Thursday, December 27, 2012

உங்களில் யார் அடுத்த இசை வித்வான் ?

சமீபத்தில் எனது நண்பனை பார்க்க சென்றிருந்தேன், அவனுக்காக காத்திருந்தபோது ஒரு அறையில் இருந்து ரம்மியமான புல்லாங்குழல் இசை வந்தது. அதை அவ்வளவு ரசித்தேன் அன்று என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குள் நண்பன் வந்துவிட அவனோடு பேசிகொண்டிருந்துவிட்டு கிளம்ப வேண்டும் என்றபோது அதே அறையில் இருந்து இப்போது ஒரு வயலின் இசை வழிந்தது, அது என்னை கிளம்ப விடவில்லை. ஒரு ஆர்வத்தில் என்ன என பார்க்கலாமா என்று கேட்க அவன் என்னை அங்கு கூட்டி சென்றான். அவனது தந்தை அங்கிருந்தார், அவரது அருகில் ஒரு பழைய காசெட் டேப்ரெகார்டர் ஒன்று அந்த இசையை வழிய விட்டது, அங்கு இருந்த அலமாரிகளில் எல்லாம் நிறைய காசெட் இருந்தது. அவனது தந்தையிடம் உரையாடியபோதுதான் தெரிந்தது அவ்வளவு கலைஞர்கள் நமது மண்ணில் இருந்தது, இன்று நிலைமை என்ன என்று யோசித்தபோது பொட்டில் அடித்தது நமது கலாச்சார சீரழிவு !



வளையபட்டி தவில், புல்லாங்குழல் ரமணி, காரைக்குறிச்சி அருணாச்சலம், ராஜரத்தினம் பிள்ளை, சேதுராமன் - பொன்னுசாமி, நாமகிரிபேட்டை கிருஷ்ணன், ஷேக் சின்ன மௌலானா, கடம் விநாயக்ராம், மாண்டலின் ஸ்ரீனிவாஸ், வயலின் குன்னக்குடி வைத்தியநாதன், சீர்காழி கோவிந்தராஜன், லால்குடி ஜெயராமன், பாலக்காடு ரகு, வீணை காயத்ரி, ட்ரம்ஸ் சிவமணி, வயலின் L. சுப்பிரமணியம், வீணை பாலச்சந்தர், மிருதங்கம் காரைக்குடி மணி இன்று பலரின் இசை பேழைகளை அங்கு கண்டேன். கண்டிப்பாக இவர்களில் பலரை நமக்கு தெரியும், இவர்களது இசையை ரசிக்கும் அளவுக்கு நாம் தெரிந்து வைத்திருக்கவில்லை, ஆனால் பலரும் இவர்களது இசையை கேட்டு பாராட்டி இருப்பதை நாம் அறிவோம். எங்கே இப்போது சொல்லுங்கள்..... இன்று வயலின் என்றால் யார் பிரபலம், யார் மிருதங்கதிர்க்கு, கடம் ? வீணை ? நாதஸ்வரம் ? தவில் ? கஞ்சிரா ? புல்லாங்குழல் ? அட, ஏன் முழிக்கிறீர்கள்..... நமது தலைமுறையில் இன்று போல் டிவி, விளம்பரங்கள் இல்லை, அப்படி இருந்தும் அவர்களையும் அவர்களது இசையையும் நமக்கு தெரியும்..... இன்று அவ்வளவு தகவல்கள் கொட்டி கிடந்தும் இந்த துறைகளில் இருக்கும் ஒருவரை கூடவா நமக்கு சொல்ல தெரியவில்லை ? உங்களுக்கு இந்த தகவல்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லையா, இல்லை இந்த துறைகளில் இன்று சாதிப்போர் யாரும் இல்லையா ? கண்டிப்பாக நான் செய்தியையும், புத்தகத்தையும் தவறாமல் படிக்கிறேன், ஆதலால் எனக்கு இந்த தகவல்கள் தெரியவில்லை என்பதை ஒத்து கொள்ள முடியவில்லை...... இந்த தலைமுறைகளில் ஒரு  வித்வான் உருவாவது ஏன்  இல்லை என்ற கேள்வி எழுகிறது ?






