Saturday, November 3, 2012

புரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி - 3)

சென்ற இரண்டு பதிவுகளில் கூடங்குளம் போராட்டம் பற்றியும், இந்த அணு உலை பற்றியும் எழுதி இருந்தேன். இந்த பதிவில் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து உள்ளேன். சென்ற பதிவுகளை படிக்க மறந்தவர்கள் இங்கே சொடுக்கவும்....

புரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி - 1)
புரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி - 2)

இந்த பகுதியில் எழுதியவை எல்லாம் எனது ஆதங்கமும், கருத்துக்களுமே தவிர யாரையும் ஆதரிப்பவை அல்ல. ஒரு பிரச்சனையின் மூலம் கண்டறிந்து அதை பகிர்வது அன்றி, இந்த கட்டுரைக்கு எந்த நோக்கமும் இல்லை.






இந்த கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம் கையெழுத்து
இடப்பட்டபோது (1988ம் ஆண்டு) இந்த அளவுக்கு அறிவியல் அறிவு யாருக்கும் இல்லை, ஊடகங்களும் இல்லை. அதனால், அணு மின் நிலையங்களில் எப்படி மின்சாரம் தயாரிக்கப்படும், அதனால் என்ன ஆபத்து என்று யாருக்கும் தெரியவில்லை....சுருக்க சொல்வதென்றால், போபால் விஷவாயு நடந்ததே பலருக்கு அப்போது தெரியாது ! இன்று ஊடகங்கள் மிகவும் விரைவாகவும், எதையும் படம் போட்டு காட்டுகிறது.....இதனால் அந்த பகுதி மக்களுக்கு அணு உலை அபாயம் பற்றி எல்லாம் தெரிகிறது. ஜப்பானில் புகுஷிமா அணு உலை விபத்து எப்படி ஏற்பட்டது என்று இந்த வீடியோ பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


இந்த போராட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்று நீங்கள் முடிவு செய்யும் முன்பு இரண்டு நிமிடம் கண்களை மூடி, நீங்கள் அந்த இடத்தில் வாழும் ஒரு மனிதனாய் கற்பனை செய்யுங்கள். அந்த இடத்தில் ஒரு ரசாயன தொழிற்சாலை வருவதாய் வைத்து கொள்ளுங்கள்.......நீங்கள் என்ன செய்வீர்கள் ? நாம் வாழும் நிலம், வீடு எல்லாம் அந்த ரசாயன தொழிற்சாலையால் நச்சாகும் என்று தெரிந்தும் அந்த தொழிற்சாலையை அமைக்க உதவி புரிவீர்களா ? இதுவே இந்த தொழிற்சாலை அடுத்த ஊரில் வருகிறது என்றால், இங்கே நீங்கள் போராடுவீர்களா ? என்ன இருந்தாலும் நமக்கு வந்தால் ரத்தம், அடுத்தவருக்கு வந்தால் தக்காளி சட்னிதானே ?!

இந்த வீடியோ கூடங்குளம் போராட்டத்தை ஆதி முதல் அந்தம் வரை அலசுகிறது...15 நிமிடம் வரும் இதை பார்த்தால் உங்களுக்கு எல்லாம் புரியும்.


இன்று மின்சாரம் என்பது ஒரு முக்கிய தேவை, அதை நம்பி பல தொழில்கள் இருக்கின்றன, வேலை வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பது ஒரு சத்தியமான உண்மை. திருப்பூரில் உள்ள எல்லா தொழிற்சாலைகளும் இந்த மின்சாரம் இல்லாததால் இந்த வருடம் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. ஆக, இந்த மின்சாரம் வேண்டி, ஒரு மாநிலமே தவித்து வருகிறது என்பதும் நினைக்க பட வேண்டிய ஒன்று. பானை செய்யும் குயவனுக்கு மழை பெய்தால் நஷ்டம், இதுவே விவசாயிக்கு மகிழ்ச்சி !!



 இன்றைய கேள்வி மின்சாரம் வேண்டுமா வேண்டாமா என்பது அல்ல.....கூடங்குளம் அணு மின் நிலையம் வேண்டுமா வேண்டாமா என்பதுதான். ஆனால் கூடங்குளம் மட்டும்தான் மின்சாரம் கொடுக்குமா ? மாற்று வழியில், எல்லோரும் பயபடாவண்ணம் மின்சாரம் தயாரிக்க முடியாதா ? முடியும்......பஞ்ச பூதங்களில் - நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் - இவற்றில் இன்றைய தொழில்நுட்பம் நீர் மற்றும் காற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்க வழி காட்டுகிறது. சூரிய வழி மின்சாரமும் தமிழகத்தில் சாத்தியப்படும்.

