Wednesday, December 5, 2012

ஆச்சி நாடக சபா - தி விசார்ட் ஒப் ஓஸ்

சில கதைகள் காலத்தால் அழிக்க முடியாதவை, அவை தலைமுறைகளையும் தாண்டி எல்லோரையும் கவரும், அது போல ஒரு கதைதான் இந்த "தி விசார்ட் ஒப் ஓஸ் (The Wizard of Oz)". இந்த கதையை பிரான்க் பும் என்பவர் எழுதி அது 1900-ம் ஆண்டு ஒரு புத்தகமாக வெளி வந்தது. அதை எல்லோரும் விரும்பி படித்ததால், அதை 1902-ம் ஆண்டு ஒரு மேடை நாடகமாக நடத்தினர். இதன் வெற்றியால், 1939-ம் ஆண்டு ஜூடி கர்லாந்து என்னும் நடிகையை கொண்டு MGM நிறுவனம் படமாக எடுத்தது. இன்னமும் அதன் புகழ் குறையவில்லை....அந்த கதையை, லைட்டிங், டெக்னாலஜி புகுத்தி நம் ஆண்ட்ரி லாயிட் வெப்பர் அவர்கள் மார்ச் 2011-இல் அதை ஒரு மிக பெரிய மேடை நாடகமாக வெளியிட்டார்.
பிரான்க் பும் எழுதி அச்சிடப்பட்ட முதல் புத்தகம் !


1939-ம் ஆண்டு ஜூடி கர்லாந்து நடித்த அந்த படம்
இதன் கதை மிக சிறியது, மிகவும் சில ஆட்கள்தான் !! அதை அங்கு இங்கு என்று காலபோக்கில் மாற்றினாலும் அதன் மூலக்கதையை இங்கே கொடுக்கிறேன். டோரோத்தி என்னும் ஒரு சிறுமி, அவள் பெற்றோர் இல்லாததால் அவளின் மாமாவிடம் வசிக்கிறாள். அவருக்கு அவரது பண்ணை வேலை செய்து அங்கு இருக்கும் ஒரு சின்ன வெளி வீட்டில் வசிக்கிறாள், அவளுக்கு ஒரே துணை அவள் வளர்க்கும் நாய் "டோடோ". ஒரு நாள், ஒரு சூறை காற்று அவளை வீட்டுடன் தூக்கி சென்று "தி லேன்ட் ஒப் ஓஸ்" என்னும் இடத்தில போட்டு விடுகிறது. இந்த வீடு, அந்த இடத்தில இருந்த ஒரு சூனியக்காரியை நசுக்கி கொன்று விடுவதால், அங்கு இருந்த மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். டோரோதியும், அவள் நாய் டோடோவும் அவர்களுடன், அவர்கள் வசித்த கன்சாஸ் நகர்
செல்ல  வழி கேட்கும்போது, அவர்கள் அன்புடன் ஒரு ஷு கொடுத்து ஒரு மஞ்சள் நிற பாதையை காட்டி, இதில் சென்றால் ஒரு விசார்ட் (மந்திரவாதி , மாயாவி , அற்புத செயல் செய்பவர்) ஒருவரை சந்திப்பாய், அவர் உனக்கு வழி சொல்வார் என்கிறார்கள்.


அவள் அந்த பாதையில் நடந்து செல்லும்போது முதலில் ஒரு "வைக்கோல் பூச்சாண்டி" மனிதனை சந்திக்கிறாள், அவன் தனக்கு மூளை இல்லை என அழுகிறான், அவள் அவனை தன்னோடு சேர்ந்து அந்த விசார்ட்டை சந்தித்து கேட்குமாறு கூட்டி போகிறாள், பின்னர் வழியில் ஒரு எந்திர மனிதனை சந்திக்கிறாள், அவனோ தன்னிடம் இதயம் இல்லை என அழுகிறான், அவனையும் சேர்த்து கொள்கிறாள், பின்னர் இன்னும் வழியில் ஒரு சிங்கத்தை சந்திக்கிறாள், அது வீரமில்லாமல் இருக்கிறது, அதையும் தன்னோடு சேர்த்து கொள்ளுமாறு அழைக்கிறாள். இப்படியாக எல்லோரும் சென்று அந்த விசார்டை சந்திக்கின்றனர்.அவர் "நீங்கள் கொன்றது கிழக்கு பக்கம் இருந்த சூனியக்காரியை, அவளது தங்கை மேற்கு பக்கம் இருக்கிறாள், அவளை கொன்று வந்தால் எல்லோரும் கேட்பதை தருகிறேன்" என சொல்ல அவர்கள் சூனியக்காரியை தேடி புறபடுகின்றனர். இதை அறிந்த அந்த சூனியக்காரி, அவர்களை கொல்ல ஓநாய்களை அனுப்புகிறாள், அதை அந்த எந்திர மனிதன் விரட்டி அடிக்கிறான், அடுத்து நிறைய காக்காகளை அனுப்புகிறாள், அதை அந்த வைக்கோல் மனிதன் விரட்டி அடிக்கிறான், அடுத்து பறக்கும் குரங்குகளை அனுப்புகிறாள், அதை சிங்கம் விரட்டி அடிக்கிறது. பின்னர், அந்த சூனியக்காரியை சந்திக்கும் டோரோத்தி, அவள் மீது தண்ணீர் ஊற்றி அவளை உருக்கி கொள்கிறாள். பின்னர் திரும்பி வந்து அந்த விசார்டை சந்திக்க, எல்லோரும் கேட்டதை அவர் கொடுக்கிறார். அவளை அந்த ஷு மூலம் பறக்க வைத்து அவளது கன்சாஸ் நகருக்கு அனுப்புகிறார்.


இதை ஒரு ப்ரோட்வே மியூசிக்கல் ஆக்கி வெளியிட்டு, இன்றளவிலும் மக்களை கவர்கிறது. இந்த ஷோ பார்க்கும்போது இந்த கதை ஒரு அற்புதமானது என்று உங்களுக்கு தோன்றும். இதில் வரும் பாடல்கள், இசை எல்லாம் காலத்தால் அழியாதது. உங்களை மெய்மறக்க செய்யும் ஒரு ஷோ இது.....பார்க்க மறக்காதீர்கள்.

No comments:

Post a Comment