Wednesday, January 30, 2013

தனிமை இனிமையா ?

நீங்கள் எங்கேயாவது விடுமுறைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தால் எந்த விதமான இடத்தை தேர்ந்தெடுப்பீர்கள் ? எங்கும் மக்கள் நிறைந்திருக்கும் ஒரு இடமா, இல்லை இரைச்சல்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் ஒரு இடமா ? பெரும்பாலான மக்கள் தேர்ந்தெடுப்பது ஒரு அமைதியான இடம், இல்லையா ?! அப்போது, நாம் இருக்கும் நகரம் ஒரு இரைச்சல்களின் பெட்டகம் ஆகி விட்டது எனும்போது அந்த தனிமை, அமைதி தேவை படுகிறது இல்லையா ? என்னையும், என் குடும்பம்,  இயற்கையையும் தவிர யாரும் இருக்க கூடாது என்றுதான் எல்லோரும் யோசிப்பார்கள் ஒரு விடுமுறைக்கு. இயற்கையும், நாமும் என்று அந்த அமைதியை, தனிமையை விரும்பி தேடி செல்வோம்.... அதே போல்தான் நானும் ஒரு விடுமுறைக்கு ஒரு அமைதியான இடம் சென்றிருந்தேன், ஆனால் அந்த அமைதி ஒரு மிக பெரிய கேள்விக்கு வித்திட்டது, அது என் எண்ணத்தை மாற்றியது என்றால் என்ன செய்வது ?!


தனிமை என்பது எல்லா மனிதனுக்கும் தேவை, அது நமக்குள் கேள்விகளை கிளப்பிவிடும், எங்கும் எப்போதும் நாம் தேடுவது தனிமைதான் இல்லையா ?. சில நேரங்களில் நாம் நமது குடும்பத்தினரை விட்டும் கூட தனிமை தேடுவோம்,  நமது வீட்டினுள்ளே ஒரு இடம் தனியாக அமர்ந்து சிந்திப்பதற்கு வேண்டும், அங்கு சென்று அமர்ந்து கண்ணை மூடிக்கொள்ள தோன்றும் அப்படித்தானே ? நகரத்தின் இரைச்சலில் எப்போதும் நம் காதுக்குள் எப்போதும் ஒரு வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போது இப்படி நாம் நினைப்பது ஒன்றும் அதிசயமில்லை. எல்லா மனிதர்களுக்கும் உணர்ச்சிகள் ஒன்றுதான் இல்லையா, ஆனால், நினைத்து பார்த்திருக்கிறோமா ஒரு சில வேலைகள் செய்பவர்கள் தனிமையில்தான் தங்களின் பெரும் பொழுதை கழிப்பதை.... அவர்களுக்கு அந்த தனிமை இனிமையா, கொடுமையா என்று?திண்டுக்கல்லில் சிறுமலை என்று ஒரு இடம் உண்டு, அந்த மலையின் மேலே நிறைய எஸ்டேட் உண்டு, ஆனால் அது பாதுகாக்கபட்ட வனபகுதி. இங்கு நீங்கள் செல்லும்போது ஒரு செக் போஸ்ட் உண்டு. அங்கு ஒரே ஒரு காவலர் மட்டுமே, இரவு பகல் என்று காவல் காப்பார். பொதுவாக இந்த மலை பகுதிக்கு யாரும் வருவதில்லை ஆதலால் அவருக்கும் வேலை இல்லை. அவரும், இயற்கையும் மட்டும்தான்.....நினைத்து பாருங்கள் சுற்றிலும் மரங்கள், பறவை ஒலி மட்டும்தான், தூரத்தில் ஒரு சிறு ஓடை ஓடுகிறது, பச்சை பசேல், குளுமை..... என்ன ஒரு அழகான இடம், அருமையான தனிமை, நிம்மதியான அமைதி, இல்லையா ? இதை ரசித்து அவரிடம் சொன்ன போதுதான் தெரிந்தது, அவர் எவ்வளவு தூரம் இரைச்சலை தேடுகிறார் என்பது ! காலை முதல் மாலை வரை ஒரு சிறு இடத்தில் இருக்கும் அவருக்கு இந்த அமைதி ஒரு கொடுமை, நமக்கெல்லாம் இந்த நகர வாழ்கையில் இந்த இரைச்சல் ஒரு கொடுமை...... இப்போது சொல்லுங்கள் அமைதி, தனிமை என்பது எல்லோருக்கும் இன்பமா என்ன ?காட்டில் செக் போஸ்டில் இருக்கும் ஆள், பணக்கார பங்களாவை காவல் காக்கும் வாட்ச் மேன், இரவில் ரோந்து சுற்றி ஓய்வெடுக்கும் போலீஸ்காரர், எஸ்டேட் பங்களாவை காவல் காக்கும் ஆள், தோட்டத்தை காவல் காக்கும் விவசாயிகள், இரவினில் லாட்ஜ் முன்னே உட்கார்ந்திருக்கும் ரிசப்ஷன் ஆள், மரத்தடியில் வண்டியை போட்டு விட்டு பயணி திரும்பி வர காத்திருக்கும் டிரைவர், வெளிநாடுகளில் குடும்பத்தை பார்க்க முடியாமல் தவித்திருக்கும் சகோதரர்கள், நெடுஞ்சாலைகளில் புகழ் தொலைத்த டீ கடைகள், நமது தேசத்தை காக்க எல்லையில் காவல் காக்கும் ராணுவ வீரர்கள், எத்தனையோ முதியோர் இல்லத்தில் இருக்கும் வயதானவர்கள், வேலைக்கு போகும் பெற்றோர் திரும்பி வர காத்திருக்கும் குழந்தைகள், ஆளில்லா ரோட்டில் காத்திருக்கும் கடைக்காரர்கள், ஏழை வீட்டில் நோய் வாய்ப்பட்டு நகர முடியாமல் இருக்கும் நோயாளிகள், ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிக்கு முன் கண்விழிக்க காத்திருக்கும் சொந்தங்கள், கிராமத்து போஸ்ட் ஆபிசில் தபாலுக்காக காத்திருக்கும் போஸ்ட் மேன் என்று நாம் சந்திக்கும் இது போன்ற மனிதர்கள் எல்லாம் தனிமையை தினமும் அனுபவிக்கும், அவர்களுக்கு எல்லாம் தனிமை உற்சாகம் ஊட்டுமா என்ன ?