********************************************************************************** இதில் தண்ணீர் கொண்டு மின்சாரம் என்பது தமிழ்நாட்டில் அணைகள் கொண்டு மட்டுமே சாத்தியம், அதுவும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் மட்டுமே வருண பகவான் கருணை காட்ட வருவார். நாம் தண்ணீரை அடுத்த மாநிலங்களில் இருந்து பெறவேண்டும் என்பதால் இதில் நமக்கு வாய்ப்பு கம்மி. கீழே உள்ள படத்தில் இந்தியாவின் தண்ணீர் மூலம் மின்சாரம் தயாரிக்கும் இடங்கள் காட்டபட்டுள்ளது....தமிழ்நாட்டை கவனியுங்கள் !!


***********************************************************************************
சரி, அடுத்து காற்று மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம். இதில் காற்று என்பது எல்லா சமயங்களில் நமக்கு கிடைக்கிறது என்றாலும் இந்த தென்மேற்கு பருவகாற்று என்னும் அக்டோபர் மாதத்தில்தான் அதிகம் காற்று வரும். ஆதலால் மின்சாரமும் ஜாஸ்தியாக கிடைக்கும். கேரளாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் மலை இருப்பதால் சில பகுதிகளை "பாஸ்" என்பர், அதாவது கடக்கும் வழி  - மலையின் இடையில் இருக்கும் இடைவெளியில் இந்த காற்று புகுந்து வரும் - நமக்கு அந்த பகுதியில் காற்றாலை அமைத்தால் நிறைய மின்சாரம் கிடைக்கும். 2001ம் ஆண்டு அமைக்கப்பட்ட காற்றலையில் 44 MW மின்சாரம் மட்டும் கிடைத்தது, இன்று சுமார் 1000 MW மின்சாரம் கிடைகிறது !! அது மட்டும் இல்லாமல், சில சமயம் வருடந்தோறும் உண்டாகும் புயலால் நமக்கு மின்சாரமும் கிடைக்கும் !








***********************************************************************************
அடுத்து சூரிய மின்சாரம் !! தமிழ்நாட்டிற்கு வரம் என்பது இதுதான் ! தமிழ்நாடு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மின்சார வாய்ப்பு என்பது சூரிய வழி மின்சாரம்தான். இதை வீடுகளில் நாமே நிறுவி கொள்ள சுமார் 2.5 லட்சம் வரை ஆகும், தொழிற்சாலைகளிலும், வயல்களிலும் நிறுவ இன்னும் நிறைய ஆகும். ஆனால் ஒரு முறை நிறுவி விட்டால் வேறு எதுவும் பிரச்சனை இருக்காது. இந்தியாவிலேயே குஜராத்திலும், ராஜஸ்தானிலும் தான் இந்த சூரிய மின்சாரம் நிறைய உற்பத்தி செய்யபடுகிறது.


வெயிலின் அளவு இந்தியாவில்


***********************************************************************************
சரி, எல்லாம் பார்த்து ஆகிவிட்டது. இனி உலகத்தின் அடுத்த தொழில்நுட்பம் என்பது என்ன ? இனிமேலும் மக்கள் அரசாங்கத்தையோ, மின்சார வாரியத்தையோ நம்பித்தான் இருக்க வேண்டுமா ? இல்லை....இனி வரும் காலங்களில் ஒரு சிறு கூடங்குளத்தை உங்கள் வீட்டின் பின்னால் நீங்களே வைத்து தடையில்லா மின்சாரம் அமைத்து கொள்ளலாம். இந்த வீடியோவை பாருங்கள் !! இது உண்மை....


வாருங்கள் ஒரு பாதுகாப்பான உலகத்தை படைப்போம் ! கூடங்குளம் மின்சாரம் தேவையா, போராட்டத்திற்கு உங்களது கருத்து என்ன என்பதெல்லாம் இனி நீங்களே முடிவு செய்யுங்கள்...ஏனென்றால் பானை செய்யும் குயவனுக்கு மழை பெய்தால் நஷ்டம், இதுவே விவசாயிக்கு 
மகிழ்ச்சி !! இதில் நான் என்ன சொல்வது ?!


1 comment:

  1. நன்றி நண்பரே....எனக்கு தெரிந்த கருத்துக்களையே நான் சொன்னேன். உங்களது கருத்திற்கும் மதிப்பளிக்கறேன். நீங்கள் எனது இடுகைகளை படித்து இப்படி விவாதிப்பதே எனக்கு சந்தோசம். தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

    ReplyDelete