Monday, December 31, 2012

கடல் பயணங்கள் அவார்ட் 2012 !!

எந்த சேனல் திருப்பினாலும், புத்தகத்தை எடுத்தாலும் 2012 வருடம் நடந்த நிகழ்சிகளை பற்றி கழுவி கழுவி ஊத்தறாங்க, டிவி பார்த்தால் கவுன்ட் டௌன் என்று சொல்லி கதரடிக்கிறாங்க, நண்பர்களிடம் பேசினால் - மச்சான் இந்த வருஷம் என்ன நடந்திச்சின்னா அப்படின்னு காதில ஈயம் காய்ச்சறான், மெயில் செக் பண்ணினா - இந்த வருடத்தின்.... அப்படின்னு தாளிக்கிறாங்க, அட நாம மட்டும் ஒன்னும் செய்யலேன்னா எப்படி !!


14 ஜூன் 2012 அன்று ஆபிசில் வேலை வெட்டி எதுவும் இல்லாமல் சும்மா உட்கார்ந்து இருந்த போது உதயமானதுதான் இந்த "கடல் பயணங்கள்". முதலில் பத்து பேர் மட்டும் பார்த்த இந்த பயணத்தை இன்று நூற்றுக்கணக்கில் பார்க்கிறார்கள் என்றால் அதற்க்கு உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இந்த ஆறரை மாத பயணத்தில், நிகழ்ந்த காமெடியான சம்பவங்களின் தொகுப்புதான் இந்த

கடல் பயணங்கள் அவார்ட் 2013


என்னங்கையா நடக்குது இங்க அவார்ட்

ரசிக்க முடியாத படம் !!


நான் எத்தனையோ பதிவுகள் எழுதி இருந்தாலும், இந்த பதிவுதான் இன்றைக்கு 
வரைக்கும் அதிகமான  வாசகர்கள் படித்தது. இது கும்கி, நீதானே என் பொன்வசந்தம் ரிலீஸ் செய்தபோது வெளியிட்டதால், இதை படித்தவர்கள் அந்த படத்தின் விமர்சனம் என்று உள்ளே நுழைந்து இருக்கலாம், முடிவில் படித்து முடித்தபோது இந்த அவார்ட் பேரை சொல்லி புலம்பி இருக்கலாம் ! ஆனாலும், இந்த பதிவை எழுதும்போது எனக்கு ஒரு மன நிறைவு கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்......ரசிக்க முடியாத படம் !

அட கிரகமே.....அவார்ட்

வந்துட்டான்யா....சாம் ஆண்டெர்சன்

நான் நிறைய கஷ்டப்பட்டு, ராத்திரி எல்லாம் கண் முழிச்சி ஒரு பதிவு எழுதி அதை அடுத்த நாள் எத்தனை ஹிட் என பார்க்கும்போது வெறும் 100 பேர் படிச்சிருக்காங்க அப்படின்னு வரும்.... ஆனால் நானே அசந்து போகும் அளவுக்கு முதன் முதலில் நிறைய ஹிட் கிடைச்சது இந்த பதிவுக்குதான். ஆனா, இந்த பதிவுக்கு நான் எதுவும் கஷ்டமே படலை என்பதுதான் உண்மை ! அந்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்....வந்துட்டான்யா....சாம் ஆண்டெர்சன்.

பாட்டி சுட்ட வடை.....அவார்ட்

அறுசுவை - சென்னை "மண் வீடு" உணவகம்


என்னுடைய வலைபதிவில் அறுசுவை என்னும் தலைப்பில் வரும் உணவகத்திற்கு எப்போதுமே நிறைய ஹிட் கிடைக்கும். ஒரு சில உணவகம் அறிமுக பதிவுகள் எழுதும்போது சிலர் எனக்கு போன் செய்து அண்ணே நீங்கள் சொன்னது ரைட் என்று சொல்லும்போது சந்தோசமாக இருக்கும், அப்படி ஒரு உணவகமான சென்னை "மண் வீடு" பதிவுதான், இதுவரை நிறைய பேர் படித்திருக்கின்றனர். இந்த மண் வீடு உணவகம் நிறைய பேரை சென்று அடைத்திருந்தது, அதனால் இந்த அவார்ட். அந்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்.... அறுசுவை - சென்னை "மண் வீடு" உணவகம்

***************************************************************************************

மேலே நீங்கள் படித்தது எல்லாம் ஹிட் நிறைய கிடைத்த, வாசகர்கள் ரசித்த பதிவுகள். இந்த பதிவுகள் ஹிட்படி பார்த்தால் எல்லோரும் ரசித்த ஒன்று என்று இருந்தாலும், எழுதும்போது என்னை பாதித்தது என்று சில பதிவுகள் உண்டு...... அந்த பதிவுகளின் வரிசை இது

அறுசுவை - சில உணவகங்களின் சுவை இன்னும் நாவில் இருக்கிறது, அப்படிப்பட்ட 2012இன் என்னுடைய தரவரிசையில் முதல் மூன்று இடம் இங்கே...

