Sunday, November 18, 2012

ஹாப்பி பர்த்டே !!

சிறு வயதில் இருந்து இந்த பிறந்தநாள் மட்டும் வந்துவிட்டால் என் கண்ணுக்கு முன்னே தெரிவது கேக், புது துணி !! ஒரு முறை கேக் இல்லாமல் என் பெற்றோர் என்னை வெளியில் கூட்டி கொண்டு போனபோது அந்த பிறந்தநாள் ஒரு நாளாகவே இல்லை...ஏதோ ஒன்று முழுமை அடையாமல் இருந்தது போலவே தோன்றியது. சிறிது காலத்திற்கு பிறகு அட...நமது பெற்றோருக்கும் பிறந்த நாள் என்று ஒன்று வருமே, என்று உணர்ந்து அதை கேட்டால் அவர்களுக்கு அதுவே மகிழ்ச்சி !! பின்னர் நம்மை போல் அவர்கள் எல்லாம் ஏன் கேக் வைத்து கொண்டாடுவது இல்லை என்ற கேள்வி வெகு காலம் என் மனதில் இருந்தது, இந்த வருடம் என் தந்தைக்கு பிறந்த நாள் வந்தபோது கேக் வெட்டி கொண்டாடினோம், அவர் வாய்தான் எதற்கு இது என்று அலுத்து கொண்டாலும் மனம் முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தது தெரிந்தது !!



பிறந்தநாள் என்பது என்ன ?? ஏன் இந்த வகை கொண்டாட்டங்கள் ? இன்றைக்கெல்லாம் எதற்கெடுத்தாலும் பார்ட்டி....அன்று நடந்து போகும்போது செருப்பு பிய்ந்து விட்டது, அதை ஆபீசில் வந்து சொல்லும்போது அட இன்னைக்கு ட்ரீட்டா என்கிறார்கள் !! பொதுவாக நாம் கொண்டாடுகிறோம் என்றால் நாம் எதையாவது ஒன்றை சாதித்திருக்க வேண்டும், அப்போது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நீங்கள் பிறந்தது ஒரு சாதனை என்றுதானே கொண்டாடுகிறீர்கள் ? அந்த சாதனையை கஷ்டப்பட்டு நீங்கள் நிகழ்த்தினீர்களா இல்லை உங்களது அம்மாவா ? பத்து மாதம் கஷ்டப்பட்டு வழியில் துடித்து, மறுஜென்மம் எடுத்து, நம்மை பெற்றெடுத்த அன்னைக்கு அல்லவா உங்களது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இருக்க வேண்டும் ??


எனது மனைவி என்னிடம் தான் கர்ப்பமாகி இருக்கிறேன் என்று கூறிய பொழுது இருந்து அவள் சரியாக சாப்பிட்டு நான் பார்த்ததில்லை, எதை தின்றாலும் வாந்தி. ஒரு முறை காலையில் நான் எல்லாம் கொடுத்து விட்டு அலுவலகம் சென்று விட்டு வந்த பின்பு பார்த்தல் ஒரு கிழிந்த நார் போல படுக்கையில் படுத்திருந்தால்...சாப்பிட்டதெல்லாம் வாந்தி எடுத்து என்று, நான் கண்களில் தண்ணீர் வர என்னம்மா இது என்றால், நம்ம குழந்தை நல்லா வளருறான் அப்படின்றதுக்கு இதுதான் அறிகுறி என்று சிரிக்கிறாள். பிரசவ வேதனையில் சுமார் பதினைந்து மணி நேரம் கஷ்டப்பட்டு பெற்றெடுத்தாள்! எனது மகன் உருவானதில் இருந்து அவள் படம், பாட்டு, வெளியில் என்று எதுவும் செய்ததில்லை, ஒரு தவம் போல இருந்து அவனை பெற்றெடுத்தாள். இன்று வரை அவள் நிம்மதியாக ஒரு இரண்டு மணி நேரம் வரை வெளியில் இருந்ததில்லை, அதுவும் அவனுக்கு உடம்பு முடியவில்லை என்றால் அவள் கண்ணுறங்கி நான் பார்த்ததில்லை. இப்படி கஷ்டப்பட்டு நம்மை பெற்றெடுத்தாள் அம்மா...ஆனால் பிறந்தநாள் எனும்போது நாம் நம்மை மட்டும் கொண்டாடுகிறோம். பெற்றவளை அல்லவா அந்த நாளில் கொண்டாட வேண்டும் !



கல்லூரியில் படிக்கும்போது இது எல்லாம் புரிந்ததில்லை, இதனால் பிறந்தநாள் என்றால் நண்பர்களோடு சினிமா செல்வது என்று இருந்தது, பின்னர் வேலைக்கு வந்தவுடன் அன்று பார்ட்டிதான். நான் ஏன் பிறந்தேன், எதற்காக வாழ்கிறேன் இந்த கேள்விகள் எதையும் நாம் அன்று கேட்பதில்லை, வாழ்வின் அர்த்தத்தையும் நாம் அறிந்துகொள்ள முயன்றதில்லை. இந்த பிறந்த நாளில் இருந்தாவது எனது அன்னையின் அருகில் இருந்து அவரை சந்தோசமாக வைத்திருக்க வேண்டும்....ஏனென்றால் குழந்தை பெறுதல் என்பது ஒரு தாய்க்கு மறுஜென்மம் என்றால், ஒரு மிக பெரிய சாதனையை செய்தது அவர்தான், ஆகவே அவருக்குதான் சொல்லவேண்டும் "ஹாப்பி பர்த்டே !!".

6 comments:

  1. உண்மை... அந்த தெய்வத்திற்கு தான் சொல்ல வேண்டும்... தினம் தினம் வணங்க வேண்டும்...

    வித்தியாசமான சிந்தனை... அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. எனது கருத்துக்களை ஆமோதிததர்க்கு மிக்க நன்றி தனபாலன் சார்....ஒன்றை கவனித்தீர்களா இந்த பதிவு எனது பிறந்தநாளுக்கு எழுதியது !

      Delete
  2. உண்மையில் தாயின் அருமை கூட
    நம் குழந்தைக்காக நம் மனைவி படும்
    அவஸ்தியில்தான் புரிந்து கொள்ளமுடிகிறது
    மிகச் சரியாக அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி சார்....சரியாக சொன்னீர்கள். ஒரு குழந்தையை வளர்க்கும் கலையை ஒரு பெண்தான் சரியாக செய்யமுடிகிறது. அம்மா என்பதன் அர்த்தம் நன்கு புரிவது மனைவி குழந்தையை வளர்ப்பதை பார்க்கும்போதுதான்.

      Delete
  3. ஆழமான கருத்து...ஒத்துக் கொள்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜீவா, எனது கருத்துக்களை ஏற்று கொண்டதற்கு !

      Delete