Wednesday, October 31, 2012

ஒரு ஆஸ்பத்திரியை கடக்கும்போது....!!?

ஒரு மருத்துவமனையை கடக்கும் போது உங்களது மனதில் என்ன உணர்வு இருக்கிறது ? நீங்கள் ஒரு புதுப்படம் ஓடும் திரை அரங்கை கடக்கும்போது அந்த படம் எப்படி இருக்கும் என்ற எண்ணம் ஓடும், ஒரு ஷாப்பிங் மால் கடக்கும்போது அதனுள் இருக்கும் பொருட்களின் விலை என்ன இருக்கும் என்று தோன்றும், சுடுகாடு கடக்கும்போது பேய் வந்து நினைவில் பயமுறுத்தும், ஒரு உணவகத்தை கடக்கும்போது "இங்கதான பரோட்டாவுக்கு சால்னா நல்லா இருக்கும்ன்னு நம்ம தோஸ்து சொன்னான்" என்று ஓடலாம், அலுவலகத்தை கடக்கும்போது வேலை யாபகம் வரும், பூக்கடையை கடக்கும்போது மனைவி யாபகம் வருவாள், விளையாட்டு சாமான் கடையை கடக்கும்போது குழந்தைகள் யாபகம் வருவார்கள்....இப்படி நீங்கள் கடந்து போகும் ஒவ்வொரு கடைக்கும் உங்களது மனது ஏதாவது ஒன்றை யாபக படுத்தும் இல்லையா ? இப்போது சொல்லுங்கள்.....ஒரு மருத்துவமனையை நீங்கள் கடக்கும்போது உங்களது மனது எதை நினைக்கும் ?இப்போதெல்லாம் தனியார் மருத்துவமனை என்பது ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்று உள்ளது. வெளியில் இருந்து பார்பதற்க்கு அவ்வளவு பகட்டு, உள்ளே அவ்வளவு சுத்தம், பார்கிங் வசதி, உள்ளேயே உணவு என்று இருப்பதால்தானோ என்னவோ மக்களுக்கு இதனுள்ளே வலியினால் துடிக்கும் மனிதர்களை நினைத்து பார்ப்பதில்லை. கதவின் இடுக்கினுள் கை விரல் சிக்கிக்கொண்டாலே கதறும் நமக்கு, இந்த மருத்துவமனைகளில் ஒரு கையே இல்லாமல் கதறி கொண்டு இருக்கும் ஒரு உயிர் நினைவுக்கு வருவதில்லை.
நமது உடம்பு நன்றாக இருக்கும் வரை.... பாதாம் பால், முறுகலான தோசை, கெட்டி சட்னி, வெண்பொங்கல்-வடை, சிக்கன் கபாப், வத்த குழம்பு - சுட்ட அப்பளம், பஜ்ஜி - சொஜ்ஜி, கற்கண்டு பால் என்று அதற்க்கு அவ்வளவு சிறப்பான சேவைகள், அதனால் இந்த உடம்புக்கு வரும்போது அதன் வலி எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை. எனது அம்மா படுத்திருந்த படுக்கைக்கு பக்கத்தில் ஒரு இருபத்தி ஐந்து வயது மதிக்க தக்க ஒரு இளைஞன் தனது இரு சிறுநீரகமும் செயல் இழந்து கிடந்தான், மருந்தின் வீரியம் குறையும்போது எல்லாம் அவன் துடித்ததை பார்க்க முடியவில்லை. இதுபோல நிறைய மனிதர்கள்.....நெருப்பில் சிக்கி தோல் கருகியவர்கள், கண்ணில் ஊசி தெரியாமல் குத்தி கொண்டவர்கள், உடல் சிதைந்தவர்கள், கோமாவில் இருப்பவர்கள், இதயம் - சிறுநீரகம் மாற்றி பொருத்தியவர்கள், டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு, பிள்ளை பேறு வேண்டி, குழந்தைக்கு காய்ச்சல், மூளையில் கட்டி, கை வீக்கம், சர்க்கரை வியாதி என்று இன்னும் இன்னும் பெயர் சொல்ல முடியாத வியாதியுடன் எல்லாம் உள்ளே வழியில் அனர்திகொண்டு மனிதர்கள். அவர்கள் வலியோடு என்றால், இவர்களின் உறவுகள் வெளியில் வைத்தியத்திற்கு பணத்திற்காக துடித்து கொண்டு இருப்பார்கள்.


எங்கள் வீட்டில் வேலை செய்யும் ஒரு அம்மாவின் மகனுக்கு வயிற்றில் அப்பெண்டிக்ஸ் என்று சேர்த்து விட்டார்கள். தினமும் வேலை செய்தால்தான் வீட்டில் உலை என்ற கஷ்டத்தில் இருக்கும் அவருக்கு, பிள்ளையின் வேதனை பொறுக்க முடியாமல் எல்லாவற்றையும் விற்று விற்று அவனை சரி செய்தார். இப்படி ஒரு மருத்துவமனை என்பது துயரம் மிகுந்ததாக இருக்கிறது. நான் கவனித்திருக்கிறேன், சாலையில் விரையும் மனிதர்கள் யாவரும் ஏதாவது கோவில் பார்த்தால் உடனே கன்னத்தில் போட்டு கொண்டு உலக அமைதிக்கு வேண்டி கொள்வதை.......இனி நீங்கள் ஒரு மருத்துவமனையை கடக்கும்போதும் கடவுளிடம் வேண்டிகொள்ளுங்கள்....."சீக்கிரம் இந்த மருத்துவமனையின் உள்ளே இருக்கும் நோயாளிகளின் நோய்கள் குணமாகட்டும், அவர்களின் வேதனை தீரட்டும்" என்று, நீங்கள் உங்களுக்காக பிராத்தித்தால் இந்த கடவுள் மனம் இரங்கி நிறைவேற்றுவார் என்று நினைத்தால், அவர்களுக்காகவும் ப்ராத்தியுங்களேன் !!


5 comments:

 1. நல்ல பதிவு. இப்படித் தோணுனதே இல்லை இதுவரை.

  ஆனால் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டதும் அதுலே உள்ள நோயாளி நல்லபடி குணமாகிப் பிழைத்து வரணுமுன்னு வேண்டுவேன் எப்போதும்.

  இனிமேல் மருத்துவமனையைக் கடக்கும்போது பிரார்த்திப்பேன்.

  நன்றி.

  பி.கு: எங்க ஊரில் ஒரே ஒரு மருத்துவமனைதான் இருக்கு. அதுவும் அரசு நடத்துவது. தனியார்களுக்கு இங்கே அனுமதி இல்லை.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மேடம், நீங்கள் இனி இதை செய்வேன் என்று சொல்வதே எனக்கு சந்தோசம். உங்களது உற்சாகமான வார்த்தைகளுக்கு மீண்டும் எனது நன்றிகள்.

   Delete
 2. அருமை,நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வர்குகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே !

   Delete