Monday, December 31, 2012

புதிய வருடம்...எப்படி கொண்டாடலாம் ??!!

ஒவ்வொரு வருடமும் இந்த கடைசி வாரம் வந்தால் திண்டாட்டம்தான்.... இந்த புதிய வருடத்தை எப்படி நாம் கொண்டாடுவது என்று ! பல பல வருடங்களாக இந்த கேள்விக்கு மட்டும் பதில் தெரியவில்லை. எல்லோரும் நினைப்பது போல (மூடநம்பிக்கையாக இருந்தாலும் !!) அன்று எப்படி இருப்போமோ, அதே உணர்வுடன்தான் வருடம் முழுவதும் இருப்போம் என்று. இதற்காக நானும் பல வருடங்களாக என்னுடைய கொண்டாட்ட முறைகளை மாற்றி பார்த்து வருகிறேன், ஆனாலும் இன்றும் விளங்கவில்லை எப்படி இந்த புதிய வருடத்தை வரவேற்ப்பது என்று. நாம் வரவேற்கவில்லை என்றாலும் அது பிறக்கும் என்பது தெரிந்திருந்தும், இன்று வரை நாம் அதை வரவேற்க கூடி இருந்து காதை பிளக்கும் வெடியோசையுடன் கொண்டாடுகிறோம் !




எனக்கு இந்த கொண்டாட்டங்கள் பற்றி தெரியாதவரை எனது வாழ்க்கை சந்தோசமாக இருந்தது எனலாம், என் பெற்றோர் என்னை வெளியில் அன்று விடாததால் என்றும் போல தூங்கி விழிப்பேன். ஆனால் காலேஜ் சென்றதில் இருந்து அன்று இரவு நாமும் வெளியில் செல்ல வேண்டும் என்று ஆர்வம் எழ ஆரம்பித்தது, ஆனாலும் எனது தந்தையின் கண்டிப்பினால் வெளியில் எங்கும் செல்லவில்லை..... வெடி வெடிக்கும் போது மட்டும் எனக்கு நானே சொல்லி கொள்வேன் ஹாப்பி நியூ இயர் என்று.



பிறகு ஹாஸ்டல் சென்றதில் இருந்து இன்று வரை ஒவ்வொரு வருடமும் இந்த புதிய வருடத்தை வரவேற்ப்பதை வித விதமாக செய்கிறேன். ஒரு முறை நாங்கள் எல்லோரும் பெசன்ட் நகர் பீச் சென்றிருந்தோம், வழியெங்கும் உற்சாகம். நாங்கள் பத்து பேர் வரை சென்றதால் கூட்டத்தில் ஒருத்தர் இன்னொருவரை தேடுவதே வேலையாக இருந்தது. தைரியமான சில நண்பர்கள் எவரை பற்றியும் கவலைபடாமல் கொண்டாடிவிட்டு வந்தபோது, நானும் எனது சில நண்பர்களும் அவர்களை தேடி கொண்டிருந்தோம்.



இன்னொரு முறை, நான் வேலைக்கு சேர்ந்து இருந்த புதிது. அன்று ஒரு புதிய ப்ராஜெக்ட்டை கஷ்டப்பட்டு முடித்திருந்ததால் கம்பெனியில் இரக்கப்பட்டு அன்று பார்ட்டி செலவு முழுவதையும் ஏற்று கொள்வதாக சொன்னார்கள். பெங்களுருவில் முதன் முதலாக மைசூர் ரோட்டில் இருந்த ஒரு பெரிய ஹோட்டலுக்கு சென்றபோது எங்களை உள்ளே விட மறுத்தனர், ஒரு தம்பதியாகதான் செல்ல வேண்டும் என்று. எங்களது மேனேஜருக்கு போன் செய்து அவருடைய சிபாரிசால் உள்ளே சென்றபோதுதான் தெரிந்தது இப்படியெல்லாம் புத்தாண்டு  கொண்டாடுகிறார்கள் என்று !! மது எங்கும் நீக்கமற நிறைந்திருந்தது, சினிமாவில் ரம்பா போட்ட ஆடைகள் எல்லாம் அங்கு பலர் போட்டு இருந்தனர். நேரம் ஆக ஆக தள்ளாட்டம் அதிகமானது அங்கு (அப்போது நான் மதுவுக்கு பழக்கபடவில்லை !), மேடையில் திடீரென்று ஒரு டிஸ்கோ சாந்தி அரை குறை ஆடையில் மார்பு பிதுங்க ஆடி கொண்டிருந்தார், நேரம் நெருங்க நெருங்க அவரது ஆட்டமும் அதிகமானது, மேடையில் அவர் ஆடியதை விட கீழே ஆடும் அம்மணிகள் ஆட்டம் இன்னும் அதிகம் என்று தோன்றியது. முடிவில் பட்டாசு சத்தத்துடன் எல்லோரும் அந்த புதிய வருடத்தை வரவேற்றபோது, ஓரமாக இருந்த நான் அந்த காலாச்சார மாற்றத்தை கண்டு, அந்த இரண்டாம் உலகத்தை கண்டு பயந்திருந்தேன் என்பதுதான் உண்மை !