மறக்க முடியா பயணம் - இந்த பயணங்களின் பதிவில், ஒரு சில பயணங்கள் மனதை விட்டு நீங்காதவை, மற்றவர்களும் இதை அனுபவிக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை உண்டு, அதில் முதல் மூன்று இடம் இங்கே...
மற்ற பதிவுகளில் என்னை கவர்ந்த, நான் ரசித்து எழுதிய, மற்றவர்கள் இதை படிக்காமல் விட்ட பதிவுகள் சில.... இந்த பதிவுகள் எல்லாம் என் மனம் தொட்டவை என்பதால் இந்த 2012-இன் நல்ல பதிவுகள் எனலாம்.

****************************************************************************

எனது பதிவை வாசித்து, எழுத உற்சாகம் ஊட்டிய அனைவருக்கும் எனது 
நன்றிகள் ! உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் 
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! 
இனி எல்லாம் சுகமே.....


புதிய வருடம்...எப்படி கொண்டாடலாம் ??!!

ஒவ்வொரு வருடமும் இந்த கடைசி வாரம் வந்தால் திண்டாட்டம்தான்.... இந்த புதிய வருடத்தை எப்படி நாம் கொண்டாடுவது என்று ! பல பல வருடங்களாக இந்த கேள்விக்கு மட்டும் பதில் தெரியவில்லை. எல்லோரும் நினைப்பது போல (மூடநம்பிக்கையாக இருந்தாலும் !!) அன்று எப்படி இருப்போமோ, அதே உணர்வுடன்தான் வருடம் முழுவதும் இருப்போம் என்று. இதற்காக நானும் பல வருடங்களாக என்னுடைய கொண்டாட்ட முறைகளை மாற்றி பார்த்து வருகிறேன், ஆனாலும் இன்றும் விளங்கவில்லை எப்படி இந்த புதிய வருடத்தை வரவேற்ப்பது என்று. நாம் வரவேற்கவில்லை என்றாலும் அது பிறக்கும் என்பது தெரிந்திருந்தும், இன்று வரை நாம் அதை வரவேற்க கூடி இருந்து காதை பிளக்கும் வெடியோசையுடன் கொண்டாடுகிறோம் !




எனக்கு இந்த கொண்டாட்டங்கள் பற்றி தெரியாதவரை எனது வாழ்க்கை சந்தோசமாக இருந்தது எனலாம், என் பெற்றோர் என்னை வெளியில் அன்று விடாததால் என்றும் போல தூங்கி விழிப்பேன். ஆனால் காலேஜ் சென்றதில் இருந்து அன்று இரவு நாமும் வெளியில் செல்ல வேண்டும் என்று ஆர்வம் எழ ஆரம்பித்தது, ஆனாலும் எனது தந்தையின் கண்டிப்பினால் வெளியில் எங்கும் செல்லவில்லை..... வெடி வெடிக்கும் போது மட்டும் எனக்கு நானே சொல்லி கொள்வேன் ஹாப்பி நியூ இயர் என்று.



பிறகு ஹாஸ்டல் சென்றதில் இருந்து இன்று வரை ஒவ்வொரு வருடமும் இந்த புதிய வருடத்தை வரவேற்ப்பதை வித விதமாக செய்கிறேன். ஒரு முறை நாங்கள் எல்லோரும் பெசன்ட் நகர் பீச் சென்றிருந்தோம், வழியெங்கும் உற்சாகம். நாங்கள் பத்து பேர் வரை சென்றதால் கூட்டத்தில் ஒருத்தர் இன்னொருவரை தேடுவதே வேலையாக இருந்தது. தைரியமான சில நண்பர்கள் எவரை பற்றியும் கவலைபடாமல் கொண்டாடிவிட்டு வந்தபோது, நானும் எனது சில நண்பர்களும் அவர்களை தேடி கொண்டிருந்தோம்.



