Thursday, November 29, 2012

சாகச பயணம் - டெசெர்ட் சபாரி (பகுதி - 1)

சமீபத்தில் கத்தார் சென்றிருந்தேன், இது பெங்களுருவில் இருந்து நான்கு மணி நேர விமான பயணத்தில் இருக்கிறது. விமானத்தில் இருந்து இறங்கும்போதே உங்களுக்கு தெரிந்துவிடும்....மணல், மணல் எங்கும் மணல்தான் ! இது போன்ற எண்ணை வளம் மிக்க வளைகுடா நாடுகளில் பாலைவனம் என்பது சாதாரணம், அந்த பாலைவனத்தின் அடர்ந்த பகுதிக்கு நீங்கள் சென்று வந்தால் எப்படி இருக்கும் ? தண்ணீர் தவிக்கும் அந்த அனுபவம் எப்படி இருக்கும் ? பாலைவன சோலை எனபது எப்படி இருக்கும் ? இதற்கெல்லாம் விடைதான் இந்த பாலைவன சாகச பயணம்.


இந்த பாலைவன பயணத்திற்கு என்று சில விதிமுறைகளும், தயாரிப்புகளும் உங்களுக்கு மிகவும் அவசியம். அப்படி இல்லையென்றால் மிகவும் கஷ்டபடுவீர்கள் ! நாங்கள் கத்தார் நகரில் இருந்து சில கிலோமீட்டர் தள்ளி வந்ததுமே மணல்தான் தெரிந்தது. அந்த மணல்வெளியில் நல்ல அருமையான ரோடுகளை பார்க்கும்போது மனதுக்கு மகிழ்ச்சிதான் ! இந்த பயணத்திற்கு என்று உங்களுக்கு நான்கு வ்ஹீல் டிரைவ் கொண்ட கார் தேவைப்படும், சாதாரண கார்கள் மூலம் இந்த பாலைவனத்தை கடக்கவே முடியாது. இந்த பயணத்திற்கு 800 ரியால் ( 1 ரியால் = சுமார் 15 இந்திய ரூபாய்கள் ) வாங்குகின்றனர். நான்கு பேரோ, ஆறு பேரோ அல்லது ஒருவரோ.....800 ரியால் !


வழியெங்கும் சில இடங்களில் டென்ட் போட்டு கொண்டு மக்கள் தங்கி இருந்ததை பார்க்க முடிந்தது, ஒரு பாலைவனத்தில் அவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் வைத்துகொண்டு, குளிர்சாதன பெட்டி, டிவி என்று எல்லாவற்றையும் ஜெனரேட்டர் மூலம் இயக்குகின்றனர். இவர்கள் எல்லோரும் எண்ணை எடுக்கும் இடங்களில் வேலை செய்கின்றனர், ஊரின் உள்ளே சென்று வருவதற்கு நேரம் ஆவதால் இப்படி தங்கி கொண்டு வார கடைசியில் மட்டும் சென்று வருகின்றனர். ஆளுக்கு ஏற்றார் போல டென்டின் வசதிகள் மாறுபடுகின்றன. கீழே உள்ள படத்தை பார்த்தால் இப்படி ஒரு டென்டின் உள்ளே உள்ள வசதிகள் புரியும்.ஊரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரம் வரை வந்து பாலைவனத்தின் ஆரம்ப எல்லையை தொட்டோம். அங்கிருந்து சவுதி அரேபியாவின் எல்லை வரை செல்லலாம் என்று எண்ணம். பொதுவாக நாம் தார் ரோட்டில் செல்லும்போது கார் டயரில் முழுவதுமாக காற்று பிடித்திருப்போம், ஆனால் நீங்கள் பாலைவனத்தில் இப்படி சென்றால் மிகவும் சிரமமாக இருக்கும், அதனால் இவர்கள் டயரில் இருந்து காற்றை பாதி வரை வெளியேற்றி விடுகின்றனர். இதனால் உங்களது பயணம் பாதுகாப்பாகவும், விரைவாகவும், குலுங்கல் இல்லாமலும் இருக்கும். பாலைவனத்தில் செல்லும்போது நீங்கள் நான்கு வீல் டிரைவ் செய்ய வேண்டும். இரு வீல் - நான்கு வீல் டிரைவ் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள இந்த வீடியோ பாருங்கள்.
 பொதுவாக அமெரிக்க அல்லது ஐரோப்பிய மக்கள் இந்த வகை சாகச பயணங்களை மிகவும் விரும்புகிறார்கள் என்பதை கண்கூடாக காண முடிந்தது. நாம் சாதரணமாக தொலைத்தூர பயணம் என்றாலே டிரைவர் வேண்டும் என்கிறோம், இவர்கள் எல்லாம் ஆள் இல்லா பாலைவனத்தில் GPS, சாட்டிலைட் போன் அல்லது இது எதுவும் இல்லாமல் செல்வதை காணலாம். எனக்கு வந்த டிரைவர் இதை பற்றி சொல்லும்போது.... இவர்களே சில நேரங்களில் மண் தன்மையை பற்றி தெரியாமல் மாட்டி கொள்வதுண்டு, அது மட்டும் இல்லாமல் சூரியனையும், திசையையும் கொண்டு சென்றால் மட்டுமே திரும்ப முடியும் என்கிறார். எங்களது பயணம் ஆரம்பமானது......சில நொடிகளில் ஊர் கண்ணில் இருந்து மறைந்து எங்கும் மணல் என்று தெரிய ஆரம்பித்தது. சரிவான பாதையில், திடீர் வேகம் என்றெல்லாம் குலுங்க குலுங்க செல்ல ஆரம்பித்தோம். ஒரு பொழுதில் எங்களை சுற்றி யாரும் இல்லை, மணல் மட்டும்தான் என்கிறபோது வயிற்றில் சிலீரென்று ஒரு உணர்வு. என்னை அங்கு இருக்கும் இன்லான்ட் சீ எனப்படும் கடற்கரை நோக்கி அழைத்து செல்ல ஆரம்பித்தார், அதாவது கத்தார் என்பது ஒரு வால் பகுதி போல, அது கடலால் சூழப்பட்டது, இதில் பாலைவன பகுதியில் கடல் உள்ளே வந்து இருப்பதைத்தான் இவர்கள் இப்படி அலைகின்றனர், நமது சென்னை முட்டுக்காடு பகுதி போல ! இப்படி நாங்கள் சென்று கொண்டிருந்தபோது நான் இவரிடம் இதுவரை பாலைவனத்தில் யாராவது மாட்டி இறந்து இருக்கின்றனரா என்றபோது அவர் சொன்ன கதைகள் என்னை பயத்தை உண்டாகியது...சுருக்க சொல்வதென்றால், நிறைய பேர் செல்ல கூடாத வழி தடத்தில் செல்வதால்தான் உயிரிலகின்றனர். அட்வென்ச்சர் என்று கூறிக்கொண்டு மணல் பற்றிய அறிவு இல்லாததால் இப்படி நடக்கிறது. தேர்ந்த உள்ளூர் ஆளுக்கு தெரியும் எப்படி, எங்கு போக வேண்டும் என்று. சில சமயம் உள்ளூர் ஆளே இப்படி மாட்டி இருகின்றனர். ஒரு முறை கணவன், மனைவி, இரு குழந்தைகள் என்று நான்கு பேர் கார் மணலில் மாட்டிக்கொண்டு பாலைவனத்தின் புதிய இடத்தில் இருந்தனர்.