அடுத்து வந்த வருடத்தில், இந்த முறை பக்திக்கு மாறலாம் என்று முடிவெடுத்தேன். சென்னையில் அப்போது இருந்ததால் ஒரு ஆஞ்சநேயர் கோவிலுக்கு போகலாம் என்று முடிவெடுத்தோம். பன்னிரண்டு மணிக்குதானே புத்தாண்டு, ஆகையால் பத்து மணிக்கு சென்றோம்..... அங்கு அனுமார் வாலை விட நீண்டதாக இருந்தது அந்த வரிசை. நத்தையை விட மெதுவாக ஊர்ந்து சென்று அவரை தரிசித்தோம், அப்போது மணி விடியற்காலை இரண்டு. அங்கு இருந்தவரை நெரிசல், இயற்க்கை உபாதை, வேர்வை என்று விடிந்தது அந்த ஆண்டு. எனக்காவது பரவாயில்லை, அந்த ஆண்டவருக்கு எப்படி இருந்திருக்கும்.... விடிய விடிய நின்றுக்கொண்டே இருந்தார் !



பிறகு ஒரு முறை இது எல்லாம் சரிபடவில்லை, ஆகையால் வீட்டிலேயே டிவி பார்த்துக்கொண்டு உலக தொலைகாட்சியிலேயே முதல் முறையாக காண்பிக்க படும் ஒரு படத்தை பார்த்து நிம்மதியாக கொண்டாடலாம் என்று எண்ணினேன். கடைசியில் ஒரு மொக்கை படத்தை பார்த்து விட்டு, சேனல் மாற்றி மாற்றி மாற்றி மனதில் ஒரு வெறுமை தட்ட தூங்க சென்றேன்.



அடுத்து வந்த ஆண்டுகளில் நீண்ட தூர தனிமை பயணம், அனாதை ஆசிரமம், பாண்டிச்சேரி பயணம், பிரைவேட் பார்ட்டி, நண்பர்களுடன் குத்தாட்டம், ஒரு தனிமை ரிசார்ட், பீச் ஓரம் ஆட்டம், காண்டில் லைட் டின்னர், கேக் வெட்டி, வெடி போட்டு என்று பல பல வகைகளாக கொண்டாடியும் அந்த மன நிம்மதி, சந்தோசம் என்பது மட்டும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் அந்த கடைசி வாரம் வந்தால் மட்டும் திண்டாட்டம்தான்.... இந்த புதிய வருடத்தை எப்படி நாம் கொண்டாடுவது என்று ! சரி என்ன இருந்தாலும் நமக்கு இன்னொரு வருடம் வாழ்வதற்கு ஆண்டவன் கொடுத்திருக்கிறான், ஆகவே கையை கொடுங்கள்.......ஹாப்பி நியூ இயர் நண்பரே !

8 comments:

  1. சிறப்புப் பதிவு வெகு வெகு சிறப்பு
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார் ! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! 2013ம் ஆண்டும் தங்களது உற்சாகமான கருத்துக்களை எதிர் பார்க்கிறேன். நன்றிகள் பல !

      Delete
  2. ஹா ஹா ஹா !!! குழப்பம் வேண்டாம் நண்பா. இந்த வருடம் உங்களுக்கு நல்லதாகவே அமையும். வாழ்த்துகள்.

    இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆகாஷ் ! தங்கள் பதிவுகளை படித்தேன், தொடர்கிறேன் ! மென்மேலும் நீங்கள் பல பதிவுகளை எழுதி புகழ்பெற வாழ்த்துக்கள் ! 2013 வருடம் அற்புதமானதாக அமைய மனமார வாழ்த்துகிறேன் !

      Delete
  3. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்அண்ணா

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆனந்த், நீங்களும் உங்களது குடும்பத்தினரும் இந்த ஆண்டு நல்ல மகிழ்ச்சியுடன், ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துக்கள் ! கடல்பயனங்களில் தங்களது கருத்துக்களை தொடர்ந்து அளித்திடுங்கள் !

      Delete
  4. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே, தங்களுக்கும் இந்த வருடம் வெகு சிறப்பாய் அமைந்திட வாழ்த்துக்கள் !

      Delete