Tuesday, December 11, 2012

ஒரு வாய் சோறு...

எனது மனைவி என்னிடம் இன்று என்ன சமைக்க வேண்டும் என்று கேட்டபோது, இட்லி செய் என்றேன். அவள் "அட, அதை நேற்றுதானே செய்தேன்" என்றால், இப்படியே நான் ஒன்று சொல்ல அதை அன்றுதானே செய்தேன் என அவள் சொல்ல என்று ஓடியது. சட்டேன்று அங்கு இருந்த அம்மா, அட சாப்பிட்ட எல்லாம் மறந்திட்டியே, உனக்கு இந்த வாழ்கையில் சாப்பிட்ட ஒரு வாய் சோறு கூடவா நினைவில் இல்லை என்று கேட்டபோதுதான் மனது யோசித்தது..... எந்த தருணம் அது என்று. நேற்று என்ன சாப்பிட்டேன் என்பதே இன்று மறந்து போகும் நிலையில், ஒரு சில தருணங்கள் மட்டும் உறைந்திருக்கும் அந்த ஒரு வாய் சோறு என்னென்ன என்று உங்களுக்கு நினைவில் இருக்கிறதா ? இந்த ஒரு வாய் சோற்றுக்கு நாம் எப்படி பாடுபட்டிருக்கிறோம் என்று எண்ணியதுண்டா ? இன்று நினைத்ததை எல்லாம் தின்கும் நாம் ஒரு பொழுதினில் கிடைத்த எந்த அந்த ஒரு வாய் சோறு மட்டும் தேவாமிர்தம் என்று எண்ணியதுண்டா ?
இன்று சாப்பிடுவது என்பது நேரம் பார்த்து நிகழ்கிறதே ஒழிய வயிற்றின் பசி அறிந்து நிகழ்வதில்லை இல்லையா. என் அம்மா எவ்வளவு பசி இருந்தாலும் நானும், எனது அப்பாவும் சாப்பிடாமல் அவர் சாப்பிட்டதில்லை. ஒரு முறை என் அப்பா வேலை காரணமாக நடு நிசி வரை ஆனபோது கூட என் அம்மா காத்திருந்தார், என் அப்பா வந்து அம்மாவிடம் ஒரு வாய் சோறு சாப்பிடகூடாதா என்று  கடித்து கொண்டபோது அம்மாவின் பதில் புன்னகை மட்டுமே. அதே அம்மா ஒரு நாள் காய்ச்சலில் இருந்தபோது சமைக்க தெரியாத என் அப்பா வீட்டில் கஞ்சி காய்ச்சி எடுத்து வந்து அம்மாவிடம் "இதை மட்டும் ஒரு வாய் சாப்பிடு"என்று கொடுத்தபோது அந்த ஒரு கைப்பிடி சாதம் அமிர்தமாக அல்லவா இருந்திருக்கும் எனது அம்மாவிற்கு.வீட்டில் செய்யப்படும் உப்புமா, அடை, வெண்பொங்கல் போன்ற பண்டங்கள் என்றுமே எனக்கு பிடித்ததில்லை. நெய்யும் முந்திரிபருப்பும் கொண்டு செய்யப்பட்ட அதை என்றுமே உண்ணாமல், எனக்கு என்று சிறிது இட்லி அல்லது தோசை அல்லது கடையில் இருந்து உண்ண ரெடியாக இருக்கும். முதன் முதலாக NCC கேம்ப் என்று ஸ்ரீரங்கத்தில் பத்து நாள் இருந்தேன். முதல் நாள் காலை முழுவதும் வெயிலில் நன்கு மார்ச் செய்து செய்து வயிறு பசிதிருந்தபோது எனது தட்டில் விழுந்தது கோதுமை உப்புமாவும், ரசம் என்ற பெயரில் ஒரு சாம்பாரும்!! உப்புமாவா என்று முகம் சுளித்தாலும், ஒரு வாய் எடுத்து வைத்தபோது தேவாமிர்தம் போல இருந்தது. அன்றிலிருந்து தினமும் அந்த கேம்பில் எனது தட்டில் விழுந்த உணவுகள் எல்லாம் ருசியாகத்தான் இருந்தன, நண்பர்களுடன் கதை அடித்துக்கொண்டே சாப்பிட்ட அந்த ஒவ்வொரு கைப்பிடி உணவும் அதன் சுவையும் இன்றும் யாபகம் இருக்கிறது !நான் காலேஜ் படித்துகொண்டிருந்தபோது NSS கேம்ப் ஒன்று வில்லிவலம் என்னும் கிராமத்தில் நடந்தது, அங்கிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் (அதுவே ஒரு பக்கா கிராமம், அதிலிருந்து ஒரு பத்து கிலோமீட்டர் என்றால் நினைத்து பாருங்கள் !) ஒரு அனாதை விடுதியும், பள்ளிக்கூடமும் என்று இணைந்த ஒன்று இருந்தது. எங்களில் சிலரை மட்டும் எனது ஆசிரியர் கூட்டி சென்றிருந்தார், அந்த மாணவர்களுக்கு எங்களை பார்த்து படிக்க வேண்டும் என்று உற்சாகம் வரும் என்பதுதான் எண்ணம், அங்கு அவர்களுடன் பேசிவிட்டு மதியம் சாப்பிட உட்கார்ந்தோம். தட்டில் வெகுவாக குலைந்தும், பெரிய பெரிய அரிசியாகவும் என்று கலவையாக ஒரு சாதம், சாம்பார் என்று தட்டில் ஊற்றப்பட்டது, அங்கு இருந்த ஐம்பது மாணவர்களும், எங்களுடன் வந்த ஆசிரியரும் மெதுவாக சாப்பிட்டனர், என்னால் ஒரு வாய் எடுத்து வைத்துவிட்டு முழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் அப்படி ஒரு ருசி. என்ன செய்வது என்று திரு திருவென்று முழித்தோம். சட்டென்று அங்கிருந்த ஒரு ஆயா, ஒரு முட்டையை தட்டில் வைத்தார், எங்களுக்கு மட்டும். கடவுளுக்கு நன்றி சொல்லி, அந்த முட்டையின் சுவையில், இருந்த சாதத்தை மெல்ல உண்ண தொடங்கினோம்.....