Tuesday, December 18, 2012

ரசிக்க முடியாத படம் !!

இன்று கும்கி மற்றும் நீதானே என் பொன்வசந்தம் படங்கள் ரிலீஸ், ஏதாவது ஒரு படம் போகலாம் என்று நானும் எனது மனைவியும் பேசினோம், போக வேண்டும் என்று தோன்றினாலும், மனதினுள் ஒரு அலுப்பு, அட என்ன படம் அது என்று !? இந்த படங்களுக்கு போவது என்பது ஒரு சூதாட்டம் போலதான், மிகவும் எதிர்பார்த்து சென்றால் காலை வாரி விடும், உதாரணமாக நான் கடவுள் திரைப்படம். முதல் நாளே நானும் எனது மனைவியும் சென்றிருந்தோம், நான் படத்தை ரசித்து பார்த்தாலும் பல விதங்களில் ஊனமுற்ற குழந்தைகளை திரையில் பார்க்கும்போது மனது வலித்தது. இடைவேளைக்கு பிறகு எனது மனைவி கைகளை இறுக்க பற்றி வீட்டிற்க்கு போகலாம் என்றபோது ஏதோ என்று உணர்ந்து வீட்டின் கதவை திறந்ததுதான் தாமதம், பழைய படங்களில் எல்லாம் கதாநாயகியை காதலினிடம் இருந்து பிரித்து அறையில் தள்ளியவுடன் அவர்கள் படுக்கையில் விழுந்து விசும்புவார்களே அதை போலவே எனது மனைவியும் செய்ய, நான் என்ன சமாதானம் செய்வது என்று முழித்து கொண்டிருந்தேன். நல்ல வேளை நான் பவர் ஸ்டாரின் லத்திகா படத்திற்கு அவளை கூட்டி போகவில்லை ! உங்களது வாழ்வை நீங்கள் திரும்பி பார்க்கும்போது எந்த படம் உங்களை அதிகம் பாதித்தது என்று சொல்ல முடிகிறதா ? இதுவரை நிறைய படம் பார்த்திருந்தாலும் மனதை தொட்ட, இன்னும் நினைவில் இருக்கும் படம் எது என்று உங்களுக்கு தெரிகிறது ?இன்று நினைத்து பார்த்தாலும் எனது யாபகத்தில் திரைப்படம் என்று தோன்றும்போது என் நினைவுக்கு வருவது மை டியர் குட்டிச்சாத்தான் படம்தான்.  ஒரு நாள் ஊரெல்லாம் தீபிடித்தது போல பரபரப்பாக இருந்தது. நம்ம பிரபாத் தியேட்டரில் ஒரு படம் வந்திருக்காம், அதுல ஆளுங்க எல்லாம் நம்ம கண்ணு முன்னாடி வந்து ஆடுறாகலாம் என்று. பல பல வதந்திகள் கொடி கட்டி பறந்தன. யார் ஒருவர் அந்த படத்தை பார்த்தேன் என்றார்களோ அவர்கள் ஹீரோவாக சித்தரிக்கப்பட்டனர் !! அவர்களை சுற்றி உட்கார்ந்து அந்த படத்தின் கதையை கேட்டு கேட்டு, படம் பார்க்கவில்லை என்றாலும் அந்த கதையை வைத்து ஹீரோவாக முயன்றனர். எலும்பு கூடு அருகில் வர நான் பயந்தது, ஐஸ் கிரீமில் இருந்து உருண்டோடிய செர்ரி பழத்தை சீட்டுக்கு அடியில் தேடியது, பறந்து வந்த ஈட்டி கண்ணை குத்தும் என்று என் கண்ணை மூடியது என்று படு அட்டகாசமாய் இருந்தது. என் அப்பா அம்மாவிற்கோ நான் அவ்வளவு சிரித்து ரசித்து இருந்தது கண்டு அவ்வளவு அனந்தம். பலர் அந்த 3டி கண்ணாடியை வைத்து டிவி பார்த்தால் அதுவும் இப்படி தெரியும் என்று வீட்டுக்கு எடுத்து செல்ல முற்பட்டது ஒரு தனி கதை !! :-).
பின்னர் சிறிது வளர்ந்து இந்த மாய கதைகள் எல்லாம் கட்டு கதைகள் என்று தெரிய ஆரம்பித்தவுடன், எனக்கு பிடித்தது ரஜினி நடித்த மனிதன் படம்தான். அதுவரை ரஜினி என்றால் யார் என்று தெரியாது, ஆனால் இந்த படம் பார்த்த பின்பு அந்த ஸ்டைல் செய்து கொண்டு அலைவேன் என்று என் அம்மா இப்போதும் சொல்வதுண்டு. ஏதோ ஒரு விதத்தில் அந்த படம் பிடித்தது எனக்கு, அது ரஜினியின் ஸ்டைலா அல்லது அழகா அல்லது நடிப்பா என்றெல்லாம் தெரியவில்லை..... இப்போதும் கூட !!பின்னர் என்னை கவர்ந்தது ஒரு ஆங்கில படம், ஜாக்கி சான் நடித்த ப்ராஜெக்ட் - ஏ என்ற படம். அவர் சும்மா பறந்து பறந்து சண்டை போடுவதும், நம்ம ஊர் ஹீரோ எல்லாம் துப்பாக்கியில் சடசட என்று சுட்டு ஆட்களை அப்போது வீழ்த்தும்போது இவர் மட்டும் கைகளாலேயே அடித்து வீழ்த்தியது எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது. அந்த படத்தின் போது இடைவேளையில் வேறு ஒரு ஆங்கில படத்தின் டிரைலர் போட்டார்கள், அதில் ஒரு நீச்சல் குளத்தில் இருந்து சுமார் 15 அழகிகள் (?!) நிர்வாணமாக ஒரு வெடிகுண்டு வெடிக்கும்போது ஓடி வருவார்கள் (லாங் ஷாட்டில்தான்  !!), அதை பார்த்து என் அம்மா எனது கண்ணை அவசரமாக மூடியபோது அதை பார்க்கும் ஆவலில் அவரது கையை தட்டி விட்டது இன்றும் நினைவில் உள்ளது ! எனக்கு பால் உணர்ச்சி ஆரம்பமாகிவிட்டது என்று நான் இப்போது உணரும் தருணம் அதுதான் !இதன் பின்னர் நிறைய ரஜினி, கமல் படங்கள் எல்லாம் பார்த்தாலும் அதில் வரும் கவர்ச்சி சாங் எல்லாம்தான் எனது நினைவில் இருக்கிறது. இலை மறை காய் மறையாக அந்த வயதில் போஸ்டர் பார்ப்பது என்று இருந்தது இன்றும் நினைவில் இருக்கிறது ! இன்று நினைத்தாலும் அந்த டீன் ஏஜ் பருவத்தில் அது தவறு என்று நினைத்தது, நண்பர்களுடன் அதை பகிர்ந்து கொள்ளலாமா என்று தவித்தது, பின்னர் அது எல்லோருக்கும் இருக்கும் உணர்ச்சிதான் என்று உணர்ந்தது எல்லாம் ஒரு அனுபவம்தான். அந்த வயதில் அஜால் குஜால் படங்கள் எல்லாம் பார்க்க தைரியம் வராமல் இருந்தது, இன்று நமது டிவியில் அதை எல்லாம் மிஞ்சும் வகையில் எல்லாம் வருவதை பார்த்தால் பிஞ்சிலேயே பழுப்பது என்பது இங்கு அதிகம் என்று தோன்றுகிறது.இதன் பின்னர் சிறிது இங்கிலீஷ் புரிந்ததால் ஆங்கில படம் பார்க்க ஆரம்பித்தேன், முதன் முதலில் என்னை கவர்ந்தது டெர்மிநேடர் - 2 ஜட்ஜ்மென்ட் டே படம்தான், முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை பர பரவென்று சண்டை காட்சிகள் என்று அவ்வளவு அருமையாக இருந்தது. அந்த படத்திற்கு பிறகு எந்த ஆங்கில படம் வந்தாலும் திருச்சி சிப்பி தியேட்டரில் பார்க்க ஆரம்பித்தேன். ஹனி ஐ ஸ்ருன்க் தி கிட், டைட்டானிக் என்று அந்த பட்டியல் வெகு நீளம்.இன்று உலக திரைப்படங்கள், உலக தொலைகாட்சியிலேயே முதல் முறையாக என்றெல்லாம் படம் வந்தாலும் பார்க்க பிடிக்க மாட்டேன் என்கிறது. இன்று என்னதான் அவதார் படத்தில் வானில் பறந்தாலும், ஸ்பைடர் மேன் படத்தில் கட்டடங்களுக்கு இடையில் நுழைந்தாலும், சூப்பர் மேன் கண் முன்னே பறந்து வந்தாலும் அது பெரிய விசயமாய் தெரியவில்லை. ஒன்று நான் வளர்ந்ததினால் எனக்கு அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, இல்லையென்றால் எனக்கு ரசிக்க தெரியவில்லை என்று இருக்கலாம். என்ன இருந்தாலும் நான் ஒரு குழந்தையாகவே இருந்திருக்ககூடாதா என்ற ஏக்கம், சில படங்களை எனது மகன் பார்த்து சிரிக்கும்போது ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

