Wednesday, December 19, 2012

மறக்க முடியா பயணம் - திராட்சை தோட்டம்

திராட்சை தோட்டம் என்றாலே என் நினைவுக்கு வருவது அந்த நரியும், அந்த "சீ...சீ....இந்த பழம் புளிக்கும்" என்பதும்தான். ஒவ்வொரு முறை ஆஸ்திரேலியா, பாரிஸ் செல்லும்போதும் அங்கு இருக்கும் திராட்சை தோட்டங்கள், வைன் தயாரிக்கும் முறைகள் ஆகியவற்றை பார்க்க வேண்டும் என்று தோன்றும், ஆனால் அலுவல்களால் முடியவில்லை. ஆனால் இந்த முறை நான் மதுரை சென்று இருந்தபோது திண்டுக்கல், மதுரை நெடுஞ்சாலையில் ஒவ்வொரு மைல் கல்லிலும் திராட்சை விற்று கொண்டிருந்தனர். ஒரு ஆர்வத்தில் இறங்கி விசாரிக்கும்போதுதான் தெரிந்தது அங்கு மிக பெரிய திராட்சை தோட்டங்கள் இருந்தது. சென்று பார்க்கலாமா என்று கேட்டபோது அவர்கள் அனுமதித்ததுடன், எனது எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்தது மிகவும் சுவையாக இருந்தது.....திராட்சையை விடவும்.


பொதுப்பெயர் : திராட்சை

அறிவியல் பெயர் : விட்டிஸ் வினிஃபெரா

குடும்பம் : விட்டேசியே

திராட்சை கொடியினத்தைச் சேர்ந்த தாவரம். இது சிறிய உருண்டையான அல்லது முட்டை வடிவ கனிகளைத் தருகிறது. கனிகள் குலை குலையாகக் காய்க்கும். திராட்சை 6 தொடக்கம் 300 வரையான பழங்களைக் கொண்ட குலைகளாகக் காய்க்கின்றது. இது கறுப்பு, கடும் நீலம், மஞ்சள், பச்சை, இளஞ்சிவப்பு எனப் பல நிறங்களில் காணப்படுகின்றது. வெள்ளைத் திராட்சை எனப்படும் பச்சை நிறத் திராட்சைகள் கூர்ப்பு அடிப்படையில் சிவப்புத் திராட்சையில் இருந்து உருவானவை. வெள்ளைத் திராட்சையின் கட்டிப்படுத்தும் மரபணுக்கள் இரண்டில் ஏற்பட்ட சடுதியான மாற்றம் காரணமாக சிவப்புத் திராட்சையின் நிறத்துக்குக் காரணமான அந்தோசயனின் என்னும் பொருளின் உற்பத்தி நின்றுபோனது. இதனால் வெள்ளைத் திராட்சைகள் அவற்றின் இயல்பான சிவப்பு நிறத்தை இழந்துவிட்டன.

இந்த தோட்டத்து உரிமையாளரின் சொற்படி, இந்த பகுதியில் விளையும் பெரும்பான்மையான திராட்சைகள் சாபிடுவதற்கு பயிரிடபடுகின்றன. வைன் திராட்சைகளுக்கு நல்ல சாறு நிறைந்தவை தேவைபடுவதால் அது தண்ணீர் மிகுந்த இடங்களில் பயிரிடபடுகின்றன. இந்த திராட்சை பயிர்களின் முக்கிய எதிரி என்பது பூச்சிகள்தான். இங்கு திராட்சைகள் சிறிதாய் இருக்கும்போதே ஒரு சின்ன பாத்திரத்தில் பூச்சிமருந்தை கலக்கி, அதில் திராட்சையை முக்கி எடுப்பார்கள். மேலே உள்ள படத்தை பார்த்தால் அதில் திட்டு திட்டாக இருப்பது அந்த பூச்சி மருந்துதான், ஆகையால் கண்டிப்பாக திராட்சையை கழுவி விட்டே சாப்பிட வேண்டும் ! திராட்சை செடியை பாழாக்கும் பூச்சிகளை பற்றி தெரிந்துக்கொள்ள இங்கே சொடுக்கவும்......பூச்சிகள்.



பன்னீர் திராட்சை, அனாம் - இ - சாகி, தாம்சன் விதையில்லாதது, அர்காவதி, அர்கா சியாம், அர்கா காஞ்சன, அர்கா ஹான்ஸ், மாணிக்சமான், சோனாகா சரத் (விதையில்லாதது) ப்ளேம் விதையில்லாதது. அர்காசித்ரா, அர்காரிர்னா, அர்கா நீலாமானி, சுவேதா விதையில்லாதது, அர்கா மெஜிஸ்டிக் மற்றம் அர்கா சோமா மலைப்பகுதியைத் தவிர பன்னீர் அரகம், தமிழ்நாட்டின் எல்லா இடங்களிலும் பயிர் செய்ய ஏற்றது.



இந்த திராட்சை பயிருடுவதர்க்கு நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண் பூமி வேண்டும். மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 7.5-க்குள் இருக்கவேண்டும். மண்ணின் உப்பு நிலை 1.0க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது விதி. செடிகள்  நட்ட உடனேயும், மூன்றாவது நாளும் நீர் பாய்ச்சவேண்டும். பின்பு வாரத்திற்கு ஒரு முறை நீர் கட்டவேண்டும். கவாத்து செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்பும், அறுவடைக்கு 15 நாட்களுக்கும் முன்பும் நீர் நிறுத்தவேண்டும். பந்தல் முழுவதும் கொடிகள் நன்கு படர்ந்து வளர கொடிகளின் நுனியை வெட்டி விடுதல் மிக அவசியமாகும். தாய்க்கொடி மற்றும் பக்கவாட்டில் வளரும், கொடிகளின் நுனியை 12 முதல் 15 மொட்டுக்கள் விட்டு வெட்டிவிடவேண்டும்.


விதையில்லா இரகங்கள்15 டன் / எக்டர் / வருடம்
பன்னீர் திராட்சை30 டன் / எக்டர் / வருடம்
பச்சை திராட்சை40 டன் / எக்டர் / வருடம்
அனாபி - இ - சாகி மற்றும் அர்கா வீரிய ஒட்டு இரகங்கள்20 டன் / எக்டர் / வருடம்
ஒரு ஹெக்டர் திராட்சை பயிர் செய்தால் சுமார் 20 டன் வரை வருடத்திற்கு கிடைக்கும். இதை பத்து கிலோ கொண்ட பிளாஸ்டிக் பெட்டிகளில் அறுவடை செய்து வைக்கிறார்கள். ஒவ்வொரு பெட்டியும் சுமார் 100 ரூபாய் வரை போகும், சீசன் இல்லாதபோது இன்னும் அதிகமாக போகுமாம். ஆக, வருடத்திற்கு சுமார் இரண்டு லட்சம் வரை கிடைக்கும், இதில் கூலி, பயிர் செய்யும் செலவு எல்லாம் போக வருவதே லாபம் என்றார் ! மூன்று மாதத்திற்கு ஒரு முறை அறுவடை செய்யலாம், ஆக வருடம் நான்கு முறை அறுவடை செய்யப்படும் பயிர் இது !


அடுத்த முறை மதுரை சென்றால், நீங்கள் வண்டியை நிறுத்தி இந்த திராட்சை தோட்டம் சென்று வாருங்கள், பின்னர் சொல்ல மாட்டீர்கள்.... "சீ...சீ....இந்த பழம் புளிக்கும்" என்று !!

4 comments:

  1. பலமுறைத் திராட்சைத் தோட்டங்களைக் கடந்து
    சென்றிருக்கிறேன்.தங்களைப் போல் ரசித்து
    மகிழ்ந்தது இல்லை.அடுத்தமுறை நிச்சயம்
    கண்டு மகிழ்வேன்
    படங்களுடன் பயனுள்ள பல அறியாத தகவல்களுடன்
    பதிவு மிக மிக அருமை
    பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார் ! உங்களது கருத்துக்களை இப்போதெல்லாம் எனது வலைப்பூவில் அதிகம் பார்க்க முடிவதில்லை என்று வருத்தமாக இருக்கிறது. இந்த முறை மதுரை வந்தபோது கூட உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆசை இருந்தது.

      Delete
  2. நானும் இங்கு போயிட்டு ஒரு பதிவு போட்டிருக்கேன் ; நீங்க ரொம்ப டீப்பா போயிட்டீங்க :)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மோகன் ! உங்களது பாராட்டுக்கள் உற்சாகம் ஊட்டுகிறது ! பயண கட்டுரையின் மன்னன் நீங்கள், நீங்களே என் பதிவை ரசிப்பது எனக்கு மகிழ்ச்சி !

      Delete