Wednesday, November 28, 2012

கேள்விகளால் ஆனது இவ்வுலகம்!!

சமீபத்தில் எனது நண்பரை பார்பதற்காக சென்றிருந்தேன், அவருடன் பேசிகொண்டிருந்தபோது சட்டென்று என் பின்னே மறைய முயன்றார், எனக்கு என்ன நடக்கிறது என்று புரியாவிட்டாலும், அவர் தன்னை தற்காத்துக்கொள்ள உதவினேன். சிறிது நேரம் சென்று, அவன் போய்ட்டானா என்று வெளி வந்தார்....நான் அமைதியாய் இருக்க, அவர் என்னிடம் "அதோ போறான் பாரு, அவன் கிட்ட சிக்கின உன்னை கேள்வி கேட்டே கொன்னுடுவான்" என்றார். அப்படி என்ன கேள்விகள் என்றபோது, அவர் சொன்ன பதில்கள் என்னை ஆச்சர்யபடுதினாலும், இந்த கேள்விகளை பார்த்து நாம் எதற்கு இப்படி பயபடுகிறோம் என்று கேள்வி எழுந்ததை என்னால் தவிர்க்க முடியவில்லை. என்றாவது நீங்கள் கேள்வியை விரும்பியிருக்கிரீர்களா ? அப்படி என்றால் அது என்ன கேள்வி ? எந்த கேள்வி உங்களை சந்தோசம் கொள்ள செய்தது என்று நினைவில் இருக்கிறதா ?


யோசித்து பாருங்கள், சிறு வயதில் கேள்வி கேட்க்கும்போதேல்லாம், "அட போதும், கேள்வி கேட்டே கொல்லாதே" என்று அதட்டல் வரும், பின்னர் வாத்தியார் கேள்வி கேட்டு விடுவாரோ என்று பயத்தில் ஒளிய ஆரம்பித்தோம், தேர்வினில் எல்லாம் கேள்வித்தாள் என்பதே ரத்தத்தில் எழுதப்பட்டது போலவே தோன்றும் அதுவும் "ஆன்சர் திஸ் கொஸ்டின்" என்று இருந்தாலே கை நடுங்க ஆரம்பிக்கும், வேலை கிடைக்க நடக்கும் நேர்முகத்தேர்வில் கேள்விக்கு தட்டு தடுமாறி பதில் சொல்வோம் அதுவும் பின் மண்டையில் இது எப்போது முடியும் என்று, மனைவியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி, மேலாளரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் சிரமப்பட்டு என்று எப்போது நாம் கேள்விகளை கண்டு ஒளிபவர்களாக இருக்கிறோம் இல்லையா ?



நம்மில் பலர் கேள்விகளை கேட்காமலே சில விடைகளை பார்ப்பதன் மூலம் முடிவு செய்வோம், உதாரணமாக நம் தாய்க்கு என்ன பிடிக்கும் என்பதை. அவர் நம் சந்தோசத்தை மட்டுமே விரும்புவார், வீட்டில் செய்யும் எல்லா பதார்த்தங்களும் நமது சுவைக்கு, நாம் விரும்பியவையாகவே இருக்கும், அவர் அதை சாப்பிடுவதை வைத்து இதுதான் அவருக்கு பிடிக்கும் என்று முடிவு செய்வோம். என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த உணவை நான் ஒரு கேள்வியின் மூலம் மட்டுமே உணர்ந்தேன், அதை கேட்க எனக்கு முப்பது ஆண்டுகளுக்கும் மேல் ஆனது என்பதுதான் உண்மை ! ஒரு சரியான கேள்வி ஒரு மிக பெரிய சந்தோசத்தை உங்களுக்கு அளிக்கும் என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? உலகிலேயே அருமையான கேள்வி என்பது "உனக்கு என்ன பிடிக்கும் ?" என்பதுதானே, இந்த கேள்வியை பலர் தங்கள் வாழ்வில் சில முறைதான் உபயோகிப்பார்கள் என்பதுதான் உண்மை. இன்று உங்களுக்கு பிடித்தமானவர்களிடம் கேளுங்களேன் இந்த கேள்வியை....!



