Wednesday, October 10, 2012

நெடுஞ்சாலையோர புளிய மரம்...!

கடந்த ஆண்டு சுதந்திர தின நாள் அன்று காய் வாங்க வெளியே சென்று இருந்தபோது ஒரு இடத்தில் அதிக கூட்டம் இருந்தது, போகும்போது அவசரமாக சென்று விட்டேன், திரும்பும்போது சற்று கூட்டம் கம்மியாக இருந்ததால், வண்டியை அருகில் நிறுத்தி, கீழே இறங்காமல் அவர்களிடம் என்ன விசேஷம் என்று கேட்டேன், அவர்கள் "மரம் நடும் விழா" என்றனர். நான் கிண்டலாக "செடியை நட்டுவிட்டு மரம் நடும் விழாவா ?" என்று கேட்டு விட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். அது அத்துடன் முடிந்துவிட்டது என்றுதான் நினைத்தேன், ஆனால் அது என்னுள் நிறைய கேள்விகளை எழுப்ப போகிறது என்று எனக்கு அன்று தெரியவில்லை.





இது முடிந்து பல மாதங்கள் கழித்து, நான் திண்டுக்கல் சென்று இருந்த போது ஊரெல்லாம் மஞ்சள், ஆரஞ்சு என்று ஆடைகள் அணிந்து மக்கள் பழனிக்கு பாத யாத்திரை மேற்கொண்டிருந்தனர். அப்போது நாங்கள் திருச்சி செல்ல வேண்டும் என்று இருந்ததால், காரில் பயணம் மேற்கொண்டோம். போகும் வழியெங்கும் எங்களுக்கு எதிர் திசையில் மக்கள் சாரி சாரியாக பாதயாத்திரை மேற்கொண்டிருந்தனர். ஒரு இடத்தில் நாங்கள் காரை நிறுத்திவிட்டு இயற்கை உபாதையை தணித்துவிட்டு காருக்கு திரும்பி  கொண்டிருந்தபோது, என்னை கையை பிடித்து இழுத்து நிறுத்தினார் என் அப்பா. அவர் சிறிது நேரம் என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார், எனக்கோ என்ன இவர் என்ன காரில் போகும்போது பேச வேண்டியதை இப்படி மொட்டை வெயிலில் வைத்து பேசி கொண்டிருக்கிறார் என்று கோவம் வந்தது. முடிவாக, நாங்கள் காரை நோக்கி வந்தபோதுதான் தெரிந்தது ஒரு பத்து பாதயாத்திரை செல்லும் நபர்கள் எங்களது கார் நிழலில் நின்று கொண்டு இருந்தனர். நாங்கள் காரை எடுக்க போகிறோம் என்று தெரிந்தவுடன், மிகுந்த ஏமாற்றத்துடன் அங்கிருந்து நகன்றனர், அப்போதுதான் புரிந்தது ஏன் என் தந்தை எனது கையை பிடித்து நிறுத்தினார் என்று ? சாலையை அகலபடுதுகிறேன் என்று இரு புறமிருந்த மரங்களையும் வெட்டி வீழ்த்தி இருந்தனர், அதனால் பல மைல்களுக்கு எங்கும் நிழல் இல்லை......எங்களது காரின் நிழலில் ஒதுங்கி இருந்திருக்கிறார்கள், அதை பார்த்த என் தந்தை அவர்களுக்காக சிறிது தாமதித்து இருந்திருக்கிறார் !!