6 comments:

 1. நான் கடவுள் பார்க்க கூடாது என்றே பார்க்கவில்லை.பரதேசியும் பார்க்க கூடாது என்று இருக்கிறேன்.ஜெகன் மோகினி என்றொரு படம் பார்த்து பயம்னா அப்படி பயந்தது இப்ப காமெடியா இருக்கு. திருவிளையாடல் ரொம்ப பிடித்தது.கமல்னா சகலகலாவல்லவனும்,மூன்றாம் பிறையும் லேட்டா மகாநதி,ரஜின்னா தில்லு,முல்லு,தம்பிக்கு எந்த ஊரு,சிவாஜின்னா திரிசூலம் அப்புறம் லேட்டா முதல் மரியாதை,எம்.ஜி.ஆர்ன்னா ஆயிரத்தில் ஒருவன்,குலேபகாவலி,அடிமைபெண்,கார்த்திக்னா மெளனராகம்,விஜயகாந்த்ன்னா ரமணா.சில நதியா படங்கள்,சில ரேவதி படங்கள்...

  ReplyDelete
  Replies
  1. அருமை அருமை ! நீங்கள் கொடுத்த நீண்ட விளக்கத்திலேயே இந்த பதிவு உங்கள் சிந்தனையை தூண்டி விட்டது தெரிகிறது ! உங்களது பதிவான "துப்பாக்கி விஷாலுடன்" படித்தபோதே தெரிந்தது நீங்கள் எவ்வளவு படம் பார்த்திருக்கிறீர்கள் என்று :-)

   Delete
 2. Replies
  1. நன்றி நண்பரே ! மீண்டும் வருக !

   Delete
 3. சில படங்கள் எதிர் பார்த்து ஏமாற்றி விடும்.
  தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல !

   Delete