Friday, November 30, 2012

நான் ரசித்த குறும்படம் - ப்ரீ ஹிட்

எதையும் நல்லதாகவே நினைக்க வேண்டும் என்பதை ஒரு நல்ல நகைச்சுவையான கதை மூலம் உணர்த்தி இருக்கிறார் இந்த குறும்பட இயக்குனர் பாரதி பாலா. நான் எப்போதும் சொல்வதுபோல, ஒரு குறும்படம் என்பது உங்களை முதல் 30 வினாடியில் கட்டி போடவில்லை என்றால் அதை யாரும் பார்க்க மாட்டார்கள், இந்த குறும்படம் சரியாக அந்த முப்பதாவது வினாடியில் இருந்து இரு எதிர்பார்ப்பை கிளப்பி விடுகிறது !! அந்த பால் சுவற்றில் ஒட்டி கொள்ளும்போது அட என்று எண்ண தோன்றுகிறது, அதன் பின்னர் வருவது எல்லாம் நல்ல காமெடி, முடிவில் ஒரு மெசேஜ்.

வாழ்த்துக்கள் பாரதி பாலா, விரைவில் வெல்வீர்கள் !


Thursday, November 29, 2012

சாகச பயணம் - டெசெர்ட் சபாரி (பகுதி - 1)

சமீபத்தில் கத்தார் சென்றிருந்தேன், இது பெங்களுருவில் இருந்து நான்கு மணி நேர விமான பயணத்தில் இருக்கிறது. விமானத்தில் இருந்து இறங்கும்போதே உங்களுக்கு தெரிந்துவிடும்....மணல், மணல் எங்கும் மணல்தான் ! இது போன்ற எண்ணை வளம் மிக்க வளைகுடா நாடுகளில் பாலைவனம் என்பது சாதாரணம், அந்த பாலைவனத்தின் அடர்ந்த பகுதிக்கு நீங்கள் சென்று வந்தால் எப்படி இருக்கும் ? தண்ணீர் தவிக்கும் அந்த அனுபவம் எப்படி இருக்கும் ? பாலைவன சோலை எனபது எப்படி இருக்கும் ? இதற்கெல்லாம் விடைதான் இந்த பாலைவன சாகச பயணம்.


இந்த பாலைவன பயணத்திற்கு என்று சில விதிமுறைகளும், தயாரிப்புகளும் உங்களுக்கு மிகவும் அவசியம். அப்படி இல்லையென்றால் மிகவும் கஷ்டபடுவீர்கள் ! நாங்கள் கத்தார் நகரில் இருந்து சில கிலோமீட்டர் தள்ளி வந்ததுமே மணல்தான் தெரிந்தது. அந்த மணல்வெளியில் நல்ல அருமையான ரோடுகளை பார்க்கும்போது மனதுக்கு மகிழ்ச்சிதான் ! இந்த பயணத்திற்கு என்று உங்களுக்கு நான்கு வ்ஹீல் டிரைவ் கொண்ட கார் தேவைப்படும், சாதாரண கார்கள் மூலம் இந்த பாலைவனத்தை கடக்கவே முடியாது. இந்த பயணத்திற்கு 800 ரியால் ( 1 ரியால் = சுமார் 15 இந்திய ரூபாய்கள் ) வாங்குகின்றனர். நான்கு பேரோ, ஆறு பேரோ அல்லது ஒருவரோ.....800 ரியால் !