நினைத்து பாருங்கள்...நாம் சிறுவயதில் பஸ்சில் செல்லும்போது கூடவே ஓடி வரும் மரங்களை, பஸ் பயணத்தில் நமக்கு வெயில் தெரியாவண்ணம் காற்று வருவதற்க்கு அந்த மரங்கள் காரணம். பல பல விபத்துக்களுக்கும் அந்த மரம்தான் காரணமாய் இருந்தது, அந்த காரணத்தினால் சாலையை அகலபடுதுகிறேன் என்று சொல்லி இன்று ஒட்டு மொத்த மனிதர்களுக்கும் விபத்து ஏற்படுத்துகின்றனர் !! பெங்களூரில் இருந்து மதுரை, விருதுநகர் வரை நான் காரில் பயணம் செய்துள்ளேன், அப்போதெல்லாம் சாலை அகலமாக இருந்ததால் நல்ல வேகத்தில் செல்ல முடிந்தது, அதனால் பயணம் சுகமாக இருந்தது என்று நினைத்திருந்தேன்......இப்போதுதான் தெரிகிறது மரத்தை, நிழலை அழித்து இந்த சுகத்தை அடைந்திருக்கிறோம் என்று.



அசோகர் சாலை ஓரங்களில் மரங்களை நட்டார் என்று பள்ளிபாடத்தில் படித்திருக்கிறோம், ஆனால் எந்த புத்தகத்திலும் அந்த மரத்தை அழித்தவர்களின் பெயரில்லை. இந்த சாலையோர மரங்களால் என்ன பயம் என்று படிக்க தெரியாத ஒருவன்தான் இந்த மரங்களையெல்லாம் வெட்டி இருப்பானோ ?? ஒரு அசோகனால் மக்களின் கஷ்டத்தை உணர முடிந்தது....இனி அடுத்த அசோகன் எப்போது பிறப்பானோ ?

மழை பெய்யும்போது எல்லாம் சட்டென்று ஒதுங்கிய மரங்கள் எல்லாம் இன்று கான்க்ரீட் கூரைகள் ஆகிவிட்டன. எங்கே செல்லும்போதும் இன்று நகர போக்குவரத்தில் ஒதுங்க நிழல் இல்லை, மரங்களில் புளியங்காய் அடித்து தின்னும் சிறுவர்கள் எல்லாம் இன்று ஹோட்டல்களில் டேபிள் துடைக்க சென்று விட்டனர், ஆயா மரத்தினடியில் சுட்ட வடைகள் எல்லாம் இன்று மரமே இல்லாததால் காகம் கொத்த வழியில்லாமல் போய் விட்டது, சிட்டு குருவிகள் எல்லாம் இன்று லேகிய டப்பாக்களில் மட்டுமே பறக்கின்றன, மரம் இல்லாததால் இன்று பிள்ளையாரும் சாலை ஓரங்களில் அதிகம் இல்லை, விழுதுகள் தொங்கி ஆடிய அரச மரங்களில் சதுர அடி இவ்வளவு என்று பிளாட் வந்துவிட்டது, மரத்தினடியில் தூங்கிய தேசாந்த்ரிகள் எல்லாம் இன்று புல்லெட் பைக்களில் தடதடகின்றனர், வேப்ப மர கொட்டையை கையில் அழுத்தி ரத்தம் வருதா என்று விளையாடிய பொழுதுகள் எல்லாம் இன்று வேப்ப மரத்தில் கொட்டை இருக்கா என கேட்க வைக்கிறது, நாட்டாமைகள் பஞ்சாயத்து செய்வதில்லை, வழியில் நிறுத்தி புளிய மர நிழலில் உண்ணும் அந்த கட்டுசாதம் இல்லை - ஹோட்டல்கள் வந்து விட்டன, மர நிழலில் இளைப்பாறும் ஆடு மாடுகளை காண முடியவில்லை அவைகளை தோலுரித்து காண்பதே வாடிக்கையானது, "அந்த புளியமரத்து பக்கத்துல ஒத்தயடி பாதை..." என்று வழி சொல்ல முடியவில்லை, நான் ஒன்று இரண்டு என்று எண்ணி கற்றுக்கொண்ட மரத்தில் பெயிண்ட் அடித்திருந்த அந்த மைல் கற்கள் எல்லாம் இன்று நிஜமாகவே கற்களாய் இருக்கிறது, மரங்களில் இனி மனிதன் தூக்கில் தொங்க முடியாது - மரமே இல்லாமல், குரங்குகள் வழியில் பழம் கேட்க முடியாது, இன்று பேய்கள், முனி என்றெல்லாம் மரம் கிடைக்காமல் அலையுமோ, இயற்கை உபாதைகளுக்கு மரங்களின் பின் ஒதுங்குவது என்ற சொல் வழகொழிந்து போகுமோ, நெடுந்தூர பயணத்தில் குழந்தை அழுதால் தொட்டிலை வானத்திலா கட்டுவது....முக்கியமாய் என் மகனோடு காரில் செல்கையில் எந்த மரமும் கூட ஓடி வருவதில்லை, அவனும் ஏன் மரங்கள் பின்னோக்கி ஓடுகின்றன என்று கேட்பதுமில்லை !!?







