Wednesday, October 17, 2012

டிவி - தடங்கலுக்கு வருந்துகிறோம் ?!

சமீபத்தில் எனது வீட்டில் எல்லோரும் வெளியே சென்றுவிட்டனர், எனக்கு பொழுது போக வில்லை என்று டிவி முன்பு உட்கார்ந்தேன். மனம் அலைபாய்ந்து கொண்டு இருந்ததால் சேனல் மாற்றிகொண்டே இருந்தேன்....சுமார் முப்பது நிமிடங்கள் வரை இது நடந்தது. சட்டென்று தோன்றியது இந்த இந்தியாவில் அல்லது உலகில் எத்தனை சேனல்கள் இருக்கின்றன என்று ? உண்மையிலேயே டிவி நமது வாழ்வை வளமாக்குகிறதா அல்லது பாழ் ஆக்குகிறதா ??


உலகம் முழுவதும் இன்று சுமார் 27,000 டிவி சேனல்கள் உள்ளன, அதில் இந்தியாவில் மட்டும் 1400 சேனல்கள் (நம்ம லோக்கல் கேபிள் எல்லாம் இதில் சேர்க்கவில்லை!!), இதில் நம்ம தமிழ்நாட்டில் மட்டும் 59 சேனல்கள் உள்ளன, இதில் இன்னும் 11 சேனல்கள் சீக்கிரமே சேர்க்கப்பட உள்ளன.  இப்போதெல்லாம் டிவி என்பது இல்லாமல் அதுவும் கேபிள் இல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது என்று தோன்றுகிறது. டிவி என்பது நமது வாழ்வில், குடும்பத்தில் ஒரு முக்கிய நபர் இல்லையா ?


முதன் முதலில் எங்களது வீட்டில் சாலிடர் கலர் டிவி ஒன்று வாங்கியபோது அதற்க்கு ஒன்பது சேனல் பட்டன்தான் இருந்தன, ஆனால் வந்த டிவி சேனலோ ஒன்று !! காலை ஆறுமணிக்கு அது ஆரம்பித்தால் அதுவும் ஹிந்தி தெரியாத நமக்கு எல்லாம் அது ஒரு இம்சை. மாலை ஆறு மணிக்கு வரும் வயலும் வாழ்வும், சித்ரஹார், ஒளியும் ஒளியும் என்று வெகு சில நிகழ்சிகளே இருந்தன வாழ்வும் நிம்மதியாக இருந்தது ! :-)                                           

இன்று நினைத்து பாருங்கள்...சுமார் 59 தமிழ் சேனல்கள், 150 வரை பிற மொழி சேனல்கள் நமது வரவேற்பறையில் !! இது சாபமா....வரமா ? இந்த டிவி வருவதற்கு முன் நமது வாழ்வு நன்றாக இருந்ததா இல்லை வந்த பின்பா என்று நமது சாலமன் பாப்பையாவை வைத்து நாம் பட்டிமன்றமே நடத்தலாம் !! முன்பெல்லாம் நமக்கு நேரம் நிறைய இருந்தது, அதுவும் பண்டிகை நாட்களில் நாம் எல்லோரும் வீட்டுக்கு வெளியில்தான் இருப்போம் ஆனால்  இன்று நமது அத்தனை நேரமும் டிவியின் முன் மட்டுமே. எங்கே போனது நமது பகிர்ந்து கொள்ளும் முறை ??


இந்த டிவியால் நமது வாழ்வில் சந்தோசமும் உண்டு, சங்கடங்களும் உண்டு !!   கல்யாணம் ஆகி ரொம்ப வருசத்திற்கு அப்புறம் என் பொண்டாட்டியோட ஒன்னு விட்ட மாமா வீட்டுக்கு போயிருந்தேன், ஆனா அவருக்கு என் மேல என்ன கோவமோ தெரியலை சும்மா புரட்டி புரட்டி எடுத்துட்டார் !! அட, அவரா போட்டு என்னை புரட்டி எடுத்து இருந்தா பரவாயில்லை ஆனா அவர் இந்த டிவியை வைச்சு அதை பண்ணினதைதான் என்னால தாங்க முடியலை ! இப்போ எல்லாம் விருந்தாளியா சில பேரு வீட்டுக்கு போகணும்ன்னா இந்த மெகா சீரியல் இல்லாத டைம், இல்லேன்னா இந்த உலக தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக போடப்படும் படம் போடாத நாளா போகணும் போல...அட இந்த டிவியே இல்லாத வீட்டுக்குத்தான் போகணும் போல. நாம அவங்க வீட்டுக்கு போனா "நீ ஏன் வந்த ?" அப்படின்னு மூஞ்சிய தூக்கி வச்சிக்கிறாங்க.