இன்னொரு முறை, நான் வேலைக்கு சேர்ந்து இருந்த புதிது. அன்று ஒரு புதிய ப்ராஜெக்ட்டை கஷ்டப்பட்டு முடித்திருந்ததால் கம்பெனியில் இரக்கப்பட்டு அன்று பார்ட்டி செலவு முழுவதையும் ஏற்று கொள்வதாக சொன்னார்கள். பெங்களுருவில் முதன் முதலாக மைசூர் ரோட்டில் இருந்த ஒரு பெரிய ஹோட்டலுக்கு சென்றபோது எங்களை உள்ளே விட மறுத்தனர், ஒரு தம்பதியாகதான் செல்ல வேண்டும் என்று. எங்களது மேனேஜருக்கு போன் செய்து அவருடைய சிபாரிசால் உள்ளே சென்றபோதுதான் தெரிந்தது இப்படியெல்லாம் புத்தாண்டு  கொண்டாடுகிறார்கள் என்று !! மது எங்கும் நீக்கமற நிறைந்திருந்தது, சினிமாவில் ரம்பா போட்ட ஆடைகள் எல்லாம் அங்கு பலர் போட்டு இருந்தனர். நேரம் ஆக ஆக தள்ளாட்டம் அதிகமானது அங்கு (அப்போது நான் மதுவுக்கு பழக்கபடவில்லை !), மேடையில் திடீரென்று ஒரு டிஸ்கோ சாந்தி அரை குறை ஆடையில் மார்பு பிதுங்க ஆடி கொண்டிருந்தார், நேரம் நெருங்க நெருங்க அவரது ஆட்டமும் அதிகமானது, மேடையில் அவர் ஆடியதை விட கீழே ஆடும் அம்மணிகள் ஆட்டம் இன்னும் அதிகம் என்று தோன்றியது. முடிவில் பட்டாசு சத்தத்துடன் எல்லோரும் அந்த புதிய வருடத்தை வரவேற்றபோது, ஓரமாக இருந்த நான் அந்த காலாச்சார மாற்றத்தை கண்டு, அந்த இரண்டாம் உலகத்தை கண்டு பயந்திருந்தேன் என்பதுதான் உண்மை !





அடுத்து வந்த வருடத்தில், இந்த முறை பக்திக்கு மாறலாம் என்று முடிவெடுத்தேன். சென்னையில் அப்போது இருந்ததால் ஒரு ஆஞ்சநேயர் கோவிலுக்கு போகலாம் என்று முடிவெடுத்தோம். பன்னிரண்டு மணிக்குதானே புத்தாண்டு, ஆகையால் பத்து மணிக்கு சென்றோம்..... அங்கு அனுமார் வாலை விட நீண்டதாக இருந்தது அந்த வரிசை. நத்தையை விட மெதுவாக ஊர்ந்து சென்று அவரை தரிசித்தோம், அப்போது மணி விடியற்காலை இரண்டு. அங்கு இருந்தவரை நெரிசல், இயற்க்கை உபாதை, வேர்வை என்று விடிந்தது அந்த ஆண்டு. எனக்காவது பரவாயில்லை, அந்த ஆண்டவருக்கு எப்படி இருந்திருக்கும்.... விடிய விடிய நின்றுக்கொண்டே இருந்தார் !



பிறகு ஒரு முறை இது எல்லாம் சரிபடவில்லை, ஆகையால் வீட்டிலேயே டிவி பார்த்துக்கொண்டு உலக தொலைகாட்சியிலேயே முதல் முறையாக காண்பிக்க படும் ஒரு படத்தை பார்த்து நிம்மதியாக கொண்டாடலாம் என்று எண்ணினேன். கடைசியில் ஒரு மொக்கை படத்தை பார்த்து விட்டு, சேனல் மாற்றி மாற்றி மாற்றி மனதில் ஒரு வெறுமை தட்ட தூங்க சென்றேன்.