வழியெங்கும் சில இடங்களில் டென்ட் போட்டு கொண்டு மக்கள் தங்கி இருந்ததை பார்க்க முடிந்தது, ஒரு பாலைவனத்தில் அவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் வைத்துகொண்டு, குளிர்சாதன பெட்டி, டிவி என்று எல்லாவற்றையும் ஜெனரேட்டர் மூலம் இயக்குகின்றனர். இவர்கள் எல்லோரும் எண்ணை எடுக்கும் இடங்களில் வேலை செய்கின்றனர், ஊரின் உள்ளே சென்று வருவதற்கு நேரம் ஆவதால் இப்படி தங்கி கொண்டு வார கடைசியில் மட்டும் சென்று வருகின்றனர். ஆளுக்கு ஏற்றார் போல டென்டின் வசதிகள் மாறுபடுகின்றன. கீழே உள்ள படத்தை பார்த்தால் இப்படி ஒரு டென்டின் உள்ளே உள்ள வசதிகள் புரியும்.ஊரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரம் வரை வந்து பாலைவனத்தின் ஆரம்ப எல்லையை தொட்டோம். அங்கிருந்து சவுதி அரேபியாவின் எல்லை வரை செல்லலாம் என்று எண்ணம். பொதுவாக நாம் தார் ரோட்டில் செல்லும்போது கார் டயரில் முழுவதுமாக காற்று பிடித்திருப்போம், ஆனால் நீங்கள் பாலைவனத்தில் இப்படி சென்றால் மிகவும் சிரமமாக இருக்கும், அதனால் இவர்கள் டயரில் இருந்து காற்றை பாதி வரை வெளியேற்றி விடுகின்றனர். இதனால் உங்களது பயணம் பாதுகாப்பாகவும், விரைவாகவும், குலுங்கல் இல்லாமலும் இருக்கும். பாலைவனத்தில் செல்லும்போது நீங்கள் நான்கு வீல் டிரைவ் செய்ய வேண்டும். இரு வீல் - நான்கு வீல் டிரைவ் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள இந்த வீடியோ பாருங்கள்.
 பொதுவாக அமெரிக்க அல்லது ஐரோப்பிய மக்கள் இந்த வகை சாகச பயணங்களை மிகவும் விரும்புகிறார்கள் என்பதை கண்கூடாக காண முடிந்தது. நாம் சாதரணமாக தொலைத்தூர பயணம் என்றாலே டிரைவர் வேண்டும் என்கிறோம், இவர்கள் எல்லாம் ஆள் இல்லா பாலைவனத்தில் GPS, சாட்டிலைட் போன் அல்லது இது எதுவும் இல்லாமல் செல்வதை காணலாம். எனக்கு வந்த டிரைவர் இதை பற்றி சொல்லும்போது.... இவர்களே சில நேரங்களில் மண் தன்மையை பற்றி தெரியாமல் மாட்டி கொள்வதுண்டு, அது மட்டும் இல்லாமல் சூரியனையும், திசையையும் கொண்டு சென்றால் மட்டுமே திரும்ப முடியும் என்கிறார். எங்களது பயணம் ஆரம்பமானது......சில நொடிகளில் ஊர் கண்ணில் இருந்து மறைந்து எங்கும் மணல் என்று தெரிய ஆரம்பித்தது. சரிவான பாதையில், திடீர் வேகம் என்றெல்லாம் குலுங்க குலுங்க செல்ல ஆரம்பித்தோம். ஒரு பொழுதில் எங்களை சுற்றி யாரும் இல்லை, மணல் மட்டும்தான் என்கிறபோது வயிற்றில் சிலீரென்று ஒரு உணர்வு. என்னை அங்கு இருக்கும் இன்லான்ட் சீ எனப்படும் கடற்கரை நோக்கி அழைத்து செல்ல ஆரம்பித்தார், அதாவது கத்தார் என்பது ஒரு வால் பகுதி போல, அது கடலால் சூழப்பட்டது, இதில் பாலைவன பகுதியில் கடல் உள்ளே வந்து இருப்பதைத்தான் இவர்கள் இப்படி அலைகின்றனர், நமது சென்னை முட்டுக்காடு பகுதி போல ! இப்படி நாங்கள் சென்று கொண்டிருந்தபோது நான் இவரிடம் இதுவரை பாலைவனத்தில் யாராவது மாட்டி இறந்து இருக்கின்றனரா என்றபோது அவர் சொன்ன கதைகள் என்னை பயத்தை உண்டாகியது...சுருக்க சொல்வதென்றால், நிறைய பேர் செல்ல கூடாத வழி தடத்தில் செல்வதால்தான் உயிரிலகின்றனர். அட்வென்ச்சர் என்று கூறிக்கொண்டு மணல் பற்றிய அறிவு இல்லாததால் இப்படி நடக்கிறது. தேர்ந்த உள்ளூர் ஆளுக்கு தெரியும் எப்படி, எங்கு போக வேண்டும் என்று. சில சமயம் உள்ளூர் ஆளே இப்படி மாட்டி இருகின்றனர். ஒரு முறை கணவன், மனைவி, இரு குழந்தைகள் என்று நான்கு பேர் கார் மணலில் மாட்டிக்கொண்டு பாலைவனத்தின் புதிய இடத்தில் இருந்தனர்.