ஒரு தனிமையின் இனிமை தெரிய நாம் பணம் கொடுத்து அதை தேடி செல்கிறோம், ஆனால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் இந்த அமைதி வேண்டாம் என்று சிலர் இருப்பது வாழ்வின் முரண் இல்லாமல் வேறென்ன ? நான் இதுவரை இது போன்ற இடங்களுக்கு செல்லும்போதெல்லாம் என்னை எதிர்பட்டவர்களிடம் ஒரு புன்னகை மட்டுமே சிந்தி இருக்கிறேன். இன்னும் சொல்வதென்றால், நான் கூர்க் மலை பகுதி சென்றிருந்தபோது, நாங்கள் ஒரு எஸ்டேட்டில் தங்கி இருந்தோம். நான் அங்கு எங்களுக்கு புன்னகையுடன் பணிவிடை செய்த அந்த வயதான மூதாட்டிக்கு தினமும் ஒரு சிரிப்பை செலவு செய்தேனே அன்றி, வார்த்தைகளை அல்ல. இன்று நினைத்து பார்த்தால், அட ஒரு சில வார்த்தைகளை பேசி இருக்கலாமோ என்று தோன்றுகிறது. இது போன்ற நிமிடங்களில்தான் எனக்கு தோன்றும்...... சில நேரம் தனிமையை, அமைதியை கொல்வது என்பது பாவமில்லை என்று !?


Labels : Ennangal, Suresh, Kadalpayanangal, Lonely, being alone, peace

Friday, January 25, 2013

நான் ரசித்த குறும்படம் - அ

வெகு நாட்களுக்கு பிறகு எனக்கு இந்த குறும்படம் பார்க்கும் கிடைத்தது. பொதுவாக குறும்படங்களை பார்க்கும்போது சில நேரங்களில் உங்களை அந்த படங்களின் தலைப்புக்கள் வசீகரிக்கும், சில நேரங்களில் காட்சிகள். ஒரு குறும்படம் இங்கு பரிந்துரைப்பதற்கு சில நேரங்களில் பல மொக்கை படங்களை பார்க்க வேண்டி இருக்கிறது !

நீங்கள் பார்க்க போகும் இந்த குறும்படத்தில், ஒரு கிராமத்து சவர தொழிலாளியின் ஆங்கில மோகமும், அவனது மகனை ஒரு ஆங்கிலம் கற்று கொடுக்கும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற ஆசையும் அழகாக வெளிப்பட்டுள்ளது. மொத்தம் மூன்றே மூன்று ஆட்களை கொண்டு சுழலும் கதை இது..... முடிவில் நெஞ்சை தொடும் !

Thursday, January 24, 2013

காணவில்லை : மின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் !

வீட்டில் எனது மகனுடன் டிவி பார்த்து கொண்டிருந்தேன், அப்போது அவன் பட்டாம்பூச்சி என்று கத்தினான். நானும் அவனை ஆமோதித்தேன், அதை அவன் யாபகம் வைத்து கொண்டு சென்ற வார சனிக்கிழமை அன்று ஒரு பட்டாம்பூச்சி ஒன்று காண்பித்தால்தான் ஆயிற்று என்று அடம் பிடிக்க ஆரம்பித்தான். அட இது என்ன பெரிய விஷயமா என்று தேட ஆரம்பித்த போதுதான் சில நிஜங்கள் முகத்தில் அறைந்தன. அப்போதெல்லாம் வீடு என்று இருந்தால் அங்கு சில செடிகள் இருக்கும், அதை நாடி பூச்சிகள் வரும், அதனிடம் கடி வாங்கி, உடம்புக்கு வந்து இந்த வாழ்க்கை முறையை கற்றுகொண்டோம். இன்று பூச்சிகள் என்றாலே மருந்து அடித்து கொல்ல  வேண்டும் என்ற நமது வாழ்க்கை முறையில், ஒரு சக மனிதனிடம் அன்பை எதிர்பார்ப்பது என்பது கடினம்தானே. ஒரு பட்டாம்பூச்சி இல்லா வாழ்க்கை என்பது குறை ஒன்றும் இல்லை...... ஆனால் ஒரு இனம் சிறுக சிறுக அழிகிறதே என்ற கவலை இல்லாமல் இல்லை என்பது மட்டும் உண்மைதானே.யோசித்து பாருங்கள்.... கடைசியாக நீங்கள் எப்போது மின்மினி பூச்சியை பார்த்தீர்கள் ? நாம் சிறு வயதில் பார்த்த கட்டெறும்பு, பிள்ளையார் எறும்பு, வெட்டுக்கிளி, குச்சி பூச்சி, தட்டான், பொன்வண்டு, அணில், சிட்டு குருவி, கரையான், கம்பளி பூச்சி, மண்புழு, நத்தை, தவளை, தண்ணி பாம்பு போன்ற நாம் தொட்டு உணர்ந்த அந்த உயிரினங்கள் எல்லாம் இப்போது எங்கே ? ஒரு பட்டாம்பூச்சியின் இறகில் இருக்கும் அந்த ஓவியத்தை வரைந்தது யார் என்று அதிசயித்த அந்த தருணங்கள் எல்லாம் இப்போது எங்கே ?


அன்று வீடுகளில் பறவை கூடு கட்டுவதும், அணில் சமையலறை வந்து அரிசி பொறுக்குவதும், அம்மா போட்ட கோலத்தை திங்க பிள்ளையார் எறும்பு வருவதும், மழை பெய்தால் தவளை கத்துவதும், அம்மா வீட்டின் முன் வைத்த பூச்செடியில் இருக்கும் தேனை சுவைக்க வரும் பட்டாம்பூச்சியும், முருங்கை மரத்தில் ஊரும் கம்பளிபூச்சியும், செடி வைக்க குழி தோண்டும்போது தோன்றும் மண்புழுவும், மழை பெய்து ஊரும் சாலை ஓரங்களில் தெரியும் நத்தைகளும், காலி பிளாட்களில்  ஓடி ஓடி பிடித்த தட்டான் பூச்சி, ஊருக்கு வெளியே இருக்கும் கரையான் புற்று என்று இயற்கையோடு சேர்த்திருந்தது அந்த கால வாழ்க்கை.ஆனால் இன்று மாடுகள் என்பது பால் கொடுப்பது, கரப்பான் பூச்சிகள் என்றால் அருவருக்கதக்கது, கொசு என்றால் பட்டென்று அடித்து கொல்லு, பூச்சிகளில் எந்த வகை இருந்தாலும் காலி பண்ணு, தவளை என்பது ஒரு அசிங்கமான அமேசான் காட்டு விஷ பிராணி, பட்டாம்பூச்சி என்றால் துரத்து, கோழி என்றாலே தின்பதற்கு, ஆடு என்றாலே அது தோல் அறுத்து தொங்க விடப்பட்டிருக்கும், எறும்பு என்றால் கடிக்கும் என்று மிருகங்களிடம் நாம் இரக்கம் இல்லாமல் அல்லவா நடந்து கொள்கிறோம். இன்று மிருங்கங்கள் என்றாலே ஜூ சென்றுதான் காட்ட வேண்டி இருக்கிறது, எந்த மிருகத்தையும் அது கொடியது என்று சொல்லி தள்ளி வைத்துதானே பார்க்கிறோம். கம்பிகளின் பின் இருப்பதால் பாதுகாப்பு மிருகத்துக்கா இல்லை நமக்கா என்பதே புரியாத வாழ்க்கைதான் நமது குழந்தைகள் வாழ்வது !!


இன்று வீடு என்பது நகரத்தில் இருக்கும் பலருக்கு பிளாட் என்று ஆகிவிட்டது. இந்த வீட்டுக்குள் என்ன செடி வளர்க்க முடியும் ? நாகரிகம் என்ற பெயரில் நாம் அடைந்ததை விட இழந்ததே மேல் என்று இன்று புரிகிறது. எனது மகன் இன்று மிருகங்களை நேசிப்பது எல்லாம் டிவியில் எனும்போது மனதில் வருத்தம்தான் வருகிறது. பாட்டி வடை சுட்டதும், மரத்தின் மீது இருந்த காக்கா வடை தூக்கி சென்றதும் இன்று வெறும் கதைகள்தான்...... ஒரு நாள் அவன் ஒரு காக்காவை நேரில் பார்க்கும்போது வியப்புடன் பார்ப்பான், அந்த வியப்பு நாம் குழந்தைகளுக்கு இயற்கையை கற்று கொடுக்க மறந்ததற்கு கிடைக்கும் சவுக்கடி இல்லாமல் வேறண்ண ??!!
Labels : Suresh, Kadalpayanangal, Thoughts, ennangal, lost nature

Wednesday, January 23, 2013

சோலை டாக்கீஸ் - ஹரிப்ரசாத் சௌரசியா

புல்லாங்குழல் இசை, இன்று பல பேருக்கு இதை பற்றி தெரியுமா என்று எனக்கு சந்தேகம் உண்டு. இதை நாம் தனியாக கேட்கும்போது நமது மனது உள்ளே ஒரு அமைதி உண்டாவது தெரியும், அப்படிப்பட்ட புல்லாங்குழல் இசை உலகின் மன்னன் "ஹரிப்ரசாத் சௌரசியா" (Hariprasad Chaurasia) அவர்களின் இசையை நீங்கள் கேட்டு இருக்கிறீர்களா ? அதுவும் ஒரு
ஆற்றின் முன்னே தனியாக உட்கார்ந்து கொண்டு இந்த இசையை கேட்டால்
அதை விட  சொர்க்கம் வேறு இல்லை இந்த உலகில். காலத்தை கடந்தது இவரின் இசை, பல சமயங்களில் இவரது இசை தியானத்திற்கு பயன்படும். ஒரு மூங்கில் குச்சியில் இருக்கும் துளையினை கொண்டு ஒரு அற்புதமான இசையை தரும் இவரை அறிந்திராமல் இருந்தால் இன்றே இந்த இசையை கேளுங்கள், நீங்கள் சில பல வருடங்களை வீணாக்கி விட்டோமோ என்று வருத்தபடுவீர்கள்.Tuesday, January 22, 2013

ஊர் ஸ்பெஷல் - மதுரை மல்லிகை

நம்ம ஊரில் மல்லிகை பூவும், அல்வாவும் ரொம்பவே பேமஸ், அதுவும் மல்லிகைபூவில் இந்த மதுரை இன்னமும் பேமஸ் !! அழகா, உருண்டையா, வெள்ளையா....மனைவி சொக்கி போறாங்களோ இல்லையோ, நீங்க முதலில் சொக்குவீங்க. அது மட்டும் இல்லை, இந்த மல்லிகை பூவின் வாசம் ஆளையே தூக்கும் !! அப்படிப்பட்ட மதுரை மல்லிகையை தேடி ஒரு பயணம் இன்னமும் ஆளை தூக்கணுமா இல்லையா !
ஒரு மல்லிகை பூ கடைகாரரிடம் நாங்கள் பேச்சு கொடுத்துக்கொண்டே அது உருவாகும் இடம் தெரிந்து கொண்டோம். அது மதுரை சுற்றி இருக்கும் பகுதிகளில் விளைகிறது, அதை கொள்முதல் செய்து வரும் இடைதரகரிடம் இருந்து கிலோ கணக்குகளில் இவர்கள் வாங்கி தொடுத்து விற்கிறார்கள் ! இந்த மதுரை மல்லிகைக்கு வெளிநாடுகளிலும் மிகவும் கிராக்கி என்பதால் விசேஷ சமயங்களில் மிகவும் தட்டுபாடு ஏற்படுகிறது என்றார். முடிவில் எங்களுக்கு கிடைத்தது அந்த மல்லிகை தோட்டத்தின் முகவரி !தமிழில் "மல்லி" என்பதன் பொருள் பருத்தது, உருண்டது மற்றும் தடித்தது. இதன் காரணமாக, இம்மலர் "மல்லிகை" எனப் பெயர் பெற்றிருக்கலாம். மதுரை மல்லிகை மிகவும் புகழ் பெற்றது. தமிழ் இலக்கியத்தில் முல்லை எனச் சுட்டப்படும் இது ஒரு வகை வன மல்லிகை. தற்போது குண்டு மல்லி, அடுக்குமல்லி மற்றும் இருவாச்சி எனப் பல வகை மல்லிகைப் பூக்களைக் காணலாம். தமிழ்நாட்டில் மல்லிகை பெரும்பாலும் மதுரை மாவட்டத்தில் பயிராகிறது. உள்ளூர்த் தேவைகளுக்காகவும் அங்கிருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்காகவும் இது மும்பை/பாம்பே வரை கொண்டு செல்லப்படுகிறது. மதுரை நகரம் "மல்லிகை மாநகரம்" என்றே அழைக்கப்படுகிறது.


 
பொதுவாக இந்த மல்லிகை செடியை தமிழ்நாடு வன அலுவலகத்தில் இருந்தோ அல்லது சுயமாகவோ இவர்கள் பதியனிடுகிறார்கள். மூன்று மாதங்களில் பதியனிடபடும் இந்த மல்லிகை செடிகளை, வேறு இடங்களுக்கு மாற்றுகின்றனர். இது மூன்று அடி உயரம் வரை வளரும், இதற்க்கு ஒரு வருடம் முதல் ஒன்றரை வருடம் வரை ஆகிறது. அதுவரை நமக்கு பொறுமை மிகவும் தேவை என்கிறார்கள். பூ வர ஆரம்பித்தவுடன் இதை பூச்சிகள் அரிக்காமல் பாதுகாக்க வேண்டும், பின்னர் அது நன்கு செழித்து வளர்ந்தவுடன் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அதை பறித்து கிலோ கணக்கில் அன்றைய விலைக்கு விற்கிறார்கள். மல்லிகை தோட்டத்தில் அதிகாலையில் பூ பறிக்கும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமாம், இந்த செடி அடர்த்தியானது என்பதால் பாம்புகள் நிறைய வரும் என்கிறார். ஒரு செடி பத்து வருடம் வரை பலன் தரும் என்றார் அந்த தோட்டக்காரர், ஆனால் சிலர் ஐந்து வருடம்தான் என்கின்றனர். ஒரு 2400 சதுர அடியில் நீங்கள் மல்லிகை தோட்டம் அமைத்தால், தினமும் மண் வளத்தை பொறுத்து இரண்டில் இருந்து ஐந்து கிலோ வரை பூக்கள் கிடைக்கும். சந்தை விலையை பொறுத்து லாபம் வரும் என்கிறார்கள்.


இப்படி பயிர் செய்யப்படும் இந்த மல்லிகை மதுரைக்கு வந்து இடைத்தரகர்கள் மூலம் சில்லறை வியாரிகளுக்கு விற்பனை செய்யபடுகிறது. அவர்கள் இதை சரம் சரமாக தொடுத்து அன்றைய சங்கத்தின் விதிமுறைகளின்படி விலை வைத்து விற்பனை செய்கின்றனர். இன்று மதுரை பகுதிகளில் இருக்கும் பல ஏழைகளுக்கு வருமானம் என்பது இதுதான் என்பது கண்கூடு. கிழே  நீங்கள் பார்க்க போகும் வீடியோ இந்த மதுரை மல்லி பற்றிய முழு செய்தியையும் உங்களுக்கு கொடுக்கும்.


 
Labels : Madurai jasmine, malligai, malli, suresh, kadalpayanangal, special

Monday, January 21, 2013

அறுசுவை - பெங்களுரு ஸ்ரீராஜ் லஸ்ஸி பார்

எதையுமே எதிர்பார்க்காமல், எந்த பிளானும் செய்யாமல் சட்டென்று பெயர் மட்டும் உங்களை திரும்பி பார்க்க வைத்து, அங்கே சென்றவுடன் ஆகா இவ்வளவு நாள் இதை மிஸ் செய்து விட்டோமே என்று வருந்தி இருக்கிறீர்களா..... நான் இந்த ஸ்ரீராஜ் லஸ்ஸி பார் சென்று இருந்தபோது வருந்தினேன் ! நாம் கார சாரமாக வெளியில் சாப்பிட்டால், அதற்க்கு தக்கவாறு ஒரு ஸ்வீட் அல்லது ஐஸ் கிரீம் வேண்டும் என்று நினைப்போம். அப்படியான ஒரு அருமையான ஐஸ் கிரீம், ஸ்வீட் ஷாப் இது எனலாம் !


1973ம் ஆண்டு திரு.அப்து ரகுமான் என்பவரால், குல்பி ஐஸ் பெட்டியை 
தலையில் சுமந்து வீதி வீதியாக விற்று இன்று பெங்களுருவிலும், துபாயிலும் தனது கிளையை பரப்பி இருக்கிறார். அந்த கதையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.... ஸ்ரீராஜ் லஸ்ஸி கடை வளர்ந்த விதம்.  இன்று இவர்கள் கொடுக்கும் ஐஸ் கிரீம் மற்றும் குல்பி சுவை, அவர்களின் கடின உழைப்பை பறை சாற்றுகிறது.
நான் அவர்களது ஸ்பெஷல் என்று சொல்லப்பட்ட ஹாட் சாக்கோ பட்ஜ் மற்றும் கேசரி குல்பி ஆர்டர் செய்தேன். இதுவரை நான் பல இடங்களில், அதாவது Baskins & Robbins, corner house என்று இன்னும் பல பல இடங்களில் ஐஸ் கிரீம் சாப்பிட்டு இருந்தாலும் இவர்களின் ஐஸ் கிரீம் சுவை மிகவும் அருமை என்றே சொல்வேன். அதுவும் அவர்கள் கொடுத்த ஹாட் சாக்கோ பட்ஜ் என்பதில் வெண்ணிலா ஐஸ் கிரீம் மீது சூடான சாக்லேட் சாஸ் ஊற்றி கொடுத்தபோது, ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் வைக்கும்போது சூடும் - சில்லும் கிடைக்கும் அந்த அனுபவம்...... சொன்னால் புரியாது போங்கள் ! இனிமேல் ஐஸ் கிரீம் சாப்பிட வேண்டும் என்றால் இங்கேதான் என்று மனதளவில் முடிவு செய்துவிட்டேன் !!

பஞ்ச் லைன் :
சுவை               -      நம்புங்கள்..... இப்படிப்பட்ட சுவையான குல்பி மற்றும் ஐஸ் கிரீம் இதுவரை நான் சாப்பிட்டதில்லை.
 
அமைப்பு         -       சிறிய இடம், ஆனால் நிறுத்தி நிதானித்து, அனுபவித்து சாப்பிடலாம்.

பணம்              -      சரியான விலை !! மெனு கார்டு கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள்.
 
சர்வீஸ்           -       சூப்பர் சர்வீஸ் !

அட்ரஸ் :
அவர்களது கிளைகள் பார்க்க இங்கே சொடுக்கவும்.

மெனு கார்டு :
இங்கே சொடுக்கி அவர்களது மெனு கார்டு பார்க்கவும்.... ஸ்ரீராஜ் லஸ்ஸி பார் மெனு.

Labels : Arusuvai, kadalpayanangal, suresh, sreeraj, lassi, bangalore, sweet, ice cream

Friday, January 18, 2013

உலக திருவிழா - ஜெய்பூர் பட்டம் விழா

 பட்டம் விடுவது என்பது நம் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று, அதுவும் நீங்கள் இந்த வயதில் உங்கள் ஊரில் பட்டம் விட்டால் உங்களை மேலும் கீழும் பார்பார்கள். அப்படி நீங்கள் பட்டம் விட ஆசைபட்டால் நீங்கள் போக வேண்டியது "ஜெய்பூர் பட்டம் விடும் திருவிழா". ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14 அன்று ராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்ப்பூரில் நடக்கும் இந்த விழாவிற்கு உலக மக்கள் அனைவரும் இங்கு வருவார்கள்.உள்ளூர் மட்டும் இல்லாமல் வெளி நாடுகளில் இருந்தும் பட்டம் விடுவதற்கு (??!) வருவார்கள். தங்கள் திறமைகளை, வித விதமான பட்டம் செய்வதில் காண்பிப்பார்கள். வானமெங்கும் வண்ண மயமாக இருக்கும் அந்த நாள். இது என்று தொடங்கப்பட்டது என்று தெரியவில்லை, ஆனால் அன்று மகர சங்கராந்தி.... அன்று சூரியன் வடக்கு நோக்கி நகர்வதாகவும், அதனால் பனி விலகி மக்கள் மகிழ்ச்சி அடைவதால் அதற்க்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இந்த பட்டம் விடும் திருவிழா நடப்பதாக தெரிவிக்கிறார்கள்.

வாருங்களேன்.... நாமும் ஒரு முறை சென்று பட்டம் விடுவோம் !

Thursday, January 17, 2013

சோலை டாக்கீஸ் - பியூஷன் மியூசிக்

 பழமையும், புதுமையும் எளிதில் ஒத்து போவதில்லை..... ஆனால் அது ஒரு இடத்தில் ஒத்து போகும்போது எவ்வளவு அருமையாக இருக்கும் என்பதற்கு இந்த பாடல் ஒரு உதாரணம். நான் காலேஜ் படிக்கும் சமயத்தில் இந்த பியுஷன் மியூசிக் என்பது ஒரு மிக பெரிய எழுச்சியாக இருந்தது. பழைய பாடல்களை, புதிய மேற்கிந்திய இசையில் பாடுவது என்பது அவ்வளவு எளிதல்ல, அதை பெரும்பாலும் மக்கள் கொலை செய்வார்கள். இதில் ஒரு அருமையான பாடல்தான் இது..... 2004இல் மார்னிங் ராகா என்ற படத்தில் வரும் இந்த பாடல் ஷப்னா அஸ்மி நடிப்பில், மணிஷர்மா இசையில் அபாரமான பாடல்கள் அமைந்தது.இந்த பாடலை முதலில் இருந்து கேட்கும்போது, அட கர்நாடக சங்கீதம்
என்று சலிப்பு மனதில் வருவதும், அதுவே ஒரு வெஸ்டேர்ன் மியூசிக்
சேரும்போது அட, என்று எழுந்து உட்காரும்படியாக  இருக்கும். நன்கு ரசிக்கும்படியாக உள்ள பாடல் இது, கேட்டு மகிழுங்கள் !


Labels : Best song, amazing song, morning raga, solai talkies, kadalpayanangal, fusion music, carnatic

Wednesday, January 16, 2013

சாகச பயணம் - புல்லெட் ரயில், ஜப்பான்

ஜப்பான் என்றாலே நமக்கு எல்லாம் நினைவுக்கு வருவது இந்த புல்லெட் ரயில் இல்லையா ? நாம் எல்லாம் ட்ரைன் என்று சொல்லி வாயை பிளந்து பார்த்து கொண்டிருக்கும்போது, மின்னல் நொடிகளில் உங்களை கடக்கும் இந்த அதிசயத்தை கண்டால் வாயை எவ்வளவு தூரம் திறப்போம் என்று தெரியவில்லை !! ஜப்பானில் இதற்க்கு ஷின்கான்ஷேன் என்று பெயர். டோக்கியோவில் இருந்து பல ஊர்களுக்கு செல்லும் இந்த  புல்லெட் ரயில் என்பது வெளியிலிருந்து பார்த்தாலே ஒரு அதிசயம் என்றால், உள்ளே நீங்கள் உட்கார்ந்து பயணம் செய்தால் எப்படி இருக்கும்...... அந்த அனுபவம் தான் இந்த பதிவு !

1964இல் ஆரம்பிக்கப்பட்ட (அப்ப எல்லாம் நான் பொறக்கவே இல்லை, இன்று என் மகன் பிறந்தும் இந்த புல்லெட் ட்ரைன் இன்னும் இந்தியா வரவில்லை !! ) இந்த புல்லெட் ரயில், இன்று 2837 கிலோமீட்டர் நீண்ட பயணம் உடையதாய் இருக்கிறது. சுமார் 240 - 300 கிலோமீட்டர் வரை ஒரு மணிக்கு பயணிக்கும் திறன் கொண்ட இந்த ரயில், ஆண்டுக்கு சுமார் 15 கோடி பயணிகளுக்கு இந்த சேவையை வழங்குகிறது. இந்த ரயில் திட்டத்தை துவக்கியவர்கள் என்று ஹிடெஒ ஷிமா மற்றும் ஷிஞ்சி ஷோகோ ஆகியோரை குறிப்பிடுகின்றனர்.

அந்த ரயிலை பார்க்கும்போதே உங்களுக்கு உற்சாகம் தொற்றி கொள்ளும் என்பது நிச்சயம். நான் டோக்கியோவில் இருந்து செண்டாய் சென்று வந்த அந்த பயணம், ஒரு அற்புத அனுபவம் என்றால் அது மிகையில்லை. டிக்கெட் விலை சுமார் 11000 யென் (சுமார் ஏழாயிரம் ரூபாய் ஒரு ஆளுக்கு) ஆனது. அந்த டிக்கெட் வாங்கும்போதே வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது. ஸ்டேஷன் சென்று அந்த ரயிலை பார்த்தவுடன், இதில் நாம் பயணம் செல்ல போகிறோம் என்பதே ஒரு கனவா என்று தோன்றியது. உள்ளே சென்று எனது சீட்டில் உட்கார்ந்தவுடன் சிறிது நேரத்தில் ரயில் நகர ஆரம்பித்தது, அப்போதிலிருந்து எனக்கு முன் தெரியும் தகவல் தெரிவிக்கும் சாதனத்தில் ஒளிரும் எழுத்துக்களையே பார்த்து கொண்டிருந்தேன் !! அதில் இந்த ரயில் செல்லும் வேகம் தெரியும், அது சிறிது சிறிதாக ஏறும்போது எனக்கு இங்கே டென்ஷன் ஏறியது !! முடிவாக அது 300 கிலோமீட்டர் வேகம் தொட்டபோது வெளியில் பார்த்தால் எல்லாம் வெகு வேகமாக பின்னோக்கி ஓடியது கண்டு ஒரு ஆனந்தம். உள்ளே சிறிது அதிர்வுடன் மட்டும் அது அந்த வேகம் செல்லும்போது, அது ஒரு அதிசயம் என்றே உங்களுக்கு தோன்றும்.


ஜப்பானில் நீங்கள் எதை பார்க்க மறந்தாலும் இந்த புல்லெட் ட்ரைன் மட்டும் பார்க்க மறவாதீர்கள். அதில் பயணம் செய்தால் இன்னும் சந்தோசம்தான் !!

Labels : Japan, kadalpayangal, Shinkansen, bullet train, 300 km/hour, tokyo, saagasa payanam

Tuesday, January 15, 2013

வாழ்த்து அட்டை வந்திருக்கு !

புது வருடம் பிறந்தபோது நன்கு எனக்கு தெரிந்த குத்தாட்டம் எல்லாம் போட்டுவிட்டு படுக்கைக்கு போகும்போது மணி இரண்டு. காலையில் நேரம் கழித்தும் தூங்கி கொண்டிருந்த போது, எனது அலைபேசி அடித்தது " மச்சான்.....ஹாப்பி நியூ இயர்'டா, இந்த வருஷமாவது பல்லை விளக்கு." என்று காலையிலேயே மொக்கை போட..... கண்ணை கசக்கி எழுந்து பார்த்தபோது எனது அலைபேசியில் இருபத்தி ஐந்துக்கும் மேலான புது வருட வாழ்த்து குறள்கள் (இரண்டு வரி வாழ்த்துக்கள் என்பதால் குறள்கள் !!). ஒவ்வொன்றிலும் அதே வார்த்தைகள் !! குளித்து முடித்து வீட்டின் போஸ்ட் பாக்ஸ்ஸில் பார்வை பட, அப்போது கண்ணில் பட்டது ஒரு கவர். எனது நண்பனின் மகன் ஒரு காகிதத்தில் வரைந்து அனுப்பிய "புது வருட வாழ்த்துக்கள் அங்கிள்" என்று........ மனதில் சந்தோசம் பூத்தது. நினைத்து பார்த்தேன், ஒவ்வொரு வருட பண்டிகையின் போதும் முன்பு எங்கள் வீட்டுக்கு வரும் இது போன்ற வாழ்த்து அட்டைகள். ஒவ்வொன்றிலும் மனதுக்கு பிடித்தவாறு டிசைன் செய்து, தப்பு தப்பாய் கவிதை எழுதி வரும் ஒவ்வொன்றும் ஒரு பூங்கொத்து இல்லையா ? இன்று அந்த வாழ்த்து அட்டைகள் எல்லாம் இரண்டு வரி SMS ஆக சுருங்கி விட்டது, இல்லையென்றால் போன் செய்து வாழ்த்து தெரிவிப்பது என்றாகி விட்ட இந்த வாழ்கையில்..... நிஜமாகவே அதை நீங்கள் பெறும்போது மனதில் ஒரு பூ பூக்கிறதா ? வாழ்த்து அட்டை பெறுவதும், அனுப்புவதுமான அந்த சந்தோசம் நாம் இன்று மிஸ் செய்கிறோமா ??
பண்டிகை நெருங்கி விட்டால் எல்லா கடைகளிலும் இந்த வாழ்த்து அட்டைகள் தொங்கும். அதுவரை அந்த கடையை நாம் கவனிக்க மறந்திருந்தாலும், அன்று வண்ணமயமாக தோன்றும். தீபாவளி என்றால்
வாழ்த்து அட்டைகளில் வெடியும், பொங்கல் என்றால் அந்த அட்டைகளில்
பொங்கல் பானையும், புது வருடம் என்றால் அந்த வருடத்தின் நம்பரும்  இருக்க வேண்டும் என்பது எழுதபடாத விதி !! சில நண்பர்கள் நடிகர், நடிகைகளின் படங்களுடன் இருக்கும் அட்டைகளை தேர்ந்தெடுப்பார்கள், அது போல் நமது வீட்டிற்க்கு வந்தால் என்னமோ அந்த நடிகரே வீட்டிற்க்கு வந்து வாழ்த்துவதை போல தோன்றும். ஒவ்வொரு வாழ்த்து அட்டைகள் எடுக்கும்போதும் அதன் விலை அறிய கடைகாரரிடம் கேட்கும்போதும், அதை சொல்லும்போது அட இவர் எப்படி இத்தனை அட்டைகளின் விலைகளையும் யாபகம் வைத்து இருக்கிறார் என்று தோன்றும். எனது சிறு வயது நண்பன் ஒரு முறை டிஸ்கோ சாந்தி கவர்ச்சியுடன் எனக்கு புது வருட வாழ்த்து சொல்லும் அட்டை அனுப்பியவுடன் எனது வீட்டில் முதலில் அவனது நட்பை துண்டிக்க சொன்னதும், ரகசியமாக அவனிடம் சென்று அந்த அட்டை எங்கு கிடைக்கிறது என்று கேட்டதை இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.வாழ்த்து அட்டை டிசைன் பார்த்து பார்த்து வாங்குவது ஒரு கலை என்றால், அதன் உள்ளே என்ன எழுதுவது என்று மண்டை காய யோசிப்பது இன்னொரு கலை. கலர் கலராய் பென்சில்களும், ஸ்கெட்ச் பேனாக்களும் முன்னே கிடக்க, ஐன்ஸ்டீன் போல யோசிப்பதும், அடித்து அடித்து எழுதுவதும் என்று வீட்டில் ஒரு போரே நடக்கும் அந்த நாட்கள் எவ்வளவு இனிமையானவை !! அதுவும் இந்த வாழ்த்து அட்டைகளில் நமக்கு புரியாமல் இருக்கும் கவிதைகள் தான் முதன் முதலில் என்னையும் கவிதை எழுத தூண்டியது என்பேன். வாழ்த்து அட்டைகளில் சில சமயம் ஒரு கடிதம் எழுதுவதும், படம் வரைவதும் என்று நமது கற்பனைகளை தூண்டி விட்டது ஏராளம். முடிவில் ஒரு மாடு வண்டி இழுப்பது போன்று கஷ்டப்பட்டு வரைந்து நண்பனுக்கு அனுப்பி அவனிடம் அடுத்த நாள் பார்க்கும்போது அதை பற்றி ஏதும் சொல்வானோ என்று எண்ணி திரிந்த காலங்கள் ஒரு வரம்  இல்லையா? ஒரு முறை நான் பொங்கலுக்கு என் மாமாவிற்கு கஷ்டப்பட்டு ஒரு மாடு வரைந்து அனுப்பினதும், அதை அவர் வீட்டுக்கு வந்தபோது அந்த பூனை எதுக்கு வரைஞ்ச என்று கேட்டபோது வந்த கோவம் இருக்கிறதே......


வாங்குவதும், அதன் உள்ளே எழுதுவதோ இல்லை வரைவதோ கூட சில நேரம் சுலபமாகிவிடும், ஆனால் அதை கவர் உள்ளே போட்டு போஸ்ட் செய்யும் வரை செய்யும் கூத்து இருக்கிறதே..... அப்பப்பா ! அப்போதெல்லாம் இரண்டு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி அனுப்ப வேண்டும், வாழ்த்து அட்டை அனுப்பியதோ பக்கத்துக்கு வீட்டிற்க்கு, ஆனால் அதில் புதுமை செய்கிறேன் என்று ஐந்து பைசா, பத்து பைசா ஸ்டாம்ப் வாங்கி அதை அள்ளி தெளித்தது போல அங்கங்கே ஒட்டி அனுப்பினேன், அதை கொடுத்த போஸ்ட்மேன் இதை அனுப்பினவன் என் கையில் கிடைக்கட்டும் என்று மிரட்டி சென்றதாக அதை வாங்கியவர்கள் சொன்னபோது சில பல நாட்கள் அவர் கண்ணில் படுவதையே தவிர்த்தேன் எனலாம். சில நேரங்களில் அட்ரஸ் எழுதும்போது குறுக்கெழுத்து போட்டி, விடுகதை எல்லாம் எழுதி அனுப்பியதுண்டு...... அதை சரியாக கண்டுபிடித்து சேர்த்த அந்த மகானுபாவன் போஸ்ட் மேனுக்கு புண்ணியம் உண்டாகட்டும் !! சில நேரங்களில் துபாய் குறுக்கு சந்து, அபு தாபி பஸ் ஸ்டான்ட் அருகில் என்றெல்லாம் எழுதியதுண்டு ! :-)இன்று எல்லா பண்டிகைக்கும் எனது அலைபேசிதான் இந்த வாழ்த்து அட்டைகளை கொண்டு சேர்க்கிறது, கொண்டும் வருகிறது. சில நேரங்களில் ஒரே வாழ்த்துக்களை பத்து பேருக்கு அனுப்பி வைக்கிறோம், அதில் பாசமான தாத்தாவிற்கு, பிரியமான தோழனுக்கு, அன்புள்ள அம்மாவிற்கு என்றெல்லாம் இல்லாமல், இன்று "ஹாய் !!" என்று மட்டும் சொல்லி அனுப்புகிறோம். ஒரு வாழ்த்து அட்டை செய்வதற்கு ஒரு ஓவியன், உள்ளே எழுத்துக்களுக்கு கவிஞன், அந்த அட்டை ப்ரூப் செய்தவர், அந்த அட்டையை செய்தவர், அச்சடித்தவர், பண்டில் கட்டியவர், சுமந்து வந்த வண்டிக்காரர், விற்பவர், வாங்குபவர், அட்ரஸ் எழுதுவதற்கு பேனா கொடுத்தவர், ஸ்டாம்ப் விற்றவர், போஸ்ட் மேன் என்று பலரது கைகளும் இருந்தன..... அந்த வாழ்த்து அட்டைகளை அவர்கள் சுமந்தபோது அவர்களது வாழ்த்தும் இருந்தது....... இன்று ??? நான் எனது அலைபேசியில் தட்டச்சு செய்கிறேன், அதை ஒரு
மரம் போல நிற்கும் மொபைல் டவர் கொண்டு செல்கிறது, அதை இன்னொரு
டவர் எனது நண்பனுக்கு சேர்பிக்கிறது, நானும் எனது நண்பனும் மட்டுமே
இதில் வாழ்த்துக்களை பரிமாறி கொள்கிறோம் !!
இன்று எனக்கு குற்ற உணர்வுடன் தோன்றுவது என்பது எனது [பெற்றோருக்கு இது போல வாழ்த்து அட்டைகளை அனுப்பியதில்லை. நீங்கள் உங்களது பெற்றோர்களுக்கு அனுப்பி இருக்கிறீர்களா என்ன ? வாழ்த்து அட்டை என்பது நமது அன்பை, நாம் வைத்திருக்கும் பிரியத்தை வெளிபடுத்துவது என்றால்.... நான் இன்று வரை அதை எனது பெற்றோருக்கு செய்யவில்லை. இன்று உங்கள் வீட்டில் பரணில் சென்று தேடி பாருங்கள், சில நேரங்களில் உங்களின் பிரியமானவர்கள் அனுப்பிய வாழ்த்து அட்டைகள் இன்றும் செல்லரிக்காமல் இருக்க கூடும், அதில் அவர்களின் நேசம் இன்றும் தெரியும் ! ஒரு வாழ்த்து அட்டை உங்களை மட்டும் உயிர்பிக்கவில்லை, அது பல கைகள் மாறி வந்தபோது அனைவரும் அதனால் வாழ்ந்திருந்தார்கள், இன்று அதே மக்கள் கூலி தொழிலாளி ஆகி விட்டனரோ என்னவோ !!