அடுத்து வந்த ஆண்டுகளில் நீண்ட தூர தனிமை பயணம், அனாதை ஆசிரமம், பாண்டிச்சேரி பயணம், பிரைவேட் பார்ட்டி, நண்பர்களுடன் குத்தாட்டம், ஒரு தனிமை ரிசார்ட், பீச் ஓரம் ஆட்டம், காண்டில் லைட் டின்னர், கேக் வெட்டி, வெடி போட்டு என்று பல பல வகைகளாக கொண்டாடியும் அந்த மன நிம்மதி, சந்தோசம் என்பது மட்டும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் அந்த கடைசி வாரம் வந்தால் மட்டும் திண்டாட்டம்தான்.... இந்த புதிய வருடத்தை எப்படி நாம் கொண்டாடுவது என்று ! சரி என்ன இருந்தாலும் நமக்கு இன்னொரு வருடம் வாழ்வதற்கு ஆண்டவன் கொடுத்திருக்கிறான், ஆகவே கையை கொடுங்கள்.......ஹாப்பி நியூ இயர் நண்பரே !

Saturday, December 29, 2012

நான் ரசித்த குறும்படம் - தி கிப்ட் (ரஷ்யன்)

இந்த வாரம் நீங்கள் காண போவது ஒரு ரஷ்ய மொழி சயின்ஸ் பிக்ஷன் குறும்படம். இதன் முடிவு சட்டென்று முடிந்து போவது போல இருந்தாலும், அது மனதில் ஒரு கேள்வியையும், திகிலையும் கொடுக்கும் வண்ணம் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் இருக்கும் கிராபிக்ஸ் எல்லாம் ஒரு குறும்படத்திற்கு கூட இவ்வளவு கஷ்டபடுவார்களா என்று என்ன தோன்றுகிறது !!

நீங்களும் ரசியுங்கள் இதை...

Friday, December 28, 2012

உலக திருவிழா - ஹர்பின் ஐஸ் திருவிழா, சீனா

 இந்த பகுதியில் உலகமெங்கும் கொண்டாடப்படும் பல விழாக்களை பற்றி தெரிந்து கொள்ளலாம், அதன் வரிசையில் இந்த முறை "ஹர்பின் ஐஸ் திருவிழா". ஹர்பின் என்பது சீனாவின் தென்பகுதியில் இருக்கும் ஒரு நாடு,  சைபீரியா நாட்டில் டிசம்பர் - ஜனவரி மாதத்தில் குளிரில் இருந்து வரும் காற்றால் ஹர்பின் பகுதியில் இந்த மாதங்களில் சுமார் உறை நிலையில் இருந்து 16 டிகிரி வரை குளிர் நிலவும், எங்கு பார்த்தாலும் வெறும் ஐஸ்தான். இதை ஒரு திருவிழாவாக 1963இல் இருந்து கொண்டாடுகின்றனர், சில காலங்கள் தடைபட்டாலும் 1985இல் இருந்து இன்று வரை வருடம்தோறும் ஜனவரி 5 முதல் ஒரு மாதத்திற்கு இங்கு ஐஸ் சிற்பங்கள் செய்யப்பட்டு கண்கவர் விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.



ஐஸ் சிற்பங்கள் செய்வது அதுவும் உறைபனியின் போது என்பது சுலபமானது  இல்லை. வெகு நேர்த்தியுடன் செய்யப்படும் இந்த சிற்பங்கள், கலை நேர்த்தியுடன், லைட் கொண்டு உயிரூட்டப்படும். இந்த ஆண்டு 23-டிசம்பர் முதல் இது தொடங்கிஉள்ளது.




ஒவ்வொரு ஆண்டும் ஒரு தீம் கொண்டு இந்த ஐஸ் சிற்பங்கள் செதுக்கபடுகின்றன. ஆகையால், ஒவ்வொரு வருடமும் நீங்கள் இங்கு செல்லலாம் ! நம்ம "கோ" படத்தில் இது வரும், இந்த வீடியோ பார்த்தால் 
உங்களுக்கு புரியும்.   சரி, உங்களுக்காக சில படங்கள் இங்கே...







Thursday, December 27, 2012

உங்களில் யார் அடுத்த இசை வித்வான் ?

சமீபத்தில் எனது நண்பனை பார்க்க சென்றிருந்தேன், அவனுக்காக காத்திருந்தபோது ஒரு அறையில் இருந்து ரம்மியமான புல்லாங்குழல் இசை வந்தது. அதை அவ்வளவு ரசித்தேன் அன்று என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குள் நண்பன் வந்துவிட அவனோடு பேசிகொண்டிருந்துவிட்டு கிளம்ப வேண்டும் என்றபோது அதே அறையில் இருந்து இப்போது ஒரு வயலின் இசை வழிந்தது, அது என்னை கிளம்ப விடவில்லை. ஒரு ஆர்வத்தில் என்ன என பார்க்கலாமா என்று கேட்க அவன் என்னை அங்கு கூட்டி சென்றான். அவனது தந்தை அங்கிருந்தார், அவரது அருகில் ஒரு பழைய காசெட் டேப்ரெகார்டர் ஒன்று அந்த இசையை வழிய விட்டது, அங்கு இருந்த அலமாரிகளில் எல்லாம் நிறைய காசெட் இருந்தது. அவனது தந்தையிடம் உரையாடியபோதுதான் தெரிந்தது அவ்வளவு கலைஞர்கள் நமது மண்ணில் இருந்தது, இன்று நிலைமை என்ன என்று யோசித்தபோது பொட்டில் அடித்தது நமது கலாச்சார சீரழிவு !



