Friday, January 4, 2013

மறக்க முடியா பயணம் - பெங்களுரு மார்டின்'ஸ் பார்ம்

பெரியவர்களுக்காக இங்கு நிறைய பொழுதுபோக்கு இடங்கள் இருக்கின்றன எல்லா ஊர்களிலும், ஆனால் சிறு  குழந்தைகளுக்கு இங்கு இருப்பது எல்லாம் ஷாப்பிங் மால், பார்க் மற்றும் தீம் பார்க்குகள் மட்டுமே. இன்னும் வேண்டும் என்றால் நீங்கள் இங்கு இருக்கும் பன்னர்கட்டா ஜூ
போகலாம், அவ்வளவுதான். பொதுவாக பெற்றோர்கள் வெளியே செல்வதே குழந்தைகளுக்காக என்னும்போது அவர்கள் விரும்பும்படியாக ஒரு இடம் அமைவது கடினம். அப்படி நிறைய தேடி அகப்பட்டதுதான் இந்த மார்டின்'ஸ் பண்ணை வீடு ! ஒரு நல்ல பிக்னிக் ஸ்பாட் !!பல நாட்களாக நான் எனது மகனை ஒரு பார்க் அல்லது ஷாப்பிங் மால் என்றே கூட்டிக்கொண்டு செல்கிறேன் என்று வருத்தப்பட்டேன் அவனை இயற்கையோடு பழக விட வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். சிறு வயதில் நான் மரம் ஏறி நெல்லிக்காய் பறித்தது, ஆட்டுக்குட்டியுடன் விளையாடியது போன்ற அனுபவங்கள் அவனுக்கு கிடைக்காமல் எல்லாவற்றையும் டிவி அல்லது படங்கள் மூலம் மட்டுமே அவன் அறிந்து கொள்கிறானே என்ற வருத்தம் இந்த இடத்திற்கு அவனை கூட்டிசென்றதன் மூலம் அகன்றது எனலாம். இந்த இடத்திற்கு செல்லும் ஒரு ரூட் மேப் இவர்களது வெப்சைட்டில் இருப்பதால் அதை நீங்கள் பயன்படுத்த இங்கே சொடுக்கவும்....  மார்டின்'ஸ் பண்ணை வீடு செல்லும் வழி. ஊருக்கு வெளியே இருப்பதாலும், இதை பற்றி விளம்பரங்கள் எல்லாம் இல்லை என்பதால் கூட்டம் இருக்காது என்று மட்டும் நினைக்க வேண்டாம். மேலே உள்ள படத்தை பாருங்கள், எத்தனை கார் நிற்கிறது என்று ! ஒருவருக்கு நுழைவு கட்டணம் நூறு ரூபாய், பார்கிங் இலவசம். உள்ளே நுழையும்போதே அங்கே இருக்கும் ஒரு சிறு  மைதானமும் அங்கே குழந்தைகள் விளையாடுவதையும் பார்க்கும்போது உங்கள் குழந்தையின் உற்சாகம் தொடங்கிவிடும். அவர்கள் வளர்க்கும் நாயுடன் உங்கள் குழந்தைகள் பந்து விளையாடலாம், அங்கு இருக்கும் குழந்தைகள் பார்க்கில் ஓடி ஆடலாம்.


அவர்கள் வளர்க்கும் வாத்துக்கள், முயல்கள், வெள்ளை பன்னி, கோழி, ஆமை, குதிரை, வெள்ளாடு, கழுதை, புறாக்கள், மீன்கள், ஈமு, கிளிகள், லவ் பேர்ட்ஸ் என்று பல வகையான பிராணிகளை நீங்கள் தொட்டு பார்க்கலாம் என்பதுதான் இந்த பண்ணை வீட்டின் சிறப்பு.

அது மட்டும் இல்லை, இங்கு வளரும் பலா, மா, வாழை, மூங்கில், காய்கறி செடிகள் எல்லாம் உங்கள் குழந்தைகள் தொட்டு பார்க்கலாம், அது வளரும் முறைகள் பற்றி தெரிந்துகொள்ளலாம் என்பது எவ்வளவு மகிழ்ச்சியான ஒன்று தெரியுமா. இயற்கை உரங்களை பற்றியும் இங்கு சொல்கிறார்கள்.
உங்களது குழந்தைகள் அன்றைய தினம் நிறைய கற்பார்கள் என்பது மட்டும் நிச்சயம். எனது மகனுக்கு அன்று பார்த்த  மிருகங்கள் எப்படி கத்தும், நடக்கும், என்ன சாப்பிடும் என்றெல்லாம் தெரிந்துகொண்டதை நினைத்து எங்களுக்கும் மகிழ்ச்சி. எப்போதும் டிவி முன் உட்கார்ந்து கொண்டு காமிக் ஹீரோ சண்டை போடுவதையும், புஸ்தகங்களில் வரும் படங்களை கொண்டு மிருகங்களை அறிவதையும் விட்டு இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். மிருக காட்சி சாலைகளில் எல்லாம் கூண்டில் இருக்கும் மிருகங்களை மட்டுமே அவர்கள் காண்பார்கள், ஆனால் இங்கு நாம் வீட்டில் வளர்க்கும் மிருகங்களை தடவி, உணர்ந்து கொள்ளலாம் என்பது எவ்வளவு பெரிய வரம்.


அது மட்டும் அல்ல, இங்கே நீங்கள் உங்களது உணவுகளை எடுத்துக்கொண்டு வந்து ஒரு பிக்னிக் போல உட்கார்ந்து சாப்பிடலாம், விளையாடலாம் என்பதும் இந்த அனுபவத்தை இன்னும் அழகாக்கும் ! நாங்கள் கட்டு சாதம் கட்டிக்கொண்டு சென்று சாப்பிட்டோம், அது ஒரு உற்சாகமான தருணம் !கீழே இங்கே செல்வதற்கு மாரதஹல்லியில் இருந்து மேப் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களது வெப்சைட் சென்றால் இன்னும் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. 

சென்று வந்து உங்களது உற்சாகமான கருத்துக்களை தெரிவியுங்கள்....

2 comments:

 1. நல்ல கட்டுரை. பகிரத்தகுந்த நல்ல ஒரு விஷயம் / இடம். பெங்களூரில்/அருகே வசிக்கும் இரண்டு மூன்று உறவினர் மற்றும் நண்பர்களிடம் பகிர்ந்துள்ளேன். முன்னரே தெரியாதெனில் உதவியாக இருக்கும்.

  http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com/

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே.... தகவல்களை பரப்பிடுங்கள், இது என்னை உற்சாகம் கொள்ள செய்யும், இது போல் நிறைய எழுதவும் தூண்டும் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

   Delete