எங்களுக்கு தெரியும் எங்கெங்கு செல் போன் டவர் உள்ளது என்று, இவர்கள் வேறு தடத்தில் பயணித்து மாட்டி கொண்டனர். பொதுவாக வெள்ளி, சனி, ஞாயிறு மட்டுமே இப்படி கூட்டம் வரும், மற்ற நாட்களில் எங்களுக்கு இப்படி சவாரி கிடைக்காது. அவர்கள் இது போல் மாட்டி கொண்டு காரிலேயே உணவு, நீர் இல்லாமல் இறந்து கிடந்தனர். பத்து நாட்கள் கழித்து அவர்கள் உடல் கண்டு எடுக்கப்பட்டது என்றபோது நமக்கு மண்டையில் ஐயோ என்று ஓடத்தான் செய்தது. இப்படி நாங்கள் சொல்லி கொண்டு இருந்தபோதே, வெகு தூரத்தில் ஒரு சிகப்பு வண்டி தெரிந்தது, நாங்கள் நெருங்க நெருங்க எங்களது பக்க வாட்டில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் இரண்டு பேர் மணலில் வண்டி புதைந்து மாட்டி கொண்டது தெரிந்தது, அங்கு சென்று பார்த்தால் இவர்கள் இப்படி சுமார் இரண்டு மணி நேரமாக போராடியதை சொன்னார்கள்.


மணல் தன்மையை ஆராயாமல் வந்ததால் இப்படி, எங்களது டிரைவர் தனது யுக்தியை பயன்படுத்தி அவர்களை மீட்டு கொண்டு வந்தார். ஆகவே, நீங்கள் அங்கு சென்றால் கண்டிப்பாக செலவை பார்க்காமல் தேர்ந்த வண்டியோட்டியை வைத்து கொள்ளுங்கள்.

அடுத்த பகுதியில், நான் பார்த்த அற்புதமான இன்லான்ட் சீ, பாலைவன சோலை, பாலைவனத்தில் தங்கும் வசதிகள் என்று விரிவாக பார்க்கலாம்.

Wednesday, November 28, 2012

கேள்விகளால் ஆனது இவ்வுலகம்!!

சமீபத்தில் எனது நண்பரை பார்பதற்காக சென்றிருந்தேன், அவருடன் பேசிகொண்டிருந்தபோது சட்டென்று என் பின்னே மறைய முயன்றார், எனக்கு என்ன நடக்கிறது என்று புரியாவிட்டாலும், அவர் தன்னை தற்காத்துக்கொள்ள உதவினேன். சிறிது நேரம் சென்று, அவன் போய்ட்டானா என்று வெளி வந்தார்....நான் அமைதியாய் இருக்க, அவர் என்னிடம் "அதோ போறான் பாரு, அவன் கிட்ட சிக்கின உன்னை கேள்வி கேட்டே கொன்னுடுவான்" என்றார். அப்படி என்ன கேள்விகள் என்றபோது, அவர் சொன்ன பதில்கள் என்னை ஆச்சர்யபடுதினாலும், இந்த கேள்விகளை பார்த்து நாம் எதற்கு இப்படி பயபடுகிறோம் என்று கேள்வி எழுந்ததை என்னால் தவிர்க்க முடியவில்லை. என்றாவது நீங்கள் கேள்வியை விரும்பியிருக்கிரீர்களா ? அப்படி என்றால் அது என்ன கேள்வி ? எந்த கேள்வி உங்களை சந்தோசம் கொள்ள செய்தது என்று நினைவில் இருக்கிறதா ?


