Tuesday, January 15, 2013

வாழ்த்து அட்டை வந்திருக்கு !

புது வருடம் பிறந்தபோது நன்கு எனக்கு தெரிந்த குத்தாட்டம் எல்லாம் போட்டுவிட்டு படுக்கைக்கு போகும்போது மணி இரண்டு. காலையில் நேரம் கழித்தும் தூங்கி கொண்டிருந்த போது, எனது அலைபேசி அடித்தது " மச்சான்.....ஹாப்பி நியூ இயர்'டா, இந்த வருஷமாவது பல்லை விளக்கு." என்று காலையிலேயே மொக்கை போட..... கண்ணை கசக்கி எழுந்து பார்த்தபோது எனது அலைபேசியில் இருபத்தி ஐந்துக்கும் மேலான புது வருட வாழ்த்து குறள்கள் (இரண்டு வரி வாழ்த்துக்கள் என்பதால் குறள்கள் !!). ஒவ்வொன்றிலும் அதே வார்த்தைகள் !! குளித்து முடித்து வீட்டின் போஸ்ட் பாக்ஸ்ஸில் பார்வை பட, அப்போது கண்ணில் பட்டது ஒரு கவர். எனது நண்பனின் மகன் ஒரு காகிதத்தில் வரைந்து அனுப்பிய "புது வருட வாழ்த்துக்கள் அங்கிள்" என்று........ மனதில் சந்தோசம் பூத்தது. நினைத்து பார்த்தேன், ஒவ்வொரு வருட பண்டிகையின் போதும் முன்பு எங்கள் வீட்டுக்கு வரும் இது போன்ற வாழ்த்து அட்டைகள். ஒவ்வொன்றிலும் மனதுக்கு பிடித்தவாறு டிசைன் செய்து, தப்பு தப்பாய் கவிதை எழுதி வரும் ஒவ்வொன்றும் ஒரு பூங்கொத்து இல்லையா ? இன்று அந்த வாழ்த்து அட்டைகள் எல்லாம் இரண்டு வரி SMS ஆக சுருங்கி விட்டது, இல்லையென்றால் போன் செய்து வாழ்த்து தெரிவிப்பது என்றாகி விட்ட இந்த வாழ்கையில்..... நிஜமாகவே அதை நீங்கள் பெறும்போது மனதில் ஒரு பூ பூக்கிறதா ? வாழ்த்து அட்டை பெறுவதும், அனுப்புவதுமான அந்த சந்தோசம் நாம் இன்று மிஸ் செய்கிறோமா ??




பண்டிகை நெருங்கி விட்டால் எல்லா கடைகளிலும் இந்த வாழ்த்து அட்டைகள் தொங்கும். அதுவரை அந்த கடையை நாம் கவனிக்க மறந்திருந்தாலும், அன்று வண்ணமயமாக தோன்றும். தீபாவளி என்றால்
வாழ்த்து அட்டைகளில் வெடியும், பொங்கல் என்றால் அந்த அட்டைகளில்
பொங்கல் பானையும், புது வருடம் என்றால் அந்த வருடத்தின் நம்பரும்  இருக்க வேண்டும் என்பது எழுதபடாத விதி !! சில நண்பர்கள் நடிகர், நடிகைகளின் படங்களுடன் இருக்கும் அட்டைகளை தேர்ந்தெடுப்பார்கள், அது போல் நமது வீட்டிற்க்கு வந்தால் என்னமோ அந்த நடிகரே வீட்டிற்க்கு வந்து வாழ்த்துவதை போல தோன்றும். ஒவ்வொரு வாழ்த்து அட்டைகள் எடுக்கும்போதும் அதன் விலை அறிய கடைகாரரிடம் கேட்கும்போதும், அதை சொல்லும்போது அட இவர் எப்படி இத்தனை அட்டைகளின் விலைகளையும் யாபகம் வைத்து இருக்கிறார் என்று தோன்றும். எனது சிறு வயது நண்பன் ஒரு முறை டிஸ்கோ சாந்தி கவர்ச்சியுடன் எனக்கு புது வருட வாழ்த்து சொல்லும் அட்டை அனுப்பியவுடன் எனது வீட்டில் முதலில் அவனது நட்பை துண்டிக்க சொன்னதும், ரகசியமாக அவனிடம் சென்று அந்த அட்டை எங்கு கிடைக்கிறது என்று கேட்டதை இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.



வாழ்த்து அட்டை டிசைன் பார்த்து பார்த்து வாங்குவது ஒரு கலை என்றால், அதன் உள்ளே என்ன எழுதுவது என்று மண்டை காய யோசிப்பது இன்னொரு கலை. கலர் கலராய் பென்சில்களும், ஸ்கெட்ச் பேனாக்களும் முன்னே கிடக்க, ஐன்ஸ்டீன் போல யோசிப்பதும், அடித்து அடித்து எழுதுவதும் என்று வீட்டில் ஒரு போரே நடக்கும் அந்த நாட்கள் எவ்வளவு இனிமையானவை !! அதுவும் இந்த வாழ்த்து அட்டைகளில் நமக்கு புரியாமல் இருக்கும் கவிதைகள் தான் முதன் முதலில் என்னையும் கவிதை எழுத தூண்டியது என்பேன். வாழ்த்து அட்டைகளில் சில சமயம் ஒரு கடிதம் எழுதுவதும், படம் வரைவதும் என்று நமது கற்பனைகளை தூண்டி விட்டது ஏராளம். முடிவில் ஒரு மாடு வண்டி இழுப்பது போன்று கஷ்டப்பட்டு வரைந்து நண்பனுக்கு அனுப்பி அவனிடம் அடுத்த நாள் பார்க்கும்போது அதை பற்றி ஏதும் சொல்வானோ என்று எண்ணி திரிந்த காலங்கள் ஒரு வரம்  இல்லையா? ஒரு முறை நான் பொங்கலுக்கு என் மாமாவிற்கு கஷ்டப்பட்டு ஒரு மாடு வரைந்து அனுப்பினதும், அதை அவர் வீட்டுக்கு வந்தபோது அந்த பூனை எதுக்கு வரைஞ்ச என்று கேட்டபோது வந்த கோவம் இருக்கிறதே......


வாங்குவதும், அதன் உள்ளே எழுதுவதோ இல்லை வரைவதோ கூட சில நேரம் சுலபமாகிவிடும், ஆனால் அதை கவர் உள்ளே போட்டு போஸ்ட் செய்யும் வரை செய்யும் கூத்து இருக்கிறதே..... அப்பப்பா ! அப்போதெல்லாம் இரண்டு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி அனுப்ப வேண்டும், வாழ்த்து அட்டை அனுப்பியதோ பக்கத்துக்கு வீட்டிற்க்கு, ஆனால் அதில் புதுமை செய்கிறேன் என்று ஐந்து பைசா, பத்து பைசா ஸ்டாம்ப் வாங்கி அதை அள்ளி தெளித்தது போல அங்கங்கே ஒட்டி அனுப்பினேன், அதை கொடுத்த போஸ்ட்மேன் இதை அனுப்பினவன் என் கையில் கிடைக்கட்டும் என்று மிரட்டி சென்றதாக அதை வாங்கியவர்கள் சொன்னபோது சில பல நாட்கள் அவர் கண்ணில் படுவதையே தவிர்த்தேன் எனலாம். சில நேரங்களில் அட்ரஸ் எழுதும்போது குறுக்கெழுத்து போட்டி, விடுகதை எல்லாம் எழுதி அனுப்பியதுண்டு...... அதை சரியாக கண்டுபிடித்து சேர்த்த அந்த மகானுபாவன் போஸ்ட் மேனுக்கு புண்ணியம் உண்டாகட்டும் !! சில நேரங்களில் துபாய் குறுக்கு சந்து, அபு தாபி பஸ் ஸ்டான்ட் அருகில் என்றெல்லாம் எழுதியதுண்டு ! :-)



இன்று எல்லா பண்டிகைக்கும் எனது அலைபேசிதான் இந்த வாழ்த்து அட்டைகளை கொண்டு சேர்க்கிறது, கொண்டும் வருகிறது. சில நேரங்களில் ஒரே வாழ்த்துக்களை பத்து பேருக்கு அனுப்பி வைக்கிறோம், அதில் பாசமான தாத்தாவிற்கு, பிரியமான தோழனுக்கு, அன்புள்ள அம்மாவிற்கு என்றெல்லாம் இல்லாமல், இன்று "ஹாய் !!" என்று மட்டும் சொல்லி அனுப்புகிறோம். ஒரு வாழ்த்து அட்டை செய்வதற்கு ஒரு ஓவியன், உள்ளே எழுத்துக்களுக்கு கவிஞன், அந்த அட்டை ப்ரூப் செய்தவர், அந்த அட்டையை செய்தவர், அச்சடித்தவர், பண்டில் கட்டியவர், சுமந்து வந்த வண்டிக்காரர், விற்பவர், வாங்குபவர், அட்ரஸ் எழுதுவதற்கு பேனா கொடுத்தவர், ஸ்டாம்ப் விற்றவர், போஸ்ட் மேன் என்று பலரது கைகளும் இருந்தன..... அந்த வாழ்த்து அட்டைகளை அவர்கள் சுமந்தபோது அவர்களது வாழ்த்தும் இருந்தது....... இன்று ??? நான் எனது அலைபேசியில் தட்டச்சு செய்கிறேன், அதை ஒரு
மரம் போல நிற்கும் மொபைல் டவர் கொண்டு செல்கிறது, அதை இன்னொரு
டவர் எனது நண்பனுக்கு சேர்பிக்கிறது, நானும் எனது நண்பனும் மட்டுமே
இதில் வாழ்த்துக்களை பரிமாறி கொள்கிறோம் !!




இன்று எனக்கு குற்ற உணர்வுடன் தோன்றுவது என்பது எனது [பெற்றோருக்கு இது போல வாழ்த்து அட்டைகளை அனுப்பியதில்லை. நீங்கள் உங்களது பெற்றோர்களுக்கு அனுப்பி இருக்கிறீர்களா என்ன ? வாழ்த்து அட்டை என்பது நமது அன்பை, நாம் வைத்திருக்கும் பிரியத்தை வெளிபடுத்துவது என்றால்.... நான் இன்று வரை அதை எனது பெற்றோருக்கு செய்யவில்லை. இன்று உங்கள் வீட்டில் பரணில் சென்று தேடி பாருங்கள், சில நேரங்களில் உங்களின் பிரியமானவர்கள் அனுப்பிய வாழ்த்து அட்டைகள் இன்றும் செல்லரிக்காமல் இருக்க கூடும், அதில் அவர்களின் நேசம் இன்றும் தெரியும் ! ஒரு வாழ்த்து அட்டை உங்களை மட்டும் உயிர்பிக்கவில்லை, அது பல கைகள் மாறி வந்தபோது அனைவரும் அதனால் வாழ்ந்திருந்தார்கள், இன்று அதே மக்கள் கூலி தொழிலாளி ஆகி விட்டனரோ என்னவோ !!

2 comments:

  1. அருமை...மலரும் நினைவுகள்...ஒரு காலத்தில் நடிகர் பட வாழ்த்து அட்டைகளை அனுப்பி இருப்பதை ஞாபக படுத்திவிடீர்.இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
    நண்பரே,,,

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜீவா, நீங்கள் வெளியிட்ட புத்தகம் படிக்க வேண்டும் போல உள்ளது, விரைவில் கோவை வருகிறேன்.

      Delete