Tuesday, January 22, 2013

ஊர் ஸ்பெஷல் - மதுரை மல்லிகை

நம்ம ஊரில் மல்லிகை பூவும், அல்வாவும் ரொம்பவே பேமஸ், அதுவும் மல்லிகைபூவில் இந்த மதுரை இன்னமும் பேமஸ் !! அழகா, உருண்டையா, வெள்ளையா....மனைவி சொக்கி போறாங்களோ இல்லையோ, நீங்க முதலில் சொக்குவீங்க. அது மட்டும் இல்லை, இந்த மல்லிகை பூவின் வாசம் ஆளையே தூக்கும் !! அப்படிப்பட்ட மதுரை மல்லிகையை தேடி ஒரு பயணம் இன்னமும் ஆளை தூக்கணுமா இல்லையா !




ஒரு மல்லிகை பூ கடைகாரரிடம் நாங்கள் பேச்சு கொடுத்துக்கொண்டே அது உருவாகும் இடம் தெரிந்து கொண்டோம். அது மதுரை சுற்றி இருக்கும் பகுதிகளில் விளைகிறது, அதை கொள்முதல் செய்து வரும் இடைதரகரிடம் இருந்து கிலோ கணக்குகளில் இவர்கள் வாங்கி தொடுத்து விற்கிறார்கள் ! இந்த மதுரை மல்லிகைக்கு வெளிநாடுகளிலும் மிகவும் கிராக்கி என்பதால் விசேஷ சமயங்களில் மிகவும் தட்டுபாடு ஏற்படுகிறது என்றார். முடிவில் எங்களுக்கு கிடைத்தது அந்த மல்லிகை தோட்டத்தின் முகவரி !



தமிழில் "மல்லி" என்பதன் பொருள் பருத்தது, உருண்டது மற்றும் தடித்தது. இதன் காரணமாக, இம்மலர் "மல்லிகை" எனப் பெயர் பெற்றிருக்கலாம். மதுரை மல்லிகை மிகவும் புகழ் பெற்றது. தமிழ் இலக்கியத்தில் முல்லை எனச் சுட்டப்படும் இது ஒரு வகை வன மல்லிகை. தற்போது குண்டு மல்லி, அடுக்குமல்லி மற்றும் இருவாச்சி எனப் பல வகை மல்லிகைப் பூக்களைக் காணலாம். தமிழ்நாட்டில் மல்லிகை பெரும்பாலும் மதுரை மாவட்டத்தில் பயிராகிறது. உள்ளூர்த் தேவைகளுக்காகவும் அங்கிருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்காகவும் இது மும்பை/பாம்பே வரை கொண்டு செல்லப்படுகிறது. மதுரை நகரம் "மல்லிகை மாநகரம்" என்றே அழைக்கப்படுகிறது.


 
பொதுவாக இந்த மல்லிகை செடியை தமிழ்நாடு வன அலுவலகத்தில் இருந்தோ அல்லது சுயமாகவோ இவர்கள் பதியனிடுகிறார்கள். மூன்று மாதங்களில் பதியனிடபடும் இந்த மல்லிகை செடிகளை, வேறு இடங்களுக்கு மாற்றுகின்றனர். இது மூன்று அடி உயரம் வரை வளரும், இதற்க்கு ஒரு வருடம் முதல் ஒன்றரை வருடம் வரை ஆகிறது. அதுவரை நமக்கு பொறுமை மிகவும் தேவை என்கிறார்கள். பூ வர ஆரம்பித்தவுடன் இதை பூச்சிகள் அரிக்காமல் பாதுகாக்க வேண்டும், பின்னர் அது நன்கு செழித்து வளர்ந்தவுடன் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அதை பறித்து கிலோ கணக்கில் அன்றைய விலைக்கு விற்கிறார்கள். மல்லிகை தோட்டத்தில் அதிகாலையில் பூ பறிக்கும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமாம், இந்த செடி அடர்த்தியானது என்பதால் பாம்புகள் நிறைய வரும் என்கிறார். ஒரு செடி பத்து வருடம் வரை பலன் தரும் என்றார் அந்த தோட்டக்காரர், ஆனால் சிலர் ஐந்து வருடம்தான் என்கின்றனர். ஒரு 2400 சதுர அடியில் நீங்கள் மல்லிகை தோட்டம் அமைத்தால், தினமும் மண் வளத்தை பொறுத்து இரண்டில் இருந்து ஐந்து கிலோ வரை பூக்கள் கிடைக்கும். சந்தை விலையை பொறுத்து லாபம் வரும் என்கிறார்கள்.


இப்படி பயிர் செய்யப்படும் இந்த மல்லிகை மதுரைக்கு வந்து இடைத்தரகர்கள் மூலம் சில்லறை வியாரிகளுக்கு விற்பனை செய்யபடுகிறது. அவர்கள் இதை சரம் சரமாக தொடுத்து அன்றைய சங்கத்தின் விதிமுறைகளின்படி விலை வைத்து விற்பனை செய்கின்றனர். இன்று மதுரை பகுதிகளில் இருக்கும் பல ஏழைகளுக்கு வருமானம் என்பது இதுதான் என்பது கண்கூடு. கிழே  நீங்கள் பார்க்க போகும் வீடியோ இந்த மதுரை மல்லி பற்றிய முழு செய்தியையும் உங்களுக்கு கொடுக்கும்.


 
Labels : Madurai jasmine, malligai, malli, suresh, kadalpayanangal, special

6 comments:

  1. மல்லிகை....சொன்னாலே வாசம் வீசுகிறது...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜீவா !! அப்போ கோவையில் என்ன ஸ்பெஷல்..... வரும்போது கண்டிப்பாக பார்க்க வேண்டும் !

      Delete
  2. நம்ம ஊரு மல்லியின்
    வாசம் மணக்கச் செய்யும் பதிவு அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் ! இப்போதெல்லாம் உங்களின் உற்சாகமான கருத்துக்கள் கிடைப்பதில்லை..... இருந்தும் இந்த பதிவு உங்களை என் வலைபூவிற்கு இழுத்தது கண்டு மகிழ்ச்சி !

      Delete
  3. ​மல்லியின் வரலாறை சொல்லி இருக்கிறீர்கள். நன்று

    ​நாகு
    www.tngovernmentjobs.in

    ReplyDelete
    Replies
    1. நன்றி நாகு ! தங்களின் கருத்திற்கும், வருகைக்கும் நன்றி !

      Delete