Friday, October 26, 2012

எல்லாத்துக்கும் அவசரம் ?!

இன்று நான் ஆபீசுக்கு புறப்பட்டு கொண்டு இருந்தபோது எனது மகன் தனது பிஞ்சு கைகளால் ஒரு பூவை கொண்டு வந்து கொடுத்து, தனது மழலையால் தேங்க் யூ என்று தலையை ஆட்டி சொன்ன போது நான் அவசர கதியில் அதை வாங்கி பக்கத்தில் வைத்துவிட்டு டிபன் ரெடியா என்று குரல் கொடுத்ததை பார்த்த அவன், நொடியில் முகம் வாடி தள்ளி சென்றான்....மனதில் அது தைத்தாலும், அவசரம் என்பதால் ஒன்றும் சொல்லவில்லை. அன்று எப்பொழுதும் அவன் எனக்கு எடுத்து கொடுக்கும் சூ, எனது பேக், அவனை அன்றாடம் கூட்டி செல்லும் ரவுண்டு, முத்தம் என்று எதையும் ஏற்க எனக்கு பொறுமை இல்லை. அவசரம் அவசரம் அவசரம் மட்டும்தான்.....இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி இருந்தால் இதை எல்லாம் நான் செய்திருக்க முடியும், இப்படி இந்த அவசரத்தினால் எத்தனை பேர் காயப்பட்டு இருந்திருகிறார்களோ ? எவ்வளவு சந்தோசத்தினை நாம் இழந்து இருக்கிறோம் என்று யோசித்தது உண்டா ?







எதனால் இந்த அவசரம் என்று என்றாவது நீங்கள் நின்று நிதானித்து யோசித்து பார்த்து இருக்கிறீர்களா ? காலையில் நீங்கள் ஆபீஸ் கிளும்புவது, முன்னால் போகும் வண்டியை ஓவர்டேக் செய்வது, சிக்னலில் பச்சை விழும் முன் போவது, இருக்கும் இடைவெளிகளில் எல்லாம் புகுந்து புறப்படுவது, சிலசமயம் பிளாட்போம் ஏறி கூட, ஆபீஸ் சென்ற பின் பார்க்கும் வேலைகளில், மதியம் உணவு உண்ணும்போது தண்ணீர் கூட குடிக்காமல் அவசரமாக, ட்ரெயின் ஸ்டேஷனில் வரிசை பாராமல் டிக்கெட் எடுப்பது, சாமி கும்பிட போகும் இடங்களில் நெட்டி தள்ளி தரிசனம், டிவி பார்க்கும்போது கூட சில நொடி விளம்பரங்களுக்கு சேனல் மாற்றுவது என்று எல்லாவற்றிலும்....யோசித்து பாருங்கள், நீங்கள் காணும் கனவுகளில் கூட நீங்கள் ஓடிக்கொண்டுதான் இருப்பீர்கள் !






பல ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் எல்லாவற்றிலும் ஒரு நிதானம் இருந்தது, நாம் வாங்கும் பொருட்கள், டாக்டரிடம் பேசும்போது, பஸ்சில் ஏறும்போது, கடிதங்கள் அனுப்புவது, வெளியூர் பயணங்கள் திட்டமிடும்போது, வண்டியில் செல்லும்போது, குழந்தைகளை விளையாட அனுமதிக்கும்போது என்று எதிலும் ஒரு நிதானம். ஆனால் இன்று எல்லாமே துரித கதியில் நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம் இல்லையா ? ஒரு சில நிமிடங்கள் நீங்கள் தாமதமாக சென்றால் ஒன்றும் நிகழாது என்று தெரிந்தும் சிலவற்றில் அவசரம் தெறிப்பது ஏன் ?






