பயணம் மேற்கொள்ள வேண்டும், அல்லது அங்கு இருக்கும் விமான நிலையத்திற்கு செல்லலாம்.....கவனியுங்கள் நீங்கள் இதற்க்கு அருகில்தான் செல்ல முடியும், டார்ஜிலிங் சென்றடைவதற்கு நீண்ட பயணம் இனிதான் ஆரம்பம் !! நீங்கள் புகைவண்டியில் செல்வதென்றால் நியூ ஜல்பைகுரி (NJP ) ஸ்டேஷனில் இறங்கி கொண்டு அங்கிருந்து நிறைய கிடைக்கும் ஜீப்பில் பயணம் செய்யலாம், அல்லது அங்கு இருக்கும் சிறிய ட்ரெயினில் பயணம் செய்து இந்த இடத்தை அடையலாம். விமானத்தில் செல்வதென்றால் பாக்டோக்ரா என்னும் விமான நிலையத்தில் இருந்து மேற்சொன்ன வழியில் அடையலாம்.

இன்னும் தெரிந்து கொள்வதற்கு இங்கே சொடுக்கவும்.....டார்ஜிலிங் செல்ல.


நாங்கள் விமானம் வழியாக சென்றதாலும், அங்கு ஹோட்டல் ஏற்கனவே புக் செய்து, பிக் அப் சொல்லி இருந்ததாலும் எல்லாம் தயாராக இருந்தது. இது எனது முதல் பயணம் என்பதால் நாங்கள் விமான நிலையத்தில் இறங்கியவுடன் டிரைவரிடம் எவ்வளவு சீக்கிரம் போக முடியுமோ போங்க என்றவுடன் எங்களை ஏற இறங்க பார்த்தார். அவர் மலையின் மீது ஏற ஆரம்பித்தவுடன் இருந்து நானும் இப்போ வரும், அப்போ வரும் என்று காத்திருந்தால் அவர் போய் கொண்டே இருந்தார். நான் பொறுமை இழந்து இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்னும்போது அவர் இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் என்றார் !! போகும் வழியில் பனி படர்ந்து கொண்டு வெளியே எதுவும் தெரியாமல் அவர் ஒட்டி சென்றது ஒரு த்ரில் அனுபவம்.


ஒரு வழியாக நாங்கள் ஹோட்டல் சென்று அடைந்தபோது எங்கள் உடம்பினுள் இருக்கும் எல்லா எலும்புகளும் கலகலவென ஆடியது ! நன்கு குளித்து விட்டு பசிக்கு சப்பாத்தி, சப்ஜி, டீ என்று குடித்து விட்டு அன்று இரவு உறங்கினோம். இங்கு நீங்கள் ஹோட்டல் புக் செய்து விட்டு செல்வது நலம், இல்லையென்றால் உங்களின் முகத்தை கொண்டு நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று புரிந்து கொண்டு விலையை ஏற்றி விடுகின்றனர். பொதுவாக இவர்களுக்கு டூரிஸ்ட் வந்தால்தான் வருமானம் என்பதால் நீங்கள் பேரம் பேசி குறைக்க முடியும். ஆயிரம் முதல் உங்களுக்கு ரூம் கிடைகிறது. இரவினில் பனி அதிகம் என்பதால் நீங்கள் ஸ்வட்டர் மற்றும் கம்பளி எடுத்துக்கொண்டு போவது உத்தமம்.
அடுத்த நாள் காலையில் எழுந்து எங்களின் ஜன்னலின் வெளியே பார்க்கும்போது அருமையான காலை பனி மூட்டம்....அத்துடன் ஒரு டீ குடித்து விட்டு மூச்சை இழுத்து விட்டால், சுத்தமான காற்று உங்களின் உடம்பினுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதை உணர்வீர்கள். இங்கு சுற்றி பார்க்க நிறைய இடம் இருந்தாலும், நீங்கள் அதை அடைய ஒரு மலையில் இருந்து இன்னொரு மலைக்கு செல்வது என்பது நீண்ட பயணம், அலுப்பானதும் கூட. நாங்கள் சில இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றபோது எங்களது டிரைவர் ஒவ்வொரு மலையையும் காட்டி இங்கு உள்ளது என்று கூறும்போது அலுப்பாய் இருந்தது.இங்கு நீங்கள் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் என்பது கன்செஞ்சுங்கா மலை சிகரம் (நமது ஹிமாலய மலை சிகரம்), ஜூ, டாய் ட்ரைன், மலை ஏறும் பயிற்சி முகாம், டைகர் ஹில் சன் ரைஸ், க்ஹூம் புத்தர் கோவில், மிரிக் லேக், நேபால் எல்லையில் உள்ள மார்க்கெட், வார் மெமோரியல், மாகாளி கோவில். இதை தவிர அங்கங்கே இருக்கும் சிறிய இடங்கள். நாங்கள் முதலில் மிரிக் லேக் செல்லலாம் என்று பிளான் செய்தோம், அங்கு உணவு எடுத்துக்கொண்டு சென்றால் நன்றாக இருக்கும் என்பதால் ஹோடேலில் கேட்டு வாங்கி கொண்டோம். ஒரு மலையில் இருந்து இறங்கி, இன்னொரு மலையில் ஏறி அங்கு அடையும்போது உங்களுக்கு தலை சுத்தல் இல்லாமல் இருந்தால் நீங்கள் பலசாலி !!
இங்கு இருக்கும் சுமேந்து லேக் என்பது மலைகளால் சூழப்பட்ட ஒன்று, இங்கு எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று உள்ளது. சில்லென்று பனி வீச, தண்ணீரில் நீங்கள் போட்டிங் செல்லலாம், இங்கு குதிரையில் போகலாம், அதை தவிர இயற்கை மட்டும்தான். ஹநீமூன் செல்பவர்களுக்கு ஒரு அருமையான இடம் இது.

அடுத்த பாகத்தில் நீங்கள் கன்செஞ்சுங்கா மலை சிகரம் (நமது ஹிமாலய மலை சிகரம்), ஜூ, டாய் ட்ரைன், மலை ஏறும் பயிற்சி முகாம், டைகர் ஹில் சன் ரைஸ், க்ஹூம் புத்தர் கோவில், நேபால் எல்லையில் உள்ள மார்க்கெட், வார் மெமோரியல், மாகாளி கோவில் ஆகியவற்றை பற்றி விரிவாய் காணலாம். நான் மேலே கூர்க்கா வேடத்தில் எடுத்த புகைப்படம் ஒரு சுவாரசியமான அனுபவம், அதை தெரிந்து கொள்ள அடுத்த வாரம் வரை காத்திருங்கள் !!

8 comments:

 1. வணக்கம்...செம சில்ல்னு பதிவு

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜீவா...தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் !

   Delete
 2. நான் போக விரும்பும் இடங்களில் இதுவும் ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக நீங்கள் செல்ல வேண்டிய ஊர்....தகவல் தேவைபட்டால் கேளுங்கள் !

   Delete
 3. டார்ஜிலிங் என்ற பெயர் தான் உள்ளே கூட்டி வந்தது. நன்கு எழுதி உள்ளீர்கள்

  இன்னும் போனதில்லை. போக வேண்டும் என்ற விருப்ப லிஸ்ட்டில் உள்ள ஊர் இது

  ReplyDelete
  Replies
  1. நன்றி மோகன்...தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

   Delete
 4. நான் போக விரும்பும் இடங்களில் இதுவும் ஒன்று

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி கோவிந்தராஜ் !

   Delete