யோசித்து பாருங்கள், சிறு வயதில் கேள்வி கேட்க்கும்போதேல்லாம், "அட போதும், கேள்வி கேட்டே கொல்லாதே" என்று அதட்டல் வரும், பின்னர் வாத்தியார் கேள்வி கேட்டு விடுவாரோ என்று பயத்தில் ஒளிய ஆரம்பித்தோம், தேர்வினில் எல்லாம் கேள்வித்தாள் என்பதே ரத்தத்தில் எழுதப்பட்டது போலவே தோன்றும் அதுவும் "ஆன்சர் திஸ் கொஸ்டின்" என்று இருந்தாலே கை நடுங்க ஆரம்பிக்கும், வேலை கிடைக்க நடக்கும் நேர்முகத்தேர்வில் கேள்விக்கு தட்டு தடுமாறி பதில் சொல்வோம் அதுவும் பின் மண்டையில் இது எப்போது முடியும் என்று, மனைவியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி, மேலாளரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் சிரமப்பட்டு என்று எப்போது நாம் கேள்விகளை கண்டு ஒளிபவர்களாக இருக்கிறோம் இல்லையா ?நம்மில் பலர் கேள்விகளை கேட்காமலே சில விடைகளை பார்ப்பதன் மூலம் முடிவு செய்வோம், உதாரணமாக நம் தாய்க்கு என்ன பிடிக்கும் என்பதை. அவர் நம் சந்தோசத்தை மட்டுமே விரும்புவார், வீட்டில் செய்யும் எல்லா பதார்த்தங்களும் நமது சுவைக்கு, நாம் விரும்பியவையாகவே இருக்கும், அவர் அதை சாப்பிடுவதை வைத்து இதுதான் அவருக்கு பிடிக்கும் என்று முடிவு செய்வோம். என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த உணவை நான் ஒரு கேள்வியின் மூலம் மட்டுமே உணர்ந்தேன், அதை கேட்க எனக்கு முப்பது ஆண்டுகளுக்கும் மேல் ஆனது என்பதுதான் உண்மை ! ஒரு சரியான கேள்வி ஒரு மிக பெரிய சந்தோசத்தை உங்களுக்கு அளிக்கும் என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? உலகிலேயே அருமையான கேள்வி என்பது "உனக்கு என்ன பிடிக்கும் ?" என்பதுதானே, இந்த கேள்வியை பலர் தங்கள் வாழ்வில் சில முறைதான் உபயோகிப்பார்கள் என்பதுதான் உண்மை. இன்று உங்களுக்கு பிடித்தமானவர்களிடம் கேளுங்களேன் இந்த கேள்வியை....!சமீபத்தில் நான் ஒரு ஹோமியோபதி மருத்துவரிடம் எனது மனைவியை கூட்டி சென்றிருந்தேன், இதுதான் எனது வாழ்வில் முதல் முறை இப்படி ஒரு ஹோமியோபதி டாக்டரிடம் செல்வது ! இவர்கள் எல்லாம் நமது வியாதியின் மூலம் தெரிய கேள்விகளால் துளைதெடுப்பார்கள், ஆனால் அவர் என் மனைவியிடம் கேட்ட கேள்வியை பார்த்து முடிவில் நானும் எனக்கு இருக்கும் தூசி அலர்ஜி போக்குவதற்கு முடியுமா என்று அந்த கேள்வியை விரும்பி ஏற்றுக்கொண்டேன்....ஏனென்றால் அந்த கேள்விகள் என் உள்ளே இருந்த மிக நுண்ணியமான செய்திகளை எல்லாம் வெளியே கொண்டு வந்தது. ஒவ்வொரு கேள்வி அவர் கேட்டபோதும், நான் யோசித்து அதற்க்கு பதில் சொன்னேன், அப்படி யோசித்தபோதுதான் எனது வாழ்க்கை முறை, இது நாள் வரையில் நான் தெரியாமல் செய்யும் தவறுகள் என்று தெளிவாக உணர முடிந்தது. ஆகையால், கேள்விகள் என்பது உங்களை உங்களுக்கே உணர வைப்பதுதானே அன்றி உங்களை பயமுறுத்தவோ அல்லது தெறித்து ஓட வைப்பதோ அல்ல.....உங்களை உணர வைப்பது.சில கேள்விகள் விடை தெரியாதவை, சில கேள்விகளுக்கு பதில் சொல்ல கூடாது, சில கேள்விகள் உங்களை தூக்கி வாரி போட செய்யும், சில கேள்விகள் உங்களை கண்ணீர் வர வைக்கும், சில கேள்விகள் சிரிப்பை வர வைக்கும், சில கேள்விகளுக்கு இன்னொரு கேள்வியே பதிலாய் இருக்கும், சில கேள்விகள் நம்மை கூச வைக்கும், சில கேள்விகள் பெருமை கொள்ள செய்யும்....இப்படி கேள்விகள் நம்மில் பல உணர்சிகளை கிளப்புகிறது, இந்த உலகமே கேள்விகளால் ஆனதுதான், ஆதலால் எதற்கு நாம் இந்த கேள்விகளை கண்டு அஞ்ச வேண்டும், வேண்டுமானால் நீங்கள் சொல்லும் பதிலுக்கு அஞ்சலாம் !உங்களுக்கு அலாவுதீனின் அற்புத விளக்கு கிடைத்தாலும், அதிலிருந்து வரும் பூதமும் கூட உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேள்விதான் கேட்கும், அந்த வாழ்வை மாற்ற போகும் கேள்விக்கு நாம் பதிலை தயார் செய்யாமல் கேள்வியை கண்டு அஞ்சினால், எப்படி வாழ்வை மாற்ற முடியும் ?

Tuesday, November 27, 2012

உலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 2)

சென்ற வாரத்தில் நீங்கள் பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 1) படித்து போதை ஆகி இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இதை படித்த சிலர் என்னிடம் அட நம்ம ஊரில் ஒரே டைப் கொடுத்து ஏமாத்தறான் பார், இதுக்காகவே பெல்ஜியம் போகணும் போல இருக்கு என்று புலம்பினர். இதை படிக்காமல் விட்டவர்கள் இங்கே சொடுக்கி சென்ற பதிவை பார்க்கவும்...உலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 1).சரி இந்த முறை வாப்பெல்ஸ், சாக்லேட், பிரெஞ்சு ப்ரை பற்றி விரிவாக பார்ப்போம். அதற்க்கு முன் இந்த ஊரின் அமைப்பை பற்றி பாப்போம், பொதுவாக இங்கு வாழும் எல்லோருக்கும் ஒரு சிறிய வீடு, கார் உள்ளது. இவர்கள் எல்லோரும் நம் இந்தியாவில் இருப்பது போல அடுக்கு வீடுகளில் வாழுவதை விரும்புவதில்லை, அதனால் எல்லோரும் ஊருக்கு வெளியில் வீடு கட்டி கொள்கின்றனர். தெருக்கள் எல்லாம் குறுகலாக இருக்கிறது, நமது ஊரில் கூட ரோடுகள் எல்லாம் அகலம் என்று சொல்லலாம். அது மட்டும் இல்லை, இவர்கள் சம்பாதிப்பதில் 55% வரை டாக்ஸ் கட்டி விடுகின்றனர் + சர்வீஸ் டாக்ஸ் உண்டு. உதாரணமாக இவர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வு வந்தால் கையில் எல்லாம் போக 340 ரூபாய் மட்டுமே வரும் !! ஆனால் டாக்ஸ் கட்டுபவர்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து சில பல சலுகைகள் கிடைகின்றன.

பெல்ஜியம் வாப்பெல்ஸ் (Waffles) :

வாப்பெல்ஸ் என்றால் தமிழில் சிறிய அப்பம் என்று சொல்லலாம். நமது அம்மா மாவு ஊற்றி தோசை சுடுவார்கள், அந்த தோசை மாவு அரிசியில் ஆனது ஆனால் இந்த வாப்பெல்ஸ் என்பது மைதா மாவு, முட்டை என்று கலந்து ஒரு வடிவான பாத்திரத்தில் செய்யப்படும். இதை தனியே தின்றால் நீங்கள் முகத்தை சுளிபீர்கள், ஆனால் இதனுடன் வரும் டாப்பிங் எனப்படும் சுவைகளை சேர்த்தால் ஆஹா என்பீர்கள்.

இதை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்....பெல்ஜியம் வாப்பெல்ஸ் (Waffles) வாப்பெல்ஸ் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்....வாப்பெல்ஸ்பெல்ஜியம் சாக்லேட் :

இன்றும் எனது நினைவில் இதன் சுவை இருக்கிறது. சாக்லேட் என்றால் நமது ஊரில் அதிகம் இனிப்பு இருக்கும், கோகோவின் சுவை தெரியாது, இங்குதான் முதன் முதலில் எனக்கு உண்மையான சாக்லேட் சுவை தெரிந்தது. அது மட்டும் இல்லை, இங்குதான் நான் வாழ்வில் முதல் முறையாக மதுபான சாக்லேட் சாப்பிட்டேன், அதாவது சாக்லேட் உள்ளே மது இருக்கும் ! உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும் இந்த சாக்லேட் போல கிடைக்காது என்பது எனது எண்ணம், அவ்வளவு சுவையானது இது.இங்கு சாக்லேட் எல்லாம் ஒரே மாதிரி இருந்தாலும் அதன் உள்ளே வைக்கப்படும் அல்லது கலக்கப்படும் சுவை ஒவ்வொன்றும் ஒரு வகை, ஒரு வேளை அது கலந்துவிட்டால் எளிதில் பிரிப்பதற்கு இவர்கள் ஒவ்வொரு சுவையையும் ஒவ்வொரு நிறம் அல்லது வடிவில் பிரித்திருப்பார்கள். கீழே உள்ள படத்தை பார்த்தல் சாக்லேட் எத்தனை சுவையானது என்பது உங்களுக்கு தெரிய வரும். பெல்ஜியத்தில் லியோனிதாஸ் சாக்லேட் கடை மிகவும் பிரபலம். அதை பற்றி அறிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்....லியோனிதாஸ் சாக்லேட்


இந்த வீடியோ பார்த்தால் உங்களுக்கு பெல்ஜியம் சாக்லேட் பற்றி தெரியவரும்...நாவிலும் தண்ணீர் வரும் !!


பெல்ஜியம் ப்ரைஸ் :

இன்று நாம் எல்லோரும் சாப்பிடும் பிரெஞ்சு ப்ரை எனப்படும்
உருளைக்கிழங்கு  விரல் நீள ப்ரை என்பதுதான் பெல்ஜியம் ப்ரைஸ் ஆகும். இதை எதற்கு பிறகு பிரெஞ்சு ப்ரை என்று அழைக்கின்றோம் என்று கேட்டால் சரித்திரத்தை கண்டபடி புரட்ட வேண்டி வரும்....ஆனாலும் சுருக்கமாக சொல்வதென்றால், முதலாம் உலகபோரின்போது அமெரிக்க வீரர்கள் பெல்ஜியம் வந்தபோது இதை சுவைத்தனர், அப்போது பெல்ஜிய ராணுவத்தில் பிரெஞ்சு அதிகமாக பேசப்பட்டதால் அமெரிக்க வீரர்கள் அதற்க்கு பிரெஞ்சு ப்ரை என்று பெயரிட்டனர்.

இதன் இன்னொரு கதை என்பது....ஜுலின்னிங் (Julienning) என்பது நீள நீளமாக வெட்டுவது என்று பிரெஞ்சில் அர்த்தம். இந்த உருளைகிழங்கை இதுபோல நீள நீளமாக வெட்டி பொறித்து எடுப்பதால், அதுவும் இது பிரெஞ்சு முறை ஆதலால் இந்த பெல்ஜியம் ப்ரை என்பது பிரெஞ்சு ப்ரை ஆகிவிட்டது என்பர்.

ஆக இன்று நீங்கள் பெல்ஜியம் உணவுகள் பற்றி தெரிந்து கொண்டீர்கள், அடுத்த முறை நீங்கள் பெல்ஜியம் சென்றால் மறக்காமல் மேலே சொன்னதை சுவைக்காமல் வராதீர்கள் !!

Labels : Belgium, Belgian chocolate, Belgium fries, Waffles, Belgium food

Monday, November 26, 2012

அறுசுவை - பெங்களுரு கார்னர் ஹவுஸ் ஐஸ்கிரீம் ஷாப்

இந்த பகுதியில் நல்ல உணவகத்தினை எல்லாம் அறிமுகபடுத்துகிறேன், ஆனால் இன்று நான் அறிமுகபடுத்தபோவது ஒரு ஐஸ் கிரீம் ஸ்டால் ! பெங்களுருவில் பல இடங்களில் இருக்கிறது இந்த கார்னர் ஹவுஸ். பொதுவாக ஞாயிற்று கிழமைகளில் மதியம் நன்கு காரசாரமாக உண்டுவிட்டு ஸ்வீட்டாக எதாவது கிடைக்குமா என்று எதிர்பார்ப்பேன், வீட்டில் எதுவும் இல்லையென்றால் பக்கத்தில் கிடைக்கும் அருண், ஜாய், லோக்கல் ஐஸ் கிரீம் ஏதாவது வாங்கி வந்து சாப்பிடுவோம். இப்படி இருக்கும்போது நண்பர் ஒருவர் சொன்னதுதான் இந்த கார்னர் ஹவுஸ் ஐஸ் கிரீம் கடை....நல்ல அருமையான ஐஸ்கிரீம் !


இது பெங்களுரு முழுவதும் பறந்து விரிந்த செயின் ஸ்டோர்ஸ் வகையை சார்ந்தது. நீங்கள் அருண் ஐஸ் கிரீம் சாப்பிட்டு இருப்பீர்கள், சுவையில் அதுதான் சிறந்தது என்று நீங்கள் நினைத்திருந்தால் அதை மாற்றும் இந்த கார்னர் ஹவுஸ். உள்ளே நுழையும்போதே நல்ல குளிர்ச்சி உங்கள் முகத்தை தாக்கும், நல்ல சுத்தம், நீங்கள் கேட்கும் வகைகளில் எல்லாம் கிடைக்கும் சுவை, நல்ல சர்வீஸ் எல்லாம் உங்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுக்கும்.

இதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்...கார்னர் ஹவுஸ் ஐஸ் கிரீம்


நாங்கள் டிரை ப்ரூட் சண்டே மற்றும் ப்ரௌனி பட்ஜ் சண்டே ஆர்டர் செய்தோம். அவர்கள் அதை எடுத்து வைத்து செய்துகொண்டிருக்கும்போதே எங்களுக்கு இங்கு வாடேர்பால்ல்ஸ் ஸ்டார்ட் ஆகி விட்டது !! சிறு குழந்தைபோல வாங்கிகொண்டு வந்து முதல் ஸ்பூன் எடுத்து வைத்தவுடன்தான் தெரிந்தது எதனால் எல்லோரும் இதை விரும்புகிறார்கள் என்று.....அவ்வளவு ருசி !! மெது மெதுவாக உங்களது வாயில் அது கரையும்போது நீங்கள் என்னதான் காரமாக சாப்பிட்டு இருந்தாலும் இந்த சுவை மட்டுமே உங்கள் நினைவில் நிற்கும் !

ட்ரை ப்ரூட் சண்டே
ப்ரௌனி பட்ஜ் சண்டே
இங்கே கிடைக்கும் "டெத் பை சாக்லேட்" என்னும் ஒரு ஸ்பெஷல் எல்லோரும் விரும்பும் ஒன்று. ஒவ்வொரு மாதமும் ஒரு சுவை என்று நீங்கள் சுவைத்தால் கூட நீங்கள் ஆயுசு முடியும்வரை ஒரு புது சுவை வந்து கொண்டே இருக்கும் !!
பஞ்ச் லைன் :

சுவை               -      நிறைய பிளேவர் உள்ளது, நிச்சயம் அருமையான சுவை.
அமைப்பு         -       நல்ல சுத்தம், இனிமையான கவனிப்பு. உட்கார்ந்து சாப்பிட விசாலமான இடம். நகரில் நிறைய கிளைகள் உள்ளது.
பணம்              -      கொஞ்சம் ஜாஸ்தி !! இங்கே கிளிக் செய்து முழு மெனுவையும் படிக்கவும்.
சர்வீஸ்           -       சூப்பர் சர்வீஸ் !
அட்ரஸ் :

இங்கே கிளிக் செய்தால் இது எங்கெங்கு உள்ளது என தெரியவரும்.மெனு கார்டு :