ஸ்பீட் போஸ்ட், மிக வேக விமானம், LMS பஸ், அரை மணி நேரத்தில் சுடிதார் தைக்கப்படும், 8Mbps இன்டர்நெட், தட்கல் டிக்கெட், பாஸ்ட் புட், 200சிசி பைக், ஆப்பிள் kidz ப்ளே ஸ்கூல், எக்சிகூட்டிவ் MBA, ரெடிமேட் சாம்பார் பொடி, அரைத்த மாவு, பாட்டில் பானங்கள், ஐந்து நிமிடத்தில் ஐ செக்கப், பத்து நிமிடத்தில் சிறுநீரக கட்டி கரைக்கப்படும், ஆறு வருடத்தில் உங்கள் பணம் இரட்டிப்பாகும், ஒரே வருடத்தில் கோடீஸ்வரன் புத்தகம், இன்ஸ்டன்ட் காபி, கிரைண்டர், மிக்ஸி, வாஷிங் மெஷின், அபாகஸ் என்று இவைகள் எல்லாம் அவசர உலகில் உங்களிடம் இருந்து பணம் பறிக்க ஏற்படுத்தப்பட்ட ஒன்று. மற்றவரிடமிருந்து நீங்கள் ஒரு அடி முன்னே செல்ல வேண்டும் என்ற வேட்கையால், நீங்கள் ஆரம்பித்த இது இன்று எல்லோருக்கும் தொற்றி கொண்டது என்பதை நீங்கள் நினைத்து பார்த்தீர்களா. நமக்கு மட்டும் இதனால் பாதிப்பு இல்லை...நிறைய ஏழை மக்களும் இதனால் பாதிக்கபடுகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா ?






நான் எல்லாம் LKG இல் இருந்துதான் கற்றுக்கொள்ளவே
ஆரம்பித்தேன்,  ஆனால் இன்று ப்ளே ஸ்கூல் என்று இரண்டரை வயதில் இருந்து கட்டாயம்.....அது எல்லாம் இல்லாமல் இருந்த நாமெல்லாம் முன்னேறவில்லையா, அல்லது சந்தோசமாகத்தான் இல்லையா ?


இந்த அவசரத்தினால் நாம் சிறு சிறு சந்தோசங்களை எல்லாம் இழக்கிறோமே அது உங்களது கண்களுக்கு தெரியவில்லையா ? காலையில் புறப்படும் அவசரத்தில் வீட்டில் இருக்கும் எல்லோரது சந்தோசத்தையும் பறிக்கிறோம், சாலையில் நாம் காட்டும் அவசரத்தில் எவருக்காவது விபத்தை பரிசளிக்கிறோம், சாமி கும்பிட போய் மன நிம்மதி இல்லாமல் திரும்புகிறோம், பிள்ளைகளை படிப்பு தவிர கீ போர்டு, கராத்தே, ஸ்கேடிங், டிராயிங் என்று படுத்துகிறோம், இப்படி நம் அவசரத்திற்கு கொடுக்கும் விலை தெரிவதில்லை....ஒரு நாள் அவசரபடாமல் பொறுமையாக சாப்பிட்டு, வண்டி ஒட்டி, ஆபீசில் வேலை செய்துதான் பாருங்களேன்.......மனமும் மனிதமும் உங்களினுள் மலர்வதை !!








6 comments:

  1. ஆழமாக சிந்தித்து
    அருமையாகப் பதிவிட்டிருக்கிறீர்கள்
    நமது அவசரமே அனைத்து தீமைகளுக்கும்
    காரணம்.வீட்டில் மெதுவாக நூலின் நுனியைப் பிடித்து
    உலகை வலம் வந்தது அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆம் ரமணி சார்....வேகம்தான் வாழ்க்கை என்றாகிவிட்டது இப்போது !! ஆனால், யாருக்கும் புரிவதில்லை வேகமாக செல்வதினால் ஏற்படும் விபத்துக்களை பற்றி, இன்றைய குழந்தைகள் வாழ்வை அனுபவிப்பதை விட வேகமாக வாழ்ந்து மடிய ஆசைபடுகிறார்கள் என்பதுதான் எனது வேதனை !

      Delete
  2. உண்மை தான்... சென்னையில் பதினைந்து வருடம் இருந்தேன்... ஆனால் வருடம் போனது தெரியவில்லை...

    இங்கு இப்போது நிம்மதியாக... சந்தோசமாக... ஒவ்வொரு நிமிடமும் ரசிக்க வேண்டும்... அவசரப்பட்டு, எதுவும் புதுமையாக ஆகி விடப் போவதில்லை...

    நல்லதொரு அலசலுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் ! கண்டிப்பாக நின்று நிதானித்து யோசித்து பார்த்தல் நமக்கே புரியும் இந்த அவசரம் எவ்வளவு பிரச்சனைக்கு காரணம் என்று.....தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  3. Nanbar suresh, neenda natkalukku piragu thirumbina valaipathivil naan rasitha nalla sinthanai. Valarga thangal payanam. Vazhthukal.

    Nandrigaludan,
    Ram. S'pore

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ராம், தங்களது தொடர் உற்சாகம் என்னை மென் மேலும் எழுத தூண்டுகிறது !

      Delete