Saturday, October 13, 2012

புரியா புதிர் - நர்மதா அணை விவகாரம்

 மேதா பட்கர்...இவரை பற்றி தெற்கில் வாழும் நமக்கு என்ன தெரியும் ? எனக்கு ஒரு வருடம் முன்பு வரை அவர் ஏதோ ஒரு அணையை தடுக்க போராடி வருகிறார் என்று மட்டுமே தெரியும். அது என்ன அணை, அது வந்தால் என்ன என்று எல்லாம் தெரியாது. மேலோட்டமாக பார்த்தால் ஒரு அணை என்பது நாட்டுக்கு நன்மையே செய்யும், இதை ஏன் தடுக்க வேண்டும் என்று தோன்றலாம், ஆனால் இந்த போராட்டத்திற்கு பின் ஒரு மக்களின் வலி இருப்பது நமக்கு தெரிவதில்லை.





இந்த போராட்டத்தை இன்றும் முன்னெடுத்து செல்வது இவர்தான், இதனால் இவருக்கு பல மிரட்டல்கள் வந்தாலும் அதை எல்லாம் புறம் தள்ளி விட்டு நடை போடுகிறார். "நர்மதா பச்சாவ் அந்தோலன்" போராட்டம் பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய முன்னோட்டம்.....நர்மதா நதியானது மத்திய பிரதேசத்தில் ஆரம்பித்து 1312 கிலோமீட்டர் பயணம் செய்து குஜராத்தில் கடலில் கலக்கிறது. நேருவின் கனவான பரந்த, புதிய இந்தியா கொள்கையால் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் இந்த அணையை நிர்மாணிக்க தீர்மானித்தார். 1965ம் ஆண்டு க்ஹோச்லா கமிட்டி 530 அடி அணை ஒன்றை நவகம் (இன்றைய சர்தார் சரோவர் அணை) ஒன்றை சொல்லி, அதில் கிடைக்கும் நீரை மத்திய பிரதேசத்திற்கும், குஜராதிர்க்கும் பிரித்து கொள்ள சொல்லியது. ஆனால், மத்திய பிரதேஷம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் செலவை பிரித்து கொள்வதில் பிரச்சனை ஏற்பட்டது. 1969ம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் நர்மதா நதி நீர் ஆணையம் (NWDT) ஒன்றை அமைத்து இந்த பிரச்னையை தீர்த்து கொள்ள செய்தார். இதன் மூலம் மத்திய பிரதேஷம் அணையின் உயரம்  210 அடியாக இருக்க வேண்டும் என்று சொல்ல, குஜராத் மாநிலமோ அணையின் உயரம் 530 அடி உயரம் இருந்தால்தான் குஜராத் பயனடையும் என்று வாதிட்டது. முடிவில், 1979ம் ஆண்டு இந்த ஆணையம் 453 அடிக்கு ஒப்புதல் அளித்தது.....அதை 455 அடி என்று முடிவில் ஏற்று கொண்டனர்.




இந்த நதியின் குறுக்கே அணை கட்டி ஆங்காங்கே தடுத்து நிறுத்தினால் (30 பெரிய அணை, 135 மத்திய அணை, 3000 சிறிய அணைகள்) நிறைய பயன் கிடைக்கும். ஆகையால் உலக வங்கியின் உதவியுடன் இந்த திட்டம் 1985-இல் தொடங்கப்பட்டது. இதை கேள்விப்பட்டு சென்ற மேதா பட்கர்
ஒன்றை உணர்ந்தார்....இந்த திட்டம் ஒரு முழுமையான ஆய்வுசெய்து முடிக்கபடாதது, அதாவது
ஒரு உதாரணமாக எடுத்து கொண்டால்....100 கிராமங்கள் பயன் பெற வேண்டும் என்று 1000 கிராமங்களை அழிக்காதே என்பதே. இந்த அணை கட்டும்போது வழியில் இருக்கும் கிராமங்கள், காடுகள் அழிக்கப்படும், அது மட்டும் இல்லாமல் இதன் மூலம் பெறபடுவதாக கூறப்படும் மின்சாரமும் குறைவாக இருக்கும் என்பது இவர்களது வாதம். அது மட்டும் இல்லை...அழிவது தலித், பழங்குடியினர் என்பதால், இந்த  அணையினால் மூழ்கும் கிராமத்திற்கு குறைந்தபட்சம் தகவல் கூட தெரிவிக்கவில்லை.  இதை அவர் சொல்லஆரம்பிக்க அணைத்து கிராமங்களும் திரண்டன, போராட்டங்கள் வெடித்தது. முடிவில் அரசாங்கம் அவர்களின் மூழ்கும் பயிர்களுக்கு பணம் கொடுத்தது,
ஆனால் அவர்களின் வீடுகளுக்கு, நிலங்களுக்கு இன்றும் பணமோ, மாற்று ஆதாரமோ கொடுக்கவில்லை..... இன்றளவிலும் !!

மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...நர்மதா அணை பிரச்சனை விவரம்.






இன்றும் மேதா பட்கர் இவர்களுக்காக குரல் கொடுக்கிறார், அவரது போராட்டம் இன்று ஆதரவற்ற மக்கள், அரசாங்க திட்டங்கள் அவர்களை அடிமை படுத்துவதை தடுக்கிறது. இந்த காணொளியை கண்டால் உங்களுக்கு இந்த போராட்டத்தினை பற்றி இன்னும் தெளிவாக தெரியும்....முதல் மூன்று நிமிடங்கள் விட்டு பார்க்கவும்.

1 comment:

  1. நர்மதா அணை பற்றிய மேலும் தகவல்களுக்கு,
    https://puththakam.wordpress.com/2015/10/11/146-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D/

    ReplyDelete