Sunday, November 25, 2012

உலக திருவிழா - நியூயார்க் தேங்க்ஸ் கிவிங் டே பரேடு

 அமெரிக்காவில் நடக்கும் ஒரு பரேடு ஒன்று உலகம் முழுவதும் பிரபலம், அதன் பெயர் தெரியாமல் உங்களுக்கு இருக்கலாம், ஆனால் அதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.....பெரிய பெரிய பலூன் பொம்மைகளை பல பல உருவங்களில் வீதிகளில் கொண்டு செல்வார்கள், அதுதான் நியூயார்க்ன் தேங்க்ஸ் கிவிங் பரேடு. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நான்காம் வியாழக்கிழமை இது கொண்டாடபடுகிறது....இந்த 2012 வருடம் 22 நவம்பர் அன்று இது கொண்டாடபடுகிறது. அதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் அது யாரால் கொண்டாடபடுகிறது, எப்போது ஆரம்பித்தது, எதனால் இந்த பெயர், யார் ஆரம்பித்தது என்றெல்லாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.....எல்லாம் வெகு சுவாரசியமான தகவல்கள் !
அமெரிக்காவில் முக்கிய பயிர்கள் என்பது சோளமும், சோயா பீன்ஸ்தான். இதை பொதுவாக அக்டோபர், நவம்பர் மாதங்களில்தான் அறுவடை செய்வார்கள். (இந்தியாவில் அரிசி முக்கிய பயிர், இதை ஜனவரியில் அறுவடை செய்வார்கள்) இப்படி அறுவடை செய்யும்போது, நாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவது போல (பொங்கல் பண்டிகை), அங்கும் இந்த வழக்கம் இருந்தது. முதன் முதலாக 1621இல் இன்றைய மசசுட்டேஸ் (Massachusetts) அன்றைய ப்ல்ய்மோத் என்னும் இடத்தில் இந்த "கடவுளுக்கு நன்றி செலுத்துதல்" - தேங்க்ஸ் கிவிங் டே கொண்டாடினர். இப்படி கொண்டாடப்பட்ட நாள் அமெரிக்காவில் வெவ்வேறு மாகணங்களில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்பட்டது, ஏனென்றால் அறுவடை காலம் அமெரிக்கா முழுவதும் வேறுபட்டது.அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் இதை வெவ்வேறு பெயர் கொண்டு இது கொண்டாடப்பட்டது, அப்போது அக்டோபர் 3, 1789ம்  ஆண்டு ஜனாதிபதி ஜார்ஜ் வாஷின்டன் அவர்கள் இதை "தேங்க்ஸ் கிவிங் டே" என்று பெயரிட்டு கொண்டாடவேண்டுமென்று முதன் முதலாக உத்தரவிட்டார். இதில் பெயர்தான் சூட்டபட்டதே தவிர தேதிகள் எதுவும் நிர்ணயிக்கபடவில்லை.  அப்போது 1861 ~ 1865 வரை அமெரிக்காவின் சிவில் வார் காலகட்டத்தில், அப்போது பத்திரிக்கையில் சாரா ஜோசப் ஹேல்
அவர்கள் எழுதிய கட்டுரையில் இருந்த அமெரிக்க வேறுபாடுகள் பற்றிய
ஒன்றில் குறிப்பிடப்பட்டு இருந்த   இந்த ஒற்றுமை இன்மையை, ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கண்டு, தேச மக்களிடையே ஒற்றுமை நிலவ இந்த நாள் நவம்பர் கடைசி வியாழன் அன்று கொண்டாடப்படும் என்று 1863ம் ஆண்டு அறிவித்தார்.  ஒரு முறை 1939ம் வருடம் அந்த நவம்பர் மாதத்தில் ஐந்து வியாழக்கிழமை வந்தது, அதுவரை மக்கள் நான்காவது வியாழக்கிழமையில் இந்த "தேங்க்ஸ் கிவிங் டே" கொண்டாடினர், அந்த ஆண்டு எல்லோரிடமும் குழப்பம் நீடித்தது, இதை கண்ட அன்றைய ஜனாதிபதி ரூஸ்வெல்ட் அன்றிலிருந்து நவம்பர் நான்காவது வியாழன் அன்று இந்த நாள் கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

1920இல் மேசி டிபார்ட்மென்ட் ஸ்டோர் என்னும் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் இங்கிலாந்தில் இருந்து குடிபெயர்ந்து
அமெரிக்காவில் வாழும்  மக்கள், அந்த வருட தேங்க்ஸ் கிவிங் நாளை அவர்கள் நாட்டில் கொண்டாடபடுவது போல கொண்டாடவேண்டும் என்று முடிவெடுத்தனர். முடிவில் 1924ம் ஆண்டு ஹர்லம் 145 தெருவில் இருந்து 34வது தெருவில் இருந்த மேசி ஸ்டோர் வரை ஒரு மிக பெரிய, வண்ணமயமான ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. அதுதான் இந்த உலக திருவிழாவின் ஆரம்பம் எனலாம்.


இன்று ஒவ்வொரு ஆண்டும் மக்களிடையே பிரபலமான ஒன்றை பலூன் வடிவில் அந்த பரேடில் கொண்டு வருவர். இதை முன்னோடியாக கொண்டு, இன்று எல்லா கம்பனிகளும் ஒவ்வொரு ஊரில் இது போல பரேடு நடத்துகின்றனர்.....ஆனால் மக்களின் ஆதரவு என்றும் இதற்குதான் இருக்கிறது. ம்ம்ம்ம்ம்ம்ம்....நமது பொங்கல் விழாக்களிலும் இதை போல் செய்தால் என்ன ?