வளையபட்டி தவில், புல்லாங்குழல் ரமணி, காரைக்குறிச்சி அருணாச்சலம், ராஜரத்தினம் பிள்ளை, சேதுராமன் - பொன்னுசாமி, நாமகிரிபேட்டை கிருஷ்ணன், ஷேக் சின்ன மௌலானா, கடம் விநாயக்ராம், மாண்டலின் ஸ்ரீனிவாஸ், வயலின் குன்னக்குடி வைத்தியநாதன், சீர்காழி கோவிந்தராஜன், லால்குடி ஜெயராமன், பாலக்காடு ரகு, வீணை காயத்ரி, ட்ரம்ஸ் சிவமணி, வயலின் L. சுப்பிரமணியம், வீணை பாலச்சந்தர், மிருதங்கம் காரைக்குடி மணி இன்று பலரின் இசை பேழைகளை அங்கு கண்டேன். கண்டிப்பாக இவர்களில் பலரை நமக்கு தெரியும், இவர்களது இசையை ரசிக்கும் அளவுக்கு நாம் தெரிந்து வைத்திருக்கவில்லை, ஆனால் பலரும் இவர்களது இசையை கேட்டு பாராட்டி இருப்பதை நாம் அறிவோம். எங்கே இப்போது சொல்லுங்கள்..... இன்று வயலின் என்றால் யார் பிரபலம், யார் மிருதங்கதிர்க்கு, கடம் ? வீணை ? நாதஸ்வரம் ? தவில் ? கஞ்சிரா ? புல்லாங்குழல் ? அட, ஏன் முழிக்கிறீர்கள்..... நமது தலைமுறையில் இன்று போல் டிவி, விளம்பரங்கள் இல்லை, அப்படி இருந்தும் அவர்களையும் அவர்களது இசையையும் நமக்கு தெரியும்..... இன்று அவ்வளவு தகவல்கள் கொட்டி கிடந்தும் இந்த துறைகளில் இருக்கும் ஒருவரை கூடவா நமக்கு சொல்ல தெரியவில்லை ? உங்களுக்கு இந்த தகவல்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லையா, இல்லை இந்த துறைகளில் இன்று சாதிப்போர் யாரும் இல்லையா ? கண்டிப்பாக நான் செய்தியையும், புத்தகத்தையும் தவறாமல் படிக்கிறேன், ஆதலால் எனக்கு இந்த தகவல்கள் தெரியவில்லை என்பதை ஒத்து கொள்ள முடியவில்லை...... இந்த தலைமுறைகளில் ஒரு  வித்வான் உருவாவது ஏன்  இல்லை என்ற கேள்வி எழுகிறது ?






அன்றும் இன்றும் நாம் ரசிக்கும் இசை என்ன என்று சற்று எண்ணி பாருங்கள் ? அன்று எல்லாம் நாம் ரசிக்கிறோமோ இல்லையோ, சில இசைகள் நமக்கு பழக்கபடுதபட்டன....உதாரணமாக நாதஸ்வரம், தவில் இசைகள் எல்லா கோவில்களிலும், வீணை - புல்லாங்குழல் - மிருதங்கம் - வயலின் இசைகள் என்பது கோவில் கச்சேரிகளில், வாய்பாட்டு என்பது எல்லா இடங்களிலும் என்று இசை கருவிகள் நாம் செல்லும் இடங்களில். ஒரு சமயத்தில் அதை நாம் விரும்ப தொடங்கினோம், ஒரு பருவத்தில் வயலின் இசை என்பது காதல் வந்த எவனுக்கும் பின்னணியில் ஒலிக்கும்......இன்று கோவில் திருவிழாக்கள் என்றால் ஆர்கஸ்டிரா என்றாகிவிட்டது, கோவில்களில் எல்லாம் நாதஸ்வரதிற்கு பதில் டம் டம் என்று ஒலிக்கும் மெசின் வந்து விட்டது, மியூசிக் என்றால் அது கீ போர்டு என்றாகிவிட்டது, டான்ஸ் என்றால் பரதம் அல்லது வெஸ்டேர்ன், பரதத்திற்கு பாடல் வேண்டுமா இதோ "கண்ணோடு காண்பதெல்லாம்" இருக்கிறது, இல்லையா CD கொண்டு போடு என்றாகிவிட்டது இல்லையா ? இதில் இந்த கால குழந்தைகள் வளரும்போது இசை என்றால் அது குத்துபாட்டு, டான்ஸ் என்றால் விஜய் ஆடுவது...... அந்த காலத்து சங்கராபரணம், சலங்கை ஒலி எல்லாம் போயே போச்சு !