எங்களுக்கு தெரியும் எங்கெங்கு செல் போன் டவர் உள்ளது என்று, இவர்கள் வேறு தடத்தில் பயணித்து மாட்டி கொண்டனர். பொதுவாக வெள்ளி, சனி, ஞாயிறு மட்டுமே இப்படி கூட்டம் வரும், மற்ற நாட்களில் எங்களுக்கு இப்படி சவாரி கிடைக்காது. அவர்கள் இது போல் மாட்டி கொண்டு காரிலேயே உணவு, நீர் இல்லாமல் இறந்து கிடந்தனர். பத்து நாட்கள் கழித்து அவர்கள் உடல் கண்டு எடுக்கப்பட்டது என்றபோது நமக்கு மண்டையில் ஐயோ என்று ஓடத்தான் செய்தது. இப்படி நாங்கள் சொல்லி கொண்டு இருந்தபோதே, வெகு தூரத்தில் ஒரு சிகப்பு வண்டி தெரிந்தது, நாங்கள் நெருங்க நெருங்க எங்களது பக்க வாட்டில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் இரண்டு பேர் மணலில் வண்டி புதைந்து மாட்டி கொண்டது தெரிந்தது, அங்கு சென்று பார்த்தால் இவர்கள் இப்படி சுமார் இரண்டு மணி நேரமாக போராடியதை சொன்னார்கள்.


மணல் தன்மையை ஆராயாமல் வந்ததால் இப்படி, எங்களது டிரைவர் தனது யுக்தியை பயன்படுத்தி அவர்களை மீட்டு கொண்டு வந்தார். ஆகவே, நீங்கள் அங்கு சென்றால் கண்டிப்பாக செலவை பார்க்காமல் தேர்ந்த வண்டியோட்டியை வைத்து கொள்ளுங்கள்.

அடுத்த பகுதியில், நான் பார்த்த அற்புதமான இன்லான்ட் சீ, பாலைவன சோலை, பாலைவனத்தில் தங்கும் வசதிகள் என்று விரிவாக பார்க்கலாம்.

6 comments:

 1. உங்கள் பயணம் சுவாரஸ்யமாக இருந்தது... (படங்களைப் பார்க்கும் போது... மனதில் திக் திக்...)

  தொடர்ந்து வருகிறோம்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார் !! பயணம் செல்லும்போது உங்களுக்கு இருந்த அந்த திக்..திக்... எனக்கும் இருந்தது, ஆனாலும் அருமையான அனுபவம்.

   Delete
 2. இதுதான் உண்மையான சாகசப் பயணமாக இருக்கும் போல்
  உள்ளது. படங்களுடன் விளக்கிய விதம்
  மிக மிக அருமை
  அடுத்த பதிவுக்கு ஆவலாக உள்ளேன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி சார், உங்களது தொடர் உற்சாகமான கருத்துக்களுக்கு எனது நன்றிகள் !

   Delete
 3. கடலுக்குள் பொய் விட்டால் சுற்றிலும் தண்ணீர் இங்கே கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல்............!! நாலு வில் டிரைவிங் கேள்விபடாதது தகவலுக்கு நன்றி!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜெயதேவ் சார் ! சரியாக சொன்னீர்கள்....நீருக்கு பதில் மணல் !!

   Delete