பக்கத்தில் இருந்த சிறுவன் எங்களை பார்த்து சிரித்தபடியே "நீங்க முட்டையோடதான் இந்த சாதத்தை சாப்பிட முடியுது.... நாங்க எல்லாம் வருஷம் முழுக்க முட்டை எல்லாம் இல்லாமல்தான் சாப்பிடுவோம்" என்றபோது அடுத்து எடுத்த அந்த ஒரு வாய் சோறு தொண்டையில் முள்ளாக இறங்கியது.நான் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது சென்னையில் தனியாகத்தான் தங்கியிருந்தேன், வெளியில்தான் சாப்பாடு. ஒரு நாள் திடீரென்று பந்த் அறிவித்தனர், வேலை முடிந்து இரவினில் வந்தபோது ஒன்றும் தெரியவில்லை. மறு நாள் சாப்பிட தெரு தெருவாய் அலைந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு டீ கடை கூட இல்லை. வீட்டில் வந்து தண்ணீர் குடித்துவிட்டு படுத்துவிட்டேன். மறுபடியும் மூன்று மணிக்கு பசி வயிற்ரை கிள்ள மீண்டும் அலைந்தேன், ஒரு வாழை பழம் கூட கிடைக்கவில்லை. தலை வேறு கிறு கிறுத்தது. மீண்டும் வீட்டுக்கு வந்து, தலை சுற்ற பூட்டை திறந்தபோது, கீழ் வீட்டில் குடியிருந்த அந்த வயதான அம்மா கையில் மோர் ஊற்றிய சாதமும் ஒரு ஊறுகாய் துண்டும் கையில் வைத்துக்கொண்டு, தம்பி.....வெளியில எங்கயும் சாபிட்டியா  இல்லையானு தெரியலை, கொஞ்சம் மோர் சாதம் இருக்கு சாப்பிடறியா என்றபோது எனது கண்களுக்கு அது ஒரு அறுசுவை விருந்தாக தெரிந்தது. ஒவ்வொரு கை சோறும் அமிர்தமாக இருந்தது !இப்படி எத்தனையோ தருணங்கள் வாழ்வில்..... அம்மா உருட்டி கொடுத்த பருப்பு சோறு, மஞ்சள் காமாலையில் விழுந்து எழுந்தவுடன் கிடைத்த அந்த நெய் தோசை, முதன் முதலாக சாப்பிட்ட பழைய சாதம், கிராமத்தில் கிடைத்த அந்த கம்மன்கூழ், ஒரு இரவினில் வேலை விட்டு வரும்போது கிடைத்த அந்த பிரட், பிள்ளையார் சதுர்த்தி அன்று ஊருக்கு போகாமல் சென்னையிலேயே இருந்தபோது கிடைத்த கொழுக்கட்டை, நெடுந்தூர பயணத்தில் கிடைத்த அந்த காரம் தூவிய வெள்ளரி பிஞ்சு, வெயிலுக்கு மர நிழலில் ஒதுங்கியபோது கிடைத்த அந்த ஐஸ் மோர், சிறு வயதில் சாப்பிட்ட குச்சி ஐஸ், அப்பா ஊருக்கு வரும்போது எனக்கு கொடுத்த அந்த பால்கோவா, பாட்டி கண் தெரியாத போதும் தடவி தடவி சுட்டு கொடுத்த அந்த கருகிய தோசை, காசில்லாதபோது கேட்காமலேயே எனக்கு டீ வாங்கி கொடுந்த நண்பன், சிறு வயதில் வீட்டிலேயே அம்மா செய்த முறுக்கு, அப்பா உதவி செய்கிறேன் என்று கெடுத்த அந்த குலோப் ஜாமூன் என்று ஒரு வாய் பதார்த்தங்கள் வாழ்வில் நிறைய இருக்கின்றன, ஒவ்வொரு முறை அந்த பதார்த்தங்களை பார்க்கும்போது அதன் ருசியும், நினைவுகளும் கூடவே வருகின்றன. நினைத்து பார்த்தால்.... எனது நினைவினில் இருந்த அந்த அத்தனை சோறும் நான் பசியோடு இருந்தபோது கிடைத்தது, அதனால்தான் அது ருசியாக இருந்தது, மறக்கவும் முடியவில்லை. சென்ற வாரமோ, நேற்றோ என்ன சாபிட்டோம் என்று சட்டென்று சொல்லுங்கள் பாப்போம் !! இது யாபகத்திற்கு வர கொஞ்சம் நேரம் எடுக்கலாம், அல்லது வராமலேயே போகலாம், காரணம் நாம் இப்போது சாப்பிடுவது நேரத்திற்கு..... பசிக்கு இல்லை.