சமீபத்தில் நான் ஒரு ஹோமியோபதி மருத்துவரிடம் எனது மனைவியை கூட்டி சென்றிருந்தேன், இதுதான் எனது வாழ்வில் முதல் முறை இப்படி ஒரு ஹோமியோபதி டாக்டரிடம் செல்வது ! இவர்கள் எல்லாம் நமது வியாதியின் மூலம் தெரிய கேள்விகளால் துளைதெடுப்பார்கள், ஆனால் அவர் என் மனைவியிடம் கேட்ட கேள்வியை பார்த்து முடிவில் நானும் எனக்கு இருக்கும் தூசி அலர்ஜி போக்குவதற்கு முடியுமா என்று அந்த கேள்வியை விரும்பி ஏற்றுக்கொண்டேன்....ஏனென்றால் அந்த கேள்விகள் என் உள்ளே இருந்த மிக நுண்ணியமான செய்திகளை எல்லாம் வெளியே கொண்டு வந்தது. ஒவ்வொரு கேள்வி அவர் கேட்டபோதும், நான் யோசித்து அதற்க்கு பதில் சொன்னேன், அப்படி யோசித்தபோதுதான் எனது வாழ்க்கை முறை, இது நாள் வரையில் நான் தெரியாமல் செய்யும் தவறுகள் என்று தெளிவாக உணர முடிந்தது. ஆகையால், கேள்விகள் என்பது உங்களை உங்களுக்கே உணர வைப்பதுதானே அன்றி உங்களை பயமுறுத்தவோ அல்லது தெறித்து ஓட வைப்பதோ அல்ல.....உங்களை உணர வைப்பது.



சில கேள்விகள் விடை தெரியாதவை, சில கேள்விகளுக்கு பதில் சொல்ல கூடாது, சில கேள்விகள் உங்களை தூக்கி வாரி போட செய்யும், சில கேள்விகள் உங்களை கண்ணீர் வர வைக்கும், சில கேள்விகள் சிரிப்பை வர வைக்கும், சில கேள்விகளுக்கு இன்னொரு கேள்வியே பதிலாய் இருக்கும், சில கேள்விகள் நம்மை கூச வைக்கும், சில கேள்விகள் பெருமை கொள்ள செய்யும்....இப்படி கேள்விகள் நம்மில் பல உணர்சிகளை கிளப்புகிறது, இந்த உலகமே கேள்விகளால் ஆனதுதான், ஆதலால் எதற்கு நாம் இந்த கேள்விகளை கண்டு அஞ்ச வேண்டும், வேண்டுமானால் நீங்கள் சொல்லும் பதிலுக்கு அஞ்சலாம் !



உங்களுக்கு அலாவுதீனின் அற்புத விளக்கு கிடைத்தாலும், அதிலிருந்து வரும் பூதமும் கூட உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேள்விதான் கேட்கும், அந்த வாழ்வை மாற்ற போகும் கேள்விக்கு நாம் பதிலை தயார் செய்யாமல் கேள்வியை கண்டு அஞ்சினால், எப்படி வாழ்வை மாற்ற முடியும் ?

4 comments:

  1. கேள்விகளால் வேள்விகளை
    நான் செய்தேன் என்கிற வைரமுத்து அவர்களின்
    வைர வரிகள் ஞாபகத்திற்கு வந்து போயின
    சிந்திக்கத் தூண்டும் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அருமையான வரிகளை யாபகபடுத்தி உள்ளீர்கள் சார் !! ஆம், வைரமுத்து சொல்வதை போல கேள்விகள் வாழ்வில் முக்கியமானவை......உங்களது உற்சாகம் தரும் கருத்திற்கு நன்றி சார் !

      Delete
  2. என்னமா கேள்விகளைப்பற்றி அலசிட்டீன்களே... நன்றி...

    படம் : ஆயிரத்தில் ஒருவன்

    பகுத்தறிவு பிறந்தததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே...
    பகுத்தறிவு பிறந்தததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே...

    உரிமைகளைப் பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதினாலே...
    உரிமைகளைப் பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதினாலே...

    ஏன் என்ற கேள்வி - இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை...
    நான் என்ற எண்ணம் - கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை...

    ReplyDelete
  3. நன்றி தனபாலன் சார் ! இந்த பாடலை நான் மிஸ் செய்து விட்டேன், சரியான நேரத்தில் யாபகபடுத்திவிட்டீர்கள். அருமையான பாடல் வரிகள், சிந்திக்க தூண்டும் கருத்துக்கள். கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற எனது கருத்திற்கு மதிபளிததற்க்கு நன்றிகள் பல !

    ReplyDelete