நாம் செல்லும் பயணம் இன்று சாலைகள் அகலமாக இருப்பதால் வெகு வேகமாக இருக்கிறது, ஆனால் மனதிற்கு சுகமாக இருக்கிறதா ?  இன்னும் ஒரு அசோக சக்ரவர்த்தி பிறக்கும் வரை நமது பயணங்கள் வேகமாக மட்டுமே இருக்கும்...சுகமாக இருக்குமா ?





10 comments:

  1. ரொம்ப பாதிக்கிறது.
    கோவையில் கவுண்டம்பாளையம் முதல் துடியலுர்ர் வரை கிட்ட தட்ட 1350 புளிய மரங்கள் இருந்தது..எப்பவும் நல்ல பசுமையுடன் இருந்த ரோடு இப்போது வெறும் தார் ரோடாய்..இளைப்பாற எங்கும் வழியில்லை.....வெட்டி வீழ்த்தி விட்டனர்..

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஜீவா....பயணம் விரைவாக இருந்தாலும், சுகமாக இல்லை என்பதே உண்மை. வழியில் நிறுத்தி புளியங்காய் சாப்பிட்ட அனுபவம் எல்லாம் இப்போது இல்லை !

      Delete
  2. //அவ்வளவு மரங்களையுமா வெட்டிவிட்டார்கள்? மிக வருத்தமாக இருக்கிறது.//

    அவ்வளவு மரங்களையுமா வெட்டிவிட்டார்கள்? மிக வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆம் பந்து....கிருஷ்ணகிரியில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள விரைவு சாலைகளில் இருந்த எல்லா மரங்களும் வெட்டப்பட்டு விட்டன....

      Delete
  3. மரம் இல்லையேல் மழை இல்லை.. மரங்களை வெட்ட அனுமதித்த சமூகம் அதை அனுபவிக்கும்.. :-(

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே....உலக வெப்பமயமாக்கல் என்பது இன்று நம்மை அச்சுறுத்தும் ஒன்றாகிவிட்டது இல்லையா. நமது சந்ததியினருக்கு ஒரு நல்ல உலகத்தை விட்டு செல்ல வேண்டும்...

      Delete
  4. Replies
    1. வாடா பூங்கொத்து அளித்தமைக்கு மிக்க நன்றி....தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மீண்டும் பணிவான நன்றிகள் !

      Delete
  5. ரன்ஜனி அவர்கள் அறிமுகம் வழியாக, உங்கள் பதிவிற்கு வர முடிந்தது.

    மரங்களுக்கு பதிலாக, மனித வளம் பெருக்கி, அந்த மனித வெள்ளத்தை,சரியான முறையில் வளர்க்காமல், டீ.வீ , சினிதா கலாச்சாரம் தான் வாழ்க்கை என்று இருக்கும் , இந்த சமுதாயம், எப்போது மரங்களை பற்றி கவலைப்படப் போகிறது?

    ReplyDelete
    Replies
    1. எனது பதிவை அறிமுகபடுத்திய ரஞ்சனி அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்....மனிதர்கள் மரத்தினை பற்றி கவலைப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை பட்டு ராஜ் !! விரைவில் வரும் என்று தோன்றுகிறது....தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

      Delete