Traditional music instruments


Modern music instruments

எந்த ஒரு விஷயத்திலும் ஆழம் பார்ப்பது என்பது இந்த காலத்தில் இல்லையோ என்று என்ன தோன்றுகிறது, எந்த விஷயம் கற்றாலும் அதில் உடனே காசு பார்க்க வேண்டும் எனும்போது அந்த டெடிகேஷன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் போய் விட்டதோ ? பிள்ளைகளை படி படி என்று சொல்லி, காசு அதிகம் கொடுத்து ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டு, அவனது நாட்டம் எதில் என்று தெரியாமல் வாழ்கையை வாழ சொல்கிறோமோ ? ஒரு இசை, ஓவியம், பாரம்பரிய நடனம், கவிதை என்று வாழ்பவனை நாம் வாழ தெரியாதவன் என்று ஒதுக்கிவிட்டு பார்கிறோமோ ? எது வாழ்க்கை...... மனதுக்கு பிடித்து வாழ்வதா, இல்லை பணம் பிடித்து வாழ்வதா ? இன்றும், திருமதி.MS. சுப்புலட்சுமி பாடும்போது அவ்வளவு அனுபவித்து பாடுவது போல தோன்றவில்லை..... அந்த அனுபவம் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே கிடைக்கும் என்றுதான் நமது பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கிறோமோ ? எல்லா பிள்ளைகளும் நாளை டாக்டர், என்ஜினியர், கடை முதலாளி, வக்கீல் என்று ஆகிவிட்டால் இந்த உலகத்தில் நமது பிள்ளைகளுக்கு ரசிக்க என்ன இருக்க முடியும் ?




இவ்வளவு யோசித்து, யோசித்து இதை எழுதிவிட்டு வீட்டுக்கு சென்றேன்.... எனது மகன் கரண்டியால் ஒரு தட்டை தட்டி கொண்டிருந்தான், மனைவி அவனை படிக்க போறியா இல்லையா என்று அவனை மிரட்டி கொண்டிருந்தாள்..... நான் ஒரு நிமிடம் கண்ணை மூடி திறந்தேன், பின்னர் என் மனைவியிடம் சொன்னேன், "அட விடு, அவன் வரும் காலத்தில் ஒரு வித்வானா வரட்டும்" என்று, நீங்கள் இப்போது என்னை பார்க்கும் பார்வைதான், என் மனைவி என்னை பார்த்தது !



Wednesday, December 26, 2012

அறுசுவை - பெங்களுரு "மதுரை இட்லி கடை"

இந்த பகுதியில் நான் எழுதும் உணவகத்திற்கு நிறைய பேர் செல்கிறார்கள், இதை நிறைய பேர் படிக்கிறார்கள் என்பது எனது வலைப்பூவில் பிரபல பதிவுகள் வரிசையில் இருக்கும் முதல் ஐந்து பதிவுகளில், நான்கு பதிவுகள் இந்த அறுசுவை தலைப்பில்தான் உள்ளது என்பது மூலம் அறிகிறேன், இதனால் எனக்கு ஒரு பொறுப்பு இருப்பதாகவே படுகிறது. நான் சுவைத்து மகிழ்ந்து எழுதும் பதிவிற்கு கூடுதல் கவனம் செலுத்துகின்றேன்....நன்றி நண்பர்களே. தொடர்ந்து படியுங்கள், சுவையுங்கள் !!