அவர் பாட்டுக்கு டிவியில் சேனலை மாற்றி மாற்றி பார்கறார், நானோ அவர்கிட்ட பேச ட்ரை பண்ணினேன், அதாவது எனது கேள்விக்கு அவர் டிவி மூலமா பதில் சொன்னார் !! இது நடந்தப்ப...எனக்கு நிறைய பல்பு கிடைச்சது !! எனக்குனே அவர் பார்த்து பார்த்து சேனல் மாற்றியது போல இருந்தது, நீங்களே பாருங்க...இது ஒன்றும் கற்பனை இல்லை மக்களே, உண்மையிலேயே அன்று சேனல் மாற்றும்போது இதுதான் வந்தது !

நான் : எப்படி இருக்கீங்க ?

டிவி : நல்லா இல்லேன்னு சொன்னா இப்போ என்ன பண்ண போற ?

நான் : ரொம்ப நாள் ஆச்சு வந்து, அதான் அப்படியே வந்து உங்கள பார்த்துட்டு போகலாமின்னு...

டிவி : டேய்...இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா பத்தி ஊருக்குள்ள போய் நல்லா சொல்லணும், முக்கியமா இந்த பொண்ணுகளுக்கிட்ட...

நான் : அப்பா அம்மாவும் கூட வரணுமின்னு நினைச்சாங்க, ஆனா வர முடியலை.

டிவி : கண்ணா...பன்னிங்கதான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளாதான் வரும்...

நான் : உங்க பொண்ணுக்கு முடி இறக்க கூப்பிட்டப்ப, நான் கொஞ்சம் பிஸியா இருந்ததாலதான் வர முடியலை...

டிவி : நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா ?

இப்படியே சென்றது எங்களது பேச்சு.....:-(


நமது வரவேற்பறை முழுதும் இன்று டிவி மட்டுமே ஆக்கிரமிப்பு செய்து உள்ளன, உலகின் செய்தகள் தகவல்கள் எல்லாம் இன்று நம் கண் முன் கொண்டு வந்தாலும் டிவி என்பது நம்மை நமது குடும்பத்துடன் ஓட்ட விடாமல் செய்கிறது என்பது ஒரு சத்தியமான உண்மை ! நீங்கள் டிவி பார்க்கும்போது உங்களது மனது அல்லது மூளை எதையும் சிந்திக்காமல் அது கிரகிக்க மட்டுமே செய்கிறது, என்னதான் நீங்கள் டிஸ்கவரி சேனல் பார்த்து அறிவை வளர்கிறேன் என்று சொன்னாலும் அதை நீங்கள் பகுத்து ஆராயாமல் இருந்தால் அது உங்களை மூளை செலவை செய்து விடும். உதாரணமாக நொடிக்கொரு முறை குழந்தைகளுக்கு ஹோர்லிக்ஸ்தான் சிறந்தது என்று சொல்லிக்கொண்டே இருந்தால், அடுத்த மாதம் நீங்கள் உங்களது வீட்டில் ஹோர்லிக்ஸ் வாங்கி இருப்பீர்கள்.


வீட்டில் எப்போதும் டிவி ஓடிக்கொண்டே இருக்கும், நான் இருந்தால்
செய்திகள் அல்லது காமெடி, அம்மாவுக்கு மெகா சீரியல்கள் அல்லது பழைய
படம் / பாடல்கள், எனது மனைவிக்கு பாட்டு அல்லது ஹிந்தி படங்கள், அப்பாவுக்கு எல்லா சேனல்களும் !! நமது வீட்டில் வரவேற்பறை என்று
ஒன்று உண்டு, அது இன்று உண்மையிலேயே வரவேற்பரைதானா !! நமது விருந்தினரை எல்லாம் முழு மனதுடன் வரவேற்கிறோமா என்ன ?
முன்பெல்லாம் நமது வீட்டுக்கு யாரவது வந்தால் அவர்களை வரவேற்று பேசி மகிழுவோம், அவர் நாங்கள் சென்று வருகிறோம் என்று சொன்னால் கூட இருந்துவிட்டு போங்கள் என்போம், ஆனால் இன்றெல்லாம் அப்படி இருக்க முடிகிறதா ? இந்த டிவி வந்ததிலிருந்து நம் வீட்டு மனிதர்களையே மறந்து விட்டோம், இதில் விருந்தினர்கள் எந்த மூலை !

4 comments:

 1. முடிவில் சொன்னீர்களே... அது உண்மை...

  எல்லாம் சரி தான்...

  தொ(ல்)லைக்காட்சி பார்த்து பல நாட்கள் ஆகி விட்டது...

  16 Hours Power cut...

  ReplyDelete
  Replies
  1. எனது கருத்தை ஆமோதிததர்க்கு மிக்க நன்றி....அது போல உங்களது கருத்தையும் ஆமோதிக்கறேன் (16 மணி நேர பவர் கட் )....என்ன கொடுமை சரவணன் !!

   Delete
 2. Replies
  1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே !

   Delete