சென்ற வாரத்தில் நண்பனுடன் பார்ட்டி என்று ஒரு பத்து பேர் வரை வெளியே சென்றிருந்தோம். நல்ல ஹோட்டல், நண்பன் வேறு பணம் இருந்தது என்று கூறிவிட்டதால் எல்லாமும் ஆர்டர் செய்தோம். முடிவில் நிறைய மிஞ்சி விட்டது, அதனால் நான் அங்கு மிஞ்சி
இருந்த பிரியாணியை வீட்டுக்கு எடுத்து செல்ல பார்சல் செய்ய சொன்னேன். பல் குத்திக்கொண்டே வெளியே சிரிப்பும் கும்மாளமுமாக வெளியே வந்தபோது தூரத்தில் ஒருவர் உட்கார்ந்துக்கொண்டே பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார், அவர் எடுத்துக்கொண்டிருந்த விதம் ஒரு மாதிரியாக இருந்தது. நெருங்கி சென்றபோது என்னை நோக்கி அவர் "ஐயா, ஒரே ஒரு டீ மட்டும் வாங்கி கொடுங்க, நாலு நாளா சாப்பிடலை" என்று கண்ணில் நீர் வர கேட்டபோது, என்னிடம் இருந்த பிரியாணி பொட்டலம் அவர் கைக்கு போனது. விறுவிறுவென்று பிரித்து நான்கு வாய் சாபிட்ட அவர், என்னை நோக்கி கை எடுத்து கும்பிட்டார். இது போல எத்தனை எத்தனையோ ஏழைகள் ஒவ்வொரு வேளையும் சாப்பாடிற்க்கு வயிறு பசித்து பசித்து உண்கிறார்களே, அப்படியென்றால் அவர்கள் சாப்பிட்ட எல்லா உணவும் யாபகம் இருக்குமா ? ஒரு கை பிடி சோறு எப்போது எனக்கு இவ்வளவு யாபகத்தை கிளப்புகிறதோ, அது போல இவர்களுக்கு ஒவ்வொரு வேளையும் அந்த யாபகம் கிளம்புமோ ? அட.... ஒரு வாய் சோறு எனக்கு அன்று அந்த ஆனந்தத்தை தந்ததே, அதை இன்று இப்பொழுது இங்கு பார்க்க முடிகிறதே ! இதுபோல உங்களுக்கும் "ஒரு வாய் சோறு" பொழுதுகள் நினைவினில் இருந்திருக்குமே, அப்படியென்றால் இனிமேல் ஒருவன் உங்களது முன் பசியோடு இருந்தால்...... அவனுக்கும் அன்னமிடுங்களேன். அந்த ஒரு வாய் சோறு அவனின் ஆயுளுக்கும் உங்களை நினைவு படுத்தும்...... கடவுளை அல்ல !
15 comments:

