Thursday, November 8, 2012

சாகச பயணம் - ஸ்கை டைவிங் டனல்

எல்லோருக்குமே வானில் பறக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், அதுவும் ஸ்கை டைவிங் என்னும் வானில் இருந்து பாராசூட் மூலம் குதித்து தரை இறங்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும், ஆனால் பயம் பெரிதாய் நமது முன் இருக்கும். இந்த ஆர்வத்தையும், பயத்தையும் இணைக்கும் புள்ளிதான் இந்த "ஸ்கை டைவிங் டனல்". நான் மிகவும் அனுபவித்து மகிழ்ந்த சாகச பயணம் இது எனலாம்.


ஸ்கை டைவிங் என்பது காற்றை கிழித்து கொண்டு தரையை நோக்கி வருவது, இதில் நிறைய பேருக்கு உயரத்தை கண்டால் பயம், அதனால் இந்த டனல் போன்ற அமைப்பை கொண்டு உங்களை பறக்க வைக்கிறார்கள். காதலி கிழிக்கும் காற்று உங்களது அடியிலிருந்து வரும், அதில் நீங்கள் உங்களது உடம்பை மிதக்க விட வேண்டும்....படிப்பது சுலபமாக இருந்தாலும் ஒரு த்ரில் ஆன அனுபவம். இந்த  எப்படி வேலை செய்கிறது என்பதை இங்கே நீங்கள் காணலாம்...



இதை நான் மலேசியாவில் உள்ள கெண்டிங்ல் அனுபவித்தேன், பணத்தை கட்டி விட்டு எனது மனைவியிடம் சென்று குழந்தை போல குதித்து காண்பித்தேன் !! பின்னர் என்னை ஒரு அறைக்கு அழைத்து சென்று காற்று தாங்கும் ஒரு பான்ட், ஷர்ட், சூ என்று எல்லாம் தந்து என்னை ஒருவரிடம் அறிமுகபடுத்தினார்கள். அவர்தான் இந்த சாகச பயணம் எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லி தருபவர், அவர் அந்த டனலின் உள்ளே காது கேட்காது என்பதால் சில சைகை பாஷை சொல்லி தந்தார். உடம்பை எப்படி மிதக்க வைக்க வேண்டும் என்றும், மூச்சு திணறும்போது என்ன செய்ய வேண்டும் என்றும், இப்படி பல பல உக்திகள். முடிவில் என்னை ஒரு இடத்தில் அமர வைத்து விட்டு, நம்ம வீட்டில் பேன் போட போவது போல சென்று அந்த ராட்சச காத்தாடியை போட்டார் !! கீழே உள்ள படத்தை பாருங்கள்....ஒரு பயத்துடன் நான் அமர்ந்து இருப்பதை.




சிறிது நேரத்தில் வந்த அவர் என்னை உள்ளே இழுத்து மிதக்க வைத்தார், ஒரு நிமிடம் நான் திருசங்கு சொர்க்கத்தில் இருந்தேன் எனலாம். முதலில் எல்லாம் சரியாக போய் கொண்டு இருந்தது, பின்னர் என்னால் மிதக்க முடியாமல் கண்ணாடியை போய் மோத ஆரம்பித்து பயம் வந்து விட்டது. என்னை அவர் இழுத்து நடுவில் வைக்க, நான் காலை சரியாக வைக்காமல் காற்று என்னை கண்ணாடியை நோக்கி தள்ள என்று இம்சை ! அவர் சட்டேன்று என்னை வெளியில் இழுத்து கோவமாக கத்தினார்....எனக்கு காதில் பஞ்சு கொண்டு அடைத்து இருந்ததால் ஒன்றும் கேட்கவில்லை. சுமார் இரண்டு நிமிடம் அவர் கத்தி முடித்தவுடன் நான் பஞ்சை வெளியில் எடுத்தேன், அவர் மனதினுள் தலையில் அடித்து கொண்டதை என்னால் கேட்க முடிந்தது :-)



நான் பறப்பதை போட்டோ எடுக்க கூடாது, ஆனால் அவர்கள் வீடியோ எடுத்து தருவதை பணம் கொடுத்து வாங்கி கொள்ளலாம் என்று சொன்னதால் நான் உள்ளே செய்த யோகாசனத்தை இங்கே போட முடியவில்லை. முடிவாக அவர் மீண்டும் என்னை உள்ளே இழுத்து மிதக்க வைத்தார், இந்த முறை சரியாக வந்தாலும், பயத்தில் ததகபிதகா என்று நீச்சல் அடித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும் !!


முடிவாக எனக்கு அவர் நான் "தைரியமாக" ஸ்கை டைவிங் செய்ததாக ஒரு சர்டிபிக்கேட் கொடுத்தார், அதை நான் வாங்கி கொண்டு மேலே கொடுத்த போஸை பாருங்கள் ! வாழ்வில் ஒரு முறையேனும் பறவையை போல் பறக்க வேண்டும் என்ற எனது ஆவல் நிறைவேறியது. அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...ஸ்கை டைவிங் டனல்

தற்போது சிங்கபூரிலும் ஒன்று உள்ளது, அதை பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...சிங்கப்பூர் ifly

2 comments:

  1. நானும் மலேசியாவில் கெந்திங் ஹைலேண்ட்ஸ் இல் பார்த்தேன்.போக விருப்பமில்லை....உங்கள் அனுபவம் புதிது....

    ReplyDelete
  2. புதிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    இணைப்புகளைப் பார்க்கிறேன்...

    ReplyDelete