அன்றும் இன்றும் நாம் ரசிக்கும் இசை என்ன என்று சற்று எண்ணி பாருங்கள் ? அன்று எல்லாம் நாம் ரசிக்கிறோமோ இல்லையோ, சில இசைகள் நமக்கு பழக்கபடுதபட்டன....உதாரணமாக நாதஸ்வரம், தவில் இசைகள் எல்லா கோவில்களிலும், வீணை - புல்லாங்குழல் - மிருதங்கம் - வயலின் இசைகள் என்பது கோவில் கச்சேரிகளில், வாய்பாட்டு என்பது எல்லா இடங்களிலும் என்று இசை கருவிகள் நாம் செல்லும் இடங்களில். ஒரு சமயத்தில் அதை நாம் விரும்ப தொடங்கினோம், ஒரு பருவத்தில் வயலின் இசை என்பது காதல் வந்த எவனுக்கும் பின்னணியில் ஒலிக்கும்......இன்று கோவில் திருவிழாக்கள் என்றால் ஆர்கஸ்டிரா என்றாகிவிட்டது, கோவில்களில் எல்லாம் நாதஸ்வரதிற்கு பதில் டம் டம் என்று ஒலிக்கும் மெசின் வந்து விட்டது, மியூசிக் என்றால் அது கீ போர்டு என்றாகிவிட்டது, டான்ஸ் என்றால் பரதம் அல்லது வெஸ்டேர்ன், பரதத்திற்கு பாடல் வேண்டுமா இதோ "கண்ணோடு காண்பதெல்லாம்" இருக்கிறது, இல்லையா CD கொண்டு போடு என்றாகிவிட்டது இல்லையா ? இதில் இந்த கால குழந்தைகள் வளரும்போது இசை என்றால் அது குத்துபாட்டு, டான்ஸ் என்றால் விஜய் ஆடுவது...... அந்த காலத்து சங்கராபரணம், சலங்கை ஒலி எல்லாம் போயே போச்சு !




Traditional music instruments


Modern music instruments

எந்த ஒரு விஷயத்திலும் ஆழம் பார்ப்பது என்பது இந்த காலத்தில் இல்லையோ என்று என்ன தோன்றுகிறது, எந்த விஷயம் கற்றாலும் அதில் உடனே காசு பார்க்க வேண்டும் எனும்போது அந்த டெடிகேஷன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் போய் விட்டதோ ? பிள்ளைகளை படி படி என்று சொல்லி, காசு அதிகம் கொடுத்து ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டு, அவனது நாட்டம் எதில் என்று தெரியாமல் வாழ்கையை வாழ சொல்கிறோமோ ? ஒரு இசை, ஓவியம், பாரம்பரிய நடனம், கவிதை என்று வாழ்பவனை நாம் வாழ தெரியாதவன் என்று ஒதுக்கிவிட்டு பார்கிறோமோ ? எது வாழ்க்கை...... மனதுக்கு பிடித்து வாழ்வதா, இல்லை பணம் பிடித்து வாழ்வதா ? இன்றும், திருமதி.MS. சுப்புலட்சுமி பாடும்போது அவ்வளவு அனுபவித்து பாடுவது போல தோன்றவில்லை..... அந்த அனுபவம் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே கிடைக்கும் என்றுதான் நமது பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கிறோமோ ? எல்லா பிள்ளைகளும் நாளை டாக்டர், என்ஜினியர், கடை முதலாளி, வக்கீல் என்று ஆகிவிட்டால் இந்த உலகத்தில் நமது பிள்ளைகளுக்கு ரசிக்க என்ன இருக்க முடியும் ?




இவ்வளவு யோசித்து, யோசித்து இதை எழுதிவிட்டு வீட்டுக்கு சென்றேன்.... எனது மகன் கரண்டியால் ஒரு தட்டை தட்டி கொண்டிருந்தான், மனைவி அவனை படிக்க போறியா இல்லையா என்று அவனை மிரட்டி கொண்டிருந்தாள்..... நான் ஒரு நிமிடம் கண்ணை மூடி திறந்தேன், பின்னர் என் மனைவியிடம் சொன்னேன், "அட விடு, அவன் வரும் காலத்தில் ஒரு வித்வானா வரட்டும்" என்று, நீங்கள் இப்போது என்னை பார்க்கும் பார்வைதான், என் மனைவி என்னை பார்த்தது !



4 comments:

  1. Nice writing boss. Enjoyed it. Sometimes I worry how the life of our kids is going to be. May be you can write a post on that.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சந்தோஷ் !! கண்டிப்பாக அதை பற்றியும் எழுத வேண்டும் என்ற சிந்தனை எனக்கு உண்டு ! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர்க்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் !

      Delete
  2. //நீங்கள் இப்போது என்னை பார்க்கும் பார்வைதான்//
    !!!:-)
    அப்போது வித்வான்கள் வந்தனர் இப்போது திறன் 'வித்து' பொருள் 'வான்கும்' (வாங்கும்) உலகம்.

    http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா.... உண்மைதான் நீங்கள் சொல்வது, நல்ல நகைசுவை உணர்வு உங்களுக்கு ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete