Monday, December 30, 2013

கடல் பயணங்கள் அவார்ட் 2013 !!

2013ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந்த ஆண்டாக இருந்தது. திரும்பி பார்க்கும்போது நான் இந்த பதிவுலகத்தில் ரசித்த விஷயங்கள், என்னை பாதித்த விஷயங்கள் என்று சிலவற்றை பகிர்ந்துகொண்டால் என்ன என்று தோன்றியது !! நான் படித்ததே வெகு சில பதிவுகள்தான் ஆகையால் அதையும் தாண்டி இன்னும் நல்ல பதிவுகள், பதிவர்கள் இருந்தால் இந்த ஆண்டிலாவது அவர்களை படிக்க வேண்டும் !

கடல் பயணங்கள் அவார்ட் 2013




இதில் சந்தோசம் இருந்தாலும், ஒரு சிக்கலும் இருக்கிறது...... சிலரது பதிவுகளுக்கு அவார்ட் என்று கொடுக்கும்போது மற்ற சிலர் கோவித்து கொள்ளலாம். இதனால் அவர்களது பதிவுகள் ரசிக்கும்படியாக இல்லை என்பது இல்லை, அதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் !


"வீடு திரும்பல்" மோகன்...... எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல்தான் இவரது தளத்தில் நுழைந்தேன், பின்னர் ஒவ்வொன்றாக வாசிக்க ஆரம்பித்தேன். இவரது பதிவு நிறைய இருந்தாலும் நான் விரும்பி படிப்பது என்பது சாமான்ய மனிதர்களின் வாழ்க்கை பேட்டிகள். படிக்கும்போதே சில சமயம் இப்படியும் ஒரு சில மனிதர்கள் இருக்கிறார்கள், வாழ்க்கை இருக்கிறது என்று தெரிவது. நான் விரும்பி படிக்கும் பதிவுகள் என்பதால் இவருக்கு.....




கோவை நேரம் ஜீவா...... இவரது பதிவுகளில் கோவை மெஸ் என்பது எனக்கு மிகவும் பிடிக்கும். வெகு எளிதான எழுத்து நடை, செல்லும் இடங்களில் எடுத்த போட்டோ என்று எடுத்து மிக சாதாரணமாக பதிவுகள் போடுவார். முதன் முதலில் இவரை பார்த்தபோது எந்த வித பந்தாவும் இல்லாமல் வெகு இயல்பாக உரையாடினார். இவர் சொல்லும் மிக்சிங் உடன் ஒரு நாள் இவருடன் அருந்த வேண்டும் என்பது எனது ஆசை, இவருக்கு.......


திண்டுக்கல் தனபாலன் , ரமணி ஐயா...... இவர்களது பதிவுகள் வெகு இயல்பானவை. தனபாலன் சார் பதிவுக்குள் நுழைந்தால் அவர் html கொண்டு செய்து இருக்கும் மேஜிக் ஒவ்வொரு முறையும் ஆச்சர்யப்பட வைக்கும். திருக்குறள் எடுத்துக்கொண்டு அதை பழைய பாட்டுடன் கொடுப்பது என்பது இவரது சிறப்பு. ரமணி ஐயா அவர்களின் கவிதை ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கும் ரகம். சந்தங்களை வைத்தும், சில சமயம் புது கவிதை என்று ஒவ்வொரு நாளும் ஒரு சுவையுடன் இருக்கும். இவர்கள் பதிவுகள் எழுதுவதுடன், பதிவர்களை ஊக்கபடுத்தும் விதமும் அருமை. ஒவ்வொரு பதிவுக்கும் அவர்களின் மனம் திறந்த பாராட்டுக்களை கொடுத்து, வாக்குகள் கொடுத்து என்று இந்த பதிவுலகில் நிறைய புதிய பதிவர்களை மற்றவர்களுக்கும் அறிமுகபடுத்தி என்று இவர்களின் சேவை நிறைய. ஒவ்வொரு பதிவர்களும் இவர்களுக்கு இந்த அவார்ட் அவர்களுக்கு, அவர்களது பதிவுகளுக்கு கொடுக்க விரும்பும் ஒன்று என்றே கருதுகிறேன்.....


எல்லா பதிவுகளும் சினிமா, பயணம், சாப்பாடு என்றெல்லாம் வரும்போது இவர்களது பதிவு மட்டும் அவர்களின் துறை சார்ந்தே வரும். இவர்களின் ஒவ்வொரு பதிவுகளையும் வாசிப்பேன்..... மனதில் இருப்பதை அப்படியே தருபவர்கள். ராஜேஷ் சுப்பு அவர்கள் அவரது துறையான ஜோதிடம் பற்றி மனதில் பட்டதை அப்படியே எழுதும் விதம் அருமையான ஒன்று. அது போலவே நிகழ்காலம் என்னும் தளத்தில் எழுதும் எழில் அவர்களின் பதிவுகள் சிலவற்று என்றாலும் அதில் ஆழமான விஷயங்கள் இருக்கும், முக்கியமாக இவர் மாணவர்களுக்கு மனஅழுத்தம் பற்றிய பற்றிய பதிவுகளை படிக்கும்போது எல்லாம் இவரது பொது சிந்தனையை நன்றியோடு நினைக்க தோன்றும்.

 
இதில் சில பதிவர்கள் / பதிவுகளை நான் அவார்ட்  என்று வகை படுத்த விரும்பவில்லை,ஏனென்றால் இவர்களது பதிவுகள் எல்லாம் விருதுகளுக்கு 
அப்பாற்பட்டது என்பது என் கருத்து. எப்போதும் நான் அவர்களின் பதிவுகளை வாசித்து விடுவேன்.... அவர்களை நான் இங்கே குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். 

 
 
ஜோதிஜி திருப்பூர் 
சங்கவி சதீஷ் 
காணாமல் போன கனவுகள் ராஜி
ராஜராஜேஸ்வரி
கோவை ஆவி
ஆரூர் மூனா செந்தில்
துளசி கோபால்
தமிழ்வாசி பிரகாஷ்
பாவா ஷரீப்
அமுதா கிருஷ்ணா
பட்டா பட்டி
பால கணேஷ்
புலவர் ராமானுஜம்
ஜெயதேவ் தாஸ்
அஜீமும் அற்புதவிளக்கும்
பாஸ்கரன் - உலக சினிமா ரசிகன்
வடுவூர் குமார்
செம்மலை ஆகாஷ்
சீனு திடம் கொண்டு போராடு
இக்பால் செல்வன்
அண்ணாமலையான்
குட்டன்
ஸ்கூல் பையன்
கும்மாச்சி
தக்குடு
பந்து
நாடிநாராயணன் மணி
என்பாட்டை ராஜா
மாதேவி
கிருஷ்
குரங்கு பெடல்
வல்லி சிம்ஹன்
அன்புடன் அருணா
கோபாலகிருஷ்ணன்
காட்டான்
பழனி கந்தசாமி
ஸாதிகா
வருண்
முருகானந்தம்
முனைவர்.இரா .குணசீலன்
தேவா
SP ராஜ்
ராஜேஷ்
அசோக்
விச்சு
காரிகன்
இக்பால் செல்வன்
ரங்குடு
ஜீவன் சிவம்
வடுவூர் குமார்
கோமதி அரசு

***********************************************************************************

இந்த வருடத்தில் நிறைய பதிவுகள் படித்திருக்கிறேன், ஆனாலும் இன்று என்னுடைய பதிவுகளையே ஒரு வாசகரின் நிலையில் இருந்து திரும்பி பார்க்கும்போது நான் சென்ற பயணங்கள், உண்ட உணவுகள், ஊர் ஸ்பெஷல் என்று நிறைய இருந்தாலும், வெகு சில என் மனதிற்கு நெருக்கமானவையாகவும், மிகவும் விரும்பியதாகவும் இருந்தது. நீங்கள் என் பதிவுகளை முழுமையாக இந்த வருடத்தில் படித்து இருக்கவில்லை என்றாலும் இதை கண்டிப்பாக படித்துவிடுங்கள்..... ஏனென்றால் இதெல்லாம் முத்துக்கள் !!




அறுசுவை

சுவையான டீ                   : அறுசுவை - ஷரோன் டீ ஸ்டால், பெங்களுரு
சுவையான உணவகம் : அறுசுவை - பிராமின்ஸ் காபி பார்
வியந்த உணவகம்         : அறுசுவை - ஜேக்கப்'ஸ் கிச்சன், சென்னை

உயரம் தொட்ட பயணம் : மவுண்ட் பியூஜி, ஜப்பான்

18+ பயணம் :  உலக பயணம் - கிளு கிளு நகரம் (18+)

ஊர் ஸ்பெஷல்

வியந்தது                                     : போளியம்மனுர் மோர் மிளகாய்
கஷ்டப்பட்டு திரட்டியது        : சிவகாசி வெடி (பகுதி - 1)
அழிந்து கொண்டு இருப்பது : சாத்தூர் காராசேவு

எண்ணங்கள் : நகரத்து பறவையின் எச்சம்...!!

சாகச பயணம் : சாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே.....!! (பாகம் - 2), தண்ணீரில் இறங்கும் விமானம்


மறக்க  முடியா பயணம்

உள்ளூர் : நிருத்யாகிரம், பெங்களுரு
வெளிநாடு : யுனிவெர்சல் ஸ்டுடியோ (பகுதி - 1)
வித்யாசமானது : சொகுசோ சொகுசு பஸ்

உங்களுக்கு நன்றி : கடல் பயணங்கள் - இரண்டாம் ஆண்டில் !

***********************************************************************************

என்னதான் நாம சீரியஸ் ஆக இருந்தாலும் சில நேரங்களில் பதிவுலகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது, அவ்வளவு காமெடி நடக்கும். நல்லா ரசிச்சு எழுதுற பதிவுக்கு சிலர் மொக்கை அப்படின்னும், நாம வேணுமினே மொக்கை அப்படின்னு போடற பதிவுக்கு இதுதாண்டா பதிவு அப்படின்னு சொல்லியும், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியும், கஷ்டப்பட்டு எழுதி யாருமே படிக்காம போன பதிவுகள் என்றும் சில உண்டு..... அதுக்கெல்லாம் அவார்ட் கொடுதுக்குறோம் சாமியோவ் !!

என்னங்கையா நடக்குது இங்க விருது !


கஷ்டப்பட்டு ஒவ்வொரு ஊருக்கும் தேடி போய் அங்க என்ன ஸ்பெஷல் அப்படின்னு எழுதுறதும், சில நேரங்களில் சில உணவகத்திற்கு போய் வயிறு கேட்டு குடம் குடமாய் வாந்தி எடுத்தும், வெளிநாடுகளுக்கு போய் திக்கு தெரியாமல் சுற்றி போட்டோ எடுத்து போடும் பதிவுகளும், மறக்க முடியா பயணம் என்று சென்று எழுதும் பதிவுகளுக்கும் எல்லாம் ஹிட் எதுவும் கிடைக்காமல் காண்டாகி இருக்கும்போது ஒரே ஒரு தலைப்பு அது நிறைய ஹிட் கொடுக்கும், ஆனால் பதிவுக்கு அவ்வளவு சிரமம் படாமல் எனும்போது தோன்றும் பாருங்கள்...... அதுதான் "என்னங்கையா நடக்குது இங்க விருது " அந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவு என்பது............

உலக பயணம் - கிளு கிளு நகரம் (18+)



அட கிரகமே.....விருது !

 
எனது எல்லா பதிவுகளுக்கும் நான் அங்கு எடுத்த போட்டோ போட்டு இருப்பேன், ஆனால் ஒரு பதிவுக்கு மட்டும் ஐயோ போட்டோ போட வேண்டுமே என்று கஷ்டப்பட்டது என்று ஒரு பதிவு உண்டு. இதில் சிலர் படித்துவிட்டு எங்கே உங்க போட்டோ காணோம் என்பது வேறு நடந்தது. ஜப்பானில் வெந்நீர் ஊற்று சென்றபோது துணி எதுவும் இல்லாமல் அங்கு செல்ல வேண்டும் என்று சொல்லி, நானும் அப்படியே சென்று வந்தாலும்..... இந்த பதிவு எப்படி எழுதுறது என்று மிகவும் யோசித்தேன். இந்த பதிவை படித்து விட்டு நான் எப்போதும் இந்த விருதுக்கு இது தகுதியானது என்று யோசிப்பது உண்டு........ சாகச பயணம் - ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ், ஜப்பான்

பாட்டி சுட்ட வடை.....விருது !



நான் எழுதும் பதிவுகளில் எல்லோராலும் விரும்பி படிக்கபடுவது என்பது அறுசுவை என்னும் தலைப்பில் நான் எழுதும் உணவகம் பற்றிய பதிவுகள்தான். நான் வெளிநாடுகளுக்கு செல்லும்போது எல்லாம் அங்கு இருக்கும் பல விதமான உணவுகளை சாப்பிட்டு இருக்கிறேன் (பள்ளி, தேள், குதிரை என்று லிஸ்ட் ரொம்ப நீளம் பாஸ் !). நான் எல்லாம் பரோட்டா சூரி மாதிரி, அம்மா சாதம் போட்டு குழம்பு ஊற்றிவிட்டு தண்ணீர் எடுத்து 
வருவதற்குள் தட்டு காலியாக இருக்கும் அந்த அளவு பாஸ்ட்...... ஆனால் முதன் முறையாக ஒரு மதிய உணவை சுமார் மூன்று மணி நேரம் உண்டது, திணற திணற உண்டது என்பது இங்கேதான், அது ஒரு மறக்க முடியாத உணவகம். அதற்க்கு "பாட்டி சுட்ட வடை" விருது மிகவும் பொருத்தம் என்று நினைக்கிறேன்........ சண்டே பிரஞ்ச் (Sunday Brunch)

***********************************************************************************

என்னதான் அவார்ட் என்று கொடுத்தாலும், வாங்கி கொண்டாலும் பதிவுலகில் நண்பர்கள் என்பது வரமே. அதுவும் பதிவர் சந்திப்பில் நிறைய பதிவர்களை சந்தித்த அந்த அனுபவம், எல்லோரிடமும் பேசியது என்பது சந்தோசம் கொடுத்தது.
 
எனது பதிவை வாசித்து, எழுத உற்சாகம் ஊட்டிய அனைவருக்கும் எனது
நன்றிகள் ! உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும்
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
இனி எல்லாம் சுகமே..... ஜெயமே !!
 
 
 


 

Saturday, December 28, 2013

டெக்னாலஜி - கார் பார்கிங்

பெங்களுருவில் பார்கிங் என்பது மிகவும் கடினமாகி வருகிறது, அங்கு மட்டுமா... உலகில் எல்லா இடத்திலும்தான். பார்கிங் தேடி அலைவதிலேயே பாதி பெட்ரோல் காலியாகிவிடும். இன்று பெட்ரோல் விற்கும் விலையில் இப்படி செலவழிக்க முடியுமா  ? ஒவ்வொரு துளி பெட்ரோலும் இன்று பூமியை பாதுகாக்கும் இல்லையா..... அதற்க்கு தென்கொரியாவில் ஒரு புதிய ஐடியா கண்டு பிடித்து இருக்கிறார்கள்.



சிங்கப்பூரில் பார்கிங் என்பது மிகவும் கஷ்டம், அங்கு எல்லா ஷாப்பிங் மால்களிலும் கார் நிற்கும் இடத்தின் மேலே ஒரு சென்சார் இருக்கும். ஒரு லாட் ப்ரீ என்றால் நீங்கள் உள்ளே நுழையும் முன் இடம் இருக்கிறதா என்று காட்டும். தென் கொரியாவின் டெக்னாலஜி முன் இதை பார்க்கும்போது ரஷ்யர்கள் நிலவுக்கு செல்லும்போது பென்சில் உபயோகித்த கதைதான் யாபகம் வரும். சிம்பிள் ஐடியா.....


Labels : Technology, car parking, Suresh, Kadalpayanangal

Friday, December 27, 2013

திரும்பி பார்க்கிறேன்.... கேள்விகளுடன் !

கடல்பயணங்கள்..... இந்த தளம் ஆரம்பித்ததில் இருந்து, நிறைய புதிய  நண்பர்கள் கிடைத்து உள்ளனர். உள்ளூர் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து கூட நண்பர்கள் கிடைத்துள்ளனர். இப்படி அவர்களுடன் எல்லாம் உரையாடும்போது நிறைய சுவையான கேள்விகள் கேட்பார்கள், அதற்க்கு நான் பதில் அளித்துள்ளேன். அதை இந்த வருட முடிவில் தொகுத்துள்ளேன், இந்த கேள்வி உங்கள் மனதிலும் இருக்கலாம்.... அதற்க்கான பதிலை இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.


அது எப்படி "ஊர் "ஸ்பெஷல்"பகுதியில் எல்லா இடங்களுக்கும் சென்று போட்டோ எடுத்து விஷயம் தெரிந்து கொள்கிறீர்கள் ?

நல்ல கேட்டீங்க போங்க..... ஒவ்வொரு ஊர் ஸ்பெஷல் பகுதியும் ஒரு தனி கதை. இந்த பகுதி ஆரம்பிக்கும்போது நான் நினைத்தது என்பது அந்த ஊருக்கு சென்று அதன் முன் ஒரு போட்டோ எடுத்து எனக்கு தெரிந்த செய்தியை பகிரலாம் என்றுதான். ஆனால், எனது பதிவுகளை கவனித்து பார்த்தால், நான் எப்போதுமே ஒரு ஸ்டெப் அதிகமாக மெனகெடுவென். இப்படி நான் முதலில் சென்ற மணப்பாறை முறுக்கில், நான் முறுக்கு பாக்கெட் வாங்கிவிட்டு அந்த கடையில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டேன், பின்னர் கடைகாரரிடம் இங்கே எங்கு முறுக்கு சுடுகிறார்கள் என்று கேட்டேன். அவர் ஒரு இடத்தை சொன்னவுடன், அங்கு சென்று பார்த்தவுடன் நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த ஆர்வம் தொற்றிக்கொள்ள ஒரு மேப் எடுத்து குறித்து வைத்துக்கொண்டு நேரம் கிடைக்கும்போது எல்லாம் சென்று வந்து எழுதுகிறேன்.


எப்படி அந்த பயணம் ஆரம்பிக்கும் ?

இந்த பயணங்களில் அதிகம் எந்த திட்டம் இல்லாமல் ஆரம்பிக்கும் என்பதுதான் உண்மை. எந்த இடத்திலும் எனக்கு ஆள் தெரியாது..... உதாரணமாக ஒரு நாள் நான் திண்டுக்கல்லில் இருந்தபோது, நல்ல இஞ்சி, ஏலக்காய் போட்ட டீ வேண்டும் என்று என் தம்பியிடம் கேட்டேன், அவன் செம்பட்டி அருகே ஒரு டீ கடையில் நல்ல ஏலக்காய் டீ கிடைக்கிறது என்று கூட்டி சென்றான். அன்று பார்த்து கடை லீவு, அடுத்து என்ன செய்வது என்று நினைத்தபோது வத்தலகுண்டுவில் ஒரு இடம் இருக்கிறது என்றான், அங்கு நெருங்கும்போது தேனி, போடி என்று மைல் கல் கண்ணில் பட்டது. காரில் சென்றதால் இன்னும் சிறிது தூரம்தானே, போடி வேறு ஏலக்காய்க்கு பேமஸ், அங்கே சென்று ஒரு டீ சாப்பிடலாம் என்று விளையாட்டுத்தனமாக யோசித்தோம். போடி சென்று நாங்கள் ஏலக்காய் செடி பார்க்க வேண்டும் என்று கேட்க, அவர்கள் அங்கிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்த போடி மெட்டுவுக்கு செல்ல வேண்டும் என்றனர். இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது, இன்னும் சிறிது தூரம்தானே என்று அங்கும் செல்ல, அவர்களோ கேரளாவில்தான் உள்ளது, செக் போஸ்ட் தாண்டி போங்கள் என்றனர். நாங்கள் கேரளாவினில் நுழைந்து ஏலக்காய் செடி பார்த்து முடித்து திரும்பும்போது ஒருவர் இந்த ஏலக்காய் காய வைக்கும் இடம் இன்னும் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது என்றவுடன் அங்கிருந்து பூப்பாறை என்ற இடத்திற்கு சென்று முழுமையான ஏலக்காய் செய்முறையை அங்கே இங்கே கேட்டு ஒரு ஆளை பிடித்து பார்த்தோம். அப்போது எனது மனைவியிடம் இருந்து போன் வந்தது........

"ஹலோ, எங்க இருக்கீங்க, டீ சாப்பிட இவ்வளவு நேரமா ?"

"ஒரு நல்ல ஏலக்காய் டீ சாப்பிட கொஞ்சம் தூரமா வந்துட்டோம், இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வந்துடுவேன்"

"கொஞ்ச தூரம்னா...."

"இங்கதான்....கேரளா பக்கத்தில் பூப்பாரைன்னு ஒரு இடம், போடியில் கிடைக்கிற சிறந்த ஏலக்காய் டீக்கு இங்க இருந்துதான் ஏலக்காய் சப்ளை..."

"(பெருமூச்சு)..... சரி சரி வீட்டுக்கு வாங்க"

இப்படிதான் எல்லா பயணமும் ஆரம்பிக்கிறது, முடியும்போது சில சமயம் காயங்களுடன் முடியும் !!


இப்படி செல்லும்போது ஏற்பட்ட சுவாரசியமான அனுபவம் சொல்லுங்களேன் ?

நிறைய நிறைய நிறைய சுவாரசியமான அனுபவங்கள் கிடைக்கும் ! இந்த பயணத்தில் இருக்கும் த்ரில் என்பதே பாதை எப்படி இருக்கும் என்பது தெரியாது, அங்கு எங்கு போய் விஷயம் சேகரிக்க வேண்டும் என்பது தெரியாது, என்ன விஷயம் என்பதும் தெரியாது (ஊத்துக்குளி வெண்ணை பற்றி என்ன கேள்வி கேட்க வேண்டும் என்று எப்படி தெரியும் ?!), என்ன கேள்வி கேட்க வேண்டும் என்பதும் தெரியாது, இப்படி நிறைய தெரியாதுக்கள்..... ஆனால் அங்கு சென்றவுடன் நிறைய மனிதர்கள் பழக்கம் ஆகினர், உலகில் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்தது. சுவாரசியமான அனுபவம் ஒன்று சொல்ல வேண்டும் என்றால் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா பற்றி சொல்லலாம்....... அங்கு சென்று இருந்தபோது எங்கு சென்று கேட்டும் இந்த பால்கோவா செய்முறையை மட்டும் பார்க்க முடியவில்லை, தொழில் ரகசியம் என்றனர். நாங்கள் நான்கு பேர் சென்று இருந்தோம், நன்றாக இன் செய்த ஷர்ட், பேன்ட் என்று இருந்தோம். எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ஒருவரை கேட்டபோது அவர் ஒரு தெருவினை சொல்லி அது பால்கோவா கிண்டும் இடத்தின் பின் பக்கம், பொதுவாக கதவு வெப்பம் தணிக்கவென்று திறந்துதான் இருக்கும் என்றார். நாங்களும் அந்த தெருவுக்கு சென்று திறந்து இருந்த அந்த கதவினில் சட்டென்று நுழைந்து நாங்கள் பால்கோவா செய்வதை பார்க்க வேண்டும் என்றோம். அவர்கள் பதில் சொல்வதற்குள் ஆள் ஆளுக்கு பிரிந்து நோண்ட ஆரம்பித்தோம், நான் காமெராவில் படம் எடுக்க ஆரம்பித்தேன். இதை எல்லாம் கவனித அவர்கள் நாங்கள் அரசு ஊழியர்கள் என்று நினைத்து ரைடு என்று நினைத்து முதலாளிக்கு தகவல் அனுப்பிவிட்டனர். அவர்கள் வந்து எங்களை விசாரிக்க நாங்கள் அரசு ஊழியர்கள் இல்லை என்று தெரிந்ததும் சுற்றி நின்று கேள்வி மேல் கேள்வி கேட்க்க ஆரம்பித்தனர். என்னுடன் இருந்த எல்லோரும் இன்று அவ்வளவுதான் என்று இருக்க.... நான் மட்டும் அந்த முதலாளியுடன் சகஜமாக பேசி கொண்டே இருந்தேன், ஒரு கட்டத்தில் அவர் நான் பேசிய தொனியையும், விதத்தையும் கண்டு சிரிக்க ஆரம்பித்தார். பின்னர் சேர் எடுத்து போட்டு எங்களை உட்கார வைத்து, சூடாக பால்கோவா கொடுத்து நிறைய நேரம் பேசி கொண்டு இருந்தோம் !!


இந்த ஊர் ஸ்பெஷல் பகுதி எழுதுவதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது, எதிர்காலத்தில் புக் எதுவும் போடுவதாக ஐடியா எதுவும் இருக்குதா என்ன ?

இந்த ஊர் ஸ்பெஷல் பகுதி எழுத நான் செல்லும் ஊர்கள், சந்திக்கும் மனிதர்கள், கிடைக்கும் தகவல்களை வைத்து இந்த உலகம் பெரிது என்பதும், நிறைய தொழில்கள் இருக்கிறது எந்த தொழிலும் மட்டம் இல்லை என்பதும், சம்பாதிக்க நாம் படித்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், வேர்வை சிந்தினால்தான் சம்பாதிக்க முடியும் என்ற தவறான கருத்து இருப்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. இந்த பதிவுகளை படிப்பவர்கள் என்பது சுமார் 300 பேர் மட்டுமே இருப்பார்கள், ஆனால் எழுதுவது என்பது அறிந்து கொள்ளவே அன்றி பாராட்டுக்காக அல்ல. உதாரணமாக சொல்வதென்றால்..... நான் எனது தம்பி ஆனந்த் உடன் ஈரோடு மஞ்சள் சந்தைக்கு சென்று வந்தேன். திரும்பவும் ஒரு முறை ஈரோடு செல்லும் வாய்ப்பு வந்தது. இந்த முறை மஞ்சள் சந்தைக்கு அதிகாலையிலேயே சென்றேன், அங்கு ஒரு சிலருடன் நட்பு ஏற்படுத்தி கொண்டு பேசி கொண்டு இருந்தபோது, ஒரு அழுக்கு மஞ்சள் பையுடன், கொஞ்சம் கசங்கிய மங்கிய வெள்ளை உடையுடன் சென்ற ஒருவரை என்னை கவனிக்க சொன்னார்கள். அவர் ஒவ்வொரு மஞ்சள் மாதிரியையும் கவனித்து, சிலவற்றை முகர்ந்து பார்த்து என்று இருந்தார். ஒரு மஞ்சளை முகர்ந்து பார்த்து, ஏலம் எடுத்தார். அப்போது பக்கத்தில் இருந்தவர் என்னிடம்....... இந்த மஞ்சளை ஏலத்தில் எடுத்து முன் பணம் செலுத்தி விட்டார், முழு பணமும் இன்னும் பத்து நாள் கழித்து கொடுத்தால் போதும். தினமும் இவர் இனி பார்த்துக்கொண்டே இருப்பார், என்று எல்லா மஞ்சளுமே தரம் குறைந்ததாக இருக்கிறதோ, அப்போது அவர் இவரின் மஞ்சளை ஏலத்திற்கு வைப்பார். அன்று அவரின் மஞ்சள் மட்டுமே அருமையான தரத்துடன் இருப்பதால் விலை அதிகம் போகும், ஒரு மூட்டைக்கு சுமார் 100 ரூபாய் வரை லாபம் வரும். இப்படி ஒரே நாளில் அவர் லட்சக்கணக்கில் சம்பாதிப்பார், அவரின் அனுபவம் என்பது மஞ்சளை முகர்ந்து பார்த்தே தரம் பார்ப்பதில் இருக்கிறது என்ற போது என்னை நினைத்து பார்த்தேன் !! எதிர்காலத்தில் இதை புக் போன்று போட முடியுமா என்று தெரியவில்லை...... ஆனால் நான் இதை எழுதுவது கண்டிப்பாக புக் போடுவதற்கு இல்லை !


பதிவுலகில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எழுதி வருகிறீர்கள், அதில் கிடைத்த சந்தோசம் என்ன ?

சந்தோசம் என்று சொன்னால் அது நிறைய இருக்கிறது...... ஆனாலும் சில விஷயங்கள் என்னால் மறக்க முடியாதவை, அவர்களுக்கு நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும். பதிவுலகில் முதலில் நான் எழுதியபோது என்னையும் சேர்த்து முதல் மூன்று மாதத்தில் எனது பதிவை படித்தவர்கள் தினமும் பத்து பேர் மட்டுமே ! ஆனால், எனக்கு ஒரு கனவும், நம்பிக்கையும் இருந்தது....... ஒரு நாள் இதை அதிகம் பேர் படிப்பார்கள் என்று, ஆனாலும் நானும் மனிதன்தானே, ஒரு சில நாட்களில் யாருக்காக இதை எழுதுகிறேன் என்று தோன்றும், விட்டு விடலாம் என்றும் தோன்றும்..... அப்போது தொடர்ந்து எனது பதிவை படித்து பாராட்டிய நண்பர்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும், முக்கியமாக திண்டுக்கல் தனபாலன் மற்றும் ரமணி அவர்களை சொல்ல வேண்டும். இவர்கள் இல்லையென்றால் நிறைய புதிய பதிவர்கள் உருவாகாமல் போய் விடுவர்.

இன்னும் சந்தோசங்களை சொல்ல வேண்டும் என்றால்...... கோவை நேரம் ஜீவா, திடம் கொண்டு போராடு ஸ்ரீனிவாசன், சதீஷ் சங்கவி, வீடு திரும்பல் மோகன், ஜோதிஜி திருப்பூர், கோவை ஆவி, ராஜி, அமுதா கிருஷ்ணா, ராஜேஷ், உலக சினிமா ரசிகன், நிகழ்காலம் எழில், மாதேவி, கரந்தை ஜெயக்குமார், ஜெயதேவ் தாஸ், ஸ்கூல் பையன், ஸ்டே ஸ்மைல் கிருஷ்ணா, எனது தம்பி ஆனந்த், கலா குமரன், துளசி கோபால், தமிழ்வாசி பிரகாஷ், ஆரூர் மூனா செந்தில் என்று நிறைய பேர் (யாருடைய பெயராவது விட்டு இருந்தால், அது என் தவறே மன்னிக்கவும் !) நண்பர்களாக கிடைத்தனர், அது மிக பெரிய சந்தோசம். அவர்களின் ஒவ்வொரு பதிவினையும் வாசித்து மகிழ்பவன் நான்...... இன்னும் இன்னும் இது போன்று நிறைய புது நண்பர்களை 2014ம் ஆண்டு பெற வேண்டும் என்றும் பிராத்திக்கிறேன்.

சந்தோசம் சரி, வருத்தம் என்று ஏதாவது இருக்கிறதா ?

ஒரு சில வருத்தங்கள் இருக்கின்றன...... சில நேரங்களில் நண்பர்கள் என்பது பதிவுகளில் கருத்துக்களை போடுவது மட்டும் என்று சுருங்கி விட்டதோ என்று தோன்றும். ஒருவரது பதிவுகளை நாம் படிப்பது என்பது அவர்கள் நமது அலைவரிசையில் இருந்தால் மட்டுமே சாத்தியம், இப்படி ஒரு நண்பர்கள் கூட்டம் இருந்தும் இதுவரை யாரும் எனக்கு போன் செய்தோ அல்லது எங்கேயாவது சென்றோ பொழுது கழிக்க முடியவில்லை. நான் பதிவுலகில் இருந்து விலகினாலும் இந்த நண்பர்கள் இருப்பார்களா என்ற கேள்வி எப்போதும் எனது மனதில் எழும். ஒரு நல்ல பதிவு படிக்கும்போது நான் போன் செய்து அதை பகிர்ந்து கொள்வேன், ஆனால் இதுவரை எனது பதிவுகளில் அப்படி எதுவும் இல்லை போலும்....!!


பதிவுலகில் எரிச்சல் ஏற்படுத்தும் செயல் என்பது என்ன ?

எல்லோருக்கும் இருக்கும் ஒன்றுதான்....... கஷ்டப்பட்டு நான் தேடி, அலைந்து போடும் ஊர் ஸ்பெஷல் பகுதிக்கு வெகு சிலரே வந்து படிப்பார்கள், ஆனால் ஒரு மொக்கை பதிவை வேண்டும் என்றே போட்டால் அன்று மட்டும் ஹிட் ஜாஸ்தியாக இருக்கும், அப்போது நான் அடையும் எரிச்சலுக்கு அளவே இல்லை !! :-)

2014ம் பதிவுலகில் கனவு அல்லது நீங்கள் எதிர்ப்பார்ப்பது என்பது என்ன ?

அது மிகவும் நீளமானது....... ஆனால் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது !
  • கோவை நேரம் ஜீவாவுடன் பகார்டியுடன் மிக்ஸ் செய்து, பிரியாணி சாப்பிட வேண்டும்,
  • திடம் கொண்டு போராடு சீனுவுடன் ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும்,
  • நிகழ்காலம் எழில் மேடம் உடன் அவர்களின் ewave அமைப்பில் ஒரு நாள் பங்கு பெற வேண்டும்,
  • திண்டுக்கல் தனபாலன் சார் உடன் உட்கார்ந்து அவரை விட அதிகமாக பின்னூட்டம் இட வேண்டும்,
  • ரமணி சார் உடன் உட்கார்ந்து அவர் கவிதை செய்வதை ரசிக்க வேண்டும்,
  • வீடு திரும்பல் மோகன்ஜி உடன் சேர்ந்து அவர் சாதாரண மனிதர்களுடன் பேட்டி எடுப்பதை ரசிக்க வேண்டும்,
  • சதீஷ் சங்கவி உடன் அவரது நண்பர்களுடனும் ஒரு அரட்டை கச்சேரி மேற்கொள்ள வேண்டும்,
  • ராஜேஷ் உடன் உட்கார்ந்து ஒரு சில ஜோதிட சந்தேகத்தை தீர்க்க வேண்டும்,
  • கோவை ஆவியுடன் சேர்ந்து பைக் ஓட்ட வேண்டும்,
  • காணாமல் போன கனவுகள் ராஜி அவர்கள் செய்த ஒரு புது டிஷ் ட்ரை செய்ய வேண்டும்,
  • ஆரூர் மூனா செந்தில் அவர்களுடன் ஒரு படம் முதல் நாள் முதல் ஷோ பார்க்க வேண்டும்,
  • தமிழ் வாசி பிரகாஷ் உடன் ஒரு மதுரையை சுற்றி பார்க்க வேண்டும்
  • ஜோதிஜி அவர்களுடன் அவர் எழுதிய டாலர் நகரம் பற்றி விவாதிக்க வேண்டும் 
  • உலக சினிமா ரசிகன் அவர்களுடன் ஒரு உலக படம் பார்க்க வேண்டும் 

..... இப்படி நிறைய நிறைய ஆசைகள், பார்ப்போம் முடிகிறதா என்று !
இந்த ஆண்டு பதிவர் திருவிழா சென்றது, அங்கு நிறைய பதிவர்களை பார்த்தது, புதிய நண்பர்கள் கிடைத்தது என்று சந்தோசமாக இருந்தது. அது மட்டும் இல்லாமல், பதிவுகளும் நிறைய படித்தேன். சிலரது பதிவை படித்து நிறைய சந்தோசமும் ஆச்சர்யமும் பட்டிருக்கிறேன். இனி வரும் ஆண்டும் நல்ல ஆண்டாக அமைய வேண்டும், இன்னும் நிறைய நண்பர்களையும், புதிய வாய்ப்புகளையும் அமைய பெற வேண்டும். உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

Tuesday, December 24, 2013

ஊர் ஸ்பெஷல் - சிவகாசி பிரிண்டிங் (பகுதி - 1)

சிவகாசி வெடி பற்றிய பதிவினை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அந்த வெடி பற்றி பார்க்க போகும்போது இந்த பிரிண்டிங் பற்றியும் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன், முடியாமல் போனது. இந்த முறை வருட கடைசி நெருங்குவதால் சிவகாசியில் காலேண்டர் மற்றும் டைரி தொழில் சிறப்பாக நடைபெறும் என்பதால் சட்டென்று காரை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். சிவகாசிக்கு சென்று பிரிண்டிங் பற்றி பார்க்க வேண்டும் என்று விசாரித்தபோது எந்த பிரிண்டிங் என்று கேட்டார்கள், நான் முழிக்க அவர்களோ காலேண்டர், பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட், டயரி, போஸ்டர், புத்தகம், விசிட்டிங் கார்டு, வாழ்த்து அட்டை, தீப்பெட்டிக்கு லேபில், மேப், தொங்கும் போஸ்டர், மாடல் என்று சொன்னவுடன்தான் இங்கு இத்தனை வகை இருந்ததே தெரிந்தது. நான் சிறிது தலை சுற்றலுடன் இங்கு காலேண்டர் பார்க்க முடியுமா என்றவுடன் அவரோ டெய்லி சீட், மாதாந்திர காலேண்டர், வருடாந்திர காலேண்டர், டேபிள் மேல் வைப்பது, 3D காலேண்டர், கலர், கருப்பு வெள்ளை என்றெல்லாம் சொல்லி எதை பார்க்க வேண்டும் என்று கேட்க, நான் கீழே மயங்கி விழவில்லை அவ்வளவுதான் !



முடிவில் வருட கடைசி என்பதால் காலேண்டர் அதுவும் எல்லா வகையும் பார்க்க வேண்டும் என்றவுடன், என்னை முதலில் தினசரி காலேண்டர் செய்யும் இடத்திற்கு கூட்டி சென்றார்கள். அங்கு தினசரி காலேண்டர் அட்டையை கட் செய்து கொண்டு இருந்தனர். நமக்கு வரும் காலேண்டர் அட்டைகள் எல்லாம் திக் ஆக இருக்கிறது. ஆனால் இங்கு முதலில் இருக்கும் அட்டைகள் எல்லாம் சொல சொலவென்று இருந்தது. காலேண்டர் மேல் சாமி படம் வரும் இல்லையா, அதை ஒரு இடத்தில் பிரிண்ட் செய்து இங்கு கொண்டு வந்து, ஒரு மெசினில் விட்டு வெளியே வரும்போது ஒரு சைடு மட்டும் பசை தடவ படுகிறது, சிலர் அதன் மேலே இன்னொரு காகிதத்தை ஓட்டுகின்றனர், அதனால் அது நல்ல திக் ஆக வந்து விடுகிறது. அங்கு முழுவதும் இது போன்று காலெண்டரின் வெளி அட்டை மட்டுமே தயார் செய்கின்றனர். அந்த வெளி அட்டை மட்டும் பிரிண்ட் செய்து வந்து விடுகிறது, இங்கு அதை ஓட்டி, காலேண்டர் அட்டை தயார் செய்கின்றனர். சொல்வதற்கு சுலபமாக இருந்தாலும் ஒரு காலேண்டர் தயாராகி வருவது கடினம் என்றே தோன்றியது.

காலேண்டர் அட்டை இதுதான்.....

பசை தடவி தாள் வருகிறது....

அதை இந்த அட்டையில் ஓட்ட வேண்டும்......அட்டை தயார் !

அதை காலேண்டர் அட்டை சைஸ் கட் செய்ய வேண்டும் !

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் !
ஒவ்வொரு முறை டெய்லி சீட் காலெண்டரில் தேதி கிழிக்கும்போதும், அதில் வரும் சாமி படம் கண்ணில் படும், எப்படி இவ்வளவு அழகாக வரைகிறார்கள் என்று. அதை சுட்டி காட்டி கேட்டபோது, அவர்கள் சிவகாசியில் இருக்கும் பெயிண்டர்கள் பற்றி சொன்னார்கள், அவர்களில் ஒருவரை சந்திக்க முடிந்தது. சுமார் அரை மணி நேரம் வரை அவருடன் செலவழித்து அவர் ஓவியம் வரைவதை பார்த்தேன், மிகுந்த பொறுமையாக அவர் வரைந்த விதம் அருமை. போட்டோ எடுக்க முனைந்தபோது ஏனோ அவர் என்னை அனுமதிக்கவில்லை..... எவ்வளவோ கேட்டும் ! ஆனால், பேச்சின் இடையே அங்கு காலேண்டர் ஓவியங்களுக்கு புகழ் பெற்றவர் என்று திரு.கொண்டையராஜு என்பவரை சொன்னார். அதை பற்றி இணையத்தில் தேடியபோது ஒரு நண்பரின் பதிவு கிடைத்தது, அதில் அவரை பற்றியும், ஓவியத்தை பற்றியும் நிறைய பேசுகிறார்........ காலேண்டர் ஓவியம்.
சரி டெய்லி சீட் காலேண்டர் பார்த்தாகிவிட்டது, அடுத்து மாதாந்திர அல்லது வருட காலேண்டர் பார்க்கலாம் என்றபோது அவர்கள் கேட்ட கேள்விக்கு மீண்டும் எனக்கு மயக்கம் வந்தது ?!







அவர்கள் கேட்டது மிக சுலபமான கேள்வி, ஆனால் பதில்தான் எனக்கு தெரியவில்லை ! "என்ன பிரிண்டிங் பார்க்கணும் நீங்க ?"........ நான் பேய் முழி முழிப்பதை பார்த்த அவர்கள் அதை விளக்கினார்கள்.... இன்க் ஜெட் பிரிண்டிங், டிஜிட்டல் பிரிண்டிங், ஸ்க்ரீன் பிரிண்டிங், ஹீட் பிரஸ், பிலேசோக்ராபிக் பிரிண்டிங், லேசர் பிரிண்டிங், பேட் பிரிண்டிங், ஆப் செட் பிரிண்டிங் என்று அவர்கள் இன்னும் சொல்லிக்கொண்டே போக, எனக்கு எதை சொல்வது என்று தெரியவில்லை. முடிவில் ஆப் செட் பிரிண்டிங் என்பது எப்போதும் நான் கேட்க்கும் ஒன்று என்பதால் அதை சொன்னேன். அவர்கள் என்னை கூட்டி கொண்டு செல்ல எனக்கு மனதில் ஒன்று மட்டும் தோன்றியது...... நான் இதுவரை சென்ற ஊர் ஸ்பெஷல் பகுதியிலேயே இதற்குதான் நான் மிகவும் மெனகெடவேண்டும் என்பது, நிறைய விஷயங்கள் இருந்தது ! நாங்கள் சிவகாசியின் சந்து பொந்துகளில் எல்லாம் சென்றபோது ஒன்று மட்டும் புரிந்தது இங்கு பிரிண்டிங் சம்பந்தமான எல்லா புதிய டெக்னாலஜியும் அங்கு உண்டு என்பது. நாங்கள் முடிவில் ஒரு பெரிய ஆப் செட் பிரிண்டிங் செய்யும் இடத்தின் முன்னே நின்று கொண்டிருந்தோம் !


காலேண்டர் சாமி படம் பிரிண்டிங் !
அந்த இடத்தில் எல்லா விதமான காலேன்டரும் அச்சடித்து இந்தியா மட்டும் இல்லாமல் உலக நாடுகள் எல்லாவற்றிற்கும் வினியோக்கின்றனர். உள்ளே நுழைவதற்கு முன் ஆப் செட் பிரிண்டிங் என்றால் என்னவென்று சிறிது தெரிந்து கொள்வோம், இல்லையென்றால் நிறைய விஷயம் உங்களுக்கு புரிவது கடினம். நான் அன்று கற்று கொண்டதை எனக்கு தெரிந்த விதத்தில் உங்களுக்கு சொல்கிறேன் !! ஒரு ஓவியம் வரைகிறீர்கள் என்று வைத்து கொள்வோம், முதலில் பேப்பர் எடுத்து எல்லா கலரையும் கலக்க மாட்டீர்கள் அல்லவா, ஒரு கலர் கொண்டு அந்த பேப்பரில் தீட்டுவீர்கள், பின்னர் அடுத்து, பின்னர் இன்னொன்று என்று அல்லவா. ஒரு கலர் கொண்டு அந்த பேப்பரில் தீட்டியவுடன், அந்த கலர் காய்ந்தவுடன் நீங்கள் பேப்பரை தடவி பார்த்தால் கலர் செய்த இடம் மேடாக தெரியும், இதைதான் லேயர் என்கின்றனர். பேப்பர் என்பது முதல் லேயர், முதல் கலர் என்பது அடுத்த லேயர் என்று. இதைதான் ஆப் செட் பிரிண்டிங் செய்கிறது....... இதில் நான்கு முக்கிய கலர்களே எல்லா விதமான வர்ணங்களையும் உருவாக்குகிறது அது..... சயான், மெஜந்தா, மஞ்சள், கருப்பு.
முதலில் இருக்கும் ஒரு பிளேட்டில் எந்த இடத்தில் என்ன கலர் வேண்டுமோ அதை மட்டும் ஒரு லேயர் ஆக உருவாக்குகின்றனர், அதை கலர் உருளையில் உருட்டும்போது எந்த இடம் மேடாக இருக்கிறதோ அதில் கலர் பதிகிறது, அது பேப்பரில் பதிகிறது. அந்த கலர் அழுத்தமாக பதிய இன்னொரு உருளை உதவுகிறது. இப்படி நாலு கலர் உருளைகளுக்கு இடையே அது சென்று வரும்போது உங்களுக்கு முழு கலர் காலேண்டர் கிடைக்கிறது. இந்த பிரிண்டிங் தொழிலில் வேகம் என்பது முக்கியம், ஆயிரம் காலேண்டர் அடிக்க நீங்கள் எவ்வளவு குறைவான நேரம் எடுக்கிறீர்களோ அவ்வளவு அதிகம் லாபம் சம்பாதிப்பீர்கள். ஒரு போஸ்டர் படம் உருவாக என்ன என்ன தேவைபடுகிறது, எப்படி உருவாகிறது என்பதை தெரிந்து கொள்ள நீங்கள் கீழே இருக்கும் வீடியோ பார்த்தால் புரியும்.



சரி ஆப் செட் பிரிண்டிங் எப்படி உருவாகிறது என்று இப்போது உங்களுக்கு தெரியும், இப்போது பிரஸ் உள்ளே சென்று இன்னும் நிறைய விஷயம் பாப்போம் வாருங்கள்.......அடுத்த வாரம் வரை அதற்க்கு பொறுங்களேன் !

Labels : Suresh, Kadalpayanangal, Oor special, Sivakasi, Printing, Calendar

Monday, December 23, 2013

அறுசுவை - கபே இட்லி, பெங்களுரு

எப்போது கபே (cafe) என்று பெங்களுருவில் சென்றால் அயல்நாட்டு இசை அதிர அதிர இருக்கும், அரை இருட்டில் தேடி உட்கார்ந்தால் மெனு கார்டு நீட்டும் ஆள் ஆங்கிலத்தில் உங்களுக்கு என்ன வேண்டும் என்பதையே இஸ்ரேல் பாசையில் கேட்பார், மெனு கார்டை படிக்கும்போது பீட்சா, பாஸ்தா, பர்கர் என்று வாயில் நுழையாமல் நிறைய இருக்கும், குடிப்பதற்கு என்ன வேண்டும் என்று தேடினால் கோல்ட் காபி, லெமன் டீ, கப்புச்சினோ என்று அது நீளும்..... முடிவில் ஆர்டர் செய்து அது வந்து சாப்பிட்டு முடிக்கும்போது பில் கண்ணை கட்டும், சாப்பிட்டது ரொம்ப ஹெவி என்று தோன்றும். எல்லோருக்கும் இது போன்று ஒரு அயல்நாட்டு இசை கேட்டு கொண்டு கபே போய் வர வேண்டும் என்ற ஆசை இருக்கும், ஆனால் அங்கு இருக்கும் உணவுகள் நிறைய யோசிக்க வைக்கும். இப்படி ஒரு உணவகம் இருந்து அங்கு இட்லி, தேங்காய் சட்னி, காபி என்று கிடைத்தால் எப்படி இருக்கும், அதுவும் மிகவும் சுவையாக இருந்தால் ?!




சுமார் மூன்று மாதத்திற்கு முன்பு இந்த உணவகத்தை பற்றி கேள்விபட்டேன், ஆனால் அங்கு கிடைப்பது வெகு சில வகைகள் இட்லி மட்டுமே. இதற்காக அவ்வளவு தூரம் செல்ல வேண்டுமா என்று விட்டுவிட்டேன், சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் அங்கு சென்று வந்து நான் அங்கு சென்று கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்றபோது இந்த வாரம் அங்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன்......ம்ம்ம்ம்ம் கண்டிப்பாக மூன்று மாதங்களை வேஸ்ட் செய்து விட்டேன் என்று சென்றபின் தோன்றியது ! வெகு சிறிய கடை, பெங்களுருவில் பிரேசர் டவுன் என்ற ஏரியாவில் உள்ளது, கண்டுபிடிப்பது சுலபம்தான். வண்டியை நிறுத்திவிட்டு கடையின் முன்னே நின்றபோது நம்மூர் பெட்டிக்கடையை விட சிறிது பெரிது என்று தோன்றும்படியான இடம். மெனு கார்டு என்று கேட்டபோது ஒரு பக்க மெனு கொடுத்தார்கள். அங்கு மிதமாக அயல்நாட்டு இசை கேட்டு கொண்டு இருந்தது.


 



 

மெனுவை பார்த்தபோது இட்லி, காஞ்சிபுரம் இட்லி, பர்கர் இட்லி, கடுபு என்னும் வாழையிலை இட்லி, கட்லெட் மற்றும் காபி, பாதாம் பால் அவ்வளவுதான் மெனு ! எனக்கு காஞ்சிபுரம் இட்லி, மற்றும் வாழையிலை இட்லி ஆர்டர் செய்துவிட்டு சுற்றி கண்களை ஓட்டினேன். அங்கு ஒரு கண்ணாடி பெட்டியில் கிடார், பீட்டில்ஸ் என்று கபே என்ற சொல்லுக்கு இருந்தது. அங்கங்கு பல பத்திரிக்கைகளில் வந்த அந்த கடை பற்றிய செய்தி, அங்கு கிடைக்கும் மெனு என்று ஒட்டி இருந்தனர். இவ்வளவு சிறிய கடையா என்று யோசித்து கொண்டிருக்கும்போதே சுட சுட ஆவி பறக்க, மிக சிறிய தட்டில் காஞ்சிபுரம் இட்லியும் அதற்க்கு தொட்டு கொள்ள தேங்காய் சட்னி, கார சட்னி வந்தது. பொதுவாக இந்த காஞ்சிபுரம் இட்லியை நான் எங்கு சாப்பிட்டபோதும் ஒரு கடினத்தன்மை இருந்தது, ஆனால் இங்கு ரொம்பவே சாப்ட். ஒரு விள்ளல் பியித்து வாயில் சட்னி தொட்டு வைத்தவுடன் கண்டிப்பாக மிக கண்டிப்பாக அருமையான இட்லி. நொடியில் அந்த தட்டு காலியானது.

 



அடுத்து ஒரு வாழையிலை தொண்ணையில் மாவு ஊற்றி வேக வைத்து எடுத்த இட்லி சட்னி உடன் வந்தது. வித்யாசமாக இருக்கிறதே என்று பார்த்துக்கொண்டே அதற்க்கு இட்லி பொடி எக்ஸ்ட்ரா வாங்கி கொண்டு அதை தொட்டு சாப்பிட, மீண்டும் அதே பஞ்சு போன்ற இட்லி சுவை மனதை மயக்கியது நிஜம். இட்லி  இடத்திலும் இப்படி சுவையுடனும், பஞ்சு போன்றும் கிடைப்பது கடினம், ஆனால் இங்கு அந்த இரண்டுமே இருந்தது. மிக சிறிய மெனு, சின்ன கடை ஆனால் பார்த்து பார்த்து செய்து இருக்கின்றனர். எப்போதும் இது போன்ற இட்லியை உடுப்பி ஹோடேலில் சாஸ்த்ரிய சங்கீதம் பின்னே வழிய சாப்பிடும் அனுபவம் இருந்தது, முதல் முறையாக மேற்கிந்திய சங்கீதத்துடன் நம்ம ஊரு இட்லி சாப்பிடும் அனுபவம், அதுவும் நல்ல இட்லி சாப்பிட்ட அனுபவம் என்பது அருமை !




பஞ்ச் லைன் :

சுவை - மிக சில வகைகள்தான், ஆனால் இட்லி பஞ்சு போன்ற மென்மை. கண்டிப்பாக  பிடிக்கும் !

அமைப்பு - சிறிய இடம், பார்கிங் வசதி இல்லை, அந்த பிஸியான ஒன் வே இடத்தில் கார் எல்லாம் பார்க் பண்ண கொஞ்சம் தூரம் போகணும் !

பணம் - சுவைக்கு சரியான விலை என்றே தோன்றியது. இப்படி ஒரு சில இடத்தில்தான் நல்ல சுவை...

சர்வீஸ் - நல்ல சர்விஸ்.

அட்ரஸ் :






மெனு கார்டு :


 
Labels : Cafe, Idly, Bangalore, Suresh, Kadalpayanangal, Super soft idly, Concept restaurant


Friday, December 20, 2013

மாத்தி யோசி - தேவாலயம் ஹோட்டல், பெல்ஜியம்

பயணம் என்பதே மறக்க முடியாத ஒன்று, அதில் முக்கிய இடம் வகிப்பது என்பது நாம் தங்கும் இடம்.  எனது ப்ளாக்கை விரும்பி படிக்கும் நண்பர் ராஜேஷ் அவர்கள் எப்போதும் நான் செல்லும் இடங்கள் பற்றி எழுதும்போது, தங்கிய ஹோட்டல் பற்றியும் எழுதலாமே என்பார், அவருக்காகவே இந்த பதிவு ! ஒவ்வொரு பயணத்தின் போதும் பல நாட்களை செலவழித்து தங்கும் இடத்தினை தேர்ந்தெடுப்பேன், இதனால் மனதுக்கு மகிழ்ச்சியும், நிம்மதியும் அந்த பயணத்தில் கிடைக்கும். சிலர், கிடைக்கும் இடத்தில் தங்கி செல்வர்.... அது ஒரு வகையான பயண அனுபவம். இப்படி நான் சமீபத்தில் செய்த பயணத்தில் நான் தங்கிய ஹோட்டல் என்பது ஒரு தேவாலயம் !! மிகுந்த ஆச்சர்யம் கொடுத்த இடம் அது !

ஜீசஸ்..... இதுதான் ஹோட்டல் !
இந்த முறை மூன்று நாள் மீட்டிங் என்று பெல்ஜியம் சென்று இருந்தேன். ஏர்போர்டில் இருந்து நான் டாக்ஸி எடுத்தபோதே அவர் அங்கேயா தங்குகிறீர்கள் என்று வியப்புடன் பார்த்தார். நான் அங்கே செல்லும் வரை அதை பற்றி தெரியாது ஆகையால் டாக்ஸி ஒரு தேவாலயம் முன்பு நின்றபோது நான் டிரைவரை பார்த்து இங்கு ஹோட்டல் எங்கே இருக்கிறது என்று கேட்க அவர் என்னை ஒரு புன்னகையுடன் பார்த்து இதுதான் ஹோட்டல் என்று தேவாலயத்தை காண்பித்தார் ! எனது பைகளை இறக்கி விட்டு நிமிர்ந்தபோது ஒரு தேவதூதன் சிலையாய் ஆசிர்வதித்து கொண்டு இருந்தார் !

இந்த ஹோட்டல் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்......Martin's Patershof


வரவேற்க தயாராக தேவதூதர் ரெடி..... ஹோட்டல் வாசலில்


அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல் என்று முத்திரை.... நான்கு ஸ்டார் !

முதலில் நுழைந்தவுடன் உங்கள் கண்களுக்கு படுவது தேவாலயத்தின் பெரிய தூண்கள், சிலைகள் மற்றும் கண்ணாடிகள். உள்ளே நுழைந்து கண்களை துலவவிட என்னை வரவேற்ப்பரையில் இருந்த பெண் வரவேற்று ரூம் புக்கிங் செய்ய தொடங்கினார், அவரிடம் நான் பேச்சு கொடுத்தபோதுதான் தெரிந்தது அது ஒரு தேவாலயமாக முன்பு இருந்ததும், இன்று ஹோட்டல் ஆக மாற்றி இருப்பதும். பொதுவாக தேவாலயம் சென்றால் அதன் கூரை என்பது மிகுந்த உயரத்தில் இருக்கும், இங்கும் அது போலவே...... அந்த கூரை வரை ஐந்து செயற்கை  தளங்களை அமைத்து ரூம் இருக்கிறது. எனக்கு கிடைத்தது தேவாலயத்தின் கூரை தொடும் ஐந்தாவது மாடி !

அப்போ பிரேயர் ஹால்...... இப்போ சாப்பாடு கூடம் !

இந்த ஹோடேலில் காலையில் எந்திரிக்க சர்ச் பெல் அடிப்பாங்களோ ?!
ரூம் உள்ளே நுழைந்தவுடன் தேவாலயத்தின் கூரை தென்படுகிறது, படுக்கையின் அருகே ஒரு கண்ணாடி ஜன்னலும், அதன் வெளியே ஒரு தேவதை கை கூப்பி தொழும் கண்ணாடி ஓவியமும் என்று அருமையாக இருந்தது அறை. சிறிய அறைதான் என்றாலும் நன்றாக இருந்தது. அறையின் இன்னொரு ஜன்னல் வழியாக பார்த்தபோது அந்த தேவாலயம் முழுமையாக தெரிந்தது. அன்று இரவு உறங்கி முடித்து, அடுத்த நாள் காலை உணவிற்கு கீழே சென்றால்..... தேவாலயத்தின் பிரேயர் பகுதிதான் உணவு உண்ணும் இடம். மிக மெதுவாக ஒலிக்கும் ஒரு இசையுடன், தட்டில் உணவுகள் கொண்டு வந்து அங்கு சிலுவையின் ஓவியம் முன்பு உட்க்கார்ந்து உண்பது என்பது மனதுக்கு ஆச்சர்யமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

நான் தங்கிய ரூம்.....

படுக்கைக்கு வெளியே ஒரு தேவதை.....கண்ணாடியில் !

என் ஜன்னலின் வெளியே.....

சர்ச்சின் கூரை தொட்டு ரூம்கள்....
அங்கு மிகவும் பெரிய அறை ஒன்று உள்ளது, அங்கு உங்களது படுக்கையை சுற்றி எட்டு கண்ணாடி ஓவியம் தீற்றப்பட்ட ஜன்னல் உள்ளது. காலையில் நீங்கள் எழுந்திருக்கும்போது சூரியம் அந்த ஓவியத்தை பளிச்சென வைத்திருப்பது ஒரு அருமையான காலையை உணர்த்துக்கிறது. பல ஸ்டார் ஹோடேல்களில் தங்கி இருந்தாலும் முதன் முறையாக இப்படி ஒரு தேவாலய ஸ்டைல் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்தது ஒரு புது அனுபவமாக இருந்தது. உலகில் ஆச்சர்யங்கள் நிறைய இருக்கிறது என்பதையும் உணர முடிந்தது !!

சாப்பிடும் முன் பிரேயர் பண்ணனுமா.... பாதர் எங்கே ?!

இதுதான் சாப்பாடு மெனு....!

Labels : Maathi Yosi, Think different, Church, Hotel, Belgium, Suresh, Kadalpayanangal