இந்த முறை நான் சென்று சுவைத்து மகிழ்ந்தது "மதுரை இட்லி கடை". பெங்களுரு இந்திரா நகரில் 11 மெயின் ரோடு அருகில் இருக்கும் இந்த கடை நான் பல முறை சென்ற போதும் கண்ணில் படவில்லை, இந்த முறை நான் டிராபிக் காரணமாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தபோது இது சிறப்பு கவனம் பெற்றது ! முதலில் காபி மட்டும் சாப்பிடலாம் என்றுதான் சென்றேன், பின்னர் அங்கிருந்து வந்த மணமும், எல்லோரும் சாப்பிடும் பதார்த்தத்தை பார்த்தும் எனது முடிவு மாறியது என்றுதான் சொல்ல வேண்டும்.




நன்றி : சந்திப்

 பொதுவாக தமிழ்நாடு உணவுகள் என்பது பெங்களுருவில் வெகு சில இடங்களில் கிடைக்கும், அந்த கடைகளில் எல்லாம் தோசை, இட்லி என்று மட்டுமே இருக்கும். ஆனால் இந்த கடையில் விதவிதமான வகைகள் இருந்தது மனதுக்கு மகிழ்ச்சியை தந்தது. இடம் சிறிதாக இருந்தாலும், சுத்தமாக, உணவுகளும் சுவையாக இருந்தது.


நான் முதலில் பொடி இட்லி ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தேன். பொதுவாக இதுவரை பெரிய இட்லியை நறுக்கி அதில் பொடி தடவித்தான் பார்த்திருக்கிறேன், இங்கு சிறிய இட்லிகளை பொடியினில் பிரட்டி, சின்ன வெங்காயம், கடுகு போட்டு மிதமாக தாளித்து கொடுக்கும்போது அதை நினைக்கும்போதே நா ஊற வைத்துவிடுகின்றனர். இதை செய்துகொண்டிருக்கும்போதே ஒரு பிளைன் தோசை - வடை கறியும் ஆர்டர் செய்திருந்தேன்,  அதுவும் வந்துவிட எதை முதலில் சாப்பிடுவது என்று திணறித்தான் போனேன் ! வாயில் வைத்தவுடன் சுண்டி இழுக்கிறது சுவை.


பஞ்ச் லைன் :
சுவை               -      வித விதமான தமிழ்நாடு மெனு ! அருமையான சுவை ! பொடி இட்லி, கார பணியாரம் A1 !! கீழே உள்ள மெனு கார்டு பாருங்கள்.

அமைப்பு         -       சுத்தமான சிறிய இடம், கூட்டம் ஜாஸ்தி என்றால்
 கஷ்டம் !!

பணம்              -      நியாயமான விலை ! சில பதார்த்தங்கள் மிக குறைந்த விலை என்றே சொல்லலாம்.

சர்வீஸ்           -       பொதுவாக செல்ப் சர்வீஸ் ! ஆனால் விரைவாக இருக்கிறது.


அட்ரஸ் :
இந்திரா நகரில், 80 பீட் ரோடு, 11வது மெயின் ரோடு அருகில் கடை.
அதிக விவரத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள மேப் பாருங்கள்.




Labels  : madurai idli, idly, kadalpayanangal, arusuvai, bengaluru best idli place

Friday, December 21, 2012

நான் ரசித்த குறும்படம் - டிஸ்னி UP

ஒரு வாழ்கையின் பயணத்தை இதுவரை இவ்வளவு சுருக்கமாக, இனிமையாக, மனதை வருடும் வண்ணம் எவரும் சொல்லி இருக்கிறார்களா என்று தெரியவில்லை.....இது டிஸ்னி பிச்சர்ஸ்ன் அப் என்னும் ஒரு முழு நீள கார்ட்டூன் படத்தின் ஒரு துண்டு பகுதிதான், ஆனால் இதில் நம் அனைவரது வாழ்கையும் பிரதிபளிபதால் இதை உங்களுடன் பகிர்கிறேன்.

ஒரு தம்பதி திருமணம் செய்து கொண்டு, அவர்களது கனவான ஒரு அருவிக்கு செல்ல வேண்டும் என்று பணம் சேர்கின்றனர், ஆனால் வெவ்வேறு காரணங்களால் அந்த பணம் செலவழிகிறது....முடிவில் என்னவானது என்பதுதான் கதை. இந்த மிக சிறிய குறும்படம் போன்ற ஒன்றில் அவ்வளவு ஆழம் இருக்கும்.....நிச்சயம் நீங்களும் ரசிப்பீர்கள்.

Thursday, December 20, 2012

ஆச்சி நாடக சபா - டேவிட் காப்பர்பீல்ட் ஷோ

 டேவிட் காப்பர்பீல்ட் - இவரை பற்றி வெகு சிலருக்குதான் தெரிந்திருக்கும், அதுவும் இவர் செய்யும் மாயவித்தை எல்லாம் வாயை பிளக்க வைக்கும் ராகம். போர்பஸ் பத்திரிக்கை இவரை உலகின் மிக பெரிய கமர்சியல் சக்சஸ் மேஜிக் நிபுணர் என்று பட்டம் கொடுத்துள்ளது. இவரின் சாகசங்களை மேஜிக் என்று வகை படுத்த முடியாது....மோடி மஸ்தான் வித்தை போன்று ஒரு புதுமையான வகை ! நொடியில் மறைவதும், தோன்றுவதும், சுவர்களை கடப்பதும் என்று எல்லாமே உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். இவரது ஒரு ஷோ டிக்கெட்டுகள் எவ்வளவு விலை வைத்தாலும் விற்று தீர்ந்துவிடும் அளவுக்கு பிரபலம் !!





இவரது சாதனைகளையும், விருதுகளையும் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்....அவ்வளவு இருக்கிறது. 21 எம்மி விருதுகள், 11 கின்னஸ் விருதுகள், ஹாலிவுட்ன் வாக் ஆப் பேம் விருது, பிரஞ்சு அரசாங்கத்தின் உயரிய விருதான நைட்வூட், அமெரிக்க அரசாங்கத்தின் வாழும் சாதனையாளர் விருது, போர்பஸ் பத்திரிகையின் விருது என்று சொல்லிக்கொண்டே போகலாம். இன்றளவிலும் இவரது மாயவித்தைகள் மேஜிக் உலகில் பிரபலம்....எப்படி செய்கிறார் என்று எல்லோரும் மண்டையை பிய்த்து கொள்கிறார்கள்.





இவரது உண்மையான பெயர் டேவிட் செத் கேட்கின் என்பது, செப்டம்பர் 16, 1956இல் பிறந்த இவரது 12வது வயதில்  இருந்து மேஜிக் செய்ய ஆரம்பித்தார், இவரது 18வது வயதில் "தி மேஜிக் மேன்" என்னும் ஒரு மேடை நாடகத்தில் நடித்து புகழ் பெற்றார் அதில் சார்லஸ் டிக்கன்ஸ் நாவலில் வரும் டேவிட் காப்பர்பீல்ட் என்னும் பெயர் பிடித்திருந்ததால் அதையே தனது பெயர் ஆக்கி கொண்டார்....இவர் ஒரு டிவி ஷோ ஒன்றையும் ABC நெட்வொர்க் தொலைகாட்சிக்கு நடத்தினார். இவரது பல மாயவித்தைகள் புகழ் பெற்றதாக இருந்தாலும் இன்றளவிலும் எல்லா மக்களாலும் புகழப்படுவது என்பது நியூயார்க்ன் சுதந்திர தேவி சிலையை மறைய வைத்தது, சீன பெருஞ்சுவரை கடந்தது, மெக்ஸிகோவின் கிரான்ட் கான்யான் மேலே மிதந்ததை சொல்லலாம்.




மேஜிக் மட்டும் இல்லாமல் இவர் "International Museum and Library of the Conjuring Arts" என்ற ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்கியுள்ளார், இதில் மேஜிக் பற்றி தான் அறிந்துகொண்ட தகவல்கள், பொருட்களை வைத்துள்ளார். இது மேஜிக் நிபுணர்களின் சொர்க்க பூமி எனலாம்.


இவர் 2006ம் ஆண்டு முஷா கே என்னும் 11 பகமியா தீவு கூடங்களை வாங்கியுள்ளார். இது இவரது சொந்த தீவுகள், இதில் இவரது மனம் கவர்ந்த நண்பர்கள் மட்டும் வர முடியும். அது மட்டும் இல்லை, மேஜிக் அண்டர்கிரௌண்ட் உணவகம் ஒன்றை நியூயார்க் நகரில் தொடங்க முயற்சி மேற்கொண்டிருந்தார் (அது முடியாமல் மூடப்பட்டது என்று சொல்கிறார்கள்). என்ன இருந்தாலும், இன்றுவரை இவரது மாயவித்தைகள் எல்லோரையும் கவர்கிறது.....உங்களையும் கவரும்.