 1. நல்ல பகிர்வு..பசியின் கொடுமை அதை அறிந்தவனுக்கு தெரியும்..நானும் இப்படித்தான்..ஹோட்டலில் ஆர்டர் பண்ணிவிட்டு மீதம் ஆகும் உணவினை பார்சல் செய்து அருகில் இருக்கும் பிச்சைகாரர்களிடம் கொடுத்து விடுவேன்..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஜீவா ! தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி, அப்படிப்பட்ட பசிக்கொடுமையை போக்க இது போல் எல்லோரும் செய்தால் நலம் பயக்கும்.

   Delete
 2. Ennudaiya school kalankalai ninaikka vaithathathu unkal anupavam.. Naan ennoda 10 th varaikkum schoolili podum mathiya unavu than abtraikku kidaikkum soodana muthal unavu.. Perumpalum kalai velaiyil palaya soru mathiya velaiyil than sudu soru kidaikkum.. Unkal pathivai padikkum pothu ethavathu seyya vendum entru thonukirathu.. But naan irukkum intha thesathil pichaikararkalai parkka mudiyathu..

  ReplyDelete
  Replies
  1. நன்றி அன்பு ! நான் கஷ்டப்பட்டு எழுதிய இந்த பதிவு இந்த அளவு உங்களது மனதை தொட்டதே எனக்கு வெற்றி என்று படுகிறது. முடிந்தால் இந்த புதிய வருடத்திற்கு எதாவது ஒரு அனாதை விடுதிக்கு ஒரு வேளை உணவு அளியுங்கள்.

   Delete
  2. Kandippaka seyven.. Ippothu kooda ennoda sithi ponnunkalukku ennal mudintha alavirkku avarkaloda uyar kalvikku uthavi seikiren.. But irunthalum ithu mathiriyana uthaviyaiyum varunkalathul seyven..

   Delete
  3. நன்றி அன்பு ! தங்களது உதவி தொடரட்டும், ஆண்டவன் அதற்க்கு துணை நிக்கட்டும். தொடருங்கள்......

   Delete
 3. நிழலின் அருமையும் ஒரு கவளச் சோற்றின்
  அருமையும் அதற்காகத் தவித்துக் கிடந்து
  கிடைக்கையில்தான் தெரியும்,
  நானும் என் சம்பத்தப்பட்ட இது போன்ற சூழலை
  நினைக்கச் செய்து போன
  மனம் தொட்ட அருமையான பதிவு
  பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரமணி சார் ! உங்களது நினைவை இந்த பதிவு தூண்டி விட்டதே இந்த பதிவின் வெற்றி எனலாம். உங்களது கவிதைகளில் வரும் சில நேரங்களில் இது வரும், அதை நினைத்து பார்க்கிறேன் இப்போது !

   Delete
 4. Replies
  1. நன்றி சஞ்சய் !! உங்களது கருத்தும் எனது கருத்தும் ஒத்து போவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தங்களது வருகைக்கு நன்றி, தொடருங்கள்.....

   Delete
 5. Replies
  1. நன்றி தெய்வா ! தங்கள் கருத்திற்கும், வருகைக்கும்.....

   Delete
 6. VERY NICE FLOW IN YOUR WRITING
  Good content,
  THANK YOU

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி முத்து ! இது போன்ற வார்த்தைகள்தான் இப்படி எழுத தூண்டுகிறது !

   Delete